சம நோக்குவாதி
சமயோகம் என்ற கொள்கையைத் தீவிரமாக கடைப் பிடித்தவர் சுத்தானந்த பாரதி. எல்லா மதத்தினுள்ளும் வாழ்ந்து, சாதனை புரிந்து, நல்லவையை எடுத்துக் கொண்டு, ”சுடர்கள் பல;சோதி ஒன்றே”, ”வழிகள் பல; ஒளி ஒன்றே” என்று சொன்னவர். ஜாதிமத பேதமற்ற வாழ்வு வாழ வேண்டும் என்ற கொள்கையை பரப்பியவர். அவருடைய கண்கண்ட தெய்வங்களான மீனாட்சி,நடராஜர்,கிருஷ்ணர் விக்ரஹங்களை அவர் கடைசி வரைப் பூசித்து வந்தார் . இருந்தாலும், பிற மதங்கள், சமயங்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார். எல்லா மதத்தினரும் அவரிடம் சீடர்களாய் இருந்துள்ளனர். அனைவரிடத்திலும் அன்புருவான தெய்வத்தையே கண்டவர்.
சுத்தானந்தரின் இப்பாடல், எல்லா நிகழ்ச்சிகளிலும், கடவுள் வாழ்த்து, மற்றும் வரவேற்புப் பாடலாக இடம் பெறுவது வழக்கம்: சந்திரசேகரன் – Fri, May 8, 2009
”எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்,
எல்லாரும் ஆடுங்கள், எல்லாரும் பாடுங்கள், இன்பமே நமது தெய்வம்,
அல்லா,பரமபிதா,ஹரிஹரப் பிரம்மம் என்றும், அம்மையப்பா என்றும்,
சொல்லிவணங்குவோம், சொல்லறியாச்சுடரை, ஜோதி வழியில் என்றே! (எல்லாரும்)
சாதிமத பேதம், சாராத சுத்தனவன், சச்சிதானந்தப் பெருமான்,
ஆதியந்தமில்லாதான், ஆர்வமுடன் அழைத்தால், அன்பருள்ளே வருவான்! (எல்லாரும்)
இல்லையென்பாருள்ளும், இருக்கிறேன் என்பவன், இதயத்தில் கூத்திடுவான்,
எல்லையில்லா உலகில், எங்கும் உயிர்க்குயிராம் இன்னருள் பூத்திடுவான்!” (எல்லாரும்)
மற்றொரு பாடலில்,
கடவுளும் ஒன்றே காசினி ஒன்றே
கருதிடும் உள்ளமும் ஒன்றே
உடலுயிர் ஒன்றே உண்மையும் ஒன்றே
ஓயாப் பிரிவுசெய் மதமேனோ?
கண்ணனும் ஒன்றே கீதையும் ஒன்றே
கண்ணறு வாதக் களமேனோ?
புண்ணியம் ஒன்றே புத்தரும் ஒன்றே
புதுப்புது வகுப்புகள் புகலேனோ?
கருத்தரும் ஒன்றே பைபிளும் ஒன்றே
காக்கும் சிலுவையும் ஒன்றே
பொருத்த மில்லாத போர் வெறி ஏனோ
பொய்ப் பிரிவினைகளும் ஏனோ?
என்கிறார். மற்றொரு பாடலில்,
மனிதர் கட்டும் மனக் கோட்டை
மதக் கோட்டைத் தாண்டிப்
புனிதர் கண்ட ஒருமை தரும்
பொதுநெறியைப் பயில்வோம்
கீதை சொன்ன யோக நெறி
கிறிஸ்து சொன்ன பொறுமை
போதிமுனிவர் கருணை வழி
பொதுநெறி யுள்ளாமே
நாயகத்தின் அருளுறுதி
நானகரின் பக்தி
நாயனாரின் பணிநலங்கள்
நல்ல பொது நெறியாமே
மற்றொரு பாடலில்,
மாறிப் போன காலத்திலே
மதவெறி நோயின்றி
ஊறிப்போன உள்ளான்ம
யோக நிலையுறுவோம்
எனதுனதென் றிறு மாப்பும்
இகலை யினித் தாண்டி
இனி திதய நடன வழி
எல்லாரும் செல்வோம்
வேதாந்த சித்தாந்த
வித்தகரின் வாக்கும்
நாதாந்த முடிவான
நமதான்ம நிலையே
சமயோகக் கலையே
மனமொழி மெய்த் தூய்மையுடன்
வாசி நிலை யறிந்தே
தின மொருமை கூடியுள்ளே
தெய்வ நிலை பெறுவோம் – இந்த
வையக மின்புறுமே
என்கிறார்!