Home HistoryEtayapuram எண்ணங்கள் ஊர்வலம் – எட்டயபுரம் 1-5

எண்ணங்கள் ஊர்வலம் – எட்டயபுரம் 1-5

by Dr.K.Subashini
0 comment

 

எண்ணங்களின் ஊர்வலம்  -1

30-07-2009

 

எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது.

நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும்  எனக்குள்ளே பரவும்  இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனை சம்பவக் குவியலா?

 

எட்டயபுரம்

பாரதியால் பலரும் அறிந்துகொண்ட ஊர்; வெளியில் அதிக விளம்பரமில்லாத பல செய்திகளைக் கூற விரும்புகின்றேன்.

கவிஞர்களும் கலைஞர்களும் வாழ்ந்த, வந்து போன கரிசல் மண்.

 

சீறாப்புராணம் பாடிய இஸ்லாமியக் கவிஞர் உமறுப் புலவர்  வாழ்ந்த ஊர்.

 

“குமார கீதம் “ பாடிய பெண்பாற்புலவர் சுப்பம்மாள் வாழ்ந்த மண். எட்டயபுரத்தில் வாழ்ந்த மற்ற படைப்பாளிகள்  “திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம்” என்ற வரலாற்று நூலாசிரியர்  குருகுகதாச பிள்ளை . இவர் மகன் இளசை கு. பக்தவச்சலமும் ஒரு கவிஞர்.

எட்டயபுரத்தில் தோன்றிய எஸ்.ஏ.அய்யர் இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதுடன் நேருஜி பற்றி ஆங்கிலத்தில் நூல் இயற்றியுள்ளார்.

 400 ஆண்டுகள் பழமையை விவரிக்கும் “ எட்டயபுரம் வரலாறு “  என்ற நூலைத் தொகுத்துப் படைத்தவர்கள் , வே.சதாசிவன், இளசை மணியன், மா. இராஜாமணியும் ஆவர். சுவாமி தீக்ஷிதர் எழுதியது “வம்சமணி தீபிகை”. கே.கருணகர பாண்டியன் எழுதியது “History of Ettayapuram “ இந்தத் தலைப்பில் ஆராய்ச்சி செய்து M.Phil பட்டம் பெற்றவர்.

 “பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்”, பாரதியின் இசைஞானம் பற்றி “நல்லதோர் வீணை” ,  தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர்  வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் “கடல் தாமரை“ ஆகிய நூல்களைப் படைத்தவர், எழுத்தாளரும்  பேச்சாளருமான தி. முத்துக்கிருஷ்ணன் ஆவார். இவர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழரும் ஆவார்.

 

 “இந்தியா“ பத்திரிகையின் மூலப்பிரதிகளைக் கொண்டு ஆய்வு செய்து  “ பாரதி தரிசனம் “ என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். “வீரன் அழகுமுத்து யாதவ் “  என்ற நூலை மா. இராஜாமணி எழுதியுள்ளார். சோதிடத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியதுடன் பல சோதிட இதழ்களிலும் புலமையைக் காட்டியவர் கோபி கிருஷ்ணன்.கவிஞர் கலாப்ரியா எழுதிய நூல் “எட்டயபுரம்.“ ஆனந்தவிகடனில் சிறுகதைக்குப் பரிசு வாங்கியவர் வே. சதாசிவன். அதே விகடனில் சிறுகதைக்கு முத்திரை மதிப்பு பெற்றவர் சீதாலட்சுமி  (அது  நான் தான். என்னைப் பற்றிய விபரங்கள் எண்ணங்கள் ஊர்வலத்தில் வருவதால் மேற்கொண்டு விபரங்கள் இங்கே தரவில்லை )  இன்றும் எட்டயபுரத்தில் வாழும் எழுத்தாளர்கள் – இளசை மணியன், இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், டாக்டர். மரிய செல்வம், புலவர் மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச்சாமி ஆகியோர் ஆவர்.

 

இளசை அருணாவின் கையெழுத்து அற்புதமானது. “கரிசல் மண்” என்ற புத்தகத்தின் சொந்தக்காரர். எட்டயபுரம் மட்டுமல்ல, மற்றப் பகுதி வாழ்மக்களையும் ஆராய்ந்து எல்லா எழுத்தாளர்களையும்  பற்றிய ஒரு தொகுப்புரை. இரண்டு புத்தகங்களில் நிரப்பி எங்களைச் சிரஞ்சீவிகளாக்கிய இளசை அருணாவிற்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டவர்கள். இவர் தொகுத்த குறிப்பிலிருந்து நான் எடுத்த முத்துத் தகவல்களைத்தான் இங்கே தருகின்றேன்.

எட்டயபுரத்து ஓவியர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள்.மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ் இராம சுப்பு, மாறன், கண்ணன். இவர்கள் என்னுடன் வாழ்ந்தவர்கள் என் எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
எங்கள் ஊரில் பாடகரும் உண்டு. நரசிம்மன் வானொலியில் நிறையப் பாடியவர். எங்கள் ஊர் நடிகர்களை விட முடியுமா? ஈ.ஆர். சகாதேவன், டி.வி. நாராயணசாமி, பி.எஸ் வெங்கடாசலம் திரையுலகில் இவர்களைப் பார்த்திருக்கலாம்.

 

ராஜா உயர்நிலைப் பள்ளி நூறு ஆண்டுகளைக் கடந்து மேலும் சில ஆண்டுகளாகி விட்டன. பாரதி மட்டுமல்லர், ஸ்வாமி சிவானந்தா என்ற குப்புசாமியும்  இப்பள்ளியில் படித்தவர்தான். மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமியும் இங்கு படித்தவர். நானும் இங்கே படித்தவள்.

 

இந்த ஊரில் வாழ்ந்த இன்னும் சிலரைப் பற்றிக் கூறவேண்டும்.நாகூர் முத்துப் புலவர், கடிகை முத்துப்புலவர், கீரை மஸ்தான் புலவர் ஆகியோர் வாழ்ந்த பூமி.

 

எட்டயபுரம் ஆஸ்தானத்திற்கு நிறைய சங்கீத வித்வான்கள் உண்டு. ஆனால் அங்கேயே தங்கியிருந்தவர்களில் முக்கியமானவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் தம்பியான பாலுசாமி தீக்ஷிதர். தம்பி வாழ்ந்த இடத்திற்கு அண்ணனும் வந்தார், வாழ்ந்தார், மறைந்தார். முத்துசாமி தீக்ஷிதருக்கும் நினைவு மண்டபம்  இருக்கின்றது. பாரதியின் நினைவு மண்டபத்திற்குக் கொஞ்ச தூரத்திலேயே இதுவும் அமைந்துள்ளது. உமறுப் புலவருக்கு 1912ஆம் ஆண்டில் பிச்சைக்கோனார் என்பவர் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளார்.

 

 

 

 

எட்டயபுரத்தின் பேச்சுத்திறமைக்கு, கே.பி.எஸ் நாராயணன் (பேச்சுக்கும்  எழுத்துக்கும் பயிற்சி கொடுத்து உருவாக்கிய தந்தை), முத்துக்கிருஷ்ணன், தி.சுப்பையா, கலிங்கன், தேவன் ஆகியோர் சான்று. பட்டிமன்றம், வழக்காடு மன்றத்தில் ஊர்வலம் வந்தவர் கு.துரைராஜ் அவர்கள்.

 

முற்போக்கு வாலிபர் சங்கம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகின்றது. வருடந்தோறும் பாரதி விழா டிசம்பர் மாதம் நடத்தி வருகின்றனர். அருமையான நூலகம் வைத்துள்ளனர். பாரதி ஆய்வாளர் அமரர் தொ.மு. ரகுநாதன் தனது ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கி பாரதி ஆய்வு மையம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். அமரர் கு. துரைராஜ் அவர்களின் புத்தகங்களை  அவரது துணைவியாரும் இதே மையத்திற்குக் கொடுத்துள்ளார்.

