Home Printing&Publishing செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும

செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும

by Dr.K.Subashini
0 comment

 

செ. இராசு

 

பொதுப் பெயர்

செப்பேடு (செம்பு + ஏடு), ஏட்டுச் சுவடி (ஓலைச்சுவடி) ஏடு + சுவடி என்ற இரண்டு பெயர்களிலும் “ஏடு” என்ற பொதுவான பெயர் வருவதைக் காணலாம். செப்பேடுகளும் ஓலைச் சுவடிகளும் தனித்தனி ஏடுகள் கொண்ட தொகுதிகளாக உள்ளன.

 

‘பாடம் ஏதினும் ஏடது கைவிடேல்’
‘ஏடாயிரங்கோடி எழுதாது’
‘ஏடெடுத்தேன்’

போன்ற எடுத்துக்காட்டுகளில் ஏடு என்பது சுவடியையும் ஏனைய எழுதப் பயன்படும் பொருள்களையும் குறிக்கிறது. ஓலைச் சுவடி கட்டுக்கள் ‘புத்தகக் கவளி’ என்று குறிக்கப்பெறும்.

 

அளவு

கூறப்பெறுகின்ற செய்திகட்கு ஏற்றவாறு செப்பேடுகள் அளவில் சிறியதாகவோ அல்லது பெரிதாகவோ அமைக்கப்படும்.

 

எழுதப்படும் பொருளுக்கு ஏற்றவாறு ஓலையை நறுக்கி ஓலைச் சுவடிகளும் சிறிதாகவோ பெரிதாகவோ அமைக்கப்படும்.

 

ஒரு செய்தியைக் கூறப் பல செப்பேடுகள் தேவைப்பட்டால் அவை ஒரே மாதிரியில்தான் அமைக்கப்படும். அவ்வாறே ஒரு நூலை முழுமையாக எழுதப் பயன்பெறும் ஓலைச்சுவடிகளும் ஒரே அளவில், அமைப்பில் தான் உருவாக்கப்பெறும்.

 

முதல் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுப்பாடல் ஒன்று இவ்விதம் அமைந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘ஒத்து அமைந்த செப்பேடு’ என்று கூறும்.

 

இவ்வாறு எல்லா ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் ஒரே அளவாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு அளவில் இருப்பதால் இவை கட்டுக்கள் குலைந்து ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டால் அவைகளைப் பிரித்துத் தனித்தனி ஏடுகள் ஆக்குவது எளிமையாக அமைகிறது.

 

அமைப்பு

 

செப்பேடுகளை உருக்கி நீட்டித் தட்டியும், வெட்டியும் தேவையான அளவுள்ள செப்பேட்டை உருவாக்குவர். சதுரமாகவோ நீண்ட சதுரமாகவோ அவை அமைக்கப்படும். மேடுபள்ளம் இல்லாமல் அவை சமமாக்கப்படும்.

 

பனை ஓலைகளை எழுதுவதற்குத் தக்கவாறு பாடம் செய்வர். பனை ஓலைகளை வெயிலில் உலர்த்தியும், நீரில் ஊற வைத்தும், வேகவைத்தும் பதப்படுத்துவர். பனியில் இட்டுப் பாடம் செய்வதும் உண்டு. இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளைச் சோழி அல்லது கூழாங்கற்கள் கொண்டு பக்குவப்படுத்துதலும் உண்டு. சேப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் அளவுக்குத் தக்கவாறு ஒன்றோ இரண்டோ வட்ட வடிவமான துளைகள் இடுவது உண்டு. எழுதும் போது துளைகள் உள்ள இடத்தில் இடம்விட்டு எழுதுவது வழக்கம்.

 

எழுத்துமுறை

 

செப்பேடுகளுக்கும், ஒலைச்சுவடிகட்கும் பெரும்பாலும் ஏடுகளின் தொடக்கத்தில் எண் இடுவது வழக்கம். தனித்தனி ஏடுகட்குத் தொடர் எண் குறிப்பது வழக்கமே தவிரப் பக்கங்களுக்கு எண்ணிடுதல் பெரும்பாலும் வழக்கம் இல்லை.

 

செப்பேட்டில் எழுத்துக்களை வெட்டுமுன் பளிச் என்று தெரியும் ஒரு பொருளால் எழுத்துக்களை எழுதிய பின்னர் அதன் மீது வெட்டுவர். செப்பேட்டில் எழுத்துக்களை எழுதும் முறைக்கு வெட்டுதல், கொத்துதல், பொறித்தல் என்று கூறப்பெறும்.

 

ஓலைச் சுவடியில் இவ்வாறன்றி நேரடியாக எழுத்தாணி கொண்டு எழுதப்படுகிறது.

ஓலைச்சுவடியில் கற்றறிந்த புலவர்களோ நன்கு இலக்கிய, இலக்கணம் கற்றவர்களோ தாமே எழுதுவது வழக்கம். ஆனால் செப்பேடுகளில் படிப்பறிவின்றிக் கொத்துதல் தொழில் வல்ல தொழிலாளர்களோ பிறரோ வரைந்த எழுத்துக்கள் மீது கொத்துவர்.

 

செப்பேட்டிலும் ஓலைச்சுவடிகளிலும் மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி பெறுவதில்லை. ஓலைச் சுவடியில் எழுத்துக்கள் இணைந்து கோர்வையாகவும் செப்பேடுகளில் தனித்தனியாகவும் காணப்பெறும்.

