முனைவர் அ. நா. பெருமாள்
மனித இனத்தின் வாழ்வியல் வரலாற்று ஆவணமாகச் சுவடிகளைக் கருதலாம். தாளும், மையும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் சுவடிகளே மனித எண்ணங்களின் பாதுகாவல் சாதனங்களாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன. மனிதனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலக்கியங்களாகவும்,கலைகளாகவும் உருவெடுத்துக் காலங்காலமாக மனித வாழ்வுடன் கூடி உறவாடி வருகின்றன.அவை பண்பாட்டு மூலங்களாக அன்றிலிருந்து இன்று வரை கல்லிலும், சுவரிலும், சுவடியிலும், தாள்களிலும் பாதுகாக்கப் பெற்று வருகின்றன.
சுவடியுருவில் இருப்பவை விரைவில் பல்வேறு காரணங்களால் அழிந்து மறைந்து விடக்கூடியவை. அதனால் அவற்றை அழியவிடாது பாதுகாக்கவேண்டிய கடமை அறிவுடைய மனிதர் அனைவருக்கும் உள்ளது. முன்னேற்ற அறிவியல் சாதனங்கள் மலிந்த இக்காலத்தில் பண்டைக் காலச் சுவடிகளில் இருப்பதை எளிதாகவும், பிழையின்றியும் மாற்றி அமைக்க முடியும், அந்த முயற்சியில் பலர் ஈடுபட்டு அப்பணியைச் சீரும் சிறப்புமாகச் செய்து வருவது பாராட்டுக்குரியதாகும். சுவடியில் இருப்பதைப் பெயர்த்து எழுதும்போது பலவிதமான சிக்கல்கள் ஏற்படுவதைக் காணலாம். இவற்றைச் ‘சுவடிப் பதிப்புச்சிக்கல்கள்’ என்று கூறலாம்.
தமிழ்ச் சுவடிகளில் இலக்கியம், கலை இலக்கியம்,இலக்கணம், கலை இலக்கணம் போன்ற பல்வேறு தன்மை உள்ள நூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பதிக்க முற்படும்போது சிக்கல்கள் சில நிலைகளில் வேறுபடுவதைப் பார்க்கமுடிகின்றது. பழங் காலத்திலிருந்தே தமிழ்மக்கள் இசை, நடனம், நாடகம்,ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் திறம்பட்டு விளங்கியுள்ளனர். அவற்றுள் இசைக்கும், நாடகத்துக்கும் இலக்கியங்கள் உள்ளன.
ஆனால் அனைத்துக் கலைகளுக்கும் இலக்கணங்கள் உண்டு.அவற்றைச் சுவடியில் எழுதிப் பாதுகாத்து வந்துள்ளனர். அத்தகைய கலைஇலக்கணச் சுவடிகளை முறையாகப் பதிப்பிக்க முயலும்போது ஏற்படும் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.
பொதுவாகக் கலைஇலக்கண நூற்கள் விதிகளை, விளக்கங்களைச் சூத்திர அமைப்பிலோ அல்லது பாக்களின் அமைப்பிலோ தருவதைக் காணமுடிகிறது. பொதுவாக எல்லாவிதமான கலைஇலக்கண நூற்களையும் பதிப்பிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் ஒரே விதமாக இருப்பதைக் கண்டு உணரலாம்.ஆகையால் இம்மாதிரியான ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது ஏற்படும் அனுபவங்களே பொது நிலை உடையனவாகக் கருதப்படும்.
வாத்திய மரபு என்ற சுவடி இசைக்கலையின் அங்கமாக தாளங்களைப் பற்றி விளக்கும் ஒரு கலைஇலக்கண நூலாகும். இதை 1987 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட முயன்றபோது ஏற்பட்ட சிக்கல்களை விள்க்கமாகக் காணலாம். பொதுவாக ஒரே தலைப்பில் பல சுவடிப்படிகளை ஒத்துப் பார்த்துப் பதிப்பிக்க வேண்டியது முறை. சிறப்புமிக்க சுவடி நூற்பதிப்பாசிரியர்கள் அனைவரும் அவ்வாறே செய்துள்ளார்கள்.
