Home Tamil Writers கம்பதாசன்

கம்பதாசன்

by Dr.K.Subashini
0 comment

பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்

 

 

கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை.

இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார்.

காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர் – காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்)பாரதிதாசன் (சுப்புரத்தினம்)
சுரதா (சுப்புரத்தின தாசன்)
கம்பதாசன்

இவர்கள் தமிழ்நாட்டின் முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள் என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.

"கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!” என்று கம்பதாசனின் "முதல் முத்தம்" நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்.

இயற்கையிலேயே கவியுள்ளத்துடன் பிறந்த கம்பதாசன், புதிய கோணத்தில் சிந்தித்து தமிழன்னைக்கு வாடாமலராக கவி மலர்களைச் சூட்டியவர்.

சென்ற நூற்றாண்டில் புகழ் பூத்த கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்தவர்கள், வழிகாட்டியாக மனத்தில் வரித்தவர்கள் மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.

கம்பதாசன், பாரதி, பாரதிதாசன் பாதையில் பாட்டெழுதத் தொடங்கி, பிறகு தமக்கெனப் புதுப்பாதை அமைத்துக் கொண்டார்.

திண்டிவனம் அருகில் உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், சுப்பராயலு – கோகிலாம்பாள் தம்பதிக்கு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.

பெற்றோருக்கு இவர் ஒரே மகன்.

மற்றவர்  ஐவரும் பெண்கள்.

பெற்றோர் "இராஜப்பா" என்று செல்லமாக அழைத்தார்கள்.

நடிப்புக் கலையிலே நாட்டம் ஏற்பட்டதால், ஆரம்பப் பள்ளிக்கு மேல் இவர் நாட்டம் கொள்ளவில்லை. 

நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களுக்குப் பாட்டெழுதினார்.

கம்பதாசனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நாடகங்களில் பாடுவார். பாடகராகவும் புகழ் பெற்றார். ஹார்மோனியமும் வாசிப்பார்.

தொழிலாளர் தோழராகவும், சோஷலிஸ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான கம்பதாசனுக்குத் திரைப்படம் கைகொடுத்தது.

பழைய முறையைப் பின்பற்றி திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்த காலத்தில், தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதத் தொடங்கினார்.

சமதர்மக் கொள்கை கொண்ட கம்பதாசன், தாம் எழுதிய திரைப்படப் பாடல்களில் முற்போக்குக் கருத்துகளை எளிய நடையில் புகுத்தினார்.

முக்தா சீனிவாசன் இயக்கிய "ஓடி விளையாடு பாப்பா" எனும் திரைப்படத்துக்கு கம்பதாசன் எழுதிய பாடல் ஒன்று, உயிரோட்டமுள்ள இலக்கியமாகத் திகழ்கிறது.

திரைப்படப் பாடலாக இருந்தாலும், கவிதை நயம் மிக்க இலக்கிய அந்தஸ்தை அப்பாடல் பெற்றுவிட்டது.

தமிழ் உணர்வுமிக்க அவருக்குப் போட்டிகள் நிறைந்த திரையுலகம் அதிக வாய்ப்பைத் தராவிட்டாலும், குரல் அசைவுப் படங்களுக்கு (டப்பிங்) அதிகம் எழுதியிருக்கிறார்.

அவற்றிலும் அவர், எளிய தமிழையே கையாண்டார்.

"வானரதம்" என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கப் பாடலில் எளிய தமிழைப் பயன்படுத்தினார்.

இந்தி மொழியின் நயம் தெரிந்து நேர்பொருளைத் தராமல், தமிழ் உருவில் தக்கபடி மாற்றியது பற்றிப் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.

"இந்தியில் "என்னுடைய வணக்கத்தை எடுத்துப்போ! என் மதிப்பான வந்தனத்தைத் தூக்கிச் செல்" என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள்.

ஆனால், நான் அவ்வாறு செய்யவில்லை.

இந்தியில் வணக்கம் பற்றிச் சொல்வதாகச் சொற்கள் அமைந்தாலும், விடை தரும்போது காதலை, கனிவாகச் சொல்வதுதான் சிறப்பு.

உதட்டசைவுக்கும் இசை மெட்டுக்கும் எளிமையாகப் பொருந்தும் வகையில் "மேரா சலாம் லேஜா" என்பதை – "அன்பைக் கொண்டே செல்வாய்! அன்பைக் கொண்டே சொல்வாய்!" என்று அமைத்தேன்” என்று பாடி உணர்த்தியதை, கம்பதாசனைப் பற்றி முழுமையாக அறிந்த பேராசிரியர் மின்னூர் சீனிவாசன் கூறியுள்ளார்.

சோஷலிஸம், பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேச்சளவில் நிறுத்தி விடாமல் – கவிதையில் மட்டும் சேர்த்து விடாமல், தான் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை சிரமம் என்று வருபவர்களுக்கு உடனே தந்து உதவுவார்.

