Home Printing&Publishing சரஸ்வதிமகால் பதிப்புகள்

சரஸ்வதிமகால் பதிப்புகள்

by Dr.K.Subashini
0 comment

வீ.சொக்கலிங்கம்

 

 

“வைய மீன்றதொன் மக்க ளூனத்தினைக்
கையி நாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பழந்தமிழ்”

             
          அதனைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி மக்கள் நாளடைவில் பனையோலைகளில் எழுதிப் பயன்படுத்திப் பாதுகாத்து வந்தனர். அவ்வாறு எழுத்தாணியால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் எண்ணிலடங்கா. அவைகளில் பல செல்லின் வாய்ப்பட்டும், தீக்கிரையாகியும், தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டும், ஒடிந்தும், மடிந்தும், மக்கியும், அறியாமையால் அடுப்பெரித்தும், பயனற்றுப் போனவையும் போக எஞ்சிய ஓலைச்சுவடிகள் உலகெங்கும் கோயில்களிலும், மடங்களிலும், நூலகங்களிலும், அறிஞர் பெருமக்கள் இல்லங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனினும் சரியான பாதுகாப்பு முறை இன்மையால் காலப்போக்கில் அவையும் சிதைந்து கொண்டே வருகின்றன.

          இவைகளுள் சில சுவடிகளே அச்சு நூலாக வெளிவந்து பலருக்கும் பயன்பட்டு வருகின்றன. பல சுவடிகள், காண்பார் அறிவார் இன்றியும், பதிப்பிக்கப் பொருள் வசதி இன்றியும், பதிப்பிக்கத் தக்கவர் இன்றியும், அச்சேறாமல் பயன்படாமல் உள்ளன.

          சுவடிகளின் மதிப்பினை உணர்ந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது, பரந்துகிடக்கின்ற சுவடிகளைச் சேகரித்தும், ஓரிடத்தில் சேமித்தும் வைத்தனர். அவ்வாறு தொன்றுதொட்டு சேகரித்து வைக்கப்பட்ட தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலையத்தில் மன்னர் இரண்டாம் சரபோஜி சத்திரபதி அவர்கள், இயன்ற அளவு தாமும் சுவடிகளை மொழி, சமய வேறுபாடின்றிச் சேகரித்து வைத்து, அவைகட்கு , இரங்கூனிலிருந்து தேக்கு மரங்களைக் கப்பலில் வரவழைத்து, வானளாவியது போல, அண்ணாந்து பார்க்கத் தக்கதாக, 16, 32 கதவுகளை உடையனவாக நிலையான நிலைப்பேழைகளைச் செய்து வைத்துப் பாதுகாத்தார்கள். இவ்வாறு சிறப்புற்ற நூலகத்தின் பெயர் சரசுவதிபண்டார் எனப்படும். சரசுவதி (நூல்) பண்டாரம் என்றிருந்தது. பின்னர் “தஞ்சாவூர் மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால்” எனப்பெயர் பெற்றது. அது மக்களால் ‘சரசுவதிமகால்’ என்று அழைக்கப்படுகிறது.

 

          தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய சைவ ஆதீனமாகிய திருவாவடுதுறையாதீனத்தில் சேகரித்து வைகப்பட்டுள்ள சுவடி நிலையத்திற்கும் ‘சரசுவதிமகால்’ என்ற பெயர் வழங்கி வருகின்றது.

          தஞ்சை மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால் நூலகம் தற்போது, தஞ்சை மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால் நூலகச் சங்கத்தாரால் இயங்கி வருகின்றது. இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, மலையாளம் முதலான மொழிகளில் சுவடிகள் உள்ளன. அவைகள் தமிழ், தேவநாகரி, நந்திநாகரி, கிரந்தம் முதலான எழுத்துக்களில் உள்ளன.

 

          ஓலைச்சுவடிகளேயன்றிப் பிற்காலத்தில் வந்த காகிதங்களில் எழுதப்பட்ட காகிதச்சுவடிகளும் ஏராளம் உள்ளன. மேலும், மராத்தி மொழியின் சுருக்கெழுத்தான ‘மோடி’ எனும் பெயருடைய எழுத்துக்களால் எழுதப்பட்ட காகித ஆவணங்கள் நிறைய உள்ளன. அவைகளுள் மூட்டைகளாக உள்ளவை 850.

 

          கி.பி. 1798ல் மன்னர் சரபோஜி பட்டத்திற்கு வருவதற்கு முன், இந்நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட சுவடிகள் பலவற்றுள்ளும் ‘அரவக்கிரந்தம்’ என்றழைக்கப்பட்ட தமிழ் இலக்கியச் சுவடிகள் 633 இருந்தன. அப்போது மருத்துவச் சுவடிகள் இல்லை. சரபோஜிமன்னர் காலத்திலிருந்து மருத்துவச் சுவடிகள் சேகரிக்கப்பட்டன. மன்னர் மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டு, மருத்துவம் கற்று, தானே மருத்துவராகவும் இருந்துள்ளார். அவர் உருவாக்கிய மருத்துவசாலை ‘தன்வந்திரிமகால்’ மூலம் ‘சரபேந்திர வைத்தியம்’ என்ற பெயரால் அனுபவ வைத்திய நூல்கள் தோன்றின.                
சரபோஜி பட்டத்திற்கு வந்த பிறகு கி.பி.1801ல் அப்போதிருந்த 633 சுவடிகளும் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு அட்டவணையும் செய்யப்பட்டன. அவர் காலத்திலேயே, கி.பி.1830-ல் பின்னர் சேர்ந்த சுவடிகளும் சேர்ந்து 719 சுவடிகள் அட்டவணை பெற்றன. அப்போது தோன்றிய வைத்தியச் சுவடிகள் 117ம் அட்டவணை பெற்றன.

     பின்னர் மன்னர் சிவாஜி காலத்தில் கி.பி 1857ல் தமிழில் இலக்கியம் 719ம், மருத்துவம் 118ம் ஆக மொத்தம் 837 சுவடிகள் இருந்தன.

     இந்த நூற்றாண்டில் கி.பி.1925ல் தமிழறிஞர் சைவப்புலவர் எல்.உலகநாதப்பிள்ளை அவர்களால் தமிழ் இலக்கியம் 719ம் இரண்டு தொகுதிகளாகவும், மருத்துவம் 119ம் மூன்றாம் தொகுதியாகவும், சுவடி (நூல்) விவர அட்டவணை தயாரிக்கப்பட்டன.

     பின்னர், சுவடிகளைச் சேகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ள சுவடிகள்:

மொழி                           ஓலை        காகிதம்      கூடுதல்
1.தமிழ்                           2606              25               2631
2.சமஸ்கிருதம்             19084            17586         36670
3.மராத்தி                                             2954           2954
4.தெலுங்கு                     776                                   776

 

       இவைகளுள் இதுவரை அச்சேறிய சுவடிகள்: தமிழ் 123, சமஸ்கிருதம் 80, மராத்தி 31, தெலுங்கு 17, விவர அட்டவணை உள்பட மொத்தம் 251. ஆங்கிலத்தில் 3.

 
      இவைகளுள் நிகண்டு, இலக்கண நூல்கள், சமய நூல்கள், சித்தாந்த நூல்கள், பேரிலக்கிய நூல்கள், சிற்றிலக்கிய நூல்கள், இசை நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், தமிழ்ச்சுவடிகளின் விவர அட்டவணைகள், அகரவரிசைப்பட்டியல், பருவ இதழ்கள், கட்டுரைகள், விளக்கப்பதிப்புகள், மறுபதிப்புகள், தொகுப்பு நூல்கள் முதலியன அடங்கும்.