ஆனால் ஒரு படியே கிடைத்த சுவடிகளைப் பதிப்பிக்காமல் விடமுடியாத சூழ்நிலை ஏற்படும் போது ஐய்யப்பாடுகளும் ,சிக்கல்களும் மிகுதியாகின்றன. சில தீர்க்கமுடியாத நிலையில் பதிப்பாசிரியரைத் திக்குமுக்காடச் செய்கின்றன.காலத்தால்தான் அவற்றைத் தீர்வுகண்டு சரிசெய்ய இயலும்.
வாத்திய மரபுச் சுவடியை ஒரு தனி நூல் என்று உறுதியாகக் கருதமுடியவில்லை. பொதுவாக பழந்தமிழ் நூற்கள் ஒரே வகையான பாக்களில் அமைந்திருப்பதைக் காணலாம். வாத்திய மரபு தாள விதிகளைச் சூத்திரங்கள், நேரிசை வெண்பாக்கள், கலிவெண்பாக்கள், பஃறொடை வெண்பாக்கள் ஆகியவற்றால் கூறியுள்ளது. சில விளக்கப் பகுதிகள் ஆசிரிய விருத்தங்களாகவும் தரப் பெற்றுள்ளன.இடையிடையே இறைவணக்கப் பாடல்களும் வெண்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளன.
மதுரைச் சொக்கநாதரையும், சுசீந்திரம் தாணுமாலையனையும் வாழ்த்தியுள்ள பாடல்கள் உள்ளன. இதிலிருந்து ஒரு உண்மையைக் காணமுடியலாம்.வாத்திய மரபில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் பெரும்பாலான பாக்களின் அமைப்பையும் கொண்டு நோக்கினால் இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாக எழுதப்பெற்றதாகத் தோன்றுகிறது. ஆனால் சில பாடல்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை என்பதாகவும் தெரிகிறது.ஆகையினால் இந்த நூலைப் பெயர்த்து எழுதியோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இடைச்செருகல் வேலை செய்துள்ளனர் என்று கருத இடமுள்ளது.
மூலச் சுவடியை மதுரையில் உள்ள ஒருவரும்,பின்னர்ச் சுசீந்திரத்தைச் சேர்ந்த இன்னொருவரும் படியெடுத்திருக்கலாம் என்று இறைவணக்கப் பாடல் வேறுபாட்டால் ஓரளவு அறிய முடிகின்றது.
பின்னவர் தான் வணங்கிய தாணுமாலையக் கடவுளைப் பற்றியும் தான் வாழ்ந்த சுசீந்திரம் பற்றியும் சற்று அதிகமாகவே குறிப்பிட்டுள்ளார். நூல் தோன்றிய இடத்தைப் பற்றியோ, நூலாசிரியர் பற்றியோ எந்தக் குறிப்பும் தரப்படவில்லை. ஆனால் சுசீந்திரத்தில் வாழ்ந்த ”கிவிந்தைப் பரஞ்சோதி” (பா.71) என்னும் தோற்கருவி வாசிக்கும் இசைக்கலைஞரைப் பற்றிய குறிப்பு தரப்படுகின்றது. இந்தக் கலைஞரோ அல்லது இவரைச் சேர்ந்தவரோ இந்தச் சுவடியைப் பெயர்த்து எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
சுவடியின் முற்பகுதியில் கலிவெண்பாவில் நூற்றெட்டு தாளங்களின் பெயரும் அவற்றுக்குரிய மாத்திரைக் கணக்கும் தரப்பெற்றுள்ளன. பிற்பகுதியில் இரண்டாவது முறையாகத் தாளங்களின் பெயர்களும் அவற்றுக்குரிய மாத்திரை அளவும் நூற்றெட்டு சூத்திரங்களாகக் கூறப்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்தால் இருவேறு இசைநூல்களில் உள்ளவை ஒரே சுவடியில் எழுதப் பெற்றிருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது.
இரண்டும் மிகப் பழமையான நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது தெளிவு.
