Home Tamil Writers தமிழ்ஒளி

தமிழ்ஒளி

by Dr.K.Subashini
0 comment

பாடிப் பறந்த புதுவைக்கு​யில் – தமிழ்ஒளி

கலைமாமணி விக்கிரமன்

 

 

புதுவை பெற்றெடுத்த கவிஞர் "தமிழ்ஒளி"யை நாம் நினைவில் கொள்ளாவிட்டால் புதுமை, புரட்சி, இலட்சியம் என்ற சொற்கள் பொருளற்றதாகிவிடும்.

ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு (1951) "தமிழ்ஒளி" அவ்வப்போது "அமுதசுரபி" அலுவலகம் வருவார்.

சந்தித்திருக்கிறேன்.

டென்சிங் என்ற இந்திய இளைஞர், இமயமலையின் உச்சியில் தேசியக் கொடியை நாட்டிய செய்தியை 1953களில் உலகம் பரபரப்பாகப் பேசியது.

அதிசயத்துடன் பேசப்பட்ட "எவரெஸ்ட் பிடிபட்டது" நிகழ்ச்சியை – அந்தச் சாதனையை "தமிழ்ஒளி" கவிதையாகப் படம்பிடித்திருந்தார்.

அந்தக் கவிதை:-

விண்மீது மோதுகின்ற
வெற்புமுடி "எவரெஸ்ட்"
பெண்ணரசி தேவமகள்
பேருலகில் மானிடரை
கண்காட்டி ஏமாற்றிக்கை
பிடியிற் சிக்காமல்
மண்காட்டிக் கைலாய
வான்காட்டிக் கொக்கரித்தார்".

எவரெஸ்ட் பிடிபட்ட நிகழ்ச்சியை நாம் மறந்துவிடலாம்.

ஆனால், "தமிழ்ஒளி"யின் "எவரெஸ்ட் பிடிபட்டது" கவிதை வரிகள் சாகாவரம் பெற்று இன்றைக்கும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

1960ஆம் ஆண்டு நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்பட்டுச் சாதனை படைத்த நாளில், "நெய்வேலி நாம் பெற்ற பேறு" எனக் கவிபாடிப் பெருமிதம் கொண்டவர் "தமிழ்ஒளி".

இந்திய அரசின் "நேஷனல் புக் டிரஸ்ட்" நிறுவனம், சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த கவிதைகளின் தொகுப்பாக உருதுமொழியில் வெளிவந்த நூலில் "தமிழ்ஒளி"யின் "நெய்வேலி" கவிதை இடம்பெற்றுள்ளது.

தென் ஆர்க்காடு மாவட்டம் – குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்ற சிற்றூரில் பொ. சின்னையா –  செங்கேணி அம்மாள் இணையருக்கு 1924ஆம் ஆண்டு செப்டம்டர் 21ஆம் தேதி தலைமகனாய் பிறந்தார்.

அவரை வளர்த்தது புதுவை.

அவர் பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் விஜயரங்கம்.

பாரதியின் கவிதைகளைப் படித்தார்.

பாரதியின் கவிதை ஊக்கத்தால் வீறு கொண்டெழுந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தாமே விரும்பி முயன்று தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

அந்தத் தொடர்பு ஆசிரியர் – மாணவர் உறவாக வளர்ந்தது.

"பாண்டியன் பரிசு" காவியத்தின் கையெழுத்துப்படியை நகல் எடுக்கும் பொறுப்பு "தமிழ்ஒளி"யிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவிதை ஊற்றை அந்த வாய்ப்பு பெருகச் செய்தது. ஒப்பற்ற காவியத்தைப் படியெடுக்கும்போதே "தமிழ்ஒளி"யின் உள்ளக் கனல் கொழுந்துவிடத் தொடங்கியது.

"நீயும் எழுது, எழுது" என்று அவர் உள்ளத்தில் கவிப்புனல் பாயத் தொடங்கியது.