      கி.பி.1939ம் ஆண்டு இம்மகாலிலுள்ள சுவடிகளுள் அடங்கியுள்ள அரிய பெரிய செய்திகளை வெளியிடும் நோக்கோடு, ஆண்டுக்கு மூன்று என்ற கணக்கில் பருவ இதழ் தொடங்கப்பட்டது. இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில், சிறிய தமிழ்ச் சுவடிகள் அச்சாகின்றன.

 
     பின்னர் இங்குள்ள வடமொழிச்சுவடியினின்று முதன்முதலாக “முத்ராராட்சச நாடகம்” என்ற நூல் அச்சேறியது 1948ம் ஆண்டு. இதனை அடுத்து 1949ம் ஆண்டு, தமிழில் முதன்முதலாக ஓலைச்சுவடியினின்றும் அச்சான நூல் ‘சரபேந்திர வைத்திய முறைகள் – குன்மரோக சிகிச்சை’. திருவாளர். வாசுதேவசாஸ்திரி அவர்களும், திரு. டாக்டர் வெங்கட்ராஜன் அவர்களும் இணைந்து பதிப்பித்தனர்.
 
     இதனைத் தொடர்ந்து தமிழில் அதே ஆண்டு ‘சரபேந்திர வைத்திய முறைகள்- கர்ப்பிணி பாலரோக சிகிச்சை அச்சேறியது. 1950-ம் ஆண்டுக்ஷெ நயன ரோக சிகிச்சை, இராமையன் அம்மானை, பெருந்தேவனார் பாரதம், திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், தரங்கை வீரவேலாயுதசாமி பிள்ளைத்தமிழ், சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் ஆகிய மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள், மாடுகள் குதிரைகள் பறவைகள் வைத்தியம், மூன்று தமிழ் நாடகங்கள் ஆகியவை அச்சாயின. 1951-ம் ஆண்டு கொங்கணர் சரக்கு வைப்பு, பாண்டு காமாலை சிகிச்சை, காச சுவாச சிகிச்சை, சிரோரோக சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை ஆகியவை அச்சேறின. 1952-ம் ஆண்டு ஆனந்த கந்தம், விரணரோக சிகிச்சை, நம்மாழ்வார் திருத்தாலாட்டு, திருச்சிற்றம்பலக் கோவையார், திருவாய்மொழி வாசகமாலை ஆகியவை அச்சிடப்பட்டன.
 
     1953-ல் நாலடியார் உரைவளம் 1,2 பாகங்கள், சுரரோக சிகிச்சை, வாதரோக சிகிச்சை ஆகியனவும், 1956-ல் க்ஷயம் உளமாந்தை சிகிச்சை, விஷரோக சிகிச்சை ஆகியனவும், 1957-ல் சரபேந்திர வைத்திய ரத்னாவளியும், 1958-ல் மலையருவி, அகத்தியர் 2000 முதல் இரண்டு பாகங்கள், சரபேந்திர வைத்தியம் விரேசன முறையும் அதிசார சிகிச்சையும் ஆகியனவும் அச்சாயின.
 
     கூர்மபுராணம் முதற்பகுதி 1961-லும், 1962-ல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், சன்னிரோக சிகிச்சை, நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கம், ஞானசாரம் ஆகியவையும், 1963-ம் ஆண்டு, கூர்மபுராணம் இரண்டாம் பகுதி, பித்தரோக சிகிச்சை, அகத்தியர் 2000 மூன்றாம் பாகம், திருநெறிவிளக்கம், தத்துவ விளக்கம் ஆகியவையும் அச்சிடப்பட்டன.
 
     1964-ல் சங்கற்ப நிராகரணம், 1965-ல், குட்டரோக சிகிச்சை, 1966-ல் போகர் நிகண்டு அட்டவணை, 1967-ல் புல்லையந்தாதி, தனிப்படற்றிரட்டு முதல் பகுதி, அருணகிரி அந்தாதி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம், 1968-ல் மருதூரந்தாதி, குடந்தை அந்தாதி, 1969-ல் வண்ணத்திரட்டு, செண்டலங்காரன் விறலிவிடுதூது, காலச்சக்கரம், தனிப்பாடற்றிரட்டு 2ம் பகுதி, சித்தாந்த நிச்சயம், 1970 சிவஞானதீபம், தியாகேசர் குறவஞ்சி, வராகர் ஒராசாத்திரம், 1971-ல் கும்பகோணப்புராணம் (சொக்கப்புலவர் எழுதியது), கொடுந்தமிழ், இலக்கண விளக்கம் – எழுத்து, சொல், பொருள் ஆகியவை அச்சேறின.
 
