Home Printing&Publishing தணிகைமணி

தணிகைமணி

by Dr.K.Subashini
0 comment

 

தணிகைமணி

பேராசிரியர். வே.இரா.மாதவன்

 

தொண்டைநாட்டுத் திருத்தலமாகிய திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானிடம் அன்பு மிகக் கொண்ட திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள், திருப்புகழ் பதிப்பாசிரியர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியப்பிள்ளையின் இளைய மகனாக 1883-ஆம் ஆண்டிற் பிறந்தார். கருணீகர் குலத்தைச் சேர்ந்த இவரது தாயார் பெயர் தாயாரம்மாள் ஆகும்.

 

தந்தையின் புலமை

பல தமிழ் நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்ட இவருடைய தந்தை திரு. வ. த. சுப்பிரமணியப்பிள்ளை (1846 – 1909) சிறந்த கல்வியாளர். இளமையில் வறுமைத் துன்பத்தில் ஆட்பட்டும் தன்முயற்சியால் முன்னேறி அக்காலத்தில் எம். ஏ. பட்டம் பெற்றவர். அரசாங்கப் பணிபுரிந்து மாவட்ட முனிசீப்பாகப் பணியாற்றிய இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.இவர் தம் பணியின் பொருட்டு பல ஊர்களிலும் சென்றிருந்தபடியால் அருமைப் புதல்வர் வ. சு. செங்கல்வராயரின் கல்விப் பயிற்சியும் பல ஊர்களில் நடை பெற்றது. சேலம் நாமக்கல்லில் தொடங்கிய இவருடைய கல்விபயிற்சி, திருக்குடந்தை, திருவாரூர், நாகப்பட்டிணம் எனத் தொடர்ந்தது.

 

முதல் மாணவர்    
 

தஞ்சையில் புனித பீட்டர்சு பள்ளியில் இவர் பத்தாம் வகுப்புப் படித்தபோது இவரோடு திரு. த. வே. உமாமகேசுவரன் பிள்ளையும் கல்வி கற்றார். பின்னர், மதுரையில் மெட்ட்ரிகுலேஷன் தேர்வை முடித்த இவர் 1901-இல் சென்னையிலுள்ள கிறித்துவக் கல்லூரியிற் கல்வி கற்றார். இவருடைய சிறப்பான அறிவாற்றலால் இராமநாதபுரம் இராணியின் உதவித் தொகையையும் பெüறார். மதுரைத் தமிழ்ச் சங்கம் பி. ஏ. மாணவர்கட்கு முதன் முதலாக நடத்திய தேர்வில் இவருக்குமுதற் பரிசு கிடைத்தது. பின்னர் எம்.ஏ. வகுப்பிலும் முதல்வரானார்.

 

முதல் வகுப்பு முதல் எம். ஏ. வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ’முதல் நிலையில்’ வெற்றி பெறுவதே இவருடைய தனிச் சிறப்பாகும். இளமையில் தந்தையாரால் பாராட்டப் பெற்ற இவர் பின்னாளில் பலராலும் பாராடப் பெற்றார்.

 

அலுவல் திறனும் அரசினர் சிறப்பும்                 
 

செங்கல்வராயரின் எம்.ஏ. கல்விக்குப் பின் ஆவணப் பதிவுத் துறையில் (சப்ரிஜிஸ்ட்ரார்) பணியாற்றினார். பல மாவட்டங்களில் ஆவணத்துறை அலுவலகத் தொடர்பான மாத சோதனை வேலையில் இருக்க இவருடைய அக்கால மாத ஊதியம் இருபத்தைந்து ரூபாய்களே. பின்னர் முப்பது ரூபாய் ஊதியத்தில் எழுத்தராக நியமிக்கப்பட்ட இவர் ஆவணக் காப்பாளராகவும், மேல்நிலைகட்கும் படிப்படியாக உயர்த்தப் பெற்று 1949-இல் ஓய்வு பெற்றார். அப்போது இவருடைய மாத வருமாணம் இறுநூறூ ரூபாய் மட்டுமே. இவருடைய அலுவல் திறமையைப் பாராட்டிய ஆங்கில அரசினர் ‘இராவ் சாகிப் (1935)’,  ‘இராவ்பகதூர் (1938)’ , ஆகியப் பட்டங்களை இவருக்கு வழங்கிச் சிறப்புச் செய்தனர்.

 

பணி ஓய்வுக்குப்பின்                       
 

1910 முதல் 1943 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் பல சிவப்பதிகளுக்குப் பயணம் செய்து வழிபாடு செய்வதை இவர் தம் கடமையாகவே மேற்கொண்டிருந்தார். இச்சமங்களில் தொடர்ந்து சில புராண நூல்களைப் படித்தலையும் இவர் தவறாது மேற் கொண்டிருந்தார். பல நூல்களை நுணுகி ஆராய்ந்துப் படித்துப் பொருளுணர்ந்து நினைவில் கொள்வதே இவர் பொழுதுபோக்காக அமைந்தது. செய்யுள் இயற்றும் திறன் பெற்ற இவர் பல நூல்கள் இயற்றும் பணியையும் மேற் கொண்டார்.

 

பதிப்புப்பணி  

’திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வ. த. சுப்பிரமணியப்பிள்ளை சரித்திரமும், அவரியற்றிய தணிப்பாடல்களும்’ (1921) என்னும் பெயரில் இவர் வெளியிட்ட நூலில் தந்தையாரின் பதிப்புச் சிறப்பினை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த வள்ளிமலை சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோர் இவர் தந்தையாரின் திருப்புகழ் பதிப்புப் பணியினை இல்லத்திற்கு நேரில் வந்து பாராட்டி மகிழ்ந்தவை குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகளாகும்.

 • தமிழ் உரைநடை வரலாறு,
 • தேவார ஒளிநெறிகள்,
 • சுந்தர விலாசம்

போன்ற நூல்களை அச்சிற் பதிப்பித்ததுடன், இவர்தம் தந்தையாரின் பதிப்புகளை மேலும் செம்மையாக ஆராய்ந்து பதிப்பதிலும் மிகவும் நாட்டம் கொண்டார்.

 

நாற்பது ஆண்டுகட்கு மேல் தமிழ் ஆராய்ச்சியிலேயே மூழ்கியிருந்த இவர் பதிப்பித்த நூல்கள் ஆழ்ந்த ஆய்வுப் போக்கினைக் கொண்டன. இவரது உபதேச காண்ட ஆராய்ச்சிப் திறமையை நன்கு எடுத்துக் காட்டும்.

 

 • முருகரும் தமிழும்,
 • வேல் பாட்டு,
 • மயில் பாட்டு,
 • சேவல் பாட்டு,
 • வள்ளி கலியாண கும்மி,
 • தணிகைக்கலி வெண்பா,
 • தணிகேசன் திருப்பள்ளி யெழுச்சி,
 • தணிகைப் பிள்ளைத்தமிழ்,
 • தணிகைமுப்பூ,
 • தணிகை தசாங்கம்,
 • திருவெம்பாவை,
 • திருப்புகழ் உரை,
 • திரு வகுப்பு உரை,

முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

 

திருமுறைகள் 
 

சைவத் திருமுறை பன்னிரண்டைப் போலக் குமாரக் கடவுளை வழிபாடு செய்யுங் கௌமார சமயத்திற்கும் பன்னிரண்டு திருமுறைகளை இவர் வகுத்தார். திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, முதலியவற்றையெல்லாம் இதற்காகத் தொகுத்தார். அவை முருகவேல் பன்னிரு திருமுறை என்னும் பெயரோடு வெளியிடப்பட்டுள்ளன.

 

உரைநூல்கள்          

இவர் எழுதியுள்ள உரைநூல்கள் சிறப்புமிக்கன. அருணகிரிநாதரின் திருப்புகழ் முதலான அனைத்து நூல்களுக்கும் இவர் உரை எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய நூல்களில், சொல்லடைவு, பொருளடைவுகளும் அவற்றைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனை அளித்து வருகின்றன.

 

பேரறிஞர் பலர் சேர்ந்து, பல ஆண்டுகள் உழைத்துச் செய்து முடிக்கத்தக்க இத்தகைய பதிப்புப் பணிகளை இவர் ஒருவரே செய்து முடித்திருப்பது வியப்புகுரியது. தொல்காப்பியம் போன்ற பழம்பெரும்நூல்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை அனைத்து நூல்களின் புலமையை இவர் பெற்று விளங்கியதற்கு இவர்தம் நூல்களே சான்றாக அமந்துள்ளன.

 

ஒளிநெறிகள் 
 

இவருடைய ஒளிநெறி நூல்களைக் கற்போர் பல நூல்களை எழுதக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றனர். பெற்றும் வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானப் பணச் செலவுடன் பணியாற்றும் பல்கலைக் கழகங்கள் செய்யாத ஒப்பற்ற பணிகளை இவர் ஒருவராகச் செய்து வந்ததற்கு எவ்வித அரசு உதவியும், தனியார் உதவியும் அப்போது கிடைக்கவில்லை என்பது ஒரு பெருங்குறையே ஆகும். இவற்றையெல்லாம் தாமே தம் கையால் எழுதி எழுதிச் சேர்த்தவர் இவர். பிற்கால ஆய்வாளர்க்குத் தம் வாழ்நாளையே தியாகம் செய்த இவருடைய உழைப்பு அனைத்தும் உலகினர்க்குத் தெரியாமல் போனதற்குக் காரணம் இவர் தம் அடக்க உணர்வேயாம்.

 

டாக்டர் பட்டம்

இன்று பல பி. எச். டி. பட்டங்கள் பெற உறுதுணையாய் நிற்கும் இவருடைய நூல்களின் பெருமையை அன்று உணர்ந்தவர் மிகச் சிலரேயாவர். இவருடைய அருமை பெருமைகளை அன்றே உணர்ந்திருந்த கழகத் தலைவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளையவர்களின் முயற்சியின் பயனாய், டாக்டர். தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் மூலம் 1.09.1969 இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது.

 

முனிவர்கள், சான்றோர்கள்

திருவண்ணாமலையிலிருந்த இரமண முனிவர் மீதும், வள்ளிமலைச் சுவாமிகளிடமும் தணிகைமணியவர்கள் பேரண்பு கொண்டவர். தம்முடைய குருவாகிய வள்ளிமலை சுவாமிகளை இறுதிக் காலத்தில் தம்முடைய இல்லத்திலேயே இருக்கச் செய்து பொன்னே போல் போற்றிப் பாதுகாத்தார். சுவாமிகள் மீது சச்சிதானந்தர் கலிவெண்பா என்னும் நூலையும் பாடியுள்ளார்.

 

இத்தகைய பெரியோர்களிடம் தொடர்பு கொண்டிருந்த தணிகைமணியவர்கள் பழம்பெரும் பதிப்பாசிரியர்களிடமும் நல்ல பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அக்காலத்தில் பெருந்தமிழ்ப் புலவராயிருந்த  தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வெ. சாமிநாதையர் அவர்களிடம் இவர் கொண்டிருந்த நட்பும்  பழக்கமும் மிகவும் குறிப்பிடத்தக்கன. ஐயரவர்களே தணிகைமணியவர்களின் இல்லத்திற்குச் சென்று உரையாடிய நிகழ்ச்சிகளும் இங்குக் குறிப்பிடத்தக்கன.
 

You may also like

Leave a Comment