குழந்தைக் கவி
சுத்தானந்தர் வாழ்ந்த இளவயதில் சுதந்திரப் பேச்சே பெரிய விஷயமாக இருந்ததால்,பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு நாடகங்கள் நடத்தி அவர்களிடையே நாட்டுப்பற்றையும் ,நற்பண்புகளையும் வளர்த்தார்.
அவரது ‘குழந்தையின்பம்’,மிக அருமையான சிறிய படைப்பு. அவர் வடலூரில் அமைத்து நடத்திய சமாஜத்தில், ஒரு ஆசிரமப் பாணியில், பல குடும்பங்கள் உள்ளடங்கி இருந்தன. அவ்வாறு வளர்ந்த இரு சகோதரர்கள்தான் இன்று சுத்தானந்த நூலகம் என்கிற பேரில் அவரது புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகிறார்கள். அதில் வரும் சில பாடல்கள் மிக அருமை. – சந்திரசேகரன் Wed, May 13, 2009
காலைப் பாட்டு
கிழக்கு வெளுத்தது கிளிகள் அழைத்தன
மளக்கென் றெழுந்திடு – பாப்பா
மழலையமுதமே பாப்பா
காக்கையும் குருவியும் கதை சொல்லுகின்றன
கேட்க நீ ஓடிவா – பாப்பா
கேட்டொரு கதை சொல்லு பாப்பா
தோப்பு வனமெல்லாம் சுகமான வாசனை
பூப்பறித்தாடுவோம் – பாப்பா
பொன்வண் டழைத்தது பாப்பா
இன்ப வுலகத்தில் எல்லாரும் எல்லார்க்கும்
அன்புடன் வாழுவோம் பாப்பா
அதுபொது வேதமாம் பாப்பா!
சுத்தம் செய்து கொள்ளல்
முத்துப்பல் விளக்கிடு முகத்தைக் கழுவிடு
சுத்தம் சுகந்தரும் – பாப்பா
சுறுசுறுப்பாயிரு – பாப்பா
சூரியன் உதித்தது சொக்கத் தங்கம் போலே
காரியங் கருதுவோம் பாப்பா
காலத்தைப் பொன் செய்வோம் பாப்பா
குளத்திலே அன்னம்போல் குளித்து மடிகட்டி
உளத்திலே ஓம் என ஜெபிப்போம்
உண்மைக் கடவுளைத் துதிப்போம்
பாரு லகத்திலே பரம்பொருள் எங்குமே
ஆருயி ரானது பாப்பா
அன்பினால் வணங்குவோம் பாப்பா