     சரபேந்திர சித்தமருத்துவச்சுடர், இலக்கண விளக்கம் பொருளதிகாரம் அகத்திணையியல் – I & II ஆகியவை 1972ம் ஆண்டும், இலக்கணக்கொத்து, பிரயோகவிவேகம், இலக்கண விளக்கம் – பொருள்- அணியியல் ஆகியவை 1973-ம் ஆண்டும், செந்தமிழ், போஜன குதூகலம், இலக்கண விளக்கம்-பொருள்-செய்யுளியல், பாட்டியல், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகியன 1974ம் ஆண்டும், ஆசிரிய நிகண்டு 1975ம் ஆண்டும், திருப்பெருந்துறைப் புராணம், கஞ்சனம்மானை ஆகியவை 1976ம் ஆண்டும், சிவப்பிரகாச விகாசம், ஆத்திச்சூடிப்புராணம் ஆகியவை 1977ம் ஆண்டும், வீரையன் அம்மானை, திருநல்லூர்ப்புராணம் ஆகியவை 1979ம் ஆண்டும் பதிப்பிக்கப்பட்டன.
 
     1980ம் ஆண்டு ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள், பார்சுவநாதர் அம்மனை ஆகியவையும், 1981ம் ஆண்டு இராமர் அம்மனை, வைத்தியத் திரட்டு, சீவகசிந்தாமணி அம்மனை, ஆகியவையும், 1982ம் ஆண்டு சமாதிலிங்கப் பிரதிட்டையும், 1983ம் ஆண்டு ததீசிப்புராணம், குசலவன் கதை ஆகியனவும், 1985ம் ஆண்டு திருநெல்லைப் பரசமயகோளரியார் பிள்ளைத்தமிழ், குமார சாமீயம், மயநூல், சோமயாகப்பெருங்காவியம், தருமநெறிநீதிகள், நாராயண சதகம், காமாட்சி தவசு, நாசிகேதுபுராணம், அருணாசலர்மீது வண்ணம், வீராகமம், அகத்தியர் 1200, சதாசிவத்தியானம், அதிரூபவதிகலியாணம், நீதிநூல், தமிழிசைப்பாடல்களும் நாட்டியப்பதங்களும் ஆகியவையும் அச்சுவாகனமெறின.
 
     4448 வியாதிகள், அரிச்சந்திரநாடகம் ஆகியவை 1985-லும், அனுபவ வைத்திய முறைகள், சகாதேவ நிமித்தசூடாமணி, திருக்குறள் பழைய உரை, சிறுத்தொண்டர் நாடகம், அருணாசலபுராணம், வடிவேல் சதகம், சித்திர புத்திரர் அம்மானை, அகத்தியர் 110ல் லோகமாரணம், அதிரியர் அம்மானை, நளச்சக்கரவர்த்தி கதை, துரோபதை அம்மானை, பலஜாதிவிளக்கம், மாலை-தொகுப்பு ஆகியவை 1986-லும் அச்சிடப்பட்டுள்ளன. பின்னரும் அச்சாகிக்கொண்டிருக்கின்றன. இவைகளெயன்றித் தமிழ்ச்சுவடிகளின் விவர அட்டவணைகளும் அச்சாகியுள்ளன.
 