"தமிழ்ஒளி"யின் கவிதை உள்ளத்தை நன்கு பண்படுத்தினார் பாவேந்தர் பாரதிதாசன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்றாண்டு காலம் முறையாகப் பயின்றார்.

"சக்தியின் கனவு" என்றொரு நாடகத்தை இயற்றினார்.

இது பிற்காலத்தில் "வணங்காமுடி" என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

இவர் எழுதியதாகக் குறிப்பிடப்படாதது கொடுமை மட்டுமல்ல, வருந்தத்தக்கதும்கூட.

1945ஆம் ஆண்டு விடுமுறையின்போது சென்னை வந்த விஜயரங்கத்துக்கு, சென்னை பல கவிஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

கவிஞர் குயிலன் அவருக்கு நண்பரானார்.

"ஜனயுகம்" என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார். இரண்டு இதழ்களை வெளியிட்டார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.

பெற்றோரிடம் பணம் கேட்டார்.  அவர்கள் தர மறுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்ப்பே வேறு.

தங்கள் புதல்வர் வகுத்துக்கொண்ட வாழ்க்கைமுறை குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை.

வருவாய்க்கு ஒரு தொழில்; வாழ்க்கைக்கு ஒரு துணை என்ற அடிப்படையில் அவருடைய வாழ்க்கையும் அமைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

தம்மைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பெண்தான் தனக்குத் துணைவியாக அமைய வேண்டும் என்று "தமிழ்ஒளி" உறுதியாகக் கருதியதால், திருமணச் சிந்தனையை விடுத்து, பெற்றோரை விட்டு புதுவையினின்று சென்னைக்குத் திரும்பினார்.

மகனைப் பற்றிய பெற்றோரின் கனவு சிதைந்தது.

1949லிருந்து ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் சென்னையிலிருந்து கவிதை வேள்வி நடத்தினார் விஜயரங்கம்.

அப்போதுதான் அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.

"தமிழ்ஒளி"யின் திறமையை உணர்ந்த மக்கள் எழுத்தாளர் "விந்தன்", "தமிழ்ஒளி"யின் கவிதை மலரப் பல விதங்களில் உதவியிருக்கிறார்.

பூவை எஸ்.ஆறுமுகம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுத்துலகில் ஒளி வீசப் பல விதங்களில் "தமிழ்ஒளி"க்கு ஆதரவு தந்தனர்.

திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த "தமிழ்ஒளி"யின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டியவை.

துணிவுடன் தன் கருத்தைக் கூறும் "கவிஞருக்கே உரிய துணிவு" அவரிடம் இருந்தது.

புதுமைப்பித்தன் கவிதைகளைப் பற்றிய மறைந்த இரகுநாதனின் கருத்தை "தமிழ்ஒளி" ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்க் கவிதையில் யாப்பு – மரபு குறித்த "தமிழ்ஒளி"யின் மதிப்பீட்டை, இரகுநாதன் மறுத்து எழுதிய கட்டுரை – விவாதங்கள் இந்தத் தலைமுறையினர் அறிய வேண்டியவை.

"தமிழ்ஒளி" கவிஞர் மட்டுமல்லர்; கட்டுரையாளர், பத்திரிகையாளரும் கூட.

"தமிழ்ஒளி" எழுதிய கவிதைகளை பிற்காலத்தில் திரட்டித் தொகுத்து வெளியிடப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டவர்தான் செ.து. சஞ்சீவி.

கவிஞர் மறைவுக்குப் பிறகு கவிதை, கட்டுரை, காப்பியங்கள், குழந்தைகளுக்கு எழுதியவை அனைத்தையும் பெரிதும் முயன்று சேகரித்து நூல் வடிவில் கொணர்ந்தார்.