எட்டயபுரத்தில் ஓர் அச்சகமும் அக்காலத்தில் இருந்தது. அரண்மனக்குச்  சொந்தமானது. இங்குதான் சுப்புராம தீக்ஷிதரின் “சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி” என்ற நூல் அச்சானது. இப்பொழுதும் அந்தத் தெருவின் பெயர் அச்சாபீஸ் தெரு.

இந்நாடு சுதந்திரம் பெறும் முன்னர் வந்த பெரியவர்களில் இருவரின் பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1934 ஜனவரி மாதம் மகாத்மா காந்தி வந்தார். 1935-ல் வ.உ. சிதம்பரனார் வந்தார்.
இது ஒரு சின்ன ஊர். இத்தனை செய்திகளும் இந்த ஊருக்குச் சொந்தமா? எதற்கு  இத்தனை விபரங்கள்? பயிர் வளர்ந்த விளைபூமியின் தன்மை தெரிந்தால் வியப்பு வராது. ஊர்வலத்தில் இதன் உண்மைகள் உணரலாம்.

நான் முதலில் பார்த்த எழுத்தாளர்கள் இருவர். ஒரே நேரத்தில்,  ஒரே இடத்தில் பார்த்தேன். அவர்கள் மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்களும், பொன்னியின் புதல்வர் திரு கல்கி அவர்களும் ஆவர்.

 

ஊர்வலம் தொடரும்..!

 


 

எண்ணங்களின் ஊர்வலம்  – 2

30-07-2009

 

அம்மா , அப்பா எங்கே?

இந்தக் கேள்விக்கு ஏதேதோ பதில் சொல்லி வந்தாள் சுப்புலட்சுமி.
மகள் பாப்பாவிற்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். நான்கு வயதுக் குழந்தைக்கு எப்படிப் புரிய வைப்பது ? அவள் கணவர் காந்தியைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். சுதந்திரப் போராட்டம். ஜெயில்வாசம். போய் இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அவர் எங்கிருக்கிறார் என்று அவளுக்கே தெரியாது. பக்கத்து வீட்டு சீமாச்சு தான் அவரை ஜெயிலுக்குப் பிடிச்சுண்டுபோய்ட்டதாகச் சொன்னான். நம்பிக்கையில் தாலியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.

“அம்மா “ மீண்டும் குரல் கொடுத்தாள் குழந்தை பாப்பா. நினைவுகளிலிருந்து தொப்பென்று கீழே விழுந்தாள். “ உன் அப்பா ஜெயிலுக்குப் போயிருக்கார் “ “ அப்பா திருடினாரா? “ அவள் நிறைய கதைகள் கேட்டிருக்கிறாள்.

தப்பு பண்ணினா ஜெயிலுக்குப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். பாப்பா கையில் ஒரு பொம்மை இருந்தது. பதில் கூறாமல் சட்டென்று அந்தப் பொம்மையைப் பறித்தாள். பாப்பா ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஏன் அழரே?

 

என் பொம்மை. நீ புடுங்கிட்டியே , அது என்னுடையது. உன்னோட சாமானை யாராவது எடுத்தா கோபம் வர்ரதே.  நாம தங்கியிருக்கிற வீடு, இதெல்லாம் சேர்ந்தா நம்ம நாடு.  அதை வெள்ளைக்காரன் புடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவனைப் போகச் சொன்னா ஜெயில்லே போட்டுடரான். உன் அப்பாவும் அதுக்காகக் காந்திக் கட்சியிலே  சேர்ந்துண்டிருக்கார்.

 

பாப்பாவுக்குச் சரியா ஒண்ணும் புரியல்லே. அப்பா ஏதோ நல்லதுக்காக ஜெயிலுக்குப் போயிருக்கார் என்ற வரை புரிந்து தலையை ஆட்டியது.  அன்று முதல் தினமும் காந்திக் கட்சிபற்றி கேட்க ஆரம்பித்தாள்.  அந்தக் கதை அவளுக்குப் பிடித்திருந்தது. தாயார் அவளுக்குச் சோறு மட்டும் ஊட்டவில்லை, சொந்த நாட்டைப் பற்றிய செய்திகளையும் அவளுக்குத் தெரிந்த அளவில் கூற ஆரம்பித்தாள். பாலபாடம் ஆரம்பமாகிவிட்டது.

 

ஒருநாள் சுப்பு லட்சுமி தன் மகளைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மன் காணச் சென்றாள். சிங்காரிக்கப்பட்ட பந்தலில் மீனாட்சி அம்மன்.  அது மீனாட்சி அம்மன் கோவில் அல்ல.

மதுரை வைத்தியநாதர் தலைமையில் ஹரிஜன மக்கள் திரண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தனர். அவர்கள் நுழைந்ததால் கோவிலின் ஆசாரம் போய்விட்டது என்றும் மீனாட்சி வெளியேறிவிட்டாள் என்றும் கூறித் தனியாகப் பந்தல் அமைத்து மீனாட்சி அம்மன் விக்கிரகத்தை அங்கே வைத்துப் பூஜைகள் நடத்தினார் நடேச அய்யர். ஆசாரம் பேசும் மக்கள் அங்கே போக ஆரம்பித்தனர்.

ஆலயப் பிரவேசம் முன்னின்று நடத்தியவனும் பிராமணன்.  ஆசாரம் பேசி ஹரிஜன் நுழைந்ததால் ஆண்டவன் அங்கிருந்து போய் விட்டான் என்று சொன்னவனும் பிராமணன்.  பந்தலுக்குள் நுழையும் பொழுது பாப்பா கேட்டாள் “அம்மா, கோவிலுக்குப் போகாம இங்கே ஏன் வந்திருக்கோம்.”
“மீனாட்சி கோவில்லே ஹரிஜனங்கள் நுழைஞ்சுட்டாளாம். அதனாலே மீனாட்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்.”  ஹரிஜனம்னா யாரு?

அது ஒரு ஜாதி.

ஜாதின்னா என்ன?அவாளும் மனுஷாள்தானே கடவுள் ஏன் கோவிச்சுக்கணும்? எவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்டு விட்டாள்.

தாயார் பூரித்துப் போய் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “கோந்தே, எனக்கும் புரியல்லே. அம்மனத் தரிசுச்சுட்டுப் போகலாம் “ என்றள்.

பாப்பா அதற்குமேல் கேள்வி கேட்கவில்லை. “ தப்பு” ன்னு மட்டும் அந்தக் குழந்தைக்கு அப்பொழுதே தெரிந்தது. பாப்பாவிற்கு ஆறுவயது முடிந்து விட்டது.

தளவாய் அக்கிரஹாரத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனம் அறையில் சுப்புலட்சுமி, தன் தாயார், மகள், அவள் தம்பி ஆகியோருடன் வாழ்ந்து வந்தாள்.அவள் கணவர் மணி திடீரென்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்.
பாப்பாவிற்கு அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சி. சுப்புலட்சுமிக்குக் கணவனைப் பார்த்ததில் ஓர் அமைதி. சாப்பிட்ட பின்னர் எல்லோரும் உட்கார்ந்து மணி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வீட்டுக்கார அம்மாள் அங்கே வந்தார்கள். மணியை அருவருப்புடன் பார்த்தாள். “ நீங்க ஜெயில்லேருந்து தானே வரேள்? “ என்று கேட்கவும் ஆமாம் என்று தலையாட்டினார் மணி.

“ நீங்க இங்கே தங்க முடியாது. மற்ற ஜாதிக்காராளோட சாப்பிட்டு, சேர்ந்து வாழ்ந்துட்டேள். இது ஆசாரமான பிராமணாள் வீடு. வேற இடம் பார்த்து குடும்பத்தைக் கூட்டிண்டு போய்டுங்கோ” . வந்த மாமி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

சுப்புலட்சுமி துடித்துப் போனாள்.மணிதான் சமாதானம் செய்தார். வேலை ஒன்று தேடிக் கொண்டு சீக்கிரம் கூட்டிப் போவதாய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஐந்தரை வருடங்கள் கழித்து வந்த கணவன் ஒருநாள் கூடச் சேர்ந்து தங்க முடியவில்லை. அவளுக்கு அப்பொழுது 24 வயது சாதிப் பிரிவினையை அவளும் வெறுக்க ஆரம்பித்தாள்.

 

மூன்று மாதங்கள் மணியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதன் பின் ஒரு கடிதம் சந்தோஷச் செய்தியைச் சுமந்து வந்தது. மணிக்கு எட்டயபுரத்தில் அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது.
சுப்புலட்சுமியைக் குழந்தையுடன் வரச் சொல்லி விட்டார். தாயைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு எட்டயபுரம் சேர்ந்தாள் எட்டயபுர வாழ்க்கை தொடங்கியது.

 

அரண்மனையின் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர் மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும். அவர்களைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப் பட்டவர்களில் மணியும் ஒருவர். தன் ஆசை
மகளைக் கூட்டிப் போய் அவர்களைக் காட்ட மணி விரும்பினார்.

அவருடைய இந்த உணர்வுதான் மகள் பல பெரியவர்களைச் சந்திக்கும் காரணமாக அமைந்தது.
“பாப்பா, இவர்களை நமஸ்காரம் பண்ணு “ அவள் நமஸ்காரம் செய்தபின் கல்கி அவளை அருகில் வரவழைத்து ஏதேதோ கேள்விகள் கேட்டார். எதுவும் இப்பொழுது நினைவிற்கு வரவில்லை. அவர்களைப் பற்றி அவள் அம்மா கூறியிருந்தது “ வெள்ளக்காரன் கிட்டேயிருந்து நம் நாட்டைத் திரும்ப வாங்க
சண்டை போடுகிற காந்திக் கட்சியைச் சேர்ந்தவர்கள் “ அவளைச் சுற்றி நடக்கும் எல்லாமே புரிந்தும் புரியாமலும் இருந்தது.

 

அப்பொழுது அவளுக்கு வயது எட்டு. என் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. வீட்டில் என் பெயர் பாப்பா.
வெளியில் சீதாலட்சுமி. எட்டயபுரத்தில் வைத்துதான் பள்ளிப் பதிவேடுகளில் “குஞ்சம்மா “ என்ற பெயர் சீதாலட்சுமியாயிற்று.

பிறந்தவுடன் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. . பள்ளியில் சேர்க்கும் பொழுது என் தந்தை இல்லாததால் என் தாயார் குஞ்சம்மா என்று பெயர் கொடுத்து விட்டார். இதன் பின்னால் எனக்குத்தான்
எத்தனை பெயர்கள்.

எதற்கு இத்தனை புள்ளி விபரங்களும் சம்பவங்களும் என்ற நினைப்பு தோன்றுவது இயல்புதான். ஊர்வலத்தின் மூலவர் ஒரு பெண். அதுவும் கிராமத்துப் பெண். வரப்போகும் அனுபவங்களை வியப்புடனோ சந்தேகத்துடனோ பார்ப்பதைத் தவிர்க்கத் தான் விதை பற்றியும்,  அதற்கு அப்பொழுதே இடப் பட்ட உரத்தைப் பற்றியும் கூற வேண்டியது அவசியமாகின்றது. பயிர் வளர்ந்த விளைநிலம்பற்றித்
தெரிந்தால் வியப்பு மறைந்துவிடும்.

 

எட்டயபுரத்தில் நாங்கள் குடிபுகுந்த வீடு இன்று பாரதியார் தெரு என்று அழைக்கப்படும் தெருவில், பாரதி தன் குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்த வீடு. என் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது

 


 

எண்ணங்கள் ஊர்வலம்  -3

30-07-2009

 

இது என் சுய சரிதையல்ல. சரித்திரம் படைக்க நான் சாதனையாளரும் அல்ல. மிகச்  சாதாரணமானவள்.

 

ஆனால் 72 ஆண்டுகள் வரலாற்றுச் சுவடுகளின் பார்வையாளர். சில நேரங்களில் பங்குதாரராகவும் வாழ்ந்தி ருக்கின்றேன்.

 

என் நினைவுகள் நாட்குறிப்பிலிருந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன். ஓர் சாமானியன் நோக்கிலும் நிகழ்வுகளை அறிந்து கொள்வது வரலாற்று ஆய்வுகளுக்கு வலு சேர்க்கும் இனி ஊர்வலத்தைத் தொடர்வோம்.

 

எட்டயபுரத்தில் முதலில் நாங்கள் குடியேறிய வீட்டில் பாரதி ,சிறிது காலம் தன் மனைவியுடன் குடியிருந்திருக்கின்றார் என்று என் தந்தை கூறினார்.  அதே தெருவில்தான் பாரதி பிறந்த வீடும் இருக்கின்றது. இப்பொழுது அது பாரதி நினைவு இல்லம். நான் அந்தத் தெருவுக்குப் போன பொழுது
அந்த வீட்டில் வசித்தவர் பாரதியின் தாய் மாமன் சாம்பசிவ அய்யர்.

 

என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையிலே எங்கள் ஊர் அரண்மனை. என் முதல் தோழி தங்கப்பாண்டியனின் வீடு. .ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேரவும் எனக்குக் கிடைத்த முதல் தோழி. தினமும் அரண்மனைக்குச் சென்று அவர்களுடன் விளையாடுவேன். அண்டை வீட்டுப் பழக்கம் எனக்கு முதலும் கடைசியும் அவர்கள் இல்லம் தான்.

பக்கத்து வீடுகளுக்குப் போகும் பழக்கம் எனக்கு கிடையாது.அதே போல் முதல் கார்ப் பயணமும் அவர்களுடன் அரண்மனைக் கார்ப் பயணம் தான். அது கடைசியல்ல, ஆரம்பம். சமீபத்தில் என் முதல் தோழியைக் காணச் சேன்றேன். எங்கள் சந்திப்பு 60 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. பார்த்தவுடன்
அவர்களைக் கட்டி பிடித்துக் கொண்டு அழுது விட்டேன். அவர்கள் கண்கலங்க என்னை அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்கள்.

அவர்களின் கணவரிடம் என் பிள்ளைப் பருவச் சேட்டைகளைக் கூறினார்கள். சின்னப் பிள்ளைகளின் சிறுகதைகள் சுவாரஸ்யமான முத்துக் குவியல் . அரண்மனைக் குமாரியின் குடும்பம்., தங்கப்பாண்டியன் என்ற தங்கம்மாளின் குடும்பம்., பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் நினைவுகள் என்னை உருட்டியது.

 

எட்டயபுரம் ஒரு ஜமீன். ஜமீந்தார்களை உள்ளூர்வாசிகள் “மகாராஜா“ என்று தான் குறிப்பிடுவோம். அழகான அரண்மனை. தர்பார்களும், கொலு மண்டபங்களும், அந்தப்புரங்களும் , அரண்மனைக்கு முன் பெரிய திடலும், குதிரை லாயங்களும்— சொல்லிக் கொண்டே போகலாம். இப்பொழுது அவைகள்
பழங்காலச் சின்னங்களாய்ச் சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.

 

 

அரண்மனையில் கொலு வைப்பார்கள். பெரிய சரஸ்வதி சிலை , முழுவதும் தங்கம். நவராத்திரியில் ஊருக்குக் கொண்டாட்டம். தினமும் கச்சேரி. நடனம். சமஸ்தானத்திற்கென்று வித்துவான்கள். நான் பார்த்து நினைவில் இருப்பவர்கள், ஜி.என். பால சுப்பிரமணியன்  தன் சிஷ்யை வசந்த குமாரியுடனும் வசுந்திரா தன் பெண் வைஜயந்தியுடன் வந்திருந்தார்கள். மகாராஜாவின் பிறந்த நாளுக்கும் இசை மேதைகளும் சினிமா நடிகர்களும் வந்திருக்கின்றார்கள்.

தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்னன், டி. ஏ. மதுரம் ஆகியோரும் வந்திருந்தனர். விளக்குகள் அலங்காரமும் நாதஸ்வரஓசையும் ஊருக்கே அழகைக் கூட்டும். எல்லோரும் அவரவர் வீட்டு விழாவாக எண்ணி மகிழ்வர். நான் சுற்றிச் சுற்றி மகிழ்ந்த நாட்கள்எட்டையபுரத்துக்கு “இளசை “ என்றும் பெயருண்டு.