     சிறுசிறு நூல்களாக இருப்பவைகளைப் பருவ இதழில்  கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு நூலாக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி நூலானவை தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி, முருகர் கதம்பம், வலைவீசு புராணம், சிவகாமி அம்மை அகவல், சுமிருதிசந்திரிகை, கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ், திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், காஞ்சிமன்னன் அம்மானை, திருச்சோற்றுத் துறைத் தலபுராணம், திருவையாற்றுப்புராணம், குயில்ராமாயணம், சரபபுராணம், வள்ளலார் பிரபந்தங்கள், நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடுதூது, வென்றது யார் முதலியன.
 
     இவற்றுள் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி, நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடுதூது மறுபதிப்பாகி விற்பனையாயின. வள்ளலார் பிரபந்தங்கள், சுமிருதிசந்திரிகை, திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், சரபபுராணம் முதலியன தனிநூலாக வந்து விற்பனையாயின. முருகர் கதம்பம் போன்றவை மறுபதிப்பாகாமல் இருக்கின்றன. வலைவீசு புராணம் என்ற நூல் தனிநூலாகாமல் பருவ இதழிலேயே மறைந்துகிடக்கிறது. இவற்றுள் பல தற்போது கிடைப்பதரிதாயுள்ளன.
 
     இந்நாட்டில் அச்சகங்கள் தோன்றுவதற்கு முன்பே கற்களைக்கொண்டு உருவாக்கிய அச்சுக்களைக் கொண்டு, கையால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில், பல நூல்களை முதன்முதலில் அச்சேற்றிய பெருமை இரண்டாம் சரபோஜியையே சாரும். அவ்வாறு உருவாக்கப்பட்ட குமாரசம்பவ சம்பு முதலான நூல்கள் மகாலில் இடம்பெற்றுள்ளன.
 
     இதன்பின்னர் எழுந்த முன் குறிப்பிடப்பட்ட பதிப்புகளில் ஒருசிலவற்றின் சிறப்புக்களைக் காண்போம். இம்மகாலில் இடம் பெற்றுள்ள சுவடி “ஆசிரியநிகண்டு”. நிகண்டு நூல்களுள் மிக எளிய நடையில் அமைந்தது இது. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் இயற்றியது. பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தத்தாலானது. அதனால், “ஆசிரியநிகண்டு” எனப்பெயர் பெற்றது. இந்தத் தலைப்பில் இரண்டு தொகுதிகளையுடைய சுவடி ஒன்று மட்டுமே சரசுவதிமகாலில் இருந்தது. சென்னை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் நூலகத்தில், தொடர் எண் 345, 941 ஆகிய இரண்டு சுவடிப்படிகளையும் பெற்று, இதன் முதல்எட்டுத்தொகுதிகளையும் வெளியிடலானேன். இவற்றுள்:
 

  • மகால் சுவடியில் 2 தொகுதிகள்: 94 செய்யுட்கள்
  • உ.வே.சா சுவடியில் 2 தொகுதிகள்:87 செய்யுட்கள்
  • உ.வெ.சா சுவடியில் 8 தொகுதிகள்:202 செய்யுட்கள்

இருந்தன.

 
     இவற்றைக்கொண்டு பாடவேறுபாடுகள் கண்டு, என்னென்ன வகையில் பாடவேறுபாடுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டுத் தந்துள்ளேன். இதுவரை தெரியவ்ந்துள்ள நிகண்டு நூல்களின் பட்டியலும் தந்துள்ளேன். இந்நூலின் பதிப்புச்சிறப்பு, மற்ற நிகண்டுகளின் ஒப்புமைகள் பெற்றுள்ளது. செய்யுள் முதற்குறிப்பகரமுதலி, பெயர் அகரமுதலி ஆகியவையும் இதில் உள்ளன. இதன் எஞ்சிய மூன்று தொகுதிகளையும் வெளியிட வேட்கைகொண்டு, பல இடங்களிலும் தேடிய வேளையில், போளுவாம்பட்டி திருவாளர் இராமசாமிக்கவுண்டர் அவர்களிடமிருந்து பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் கையெழுத்துப் பிரதி ஒன்று கிடைத்தது. அதனைச் சரசுவதிமகாலில் சேர்த்துள்ளேன். அத்துடன் பேரூராதீனத்தில்முழுச்சுவடியும் இருக்கக்கண்டு, அவற்றைப்பெற்று, மேற்கண்டவாறே ஒப்புமை, பாடவேறுபாடுகள், செய்யுள் அகராதி, பெயர் அகராதிகளுடன் வெளியிட்டுள்ளேன். இச்சுவடியுடன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியையும் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன் என்பதையும் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.
 
     அடுத்து, நாலடியார் உரைவளம் பதுமனார் உரை, தருமர் உரை, விளக்க உரை ஆகியவைகளுடன் 200, 200 பாடல்களாக இரண்டு பாகங்களாக அச்சாகியுள்ளது. இதன் சிறப்பாவது: நாலடியார் பாடல், தருமர் உரை, பதுமனார் உரை, விளக்கஉரை, பொழிப்புரை, மேற்கோள் பகுதிகள், ஒப்புமைப்பகுதிகள், விசேடக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
 
     வடமொழியிலுள்ள சில்பசாத்திர நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியினை 1957-ம் ஆண்டு சென்னை மாநில அரசு இச்சரசுவதி மகால் நூலகத்தாரிடம் அளித்தது.
 
     இப்பணியினை மேற்கொண்ட மகால், வடமொழியில் கிரந்த எழுத்துக்களிலும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பினை உரைபோல விளக்கமாகவும் பதிப்பித்துத் தந்தது. அவ்வாறு வெளிவந்த நூல் சாரசுவதீய சித்ரகர்ம சாத்திரம், பிராம்மிய சித்திர கர்ம சாத்திரம், காசியபசில்பம், சில்பரத்தினம், சகலாதிகாரம், மயமதம் முதலியன. இவ்வாறு தமிழில் நூல்களைத் தரும் உதவியினை மகால் செய்து வந்தது. இது ஸ்தபதியார்கட்கு மிக மிகப் பயன்பட்டு வந்தது. இன்றளவும், இந்நூல்களில் கூறப்பட்டுள்ள, தெய்வப் படிமங்களின் அமைப்பு, அவைகளின் அளவுகள், கோயில்களின் அமைப்புகள் முதலியன மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.
 
     இதனைப்போன்று சிறந்ததோர் நூல் ‘ஸ்ரீதத்துவநிதி’ என்பது மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. மைசூர் மாமன்னர், ராஜஸ்ரீ கிருஷ்ணராஜ மகாராஜா அவர்களால் இயற்றப்பட்டது.  இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தந்திரங்கள் முதலானவற்றிலிருந்து தொகுத்து, தேவதைகளின் உருவங்கள் தியானங்கள் இவற்றைப் பற்றியும், சக்தி நிதி, விஷ்ணு தத்துவ நிதி, சிவ தத்துவ நிதி, பிரம்ம தத்துவநிதி முதலான ஒன்பது நிதிகளைக் கொண்டது. இதுவும், கிரந்த எழுத்தில் மூலமும் தமிழுரையும் ஆக வெளிவந்துள்ளது.
 
     திருவாஇமொழி வாசக மாலை எனும் நூல் மணிப்பிரவாள நடையில் சுவடியாக இருக்கிறது. அதனைச் சமஸ்கிருத மேற்கொள்களுடனும், பழைய தமிழ்ச் சொற்களுடனும் அவைகளின் குறிப்புகளுடனும் பதிப்பித்துள்ளனர். இது திருவாய்மொழியின் ஓர் பழைய விரிவுரை. முதற்பாட்டிலேயே மற்ற பாட்டுக்களின் கருத்துக்கள் எல்லாம் அடங்கியுள்ளன. இதனைச்சுமார் 400, 500 ஆண்டுகட்கு முன்னரே கோனேரிதாஸ்யை என்ற பெண்பாற்புலவர் செய்துள்ளார்.
 