"தமிழ்ஒளி"யின் கவிதைகளை வெளியிடுவதாகக் கூறி, இரண்டு கவிதைத் தொகுதிகள் அளவுக்கு "தமிழ்ஒளி"யிடமிருந்து நூலாக வெளியிடப் பெற்றுக்கொண்ட ஓர் அன்பர், "தமிழ்ஒளி"யின் அரசியல் கொள்கை பிடிக்காததன் காரணமாக, அந்தக் கவிதைக் கருவூலம் "தொலைந்து போனதாக"க் கூறியது தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

ஆனால், மா.சு.சம்பந்தம் என்பவர், "தமிழர் பதிப்பகம்" என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை நிறுவி, "தமிழ்ஒளி"யின் கவிதைகளை வெளியிட்டார்.

அவருக்காக மிகக்குறுகிய காலத்தில் எழுதிய காவியம்தான் "வீராயி". வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்க நாட்டின் தேயிலைத் தோட்டத்திலும் இரப்பர் தோட்டத்திலும் தமிழ்மக்கள் அடைந்த துயர நிகழ்ச்சியின் ஒரு சம்பவமே "வீராயி".

 

 • கவிஞனின் காதல்
 • நிலைபெற்ற சிலை
 • வீராயி
 • மேதின ரோஜா
 • விதியோ வீணையோ
 • கண்ணப்பன் கிளிகள்
 • புத்தர் பிறந்தார்
 • கோசலக்குமரி
 • மாதவி காவியம்

ஆக ஒன்பது காவியங்களைப் படைத்துள்ளார்.

படைப்பிலக்கியத்தின் மற்ற பகுதிகளிலும் "தமிழ்ஒளி" தம் புலமையை நிலைநாட்டினார்.

அவருடைய உரைநடைப் படைப்புகளை நாடகங்கள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் என்று வரிசைப்படுத்தலாம்.

"தமிழ்ஒளி"யின் "காப்பியங்கள்" நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனைவர் ம.ரா.போ. குருசாமியின், "வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும், அருணகிரிநாதரையும், அண்ணாமலை ரெட்டியாரையும் நினைவூட்டும் கவிஞர், "தமிழ்ஒளி" ஒரு சந்தக் களஞ்சியம். எல்லா வகையிலும் சிறந்து பொலிந்த இவர் இன்று இருந்திருந்தால், மரபு வழியுணர்ந்த புதுக்கவிதை வாணராகப் புகழ் பூத்தவராய் விளங்கியிருப்பாரே! அநியாயமாகத் தமிழ் உலகம் இழந்துவிட்டதே!” என்ற கூற்று நம் விழிகளை நனைக்கிறது.

"தமிழ்ஒளி"யின் ஆழ்ந்த புலமைக்கு அவர் படைத்த மூன்று ஆய்வு நூல்களே சான்று.

 

 • சிலப்பதிகாரம் காவியமா, நாடகமா?
 • திருக்குறளும் கடவுளும்
 • தமிழர் சமுதாயம்

ஆகியவற்றில் தம் வாதத் திறமையாலும், தக்க சான்றுகளாலும் தாம் எடுத்த தலைப்புக்கு நியாயம் தேடியுள்ளார்.

கவிஞரின் படைப்புகள்:-

 • காவியங்கள் 7
 • கவிதைத் தொகுப்பு 4
 • குழந்தைப் பாடல்கள் 1
 • ஆய்வு நூல்கள் 4
 • கதைத் தொகுப்புகள் 4
 • நாடகம் 1.

1962ஆம் ஆண்டுக்குப் பிறகு கவிஞர் "தமிழ்ஒளி"யை எலும்புருக்கி நோய் தாக்கியது.

பத்துமாதம் காசநோயுடன் போராடினார்.

1985ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அவர் ஆவி பிரிந்தது.

61 வயதில் கவிஞர் "தமிழ்ஒளி"யின் வாழ்வு முடிந்தது.

ஆனால், அவருடைய கவிதைகளின் வாழ்வு?

அது தமிழ் மக்களின் கையில் இருக்கிறது.

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment