"தென்காசிச் சிங்கம்" டி.எஸ். சொக்கலிங்கம்
கலைமாமணி விக்கிரமன்
பெருந்தலைவர் காமராஜுடன் டி.எஸ்.சொக்கலிங்கம்
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில், 1899ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பத்திரிகையாசிரியரும் தேசபக்தருமான அமரர் டி.எஸ்.சொக்கலிங்கம்.
சொக்கலிங்கத்துக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்.
"மடத்துக்கடை" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார்.
தந்தை மறைவுக்குப் பிறகு டி.எஸ்.சி.யின் (டி.எஸ்.சொக்கலிங்கத்தை மரியாதையுடன் அவ்வாறு அழைப்பார்கள்) சகோதரர் சிதம்பரம் பிள்ளை நடத்தி வந்தார்.
பாரத நாடே அதிர்ச்சியடைந்த ஆஷ் கொலை வழக்கில், டி.எஸ்.சிதம்பரம் பிள்ளையைத் தொடர்புபடுத்திக் கைது செய்தனர்.
குடும்பத் தலைவன் மறைந்து, அவர் மகன் அரசினரால் சிறைப்படுத்தப்பட்டு, அந்த வழக்குக்காக மற்றொரு சகோதரர் டி.எஸ்.வேலாயுதம் பிள்ளை சென்னையிலேயே வாசம் செய்யவும், குடும்பத்தினர் நடத்தி வந்த "மடத்துக்கடை"யை டி.எஸ்.சி. மேற்பார்வைப் பொறுப்பை ஏற்கவும் நேர்ந்தது.
அவர் கல்வி தடைப்பட்டது.
ஆனால், தனி ஆசிரியரிடம் கல்வி கற்றார். பள்ளி சென்று கற்றதைவிட அதிகம் கற்றார்.
சலனமுற்ற அந்தக் குடும்பச் சூழ்நிலை மனக்குழப்பம் அளித்ததால் அமைதி வேண்டி டி.எஸ்.சி. தென்காசியில் இருக்க விரும்பவில்லை.
தேசத் தந்தை மகாத்மாவின் குரல் அவரை சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்தது. பதினெட்டே வயது நிறைந்த டி.எஸ்.சி.யின் உள்ளத்தில் தேசபக்தி எனும் அக்னிக்குஞ்சு கனல் மூட்டியதால், யாரிடமும் சொல்லாமல் சபர்மதி ஆசிரமத்துக்குப் போய்ச்சேர்ந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு தன் மகன் மகாத்மாவின் சபர்மதி ஆசிரமத்தில் இருக்கிறான் என்பதறிந்து தாயும், மைத்துனரும் அங்கு சென்று காந்திஜியிடம் வேண்டி, டி.எஸ்.சி.யை அழைத்து வந்தனர்.
தன் மகனுக்குத் தனியே கடை ஒன்று ஏற்படுத்திக் கொடுத்தனர்.
குற்றாலம் அருவியில் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்த ஆட்சேபகரமான பலகையை எடுத்துவிட வேண்டும் என்று சொக்கலிங்கம் அறப்போர் நடத்தினார். இருபதே வயது நிறைந்திருந்த டி.எஸ்.சி.யின் அறப்போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வலுத்தது. நாடெங்கும் இந்த அறப்போராட்டச் செய்தி பரவியது. "தேச பக்தன்" நாளிதழ், இளைஞர் சொக்கலிங்கத்தின் போராட்டத்தை ஆதரித்து எழுதியது. பிரிட்டிஷ் அரசு கிளர்ச்சிக்குப் பணிந்தது. அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.
தலைவர்களை அழைத்து வந்து பொதுக் கூட்டங்களை நடத்துவதில் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆர்வம் கொண்டார். அந்நாளில் விடுதலைப் போராட்டத் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவை தென்காசிக்கு வரவழைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். வரதராஜுலுவின் பேச்சிலும் எழுத்திலும் டி.எஸ்.சி.க்கு மோகம் ஏற்பட்டது. வரதராஜுலு நாயுடுவுடன் டி.எஸ்.சி.யும் சேலத்துக்கு வந்தார். சேலத்தில் நடைபெற்று வந்த "தமிழ்நாடு" வாரப் பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தார். டி.எஸ்.சி.யின் எழுத்தாற்றலை, அவர் எழுதிய தலையங்கங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட டாக்டர் வரதராஜுலு, டி.எஸ்.சி.க்கு முழுமையான பத்திரிகை சுதந்திரத்தை அளித்தார்.
மக்களின் வரவேற்பைக் கண்ட "தமிழ்நாடு" நிர்வாகம், பத்திரிகை அலுவலகத்தை சேலத்திலிருந்து சென்னைக்கு மாற்றியது. "தமிழ்நாடு" வாரப் பதிப்புடன் தினசரி இதழ் ஒன்றும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி "தமிழ்நாடு" நாளிதழ் உதயமாயிற்று. சொக்கலிங்கத்தின் தோள்களில் நாளிதழின் முழுப் பொறுப்பும் விழுந்தது. சொக்கலிங்கத்தின் தலையங்கத்துக்காகவே வாசகர்கள் பெருகிவிட்டனர்.
1931இல் டாக்டர் நாயுடுவின் கொள்கை மாறியது.
அதனால், தமிழ்நாடு பத்திரிகையை விட்டு விலகி, "காந்தி" எனும் பெயரில் புதிய வாரமிருமுறை இதழைத் தொடங்கினார். பிறகு அது, வாரம் மும்முறையாக வெளிவந்தது. 25 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாயின.1932ஆம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். அது குறித்து செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை இராஜாஜி அறிக்கை மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அறிக்கையை வெளியிட அரசினர் தடைவிதித்திருந்தனர். அந்த அறிக்கையை வெளியிட மற்ற பத்திரிகைகள் யோசித்தபோது, சொக்கலிங்கம் தம் பத்திரிகையில் துணிவுடன் பிரசுரித்துவிட்டு, பத்திரிகை வெளியிடுவதையும் நிறுத்திக் கொண்டு தென்காசிக்குப் பயணமானார். போலீசார் தென்காசிக்குச் சென்று சொக்கலிங்கத்தைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு ஆறு மாதம் கடுங்காவலும், நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆறு மாதம் கழித்துச் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு "காந்தி" பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். அரசு ரூபாய் 500 ஜாமீன் கட்ட உத்தரவிட்டது. பிறகு "காந்தி" நாளிதழ் வெளிவரத் தொடங்கியது.
சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் நோக்கில், மும்பையைச் சேர்ந்த சதானந்த், சென்னையில் ஆங்கிலத் தினசரியான "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழை விலைக்கு வாங்கினார். தமிழ்நாட்டில் தேசிய இயக்கத்தை வலுப்படுத்திப் பிரசாரம் செய்யத் தமிழில் ஒரு தேசிய நாளிதழைத் தொடங்கும் எண்ணம் டி.எஸ்.சி.க்கும் இருந்தது. சதானந்த் "தினமணி" என்ற நாளிதழைத் தொடங்கியபோது, அதற்கு சொக்கலிங்கம் ஆசிரியராக இருக்கச் சம்மதித்தார்.
1934ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் "தினமணி" தொடங்கப்பட்டது.
பாரதி அமரரான நாள் அது.
பல தேசியப் பத்திரிகைகள் மறைந்தும் இன்றுவரை "தினமணி" வளர்ந்து, உறுதியுடன் தேசியப் பத்திரிகையாகத் திகழ டி.எஸ்.சொக்கலிங்கம் இட்ட உரமும் ஒரு காரணம்.
டி.எஸ்.சி.யின் கனல் கக்கும் தலையங்கத்தைப் படிக்கவே "தினமணி"யை மக்கள் வாங்கினர் என்பது வரலாற்றில் பதிவான செய்தி.
"தினமணி"யில் டி.எஸ்.சி. ஆசிரியராக இருந்தபோது, தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்தலில் நின்று பண முதலைகளின் எதிர்ப்பையும் மீறி பெரும் வெற்றியும் கண்டார்.
அதன்பின் டி.எஸ்.சி. முழு உற்சாகத்துடன் தினமணி வெற்றிக்குப் பாடுபட்டார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தினமணியின் சேவையைப் பரப்பினார்.
1940ஆம் ஆண்டு காந்தியடிகளின் கட்டளைக்கிணங்க தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு, ஏ.என்.சிவராமனை "தினமணி"யில் ஆசிரியராக அமர்த்திவிட்டுச் சென்றார்.
ஏ.என்.சிவராமனும் டி.எஸ்.சொக்கலிங்கமும் "மணிக்கொடி" காலத்துக்கு முன்பிருந்தே "தமிழ்நாடு" இதழ் தொடங்கப்பட்ட காலத்திலேயே நண்பர்கள்.
தென்காசியில் தோன்றிய டி.எஸ்.சொக்கலிங்கம் காந்திமகான் மீது கொண்டிருந்த பற்று, மரியாதைக்கு இணையாக மகாகவி பாரதியாரிடமும் மிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
"எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்ற பாரதியின் தாரக மந்திரத்தைக் கடைபிடித்த டி.எஸ்.சொக்கலிங்கம், தன்னிடம் பணியாற்றும் உதவி ஆசிரியர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்திருந்தார்.
பத்திரிகை தர்மத்துக்கும், இலட்சியத்துக்கும் மாறுபடாமல் எழுதினால் போதும் என்ற எச்சரிக்கை மட்டும் கொடுத்துவிடுவார்.
மகாகவி பாரதியாரைப்போல புதிய சொற்களைப் புகுத்துவதில் வழிகாட்டியவர்.
"பினாமி", "சண்டித்தனம்", "சவால்" போன்ற பல சொற்கள் இன்று பத்திரிகையில் இடம் பெற்றுவிட்டன என்றால் அதற்கு டி.எஸ்.சொக்கலிங்கமே காரணம்.
பத்திரிகை ஆசிரியர், தேசத்தொண்டர் என்ற வகையில் மட்டுமின்றி, அவரது படைப்புகளும் அவருக்கு நிரந்தரப் புகழைத் தந்தன.
"ஜவாஹர்லால் நேரு", "சுபாஷ் சந்திரபோஸ்", "காமராஜர்" – வாழ்க்கை வரலாறுகளும், (சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்று நூலை பிரிட்டிஷ் அரசினர் தடை செய்தனர்) "அல்லி விஜயம்" போன்ற கதைகளும் அவர் எழுத்துப் பட்டியலில் அவரது தமிழ் இலக்கியத் தொண்டுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
இலியோ டால்ஸ்டாய் எழுதிய "போரும் வாழ்வும்" – மூன்று தொகுதிகள் (மொழி பெயர்ப்பு) அவர் இலக்கியப் பணியில் சிறந்த ஒன்று.
நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனவேறுபாட்டால் "தினமணி" ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, சொந்தமாக "தினசரி" என்கிற நாளிதழைத் தொடங்கினார் சொக்கலிங்கம்.
பத்திரிகை ஆசிரியரே அந்தப் பத்திரிகையின் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்ற சொக்கலிங்கத்தின் கொள்கை நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை "தினசரி" நாளிதழ் நடத்திய அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டார் அவர்.
நிர்வாகப் பொறுப்பை – பொருளாதாரப் பொறுப்பை ஓர் எழுத்தாளன் எடுத்துக் கொண்டால் எழுத்து பாதிக்கப்படும் என்பதை அவர் அனுபவத்தில் உணர்ந்தார்.
1952இல் தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக தினசரி பத்திரிகை நின்றுபோயிற்று.
"ஜனயுகம்" என்கிற வார இதழை 1953லும் "பாரதம்" என்கிற வாரம் இருமுறை பத்திரிகையை 1959லும் தொடங்கினாலும் தொடர்ந்து நடத்தமுடியாமல் நின்றுபோயின.
1960இல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பத்திரிகை தேவை என்று கருதிய அன்றைய முதல்வர் காமராஜின் ஆதரவில் "நவசக்தி" பத்திரிகையைத் தொடங்கினார் என்றாலும், தொடர்ந்து நடத்த முடியவில்லை.
கம்பீரமான தோற்றம், ஆஜானுபாகு திட சரீரம் என்பார்களே, அப்படி.
அவரது விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு எப்போதும் காணப்படும்.
அவருடன் நெருங்கிப் பழகிய பத்திரிகை நண்பர்களுக்கு அவருடைய பரந்த அரசியல் அறிவும், பத்திரிகை தொழில்நுட்ப அறிவும், சுதந்திர மனப்போக்கும், அபாரமான நினைவாற்றலும் பிரமிப்பை ஏற்படுத்தும்.
பிரம்மசாரியாகவே காலம் கழித்த அந்தச் சிங்க கர்ஜனை, 1966ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஓய்ந்தது.
"தென்காசிச் சிங்கம்" டி.எஸ்.சொக்கலிங்கத்தின் இலட்சியப்படி, இன்று நம்மிடையே வெற்றிநடை போட்டு வெளிவந்து கொண்டிருக்கும் "தினமணி" நாளிதழ், அவரது நினைவைச் சுமந்துகொண்டு வெளிவருகிறதே அதைவிட அந்தப் பேனா மன்னனின் சாதனைக்குச் சான்றென்ன வேண்டும்?
தனிநபர் சத்தியாகிரகத்தில் சிறை செல்லும் முன்பு தன் இருக்கையில் ஏ.என்.சிவராமனை அமர வைத்துவிட்டு, "தினமணி"யில் டி.எஸ்.சி. எழுதியிருக்கும் குறிப்பு, வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
நண்பர்களுக்கு,"இன்று முதல் ஸ்ரீ ஏ.என்.சிவராமன் "தினமணி"க்கு ஆசிரியராயிருப்பார். தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் ஸ்ரீ சிவராமனை அறிவார்கள். ஏனெனில், அவர் எழுதிய "மாகாண சுயாட்சி" என்ற அற்புதமான புத்தகத்தை இராஜ்ஜியத்தில் சிரத்தையுள்ள ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாய் படித்திருப்பார்கள். இராஜ்ஜிய ஞானமும், பொருளாதார ஞானமும் உடைய அவர் தேச பக்தியிலும் சிறந்தவர். தேச பக்தியோடு தன்னல மறுப்பையே பிரதானமாக அவர் கருதியபடியால்தான் அவருடைய பெயர் இதுவரை பிரபலமாகவில்லை. விளம்பரமில்லாமல் பின்னாலிருந்து உருப்படியான வேலைகளைச் செய்ய வேண்டுமென்ற உயர்ந்த கொள்கையைக் கொண்டவர்களில் அவர் ஒருவர். இவ்வளவையும் நான் சொல்ல வந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான்.
அதாவது, "தினமணி"யை திறமையாக நடத்துவதற்கு அவர் சகல குணங்களும் வாய்க்கப் பெற்றவர் என்பதுதான்.1920இல் ஒத்துழையாமை இயக்கத்திற்காக காலேஜ் படிப்பை அவர் விட்டதிலிருந்து சுமார் 20 வருஷங்களாக அவரும் நானும் அநேகமாக ஒன்றாகவே இராஜ்ஜியத் துறையிலும், பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்டு வேலை செய்து வந்திருக்கிறோம். ஆகவே, "தினமணி" இதுவரை எந்தக் கொள்கையில் நடத்தப்பட்டு வந்திருக்கிறதென்பதை அவர் அறிவார். அந்தக் கொள்கைக்கு அவரும் ஒரு பங்கு பொறுப்பாளியாகவே இருந்து வந்திருக்கிறார். இந்த முறையில் இதுவரை "தினமணி" நடத்தப்பட்டு வந்திருக்கிறபடியால் "தினமணி"க்கும் அதன் நண்பர்களுக்கும் உள்ள தொடர்பை அவர் பூரணமாய் அறிந்திருக்கிறார் என்பதை நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்.
எனவே, அவருடைய ஆசிரியத் தலைமையில் நடைபெறும் "தினமணி" இதுவரை அதன் நண்பர்களிடம் எவ்வளவு அபிமானத்தைப் பெற்று வந்ததோ அதைப் போலவே இனியும் பெற்றுவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. – டி.எஸ்.சொக்கலிங்கம் (25-11-1940)
நன்றி:- தினமணி