சூத்திர அமைப்பும் கலிவெண்பா அமைப்பும் அவ்வாறு கருத இடம் தருகின்றன. “நாரதன் பாணி மேவியிதை யுரைப்பேன் விண்டு” (பா. 1) என்று காப்புச்செய்யுளில் ஆசிரியர் கூறியிருப்பதினால் அடியார்க்குநல்லார் குறிப்பிடும் “ தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீயம்” என்ற இசை நூலைத் தழுவி வாத்தியமரபு எழுதப்பெற்றிருக்கவேண்டும் என்று கூறலாம்.
வாத்திய மரபுச் சுவடியில் தெய்வசிகாமணிக் கவுண்டரால் பதிப்பிக்கப்பெற்றுள்ள பஞ்சமரபு நூலில் இசைமரபுப் பகுதியின் உட்பிரிவான வங்கிய மரபின் இருபத்தெட்டு இருபத்திமூன்று எண்ணுள்ள பாடல்கள் முறையே 238, 240 எண்களுள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளன .இதைக் காணின் பஞ்சமரபிற்கும் வாத்திய மரபிற்கும் ஏதோ ஒர் நிலையில் தொடர்பு இருந்துள்ளதாகத் தோன்றுகிறது.வாத்திய மரபில் தாளசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இதே பெயரில் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள வெண்பாக்களில் சில பலவிதமான பாடபேதங்களுடன் வாத்தியமரபில் காணப்படுகின்றன.அதற்கு எடுத்துக்காட்டாக இரு நூல்களிலும் காணப்படும் ஒரு செய்யுளைக் குறிப்பிட்டு வேறுபாட்டுத் தன்மையைக்
காண முயலலாம்.
வாத்திய மரபுப் பாடல்: 13
திண்மை பெரிய திருவடி நாயன்கை
வண்மை யிருங்கோள் வளநாடன் -மண்மகிழ்ந்து
சொன்ன மூலபரத சூடாமணி யுரைத்தான்
தாள சமுத்திர நூல்
தாள சமுத்திரம் பாடல்: 2
திண்மை பெரிய திருவடி நாயன் மங்கை
வண்மை இருங்கேள் வளநாடன் – மண்மகள்சேர்
தோள்துணை வன் பரத சூடாமணி யுரைத்தான்
தாள சமுத்திர நூல் தான்
இரு பாக்களிலும் உள்ள சொல் வேறுபாட்டையும் பொருள் வேறுபாட்டையும் நன்கு அறியலாம்.தாள சமுத்திரப் பாடல் வெண்பாவிற்குரிய இலக்கணத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காது தளை தட்டிப் போவதைக் காணலாம். வாத்திய மரபிலுள்ள இறுதி இரண்டு அடிகளிலும் எதுகை சரியாக அமையவில்லை.இருப்பினும் பொருள் தெளிவாக அமைந்து காணப்படுகிறது. இவற்றுள் எது சரியானது என்பதை அறிய வேண்டியது பதிப்பாசிரியரின் கடமை.இதே போன்று வாத்திய மரபிலுள்ள 12 ஆவது பாடலும் தாள சமுத்திரத்திலுள்ள 3 ஆவது பாடலும் ஒன்றாக அமைந்து சீரமைப்பிலும் தளை இணைப்பிலும் வேறுபட்டுத் திகைப்பைத் தருகின்றன.
வாத்திய மரபில் சில பாடல்களுக்குச் சுவடியிலேயே யாரோ ஒருவரால் உரைவிளக்கம் தரப்பெற்றுள்ளது. அது பிற்காலத்தில் எழுதப்பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த உரைநடைவிளக்கப் பகுதியில் பல வழுக்கள் காணப்படுகின்றன. முற்கால உரைநடையின் போக்கை நன்கு அறிந்தவர்களால்தான் இந்தச் சுவடியை நன்கு படிக்க இயலும்.மேலும் தாளங்களின் மாத்திரை அளவு குறியீட்டு முறையில் தரப்பெற்றுள்ளது. இந்தக் குறியீடுகள் எந்த எண்ணைக் குறிப்பிடுகின்றன என்பதை அறிந்தவர்களால்தான் இவற்றுக்குச் சரியான விளக்கம் தரமுடியும். பழைய இசையைப் பற்றிய அறிவு உடையவர்களுக்கே இது நன்கு தெரியும். ஆகையினால் இத்தகைய சுவடிகளைச் சரியான முறையில் பதிப்பித்து வெளியிடுவதற்கு கலை அறிவு உடையவர்களின் உதவி தேவைப்படுகிறது.
இதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது.கலை இலக்கணச் சுவடிகளை சரியான முறையில் பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்க வேண்டுமானால் பதிப்பாசிரியருக்குச் சுவடி படித்தல், தமிழ் இலக்கிய இலக்கண அறிவு போன்றவை சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் இல்லையானால் பிழைபாடுகள்,மயக்கங்கள் ஏற்படக் கூடும். பதிப்பு நூலின் பயன் குன்றும். கலைகள் பற்றிய நுட்பமான அறிவு சுவடிப் பதிப்பாளருக்கு இல்லையாயின் அத்தகைய அறிவு உடையவர்களின் உதவியை நாடிப் பெற்ற பின்னரே நூலைப் பதிப்பித்து வெளியிடவேண்டும்.
வாத்திய மரபில் 6 ஆவது பாடலாக இடம் பெற்றுள்ள கலிவெண்பாவிற்கு சுவடியில் விளக்க உரை தரப்பெற்றுள்ளது. அதில் சச்சபுடம் என்னும் தாளத்துக்கு மாத்திரை அளவு குறியீடுகளாகக் கொடுக்கப்படுகின்றன. அந்தக் குறியீட்டு அளவுகளைக் கூட்டிப் பார்த்தால் பத்து மாத்திரை என்ற அளவுக்கு வருகிறது. இது இசைப்பயிற்சியாளர்களின் கணக்குப்படி தவறாகும். உண்மையில் சச்சபுடத்திற்கு 8 மாத்திரைதான் உண்டு. சுவடி எழுதியவர் ஒரு “குரு”வின் குறியீட்டைத் தவறுதலாகக் கூட்டி எழுதியுள்ளார்.
இத்தகைய தவறுகளைத் தாளப் பயிற்சியுடையவர்களால்தான் சரியாகக் கண்டு பிடிக்க முடியும்.
வாத்திய மரபில் பழந்தமிழர் இசைமரபில் ஏற்றவாறு தாளங்களின் மாத்திரை அளவு தரப்பட்டுள்ளது. அதைத் தாள சமுத்திரம் சச்சபுடவெண்பா, தாளமும் அனுபவமும் ஆகிய தாள இலக்கண நூல்களோடு ஒப்பிட்டுக் காணும் போது சில வேறுபாடுகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக அபிநந்தம் என்னும் தாளத்துக்கு மேற்கூறிய நூல்களில் முறையே 5, 4, 6, 5 என்ற மாத்திரை அளவு வேறுபாடுகளுடன் தரப்பெற்றுள்ளன.இத்தகைய தவறு எவ்வாறு நேரிட்டது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய நிலை உள்ளது. சுவடி எழுதியோரின் தவறு என்று கருதினால் அது பிழைபட்டுப் போகவும் இடமுள்ளது.
இசைபாடும் திறமையுடையோர் இதற்குரிய காரணத்தை விளக்க முயன்றனர்.பாடுவோரின் கற்பனை ஆற்றலும் கலைத்திறனும் இணையும்போது பண்களை விளக்கமாகப் பாடவும்,தாளத்தின் போக்கை மாற்றி வேறு அளவுக்குள் பாடலை அடக்கவும் முடியும்.அதனால் தாள எண்ணிக்கை கூடலாம். பண்களை வேறுபடுத்தியும் பாடல்களைப் பாடலாம். ஆனால் ஒரு பண்ணுக்கு இன்னஇன்ன சுரங்கள் என்பதும் ஒரு தாளத்துக்கு இவ்வளவு மாத்திரைகள் என்பதும் மாறக்கூடாதவை. இவை கணிதவியல் போன்று மாறாத் தன்மையுடன் அமைவன. காலத்தாலும் இடத்தாலும் மாறுமானால் கலையின் கட்டுக்கோப்பு தளர்ந்து அதன் சிறப்பு மெலிந்துவிடும். இத்தகைய கலை பாதிப்பு ஏற்படாதவாறு கலைஞர்களும், அறிஞர்களும் கலைகளைக் கண்ணுங் கருத்துமாக காத்து வந்ததினால்தான் அவை நாட்டில் பண்பாட்டுச் செல்வங்களாக நின்று நிலவுகின்றன.தாள நூல்கள் தரும் கணக்கில் சில தாளங்களின் மாத்திரை அளவு மாறியுள்ளதைப்பற்றி நன்கு சிந்திக்கவேண்டும்.இசைக்கலைஞர் இந்தச் சிக்கலை விடுவிக்க முயல்வது நல்லது. சுவடியைப் பதிப்பிக்கும் போது ஏடு பெயர்த்து எழுதியவரின் குறிப்பு சரியான முறையில் கவனிக்கப்படவேண்டும், வாத்திய மரபுச் சுவடியில் அவ்வாறு வந்துள்ள ஒரு குறிப்பைப் பற்றிச் சிந்திக்கலாம்.
