Home Printing&Publishing எழுத்து வரிவடிவமும் திரிபுகளும்

எழுத்து வரிவடிவமும் திரிபுகளும்

by Dr.K.Subashini
0 comment

 

எழுத்து வரிவடிவமும் திரிபுகளும்
ச.பாலசுந்தரம்

 

    
     இருதிணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களான் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களான் ஆக்கம் பெற்றதாகும். அது கொண்டு பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும். எழுத்துமொழி அழியாததாகும். அதனை அழியாமற் காப்பது எழுதப்படும் கருவிகளைப் பேணும் நிலையைப் பொருத்ததாகும்.
     
       வரிவடிவ எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாறு யாவரும் ஏற்கும் வண்ணம் தெளிவுபடக் கூறற்கு அரியதொன்றாக உள்ளது.ஒரு பொருளையோ சுருக்கத்தையோ சொல் வடிவான் உணரவும், உணர்த்தவும் இயன்றதொரு கால எல்லையிற்தான் அச்சொல்லுக்கு வரிவடிவ அடையாளம் அமைக்கும் சிந்தனை தோன்றும். முதற்கண் ஒரு சொல்லுக்கு ஓர் அடையாளமாக அமைத்துப் பின்னர் எழுத்தொலி அடையாளங்கள் தோன்றும். அங்ஙனம் எழுத்துகளை வகைப்படுத்தி அவற்றிற்கு வரிவடிவம் அமைப்பது என்பது ஒர் அரிய செயலேயாகும்.

        அங்ஙனம் ஒரு மொழியின்கண் முதற்கண் அமைத்துக் கொள்ளப்பட்ட வரிவடிவம் எழுதும் கருவி, எழுதப்படும்கருவி வளர்ச்சிகட்கு ஏற்ப வேறுபடும். கையால் எழுதும் பயிற்சிக்கு ஏற்பக் காலந்தொறும் வேறுபடும். அங்ஙனம் வேறுபட்டு வளர்ந்து ஒரு காலத்திற் செம்மையுறும். செம்மையுற்ற வடிவங்கள் மக்களின் அறிவுவளர்ச்சிக்கு ஏற்த் திருத்தங்களும் பெறும். மேற்கூறிய கருத்துகள் உலகமொழி யாவற்றிற்கும் பொதுவானதொரு மரபாகும்.

         தமிழ்மொழியமைப்பினையும் அதனைக் கையாளும் முறைமையையும் பற்றி அறிவியலடிப்படையில் மிக நுட்பமாகவும்தெளிவாகவும் இலக்கண நெறியான் வகுத்துக் கூறும் தொல் காப்பியம் தனக்கு முன் வழங்கிய நூல்களையும் நூன்மரபுகளையும் சுட்டிக் கூறுவதனை நோக்குமிடத்து இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் செம்மையான வரிவடிவங்கள் அமைத்திருத்தல் வேண்டுமென்பது புலனாகிறது.

        எனினும் வரலாற்றுக்காலத்திற்கு முன்னைய வரி வடிவங்களையோ தொல்காப்பியர்கால வரிவடிவங்களையோ இற்றைக்குக் கட்புலனாக அறியக்கூடிய ஆதாரங்கள் ஒன்றுமில்லை. காரணம் எழுதப்படும் கருவிகள் காலத்தால் அழிதற்கும் மறைதற்கும் உரியனவேயாம். செம்பு முதலாய மாழைகளில் எழுதியனவும்அவ்வாறேயாம்,மாழைகள் அழிக்கப்படுவதற்கு உரியனவாகும்.

         இன்றைக்கு அழிவினின்று உய்ந்து கிடைத்துள்ள கல்வெட்டுக்களானும் சங்ககால இலக்கியங்களானும் வரிவடிவ எழுத்துகளைப் பற்றியும், அவைஎழுதப்பெற்ற முறைகள் பற்றியும் எழுதப்பட்ட கருவிகள் பற்றியும்ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

                            விழுத்தொடை மறவா வில்லிடத் தொலைந்தோர்
                            எழுத்துடை நடுகல் (ஐங்.352)
                            செல்லுந்த தேயத்துப் பெயர் மருங்கறிமார்  
                            கல்லெறிந் தெழுதிய நல்லறரை மரா அத்த(மலைப்டு.395)
                            கூருளிகுயின்ற காடுமாய் எழுத்து (அகம்.297)

என்றாற்போலப் பயின்றுவரும் சங்க இலக்கியத் தொடர்கள் வரிவடிவ எழுத்தினைப்பற்றிய ஐயமற அறிவிக்கின்றன. எனினும் சான்றுகளோடு தெளிவாக அமைந்த எழுத்து வரிவவங்கள் கி.பி.-க்குப் பின்னர்தான் கல்வெட்டு, செப்பேடு. ஓலைச்சுவடி ஆகிய கருவிகளின் வாயிலாக நமக்குக் கிட்டியுள்ளன.

அவற்றுள் ஓலைச்சுவடிகளைப் பொறுத்தவரை 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அமைந்தவையே பழமையானவையாக உள்ளன. காரணம் ஓலைகள் மடிந்து ஒடிந்து சிதையும் இயல்பினவாதலான் என்க.

இதுகாறும் கூறிய சில குறிப்புகளான் வரிவடிவங்கள் காலந்தொறும் திருத்தம் பெற்று அமையும். தன்மையன. என்பது விளங்கும்.

      பண்டை நூல்களை ஓலைச்சுவடிகளில் எழுதிப் பயிலும் மாணாக்கர் அவற்றைப் படி எடுக்குந்தொறும்   சில குறை நிறைகள் நேரலாம். அதனான் பாடத் திரிபுகள் உண்டாவது இயல்பே. அங்ஙனம் ஒரு நூல்  காலந்தொறும் ஓலைகளிற் பெயர்த்து எழுதப்பட்டு, எழுதப்பட்டு வந்து இற்றை நாம் காணும் வடிவத்திற்றோற்றமளிக்கிறது. உலோக அச்சு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பெற்று, அச்சிடத் தொடங்கிய காலத்தில் உள்ள வரிவடிவங்களும் காலந்தொறும் மாறி வந்துள்ளமையைக் காணலாம்.

      இற்றைக்குப் பன்னூற்றாண்டுகட்கு முன்பிருந்தே இலக்கண இலக்கிய நூல்களை வரிப்படுத்தப் பெற்ற ஓலைகளில் எழுதப் பெற்று வந்துள்ளமையைச் சங்கப்பாக்களுள்,  வரும் குறிப்புகளான் அறியலாம். இறைக்கு அச்சு வாயிலாகப் பதிவு செய்யப்பெற்று நாம் பயிலும் நூல்கள் யாவும் ஓலைச்சுவடிகளினின்றும் சிறுபான்மை கல்வெட்டுப் படிகளினின்றும் பெயர்த்து எழுதி பதிவு செய்யப் பெற்றவையே.தமிழ் எழுத்துகளான் ஆன ஓலைச்சுவடிகள் இற்றைக்கு உலகில் பல்வேறு நாடுகளில்
கல்விக்கூடங்களில் உள்ளன. நமது நாட்டிலும் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான சுவடிகள் உள்ளன. அன்மையில் தமிழ் வளர்ச்சிக் கருதித் தோன்றிய தமிழ்ப் பல்கலைக்கழகம் அதற்கென்றே ஒரு புலத்தை நிறுவி அரிய ஓலைச்சுவடிகளைத் திரட்டி ஆராய்ந்து வேண்டுவனவற்றை வெளியிடும் பணியினை மேற்கொண்டு அரும்பணியாற்றி வருவதை நாமறிவோம். இற்றைக்குத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மட்டும் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் முதலாய பலதுறைப்பட்ட ஓலைச் சுவடிகள் 1725 உள்ளன.

         இனி ஏடு பெயர்த்து எழுதுவோர் யாவரும் அந்நூற் பயிற்சியுடையார் எனற்கியலாது; கூலி பெற்று எழுதுவோரும் உண்டு. இந்நிலையிற்றான் பாடவேறுபாடுகளும், பிழைகளும் தோன்றும். பெய்ர்த்து எழுதுவோர் தம் அறிவாற்றலுக்கேற்பச் சில பல திருத்தங்களைச் செய்து கொள்வதும் சிலவற்றைக் கூட்டுவதும், குறைப்பதும் செய்தல் இயற்கையே. மேற்கூறிய நிலைமைகளுக்குட்பட்டவையே இன்று நாம் அச்சிட்டு பயிலும் பழந்தமிழ் நூல்கள் யாவும் இருக்கும். மாணாக்கரின் தரத்திற்கேற்ப அவற்றுள் சில மாற்றங்கள் அமையும். வ்வாறே காலந்தோறும் பயில்வோருக்குத் தக்கச் சுவடிகள் பெருகும் அருகும்.

ஓலை எழுத்தும் ஒப்புமை வடிவமும்

        எழுத்தொலிகளை உணர்த்தும் வரிவடிவ அடையாளங்கள் யாவும் கையினால் வரைந்து எழுதுவதற்கேற்ப அமைத்துக் கொள்ளப்பட்டவையே ஆகும். அவை யாவும் வட்டம், கோணம், சதுரம், கீற்று, புள்ளி, ஒற்றும் என்னும் அடிப்படைவடிவங்களை கொண்டு அமைந்தவையே. ஒருமொழிக்கண் வறையறைப்பட்ட எழுத்தொலிகள் எவ்வளவோ அவ்வளவு அடையாளங்கள் அமையும். எழுத்துக்களின் எண்ணிக்கைப் பெருக்கிற்கேற்ப அடையாளம் வேறுபாடுகள் நுட்பமாக அமையும்.

       இனி எழுத்து அடையாளங்கள் எழுதும் கருவி, எழுதப்படும் க்ருவிகளுக்கு ஏற்ப வும் அமையும். கல்லில் பொறிக்கப்படும் அடையாளத்திற்கும்,செம்பு முதலாய தகடுகளில் செதுக்கப்பெறும் எழுத்தடையாளத்திற்கும், திரைச்சீலை அல்லது துணிகளில் எழுதப்பெறும் அடையாளத்திற்கும், ஓலைகளில் வரையப்பெறும் அடையாளத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. சிலக் கூறுகளைத் தவிர பல கூறுகள் வேறுபடும். கல்லெழுத்துகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப் பெறா. தகட்டிற் சிறுபாண்மை பிணைக்கப்பெறும். எனவே கையெழுத்துகள் பிற எழுத்துகளினின்றும் பெரிதும் வேறுபட்டமையும், என்பதை நினைதல் வேண்டும். மற்றும் வட்ட வடிவங்கள் கல்லெழுத்துகளில் தவிர்க்கப்பெறும். நேர்க்கீற்றும் வளைக்கீற்றும் புள்ளியுமே பயின்று வரும். ஓலையில் வட்ட வடிவங்கள் பயின்று வரும். புள்ளியும், ஒற்றும் தவிர்க்கப் பெறும்.

        இனி எழுத்து வடிவ்ங்களைப் பொறுத்தவரை கிழக்காசிய மொழி எழுத்துகள், ஐரோப்பிய, அமெரிக்க மொழி எழுத்துகள், இந்திய மொழி எழுத்துகள் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் தமக்குள் பெரிதும் வேறுபாடுடையவை. இந்திய மொழிகளுள் தென்னிந்திய மொழி எழுத்துகள் ஏறத்தாழ ஒருநெறியினை உடையவையாகும். அவற்றுள் தமிழ் மொழி எழுத்துகளை மட்டும் சிறிது காண்போம்.

       தமிழ்மொழியில் அடிப்படை எழுத்துகளும் அவற்றின் வடிவங்களும் தனியாகவும், இணைத்தும் எழுதப்பட்டு வந்துள்ளன. அஃதாவது உயிரெழுத்து வடிவம், மெய்யெழுத்து வடிவம், இரண்டும் கூடிய  உயிர்மெய்யெழுத்து வடிவம். அம்முறையான தமிழில் வரிவடிவம், பல்கியதோடல்லாமல், சிக்கலுக்கும் உட்படுவனவாயின. உயிரெழுத்து வடிவங்களுள் “எ, ஏ, ஒ, ஓ” என்பவையும், மெய்யெழுத்து வடிவங்களுள், ”க,ச,த-ஞ,ந-ப,ய,ம,ழ-ல,வ-ள,ண,ற” என்பவையும் பெரிதும் ஒற்றுமை உடையவை. உயிர்மெய் வடிவ அடையாளங்கள் யாவும் ஒரு நெறிமுறையை உடையனவல்ல. காரணம் குழப்பமின்றி  வரைந்துணரவேண்டிப் பல்வேறு நெறிகளில் அமைக்கப்பெற்றமையேயாகும். உயிர்மெய் ஆகார நெட்டெழுத்தின் துணைவடிவமும், மெய்யுள் ”இடையின ரகரமும்”, ஒற்றுமையுடையவை. இவையாவும் ஓலையெழுத்துகளில் அமைந்துள்ள வடிவம் பற்றியவையாகும்.இன்றைய அச்சு வடிவங்களும் அவற்றைச் சார்ந்தவையாகும்.

        தமிழ்மொழி எழுத்து வடிவங்கள் தனித்தனி எழுத்து வடிவங்களேயாயினும் கையால் எழுதுவோர் அவற்றைப் பிணைத்து எழுதும் வழக்கினை மேற்கொண்டமையான் பல சிக்கலுக்கு உட்படுவனவாயின. மேலும் தமிழ் மொழிஓசையை அடிப்படயாகக் கொண்டதாதலின், புணர்ச்சி விகாரங்களுக்கு உட்படும் கடப்பாட்டினதாக உள்ளது. அவ்வகையில் ஓலைச்சுவடியைப் படிப்போரும் படியெடுப்போரும் பிழை புரிதற்கு வாய்ப்புடையதாயிற்று.

சில எடுத்துக்காட்டுகள் 
  
         உடம்படுமெய் = நாவாடிற்று – நா + ஆடிற்று

         பிறழ்பிரிப்பு = பணியாரம்மா – பணியாரம் + மா
                                 மாதேவா – மா + தேவா

         குற்றுகரப்பிரிப்பு = மருதுவந்தான் -மருது + உவந்தான்
                                         வந்துஆட்கொண்டான் – வந்தாள் +கொண்டான்

          னகரப் புணர்ச்சி = அவனல்லன் – அவன் + நல்லன்
                                        அவன் + அல்லன்.

          னகரப்புணர்ச்சி = கண்ணீர் வந்தது – கண்நீர், – கள்நீர்

          இலக்கணம் அறியார் = மலர் கழல் – மலர்க்கழல்

          அறைகுறையறிவோர் = வயிறு – வயறு; மன்னன் – மண்ணன்;
                                                     கவிஞர்கோயிலன் – கவிஞர்கோ இலன்.

          கல்லார் செய்பிழை :
           எழுத்து மாற்றம் = ஆலி நாடார் – ஆவிநாடார்;
                                            பாடுபெற்றார் – மாடுபெற்றார்;
                                            நாகுயர்ந்தது – நாடுயர்ந்தது;
                                            பொருது சென்றான் – பொறாது சென்றான்;
                                            கன்னி வந்தாள் – கள்ளி வந்தாள்;
                                            பாடிவீடு – மாடிவீடு.

         பொருள் மாற்றம் =   அலம்படுவென்றி – வளம்படுவெற்றி;
                                              அளிக்கத்தக்கவன் – அழிக்கத்தக்கவன்;
                                             கொளைவல் பாணன் – கொலைவல்பாணன்;
                                             கட்டூர் சென்றான் – காட்டுர் சென்றான்;
                                             கழுது நிண்டது – கழுத்து நீண்டது;
                                              தொல் செருவு – தோல் செருப்பு.

       சுவடி எழுத்துணராமை = பரவினான் – பாவிநான்;
                                                   காமலர் – கரமலர்.
                                                   நன்வாய்ச் சென்றான் =  நனவாய்ச்சென்றான்;
                                                   நேர்வாய் என்றான் – நோவாய் என்றான்.
இவ்வாறு நேரும் பிழைகளை ஓர்ந்து ஓலைச்சுவடிகளைப் பயின்றறிதல் வேண்டும்.


தட்டச்சு செய்து வழங்கியவர்: திரு.வடிவேலு கன்னியப்பன்

 

You may also like

Leave a Comment