தொழிலாளி என்றால் மில் தொழிலாளி, மோட்டார் தொழிற்சாலை தொழிலாளி என்று மட்டும் அவர் கருதாமல், சமூகத்தில் அல்லல்பட்டு, வாழ்க்கையில் எப்போதும் கண்ணீர் விடும் பலதரப்பட்ட உழைப்பாளிகளைப் பற்றி அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

மனிதனை மனிதன் இழுக்கும் கொடிய வழக்கம் சுதந்திரம் பெற்ற பிறகு கூட நம் நாட்டில் இருந்தது.

கைரிக்ஷா இருந்த காலத்தில் வாழ்ந்தவர் கம்பதாசன்.

"மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?" என்று பாடினார் பாரதி.

ஆனால், கைரிக்ஷாக்காரர் துயர வாழ்க்கையைக் கவிதையாக வடித்துக் கண்ணீர் சிந்தியவர்; சிந்த வைத்தவர் கம்பதாசன்.

கம்பதாசன் கவிதையில் புதுமைக் கருத்துகள் பொங்கித் ததும்பும்.

பாட்டாளிகளின் பசித்துயரை – இதயக் குமுறலை கம்பதாசன் பல கவிதைகளில் பாடியுள்ளார்.

இவ்வுலகில் எல்லா பொருள்களுக்கும் இடம் உண்டு. ஆனால், பசி இளைப்பாற இடமுண்டோ?

என்று கேள்விக்கணை வீசுகிறார் கவிஞர்.

"பாம்பு இளைப்பாற புற்று,
 பருந்து இளைப்பாற கூடு
 கண் இளைப்பாற தூக்கம்
 கழுதை இளைப்பாற துறை…என்று
 பறவைகளும் மற்ற விலங்கினங்களும்
 இளைப்பாறிட இடம் உண்டு – எங்களுக்கு…?”

என்ற கவிதை இதுவரை எந்தக் கவிஞரும் சிந்திக்காதது.

கம்பதாசனின் மனித நேயமிக்க பார்வையில் கொல்லர், செம்படவர், உழவர், படகோட்டி, மாடு மேய்ப்பவர்…

இவ்வாறு பலவித உழைப்பாளிகளைப் பற்றிய கவிதைகளை எழுதியுள்ளார்.

மற்ற கவிஞர்களைவிட, தன் கவிதை அதிகம் பேசப்பட வேண்டும் என்று நினைத்தாலும், மற்ற கவிஞர்களை மதிக்கும் பழக்கமுடையவர்.

கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு" என்ற கவிதை நூல் 1941இல் வெளிவந்தது.

விதியின் விழிப்பு
முதல் முத்தம்
அருணோதயம்
அவளும் நானும்
பாட்டு முடியுமுன்னே
புதுக்குரல்
தொழிலாளி

என்ற தலைப்புகளில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

ஆதிகவி
சிற்பி

என்ற நாடக நூல்களும்,

முத்துச் சிமிக்கி என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன.

திரைப்படப் பாடலாசிரியர் என்ற அளவில் மக்களிடையே புகழ்பெற்றுள்ள கவிஞர் கம்பதாசன் 347 கவிதைகள் எழுதியுள்ளார்.

"கம்பதாசனின் கவிதைத் திரட்டு" என்ற பெயரில் சிலோன் விஜயேந்திரன் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

ஏராளமான திரைப்படங்களுக்குப் பாடல்கள், டப்பிங் படங்களுக்கு உதட்டசைவு உரையாடல்கள் எழுதி வறுமையில்லாமல் பொருளீட்டிய கம்பதாசன், பெண்களைப் பற்றி மிக உயர்வாகப் பாடியிருக்கிறார்.

அவ்வாறு பாடிய கவிஞரின் காதல், தோல்வியில் முடிந்தது.

எந்தப் பெண் குலத்தைப் பற்றி உயர்வாகப் பாடினாரோ, அவரைக் காதலித்த அந்தப் பெண்குல மாதரசி, அவரை விட்டுச் சென்றுவிட்டார்.

அவர் இதயம் நொறுங்கியது.

காச நோயும், ஈரல் நோயும் அவரை அணைத்துக் கொண்டன.

உடல்நலக் குறைவு காரணமாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் இயற்கை எய்தினார்.

"மின்னல் போலாடுமிந்த வாழ்க்கையே
 வானவில் போலுமே இளமை ஆனதே;
 ஆம்! துன்ப கதையுனதே!"

என்று 1953ஆம் ஆண்டு எழுதிய பாடல், இவர் வாழ்க்கையிலும் நிஜமானது.

கம்பதாசனின் வாழ்வும் துன்பக் கதையாக முடிந்தது.

"கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” (அக்பர் – 1961, இசை – நொவ்ஷத், பாடியவர்: சுசிலா – http://www.raaga.com/play/?id=123628 )

"கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்” (அவன் – 1953,இசை – சங்கர் ஜெய்கிஷன்,பாடியவர்: ஜிக்கி – http://music.cooltoad.com/music/song.php?id=341214 )

என்ற திரைப்பட பாடல்கள் ஒலிக்கும் வரை கம்பதாசன் புகழும் நிலைத்து நிற்கும்.

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment