Home Palm Leaf ஓலைச் சுவடி தேடல் பணிகள் 1

ஓலைச் சுவடி தேடல் பணிகள் 1

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !
 

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௧-   ( 1 )

களப்பணி   அறிக்கை

வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு  – ௧ (   1 )

 

 

 

வரலாறு என்பதன் அவசியம்  கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக   மட்டும் அன்று .  வரலாற்றின் தேவை  நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது .  சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை  ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.

 

வரலாற்றுக்கு ஆதாரமான  காலத்தை ஆய்வதற்கு  அந்தக் காலத்தைய இலக்கியமும்,  நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய  இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.

ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.

 

எகிப்தில்  பிரமிடுகள் வரலாற்றைப் பறை  சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும்  நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை.  ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே  இல்லை .நம் நாட்டிலேயே   கூட  வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள்  சான்றுகள்  இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான்  கிடைக்கப் பெறவில்லை .

 

ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே  தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க.  தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை  இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி  உறங்கிகொண்டு   இருக்கறது . அங்கே எகிப்தில்  பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ  ,  ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள்  இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .

 

ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும்   பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம்    ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி  இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .

 

வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான்  தொல் தமிழர்கள் .

அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே  எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக  உள்ளன;  வாழும் தொல்குடிகளும்  இருக்கின்றனர்;  ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .

 

தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை    அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள்  நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும்  அதே சொல்  புழக்கத்தில் இருக்கிறது . 

 

ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில  நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.

 

இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?

 

இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி  மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம்  மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .

 

கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக்         கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது  300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள்  , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை  ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும்  இலைகளில்  எழுதும் வழக்கம்  இருந்தது .

 

.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .

 
தொன்ம  இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப்  பாதுகாத்து  வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும்  ஜீவனுடன் விளங்குவதற்குக்   காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும்  அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .

.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி,  அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான்   எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள்  தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது    பண்டையோரின் அறிவின்  ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

 

சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும்  ஒருவகை   புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ”பைபரஸ்” என்னும் சொல்லிலிருந்து உருவானது  என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில்  ஈடாகாது .

பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில்  இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி  ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள்  நமது கிராமங்களில் இருந்து  மறையத் தொடங்கின. அப்போதுதான்  எஞ்சிய  ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை  2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம்  இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும்    பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர்  இயக்கம் (  NMM)  தொடங்கியது .

இந்த இயக்கம் தமிழ் நாட்டில்   NSS     மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த  கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார்  16,000  இடங்களில் இருப்பதாக அறிவித்தது .

 

இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள்  ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை  ,தங்களின் பாரம்பர்ய  சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள்  கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு   இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .

 

தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட  MOU   வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான்,  செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர்,  காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி  கூறும் முகத்தான்  இங்கு எழுதப்படுகின்றது .

 

என்னுடன் பயணித்த  திரு செல்வமுரளிக்கும் ,முனைவர்  கோவை மணிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் .

இந்தத் திட்டத்தின் பின்புலமாக  இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட   THF  நிர்வாகிகள்  சுபா ,கண்ணன்,  ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .

சுவடிகள் எங்கு  எங்கு  எல்லாம் இருக்கும் தெரியுமா  ?

 

படம் பாருகள் !

 

கூரையில் சேமித்து வைத்ததைக் கோரியவுடன்  தானம் தரும் தயவு கொண்ட தாத்தா !

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
     

 

 

You may also like

Leave a Comment