அது இவ்வாறு அமைகிறது.
“ இதில் ஒன்று முதல் எழுபத்துமுன்று வரையிலும் ஒன்று முதல் இருபத்து ஆறு வரையிலும் இரண்டு பாகமாக இருந்ததை இப்போது புதிதாய்க் கீழே லெக்கமிட்டிருக்கிறது.இதிலே காப்பு உட்பட நூறு ஏடு உள்ளதில் அதில் 31-ம், 32-ம், 42-ம் ,57-ம், ஏடுகள் காணாததால் வெள்ளேடு சேர்த்திருக்கிறது ”
இந்தக் குறிப்பிலிருந்து சில செய்திகளை அறியமுடியும், வாத்திய மரபு நூல் இரண்டு பாகமாக இருந்துள்ளது.அவற்றை இணைத்து ஒரு நூலாக இந்த ஏட்டில் தரப்பட்டுள்ளது. நூறு ஏடுகள் உள்ள சுவடியில் 31, 32, 42, 57 ஆகிய வரிசை எண்களுடைய ஏடுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் பின்னர்க் கிடைப்பின் அவற்றை எழுதுவதற்கு வசதியாக அந்த இடங்களில் வெள்ளேடு அல்லது வெற்றேடு இணைத்துள்ளதாக ஏடு பெயர்த்து எழுதியவர் குறிப்பு தருகிறார். வாத்திய மரபு நூல் முதலில் காப்பு ஒரு ஏடு,முதற்பாகம் 73 ஏடுகள்,இரண்டாம் பாகம் 26 ஏடுகள் என மொத்தம் 100 ஏடுகளில் எழுதப்பட்டிருந்ததை இந்தக் குறிப்பின் வாயிலாக அறியலாம். நூலின் அமைப்பைத் தெரிந்து கொள்வதற்கு இந்தக் குறிப்பு ஓரளவுக்கு உதவும்.
காணாமல் போன 4 ஏட்டுப் பகுதிகளும் .இன்னும் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. இந்தக் குறிப்புடன் நூல் பகுதி தொடங்குகிறது.
வெள்ளேடு என்பது வெற்றேடு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் எழுத்துக்கள் இன்றி வெறுமையாக இருப்பதினால் அது வெள்ளை வண்ணமாக இருக்கும். ஆகையினால் அதை வெள்ளேடு என்று கூறியுள்ளனர். குமரி மாவட்ட மக்களிடம் ” வெள்ளோலை வாசித்துவிட்டுப் போகிறான் ” என்று கூறுவது வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் இல்லாததை அல்லது பொய்யானதைச் சொல்லியுள்ளான் என்பது ஆகும்.இத்தொடர் எழுதப்படாமல் இருக்கும் ஏடு வெள்ளேடு என்பதைச் சொல்லவே விளக்கிக்காட்டுவதாக அமைவதை அறியலாம்.
இவ்வாறு பலவற்றை நன்கு சிந்தித்துக் கலை இலக்கண நூல்களைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால்தான் நூலின் பயனை முழுமையாகப் பெற இயலும். சுவடியியல் சிந்தனையாளர்களும் பதிப்பாசிரியர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு தங்கள் பணியைச் சீராகவும் சிறப்பாகவும் செய்வார்கள் என்று நம்புவோம்.
தட்டச்சு உதவி: தமிழ்த்தேனீ (திரு.கிருஷ்ணமாச்சாரி) – [email protected]