Home Tamil Writers கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

by Dr.K.Subashini
0 comment

ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி!

முனைவர். ப.சுப்பிரமணியன்

 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;

  • சுப்பிரமணிய பாரதியார்
  • கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
  • ஆகிய நால்வருமாவர். அவருள்;
  • பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
  • பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
  • நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.

ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.

 
"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.
கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.
 
"தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை  தினமும் கேட்பது என் செவிப்பெருமை." எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.

"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
 
"உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
 உருவெடுப்பது கவிதை
 தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
 தெரிந்துரைப்பது கவிதை."
என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.

ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
 
பழந்தமிழ்ப்பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துக்களும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பு "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது.

  • ஆசியஜோதி
  • உமர்கய்யாம் பாடல்கள்

 

ஆகிய இருகவிதை நூல்களும் ஆங்கில நூல்களைத் தழுவி எழுதப் பெற்றவை. நாஞ்சில் நாட்டில் நிலவிய மருமக்கள் தாய முறையினை எள்ளி நகையாடும் முறையில் எழுதப் பெற்ற நூல் "நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்" என்பதாகும். "தேவியின் கீர்த்தனங்கள்" கவிமணி இயற்றிய இசைப்பாடல்களின் தொகுப்பாகும். "கவிமணியின் உரை மணிகள்" என்ற நூல் அவரால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும்.
கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று ஆய்வுநூல் "காந்தளூர் சாலை" ஆகும். தேசிக விநாயகம் பிள்ளையின் கவிபாடும் புலமையைப் பாராட்டிச் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 1940ல் "கவிமணி" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. மலரும் மாலையும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின்

  • நாட்டுப்பற்று
  • மொழிப்பற்று
  • இறைவழிபாடு
  • சாதிபேதம் கடிதல்
  • குழந்தைகளிடம் கொண்ட பற்று

ஆகியவற்றை அறியலாம்.

 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்கு சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம் நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும்.
 
"உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது."
 
"பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்."
 
"அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.
 
"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
 அடைய வேண்டுமெனில்
 ஊக்கம் வேண்டுமப்பா – ஓயாது
 உழைக்க வேண்டுமப்பா
 
 உண்ணும் உணவுக்கும் – இடுப்பில்
 உடுக்கும் ஆடைக்கும்
 மண்ணில் அந்நியரை நம்பி
 வாழ்தல் வாழ்வாமோ?
 
 உண்ணும் உணவுக் கேங்காமல்
 உடுக்கும் ஆடைக் கலையாமல்
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
 பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
 அண்ணல் காந்திவழி பற்றி
 அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
"அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும்,
"நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க் கிழவி," என ஔவையாரையும்,
"இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக் காட்டிடுவான்," எனக் கம்பரையும்,
"பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா அந்த கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும்
போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:
 
"கண்ணுக் கினியன கண்டு – மனதைக்
 காட்டில் அலைய விட்டு
 பண்ணிடும் பூசையாலே – தோழி
 பயனொன்றில்லையடி
 உள்ளத்தில் உள்ளானடி – அது நீ
 உணர வேண்டும் அடி
 உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்
 உள்ளேயும் காண்பாயடி."
கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,
 
"மன்னுயிர்க்காக உழைப்பவரே – இந்த
 மாநிலத் தோங்கும் குலத்தினராம்
 தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்
 தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா."
எனப் பாடுகிறார்.
கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார். காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.
 
காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா
 
கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா

சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.
சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கணவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.
 
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 26.09.1954ல் இம் மண்ணுலக வாழ்வினை நீத்தார். வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.
 
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

You may also like

Leave a Comment