சுத்தானந்த பாரதி ஒரு சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர்
சுத்தானந்தர் தேவகோட்டை பள்ளியிலும், காட்டுப்புத்தூர் பள்ளியிலும் ஆசிரியராய் இருக்கையில், சமூக சீர்திருத்தப் பாடல்கள், சுதந்திர தாகம், வேகம் மிக்க பாடல்களை பள்ளிச் சிறாரிடம் பாடி அதன் மூலம் அவர்களது பெற்றோரையும் சென்றடையக் கூடிய விழிமுறையைக் கையாண்டார். பிள்ளைகள் மனத்திலும் பசுமரத்தாணி போல் அக்கருத்துகள் பதியும், வீட்டில் பிதற்றும் குழந்தையின் சொல்கேட்டு, புகார் கூற வரும் பெற்றோரையும் சீர்திருத்த முடியும் என்பதே அவர் எண்ணம். அப்படியே ஆனது!
ஊருக்குள் காஷாயம் கட்டித் திரியும் கபட சாமியார்களையும் அவர்களை நம்பி பிழைப்பை விட்டு பின் செல்லும் மக்களையும் பார்த்து அவர் பாடுகிறார்: சந்திரசேகரன் -Sat, Apr 25, 2009
ராகம்: வராளி தாளம்: ஆதி
பல்லவி:
பாடுபட்டுப் பிழைப்போம் – மனிதா
பலருக்கு நலம்வர உழைப்போம்!
அனுபல்லவி:
ஓடுபற்றித் திரியோம் – வேர்வை
ஊற்றிநம் உடலினை வளர்ப்போம் ! (பாடு)
சரணம்:
கோடித்தொழில்கள் உண்டே – இங்கே
கூழுக்குப் பஞ்சமினி யுண்டோ ?
வாடிடும் வறுமையெல்லாம் – சோம்பலால்
வந்த பெருந்துய ராமே ! (பாடு)
வேஷத்துறவைவிட்டே -கர்ம
வீரத்துறவிகளாய் தலைநிமிர்வோம்
காஷாயச் சாமிகளும் – இனிக்
கப்பறை ஏந்தாமல் கலப்பைப் பிடிப்போம் ! (பாடு)
உழைக்காத கைகளுக்கு – மனிதா
உண்ண உரிமையில்லை மண்ணுலகில்
பழக்கிய கைகளினால் – இந்தப்
பார்விண் ணாகும் கர்ம யோகம் செய்வோம் (பாடு)