திருமதி.பவள சங்கரி திருநாவுக்கரசு
இனிய ”கர” தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சித்திரைப் பெண் சிரித்தோடி வரும் இன்பத் திருநாள் .இச் சித்திரைத் திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கங்களை நம் முன்னோர்கள் சுவைபட விளக்கியுள்ளனர். அதன் படி கொங்கு நாட்டில், இன்றும் இவ்வழகங்களை பெரும்பாலானவர்கள் கடைபிடித்து வருகின்றனர் என்றே கொள்ளலாம்.
சித்திரைத் திருநாள்,ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதி சங்கரரும் அவதரித்த பொன்னான திருநாளாகும். அன்றைய தினத்தில் முதல் நாளே வாசலில் சாணம் போட்டு மெழுகி, வண்ண கோலமிட்டு, அழகு மலர்களுடன் அலங்காரம் செய்து வைப்போம்.
விடியற்காலை, அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் சித்திரைக் கனி [ மா, பலா, வாழை என்ற முக்கனிகள்] மற்றும் பொன் ஆபரணம் வைத்து மஞ்சள் சரக்கொன்றை மற்றும் நறுமணம் கமழும் மலர்களும், மஞ்சள், குங்குமமும வைத்து அதனை கண்ணில் படும்படிவைத்துக் கொண்டு புத்தாண்டின் முதல் நாள் இம் மங்கல்ப் பொருட்களின் முகத்தில் தான் முதலில் விழிப்போம்.
காலையில் மங்கல நீராடி,அவரவர் விருப்ப தெய்வங்களை மனதார வணங்கி, அன்று அறுசுவை உணவும் உண்ண வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும் வகையில், இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு என்ற அறுசுவை உணவையும் அன்று உண்ண வேண்டும் என்பர்.
இந்தக் “கர” ஆண்டின் துவக்க நாளை கொண்டாட அறுசுவை உணவின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. இனிப்பு வகை:தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள் :
1. 2 கப் துறுவிய தேங்காய்.
2. 1 கப் பால் கோவா.[சக்கரை இல்லாதது]
3. 1 டே.ஸ்பூன் நெய்.
4. 1 கப் சக்கரை.
5. 2 கப் பால்
6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்.
7. 1 சில்வர் இலை அலங்கரிப்பதற்கு.
செய்முறை :
1. ஒரு அடி கனமான பாத்திரம் எடுத்து, அதில் தேங்காய் துறுவல், ஏலக்காய் தூள், சக்கரை மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடமோ அல்லது கெட்டியாகும் வரையோ வைத்திருக்க வேண்டும். நடுவில் கிளறி விட வேண்டும்.
2. கோவாவை அத்துடன் கலந்து, நன்கு கிளறி விடவும்.
3. நெய்யைக் கலந்து, நன்கு கிளறி விடவும்.
4. ஒரு குழி தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் பரப்பி, மேலே சில்வர் பேப்பர் அலங்காரம் செய்து ஆறவிடவும்
பிறகு அதனை தேவையான வடிவத்தில் துண்டு போடவும்.
2. புளிப்பு: மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள் :
1. 2 கப் பச்சை மாங்காயை சிறு சன்னமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2 . 1 சுப் சக்கரை.
3.1 டீஸ்பூன் சீரகப் பொடி.
4. 1 டீபூன் – எள்ளு லேசாக நுணுக்கியது.
5 , 1/2ஸ்பூன் கடுகு.
6. 2 முழு சிகப்பு மிளகாய்
7 . தேவையான அளவு உப்பு
8. பெருங்காயம் ஒரு துளி.
9 .1 டீஸ்பூன் எண்ணெய்.
செய்முறை :
1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில், கடுகு, சீரகப் பொடி, எள்ளு, பெருங்காயம் இவையெல்லாம் போட்டு, சிவந்தவுடன்,
2. அதில் உப்பு மற்றும் மாங்காய்த் துண்டுகளும் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
3. இறுதியாக சக்கரை சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை சிறு தணலில் வேக விடவும்.
3. துவர்ப்பு: விடாங்காய் பச்சடி
1. விடாங்காய் ஓடை நீக்கி உள்ளிருக்கும் ஊனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. அதில் தேவையான அளவு உப்பும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. இதை இப்படியே சாப்பிடலாம். அல்லது தேவையானால் தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.
4. கசப்பு: வேப்பம் பூ ரசம்
வழக்கமாக ரசம் வைப்பது போல் வைத்து, அதில் வேப்பம் பூவை லேசாக வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து, ரசத்தில் கலக்க வேண்டும்.
5. காரம்: காண்ட்வி
தேவையான பொருட்கள் :
1. க்டலை மாவு – 1/4 கிலோ
2. தயிர் – 1/4 கிலோ
3. தண்ணீர் – 500 மி.லி.
4. பச்சை மிளகாய் 4 நன்கு அரைத்தது.
5. சீரகம் – 1/4 ஸ்பூன்.
அலங்கரிப்பதற்கு :
தேங்காய்த் துறுவல் – 1 டே.ஸ்பூன்.
கொத்தமல்லி இழை – 2 டே.ஸ்பூன்.
கடுகு தாளித்தது.
செய்முறை :
1. கடலை மாவை தயிருடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
2, அதனுடன், மிளகாய் விழுது, சீரகம், உப்பு, எல்லாம் கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்துக் கிளறிவிட
வேண்டும்.
3. கெட்டியானவுடன், அதனை ஒரு தட்டில் பரவலாக சன்னமாக வரும்படி ஊற்ற வேண்டும்.
4. ஆறியவுடன், அதனை சுருட்டி ரோல் போல செய்து, தேவையான அளவு துண்டாக்கவும் .
5. அதன் மீது தாளித்த கடுகையும், தேங்காய் துருவலும், மல்லி இலைகளும் தூவி அலங்கரிக்கவும்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!