கட்டுரையாளர் / உரைநடையாளர்
கட்டுரை என்றால்,ஏதோ,கவிதைகள் எழுதத் தெரியாதவன் தனது சிந்தனைகளை ஒருங்கிணைத்து கட்டுரையாக எழுதுவது என்பதல்ல. அக்கட்டுரை படிப்பவரின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தையும்,கட்டுரையால் என்ன செய்தி சொல்கிறோம் என்பதையும் ஆணித் தரமாக வைக்கவல்லவையாக இருக்க வேண்டும். சுத்தானந்தர் திருநூல் அல்லது தூய வாழ்வு எனும் இந்நூலின் மூலம், பல அரிய கட்டுரைகளைத் தருகிறார். படர்ந்த பல விஷயங்களை, வாழ்வியல் அழகினை, எடுத்துரைக்கிறார்.
மீண்டும், இந்த திருநூலுக்கு அறிஞர் திரு.வி.க அவர்களே முன்னுரை எழுதியுள்ளார். அது சுத்தானந்தம் முதல் பகுதியில் வெளியாகியுள்ளது. அந்த திருநூலிலிருந்து சில துளிகள்…: சந்திரசேகரன் – Fri, May 29, 2009
1. வாழ்வுத் தோட்டம்
வாழ்வுத் தோட்டம் எல்லையற்றது; இதில் வெற்றி மன்னர்போல வானளாவி நிமிர்ந்து,கனி குலுங்கும் மரங்கள் ஒரு புற்ம் உள்ளன. மனவுறுதியைப் பற்றியேறும் கடவுளன்பு போலப் பூங்கொடிகள் ஒரு புறம் ஓடுகின்றன; பல நிறப் பூச்செடிகள் பாத்தி பாத்தியாகவுள்ளன. பசும் புற்கள் தரையை மரகத மணிபோல் அலங்கரிக்கின்றன. இத்தோட்டத்தைப் புல்லும் அழகு செய்கிறது; தென்னை,வாழை, மா, பலா போன்ற மரங்களும் பயனுற அணி செய்கின்றன.
உலகம் திருவருள் விளையாடும் தோட்டம். அதில், பலவகை ஜீவப் பயிர்கள் வளர்கின்றன. விதைத்து முளைத்துச் செழித்துக் கிளைத்துப் பூத்துப் பழுத்து உதிர்ந்து, மீண்டும் மரபு விதையூன்றி வளர்த்து வளர்த்து இந்த வாழ்வுத் தோட்டம் நிலைத்து நிற்கிறது. பிள்ளையாகி, இளமையாகி, வாலிபத்தை நுகர்ந்து, முதிர்ந்து, மரபைப் பின் விடுத்து ஐம்பூதக் கூட்டை உதறிச்செல்கிறது ஜீவன். ஜீவத்தொகுதிகள் பல, எனினும் ஜீவ சக்தி ஒன்றே. எல்லையற்ற வேறுபாடுள்ள உயிர்களில் உயிராயிருப்பவன் அருளிறைவனே.
புல்லின் பசுமையும், மாங்கனியின் இனிமையும் அவனருள் விளக்கேயாகும். இல் வாழ்வுத் தோட்டத்த்தில் கனிகளும் உள்ளன. முட்களும் உள்ளன. முட்களை வேலியிட்டு க் கனி விளைவிப்போம். உலகிலுள்ள எப்பொருளும் அற்பமன்று. ஒவ்வொன்றிற்கும் ஒரு நற்பயன் உண்டு.மனிதனுக்கு நெல்,மாட்டுக்குப் புல் பயனாகும். நெல்லும் புல்லும் அஃததனிடத்திற் பெருமை பெற்றனவே. எதையும் இகழாது இறைவன் படைப்பணிகளைச் சம நோக்காற் காண்போம். வாழ்வுத் தோட்டம் மேடு பள்ள முள்ளது. அதில் நன் நிழற்சாலைகளும் உண்டு; கரடு முரடான முட்புதர்க்காடுகளும் உண்டு. பகுத்தறிவென்னும் விழியால் நன்னெறி கண்டு நடந்து, வீடு சேரவேண்டும். உள்ளந்தோறும் இறைவன் உள்ளான். அவனது திருவருட் சுடர் நம்மை நடத்துக! அவனால் நாம் உடல்கொண்டு வாழ்கிறோம். நம் நினைப்பும், மொழியும், செயலும் அவனுக்கே நிவேதனமாகுக! உடல் ஒரு கோயில்; அதை சுத்தமாக வைத்திருப்போம். இவ்வுடல் கடவுளில்லம். ஆருயிரன்பும், ஆண்டவனன்புங்கொண்டு அதிற் குடியிருப்போம். ‘நான், நான்; என்று இறைவன் இதயத்தில் நடம் புரிகிறான். அவனடி பற்றியே வாழ்வோம்.அவனருளை இவ்வாறு வழுத்துவோம்:
‘கோடி இரவிபோல் எங்கும் விளங்கி, எல்லாவற்றையும் விளக்கும் அருட்சுடரே, உலகம் உனது திருவிளையாட்டு. ஐந்தொழிலியற்றும் ஆற்றலே, மழையானது கடலாவியாயெழுந்து, கடலிலேயே கலப்பதுபோல், உன் கருணையினாலெழுந்த ஜீவன் உன் கருணையிணால் கூடுக! நீ வாய்மனங்கடந்த வாய்மை; வான்,காற்று,தீ, நீர், மண் ஆகிய ஐம்பூதச் சேர்க்கையால் அனைத்தையும் ஆக்கினை; உனது திறமை வாழ்க! உனது நினைப்பே படைப்பு. கண்ணிற் காணும் கண்னே,செவியுட் கேட்கும் செவியே, மனத்தில் நினைப்பவனே, ஜீவசாட்சியே, நீயே எம் உயிரும், உயிர்ப்பும், உயிரோட்டமும் ஆவாய். நீ எங்களை எப்பொழுதும் பார்க்கிறாய். நாங்கள் உன் கண் முன் தீயவை செய்யாதொழிய அருள்! உன் காதுகள் எங்கும் கேட்கின்றன. நாங்கள் தீய சொற்களைப் பேசாதிருக்க அருள்; எம் வாயையடக்கி, மனத்தைத் திறந்தருள்; எம் உட்கண்ணைத் திறந்து உன்னொளியைக் காட்டி அருள்; எம் முறைகளைக் கேட்டருள்:….