     இரத்தினப் பரிட்சை எனும் நூலில், மகரிஷிகள், புரணங்களிலும் சுமிருதிகளிலும், சிற்ப நூல்களிலும், வைத்திய நூல்களிலும், வடமொழியில் கூறியுள்ளவற்றைத் தொகுத்து, மிகத் தெளிவான தமிழ் மொழிபெயர்ப்புடன் அச்சிட்டுத் தந்துள்ளனர்.
 
     இவ்வாறே, பூர்வ பாராசரியம், இராஜமிருகாங்கம் நாடீசக்ரம், அசுவசாத்திர பாணினீய தாதுபாடம் முதலானவைகளைத் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளனர்.
 
பான்ஸ்லே வமிச சரித்திரம்:
     

     தஞ்சைப் பெரிய கோயிலில், தஞ்சை மகாராட்டிர மன்னர் சரபோஜியின் காலத்தில் வெட்டப்பட்ட அவர்தம் மன்னர் பரம்பரையினை விளக்குவதாக மராத்தி மொழியில் அமைந்த கல்வெட்டொன்று பெரிய அளவில் உள்ளது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளனர். இராக ஆலாபனைகளும் டாயங்களும் என்ற இசை நூலையும், பரதார்ணவம், நாட்டிய சாத்திர சங்கிரகம், பின்னல் கோலாட்டம், நாட்டியத்திற்கான சாஹித்திய வகைகள் முதலான நூல்கலைத் தமிழேயன்றி ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.

 
     சமய சித்தாந்த நூல்களை வெளியிடும்போது விளக்கவுரை தெளிவுரை எழுதி வெளியிட்டுள்ளனர்.
 

     சிறுசிறு நூல்களாக உள்ளவற்றை இரண்டு, மூன்று நூல்களாகச் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். மூன்று பிள்ளைத் தமிழ் என்ற தலைப்பில் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், தரங்கை வீர வெலாயுதசாமி பிள்ளைத்தமிழ், சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் என்ற மூன்றினையும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளனர். பாண்டிகேளீவிலாச நாடகம், புரூரவச் சக்கரவர்த்தி நாடகம், மதன சுந்தரப்பிரசாத சந்தான விலாச நாடகம் என்ற மூன்று தொன்மையான நாடகங்களை ‘மூன்று நாடகங்கள்’ என்ற பெயரால் வெளியிட்டுள்ளனர்.

 
     முருகர் கதம்பம் என்ற நூலில், முருகன் புகழ்பாடும் வருமுருகாற்றுப்படை, கதிர்காமவேலவன் தோத்திரம், செந்தில் வேலவன் தோத்திரம், பழனி வேலவன் தோத்திரம், பழனி மாலை, கந்தர் காதல், திருச்செங்கோட்டகவல் ஆகிய ஏழு நூல்கள் அடங்கியுள்ளன.
 

     வண்னத்திரட்டு என்ற நூலில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட 23 வண்ணப்பாடல்கள் அடங்கியுள்ளன. தனிப் பாடற்றிரட்டு இரண்டு பாகங்களாக அச்சாகியுள்ளன. இதன் விளக்கம் யாவருக் அறிந்ததே.

 
     நான் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட ( குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், தூது, அம்மானை முதலான சிற்றிலக்கிய நூல்களுள்) தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சியில் இதுவரை தெரியவந்த குறவஞ்சி நூல்களின் பட்டியலும், கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிள்ளைத்தமிழ் நூல்களின் பட்டியலும், நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடு தூது நூலில் தூதுப்பட்டியலும், துரோபதை அம்மானையில் அம்மானைப் பட்டியலும் தந்துள்ளேன், இது பயன்தரத்தக்கது.

 
     சுமிருதி சந்திரிகை எனும் நூல் வடமொழியிலுள்ள 18 சுமிருதிகள் கூறும் பல்வேறு நியதிகளைத் தமிழில் கூறுவது. இது விரிவான முகவுரையுடன் அச்சாகியுள்ளது.

 
     வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கியால் இலத்தீன் மொழியில் இயற்றப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் இலக்கணத்திற்கு ஜார்ஜ் வில்லியம் கோன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் மறுபதிப்பும் அச்சாகியுள்ளது. இது கொடுந்தமிழ் எனும் பெயருடையது. செந்தமிழ் என்ற நூலும் அவ்வாறே.

 
     இனி மருத்துவ நூல்கள் நிறைய அச்சாகியுள்ளன. முதன்முதலாக அச்சான சரபேந்திர வைத்திய முறைகள் குன்மரோக சிகிச்சை எனும் நூல் மன்னர் சரபோஜியின் மருத்துவச் சாலையில் உபயோகிக்கப்பட்ட அனுபவ சித்தமானமுறைகள் அடங்கியது. வயிற்றில் உண்டாகும் எல்லா நோய்களுக்கும் அனுபவ சித்தமான மருத்துவ முறைகளைக் கொண்டது. இது குணபாடம் சுத்திமுறை ஆகியவற்றுடன் கூடியதோடல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத்தீன் முதலான மொழிகளில் பெயரகராதியுடனும் கூடியது. ஆயுர்வேத வைத்திய முறையின் தத்துவங்களும் விளக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் கர்ப்பிணி பாலரோக சிகிச்சை, நயனரோக சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை, விரண்ரோக சிகிச்சை, சுர்ரோக சிகிச்சை, வாதரோக சிகிச்சை, க்ஷயம் உளமாந்தை, விஷ வைத்தியம், வீரேசன முறையும் அதிகார சிகிச்சையும், பித்தரோக சிகிச்சை, சன்னிரோக சிகிச்சை, சூலை, குட்டம், மூலம், பித்தம் முதலான ரோகங்களுக்கு மருந்துகள் ஆகியவையும் அச்சாகியுள்ளன. சரபேந்திர வைத்திய ரத்தினாவளி என்ற நூல், மன்னர் சரபோஜி தன் சொந்த உபயோகத்திற்காக தன்வந்திரி மகாலில் பரிசோதித்த அனுபவ சித்தமான மருத்துவ முறைகளைக் கொண்ட்து. இது மராத்தியினின்றும் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான முகவுரையுடனும், அட்டவணை அனுபந்தத்துடனும் அச்சாகியுள்ளது. மருத்துவத்தில் மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டுவரும் நூல்கள்: மாடுகள் குதிரைகள் இலக்கணமும் வைத்தியமும், போகர்நிகண்டு அட்டவணை, அகத்தியர் 2000, கொங்கணர் சரக்குவைப்பு, தன்வந்திரிவைத்தியம் முதலியன.

 
     சோதிட நூல்களைப் பொறுத்தமட்டில் வராகர் ஓராசாத்திரம், காலச் சக்கரம் ஆகிய இரண்டு நூல்களும், பழைய உரை, விரிவான தெளிவுரை, முன்னுரை காலச்சக்கர தசை முறைப்படி பலன் கூறும் விதம் ஆகியவற்றுடன் அச்சாகியுள்ளன.

 
     சரசுவதிமகால் வெளியீடுகள், வியாபாரமுறையில் பதிக்கப்படுபவை அல்ல. அரசு பொருளுதவியுடன் அடக்கவிலையில் வெளியிடப்படுபவை. மக்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்ற உயர்நோக்குடன் அச்சிடப்படுகின்றன. சுவடிகள் நாளடைவில் உருவிழந்து போகக்கூடும். அவ்வாறு பயனற்றுப் போகுமுன்னமே பதிப்பிக்கப்படல் வேண்டும் என்ற குறிக்கோளும் கருதத் தக்கது.

 
     பொதுவாகவும், சிறப்பாகவும் கூறுமிடத்து, மக்கள் நூல்களைக் கற்று வல்லுநர்களாகவேண்டும் என்ற நோக்கோடு இங்கு நூல்கள் வெளியிடப்படுகின்றன; மக்களும் பயனடைந்து வருகின்றனர்.


தட்டச்சு உதவி – திரு.ஜி.ஸன்தானம்

You may also like

Leave a Comment