Home Herostone கூத்தனார் அப்பன்

கூத்தனார் அப்பன்

by Dr.K.Subashini
0 comment

படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி

விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன்


 

கூத்தனார் அப்பன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.

 

கூத்தனார் அப்பன் சிலை

கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதி கைகள் போன்ற இரண்டு பக்கத்திலும் பின்னர் கீழ்பகுதி என அமைந்துள்ளது இச்சிலை. சிலை ஏறக்குறைய 10 அடி உயரம் கொண்டது. இச்சிலையின் மேல் ஆங்காங்கே மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பக்கத்தில் மணிகட்டி ஆலய வழிபாட்டு பொருட்களையும் வைத்து எளிமையான முறையில் கோயில் வழிபாட்டினை செய்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இவ்வூர் மக்களுடன் பேசி அவர்களை இச்சிலை பற்றி விசாரித்த போது பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

இம்மக்கள் இச்சிலையை கூத்தாண்டவர் சாமி என அழைக்கின்றனர்.  வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் இங்கே சிறப்பாக திருவிழா எடுத்து விஷேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். முப்பூசை எனப்படும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அதனை சமைத்து படையல் செய்து இந்தச் சிலைக்கு வழிபாடு செய்கின்றனர்.

அபிஷேகத்திற்கு வீட்டிற்கு ஒன்றாக குடங்களில் நீர் எடுத்து வரப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு இச்சிலையை அபிஷேகம் செய்து பின்னர் எண்ணெய் சீயக்காய் தேய்த்து சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர்.  அபிஷேகம் செய்யும் போது 108 குடங்களை வரிசப்படுத்தி ஏணி வைத்து மேலே ஏறி அபிஷேகம் செய்கின்றனர்.

எண்ணெய் சீயக்காய் கொண்டு சுத்தம் செய்த பின்னர் இச்சிலையை முழுதாக மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்கரிக்கின்றனர்

இந்தக் கிராம மக்களை மேலும் விசாரித்த போது இச்சிலையின் மேல் பகுதியை சிலர் வெட்டி எடுத்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்று இன்றும் வழிபாட்டிற்கு வைத்திருக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது.

 

இது தாய் தெய்வத்தின் வடிவம் என்றும், பறவை கல் என்றும் கூட சொல்லப்படுகிறது. இந்த சிலையின் தலை பகுதி விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தான் இந்திய முழுக்க உள்ள அரவாணிகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தங்களுக்குள் பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து கொள்ளும் அரவாணிகள் இறுதி தினத்தில் கணவர்கள் இறந்து விட்டதாக தாலிகளை அறுத்து எறியும் சடங்கும் இதில் அடங்கும்.

 

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தொல்லியல் ஆய்வுக்காக வந்த ஆய்வாளர்கள் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி இங்கு கிடைத்த சில பொருட்களை ஆய்வுக்காகவும் பாதுகாப்பதற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுப் பணிகள் முடிந்து அவர்கள் சென்ற பிறகு இந்தச் சிலை அங்கேயே இருந்ததால் ஊர் மக்கள் அதனை வழிபடும் இறைவனாகப் பாவித்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தச் சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் என விவரம் கேட்டபோது இங்கு வாழ்கின்ற இம்மக்கள் அதற்கான விளக்கம் அளித்தனர். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்களோ சிற்றரசர்களோ ஏதாவது ஒரு காரணத்திற்காக இப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களுக்கு உடனடித் தேவைக்கு மட்டும் கொஞ்சம் பொருட்களை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை இவ்வகையான ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் பொருட்களைப் பத்திரமாக புதைத்து வைத்து விட்டுச் சென்று விடுவார்களாம். மீண்டும் தாங்கள் திரும்பி வரும் போது பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். காடாக இருந்த இப்பகுதி எதிரிகளிடமிருந்து உடமைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையில் உதவி இருக்கின்றது.

 

மேடுகள்

இந்திய தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியினால் இந்த இடம் கண்டெடுக்கப்பட்டு இச்சிலை பொதுமக்களுக்குத் தெரிய வந்த பின்னரும் கூட இப்பகுதி முழுமையாக ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலை இருப்பது தெரிகின்றது. கடந்த கால தொல்லியல் ஆய்வுகளின் போது இப்பகுதில் இவ்வகையில் காணப்படும் இச்சிறு மேடுகளை ஆய்வாளர்கள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்த போது வழிபாட்டுப் பொருட்கள் சில கிடைத்தன என்று இம்மக்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.  இப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியுள்ளதால் மாவட்ட ஆட்சியாளர் பொது மக்கள் இம்மேடுகளை தோண்டக்கூடாது என தெரிவித்து கட்டளையிட்டிருக்கின்றனர். அதோடு பொது மக்களுக்கும் இவற்றை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்தால் அது கடவுள் குற்றம் என நினைத்து நோய் ஏற்படுவதாக நினைப்பதால் இவற்றை ஏதும் செய்யாமல் ஆங்காங்கே செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். மக்களின் இவ்வகை நம்பிக்கையே இப்பகுதியில் மறைந்து கிடக்கின்ற ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிகின்றது.

பேட்டி ஒலிப்பதிவு: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/koothanoor.mp3{/play}

 

விழியப் பதிவினைக் காண:

 

{youtubejw}rf1T8Xw1b90{/youtubejw}

 

 

 

மேலும் சில படங்கள்:

 

கூத்தனார் அப்பன் கோயிலுக்குச் செல்லும் பாதை

மோட்டூர் கூத்தனார் அப்பன் சிலை

பேட்டிக்குப் பின்னர் இளநீர் விருந்து

ப்ரகாஷ், திருமதி.புனிதவதி இளங்கோவன்

ஊர் மக்கள்

 

சுபா, திருமதி.புனிதவதி இளங்கோவன் – ஊர் மக்களுடன்


 பதிவு செய்யப்பட்ட நாள் :0 6.03.2011

 

You may also like

Leave a Comment