Home Saivism காளமேகப் புலவர்

காளமேகப் புலவர்

by Dr.K.Subashini
0 comment

காளமேகப் புலவர்

திருமதி.கீதா சாம்பசிவம்

Aug 23, 2009
 
 திருவானைக்கா தந்த  தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா  கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிசாரகராய் இருந்தார். திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர்.  ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம் ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மோகனாங்கி.  தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார். 
 

வந்து பார்த்த மோகனாங்கிக் கணவனை அழைத்துப்  பார்த்தும் வராத காரணத்தால் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பிக் கொண்டு வீடு சென்றாள். ஆனால் நடந்தது என்ன?? அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப் போட்டு விழிப்பு வந்தது. என்ன சத்தம்?? கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது. வரதன் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு அழகான சின்னஞ்சிறு பெண் தன் கால்களின் அணிகள் கணீர் கணீரென ஒலி எழுப்ப வந்தாள். பண்டிதரை எழுப்பினாள்.  பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள். 
 

அம்பிகையை எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து தன் எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக் கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார். திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள்.  ஒன்றும் புரியாமல் வாய் திறந்த வரதனின் வாயில் அம்பாளின் தாம்பூலம் உமிழப் பட்டது. அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகக் கவி, அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை என்னும் நூலைப் பாடி இருக்கிறார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால் பாடப் பட்டவை. சிலேடை எனப்படும்  இரு பொருள் கொண்ட கவிகளும், நகைச்சுவைக் கவிகளும் மிகுதியாகப் பாடியுள்ளார்.  பிறரை எள்ளி நகையாடும் வண்ணமும் பாடியதால் வசைக்கவி என்ற பெயரும் இவருக்கு உண்டு. 

 
“பெருமாளும் நல்ல பெருமாள், அவர் தம்
திருநாளும் நல்ல திருநாள்-பெருமாள்
இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார்.”
 
“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.” 
 

என்ற இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. கவிதையை எண்ணிய மாத்திரத்தில் மழைபோல் பொழிந்ததால் “கவிக்கு ஒரு காளமேகம்” எனச் சிறப்பித்துக் கூறப் பட்டார்.

 

You may also like

Leave a Comment