 

ஓலைச்சுவடி ‘நீட்டோலை’ என்றும் அதன் எழுத்து நெட்டெழுத்து என்றும் வழங்கப்பெறும்.

 

பெயரிடுதல்

 

செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. ஆனால், ஓலைச் சுவடிகளோ எழுதியுள்ள பொருளால் மட்டுமே பெயர்பெறுகின்றன.

 

இடம் பெயர்தல்

 

செப்பேடுகளும், ஓலைச் சுவடிகளும் எடுத்துச் செல்லும் எளிமை காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைதூரமான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.

 

செப்பேடுகளோ அல்லது ஓலைச்சுவடிகளோ அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது.

 

அழிவு

 

செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். ஓலைச் சுவடிகளையும் அவ்வாறே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பரண்மேல் இட்டனர்.

 

பதினெட்டாம் பெருக்கில் நீரில் ஓலைச்சுவடிகள் அழிந்தன. பல நெருப்புக்கும் இரையாயின. எஞ்சிய ஏடுகளோ பராமரிப்பு இன்றி இராமபாணப் பூச்சிகளால் அழிவுற்றன.

செப்பேடுகள் பல உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள்  அழிக்கப்பெற்றன. இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை.

 

படிகள்

 

ஓலைச்சுவடிகட்கு மூல ஓலை மட்டுமன்றிப் பல படி ஓலைகள் இருந்தன. ஏடு பெயர்த்து எழுதுதல் என்பது பண்டைய வழக்கம்.

 

ஆனால், செப்பேடுகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரே படிதான் இருப்பது வழக்கம்.

உலோகம் அல்லாத எழுது பொருள்களில் ஓலையே முதலிடம் வகிக்கறது.

பல உலோகங்களும் எழுதப் பயன்பட்டாலும் செம்பே மிகுதியும் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

செம்பும் ஓலையும்

 

பழங்காலத்தில் ‘ஓலை’ என்றாலே உத்தரவு, ஆணை என்று பொருள்பட்டது. முதலில் ஆணைகள் ஓலையில்தான் எழுதப்பட்டன. பின் கல்வெட்டில் தேவையானவை பொறிக்கப்பட்டன. ஓலையை (ஆணையை) ‘சிலையிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளுக’ என்ற தொடரைக் கல்வெட்டுக்களில் காணுகிறோம். எனவே ஒலை முதல்படியாகவும், கல்வெட்டு இரண்டாவது படியாகவும் செப்பேடு மூன்றாவது படியாகவும் ஆகிறது.

 

ஆவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்ற சில செப்பேடுகளை நம் கல்வெட்டுத்துறை பெற்றுள்ளது,

 

அதுபோல் செப்பேடுகள் சில ஓலை நகல்களைப் பெற்றுள்ளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் குறிப்பு நாட்டுப் பட்டயம், கத்தாங்கண்ணிப் பட்டயம், திருமுருகன்பூண்டிச் சாசனம் என்ற மூன்று ஓலைபட்டயங்கள் உள்ளன. அவற்றின் செப்பேடுகள் முறையே கள்ளிப்பட்டி திரு க. கு. கோதண்டராமக் கவுண்டர், கத்தாங்கண்ணி இராசாக்கவுண்டர், திருப்பூர் விஜயபுரம் வெங்கடாசலக்கவுண்டர் ஆகியோரிடம் உள்ளன.

 

பண்டைய செப்பேடுகள் ஓலைச்சுவடிகளை மனதில் கொண்டு சுவடி அமைப்பிலேயே செய்யப்பட்டன. பிற்காலச் செப்பேடுகள் வடிவத்தில் மாறுபட்டன.

தில்லையில் காலிங்கராயன் என்னும் தலைவனால் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூவர் தேவாரம் செப்பேட்டில் பொறித்து வைக்கப்பெற்றது.

‘மூத்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டினுள் எழுதி-இத்தலத்தில்
எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்
கூத்தன்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று’

என்பது அக்கல்வெட்டுப் பாடலாம்.

 

திருப்பதியில் தெலுங்கு, வடமொழி நூல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் உள்ளன. திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள் சிலவற்றில் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லிமாலை எழுதப்பட்டுள்ளது,.

இன்று செப்பேடு அளிக்கும் வழக்கம் மீண்டும் தொடங்கியுள்ளதைக் காணுகின்றோம்.

 

ஓலைப்பட்டயங்கள்

 

செப்பேடுகளில் எழுதப்பெறும் ஆவணங்கள் போன்றவை பல ஓலைகளில் எழுதப்பட்டுள்ளன. அவை கிழக்கிந்திய கம்பெனி, மராட்டியர், நவாபுகள் முத்திரையுடன் கிடைத்துள்ளன. அவற்றில் பல முதுகு நரம்பு ஆகிய ஈர்க்கு எடுபடாமல் இரட்டை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளன. விற்பனை, ஒத்திவைப்பு, ஒப்பந்தம், அடிமைமுறை, கொடுக்கல்-வாங்கல், கடன் பத்திரம் ஆகியவை அவற்றில் அடங்கும் பொருளாகும்.

 

செப்பேடுகட்குக் கொடுக்கும் மதிப்பையே இவ்வகை ஓலைகட்கும் கொடுக்கலாம்.
 


தட்டச்சு உதவி.திருமதி ஸ்வர்ண லக்‌ஷ்மி [email protected]

You may also like

Leave a Comment