எட்டயபுரம் வரலாறு (Ettayapuram Past and Present) என்றநூலுக்கு 1889ஆம் ஆண்டில் பிஷப் கால்டுவெல் அணிந்துரை எழுதியுள்ளார்.  இதன் ஆசிரியர் டபிள்யூ. இ. கணபதியா பிள்ளை.. தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மன்னர் பரம்பரை .தமிழில் இயல், இசை, நாடக வளர்ச்சிக்குஅதிக சேவை செய்துள்ளனர்.

பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் அரண்மனையில் வேலை பார்த்தார். சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான முத்துசாமி தீஷதரின் தம்பியான பாலுசாமி தீட்ஷிதரும் அரண்மனையில் வேலை பார்த்தார்.
சுப்பய்யா என்ற சுப்பிரமணியனுக்கு, தாத்தா மகாராஜா என்று அழைக்கப் பட்ட ஜமீன்  காலத்தில் .”பாரதி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

சங்கீதமேதை முத்துசாமி தீட்சதரைப்போல சங்கீத உலகின் இன்னொரு மாமேதை உண்டு.  சுப்பராம தீட்சதர் சமஸ்தானத்தின் தலைமை வித்வானாக இருந்தார். வாய்ப்பாட்டுடன் வீணையிலும் தேர்ச்சி பெற்றவர். ராகங்களின் அமைப்புகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர்.சங்கீத உலகில் இவருக்குத் தனியான இடம் உண்டு. இவர் பாலுசாமி தீடசதரின் பேரனாவார்.

 

எட்டையபுரத்திற்கு பாரதி , “வேதபுரம் “ என்ற பெயரைச் சூட்டி யுள்ளார். மன்னர் ஆட்சியும் அரண்மனைக் காட்சிகளும் , திருவிழாக்களின் கலகலப்பும், சுவையூட்டும் கலை நிகழ்ச்சிகளும் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாமன்னன் இராஜராஜன் காலத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தையும் இந்த அனுபவங்கள் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

 

ஊரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளி, ராஜாவால் நடத்தப் பட்டுவருகின்றது .சுதந்திர தாகத்தை நினைவூட்டும் பெயரில் “பாரத மாதா” என்ற பெயர் கொண்ட திரையரங்கு அரண்மனைக்குச் சொந்தமானது. எம்.கே. தியாகராஜ பாகவதர் இந்த அரங்கில் பாட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் “ஜெஜ்ஜை “என்ற அரண்மனையும், கண்ணாடி மாளிகையையும், பாரதி மணிமண்டபமும் வங்கதேசப் பொறியாளர்
“சித்தாலே “என்பவரால் வடிவமைக்கப் பட்டவை.

 

ஊருக்கு முக்கியமானவர்கள் வந்தால் அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் பழக்கம் இருந்து வந்தது. விருந்தோம்புதலில் பேரரசுகள் மட்டுமல்ல, சின்ன ஜமீன்களும் குறைந்தது அல்ல.

 

கல்கியைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் பொழுது கல்கி பற்றி நிறைய செய்திகளைக் கூறினார் என் தந்தை. என் மனத்தில் பதிந்தது ஒன்றுதான். கல்கி கதை எழுதுவார்.ஏற்கனவே அவர் காந்திக் கட்சி என்பதை என் தாயார் கூறியிருந்தார்கள்.பாரதியைப் பற்றிய செய்திகள் கூறினார். பாட்டு எழுதியவர். பாப்பாக்களுக்கும் பாட்டு எழுதியவர். பாரதியின் செய்திகள் என்னை கனவுலகத்திற்கு இழுத்துச் செல்ல ஆரம்பித்தன.

 

“சொன்ன கதை அத்தனையும் மாலை மயக்கத்தினால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன் “ பாரதியின் குயில் பாட்டு.

அனுபவத்திற்கு முதல் பாட்டு.

அந்த வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் பாரதியை உணர்ந்தேன். அவர் நின்ற இடம், உட்கார்ந்த இடம், சாப்பிட்ட இடம், படுத்த இடம் என்று நானே நினைத்துத் தொட்டுப் பார்த்து மகிழ்வேன்.கற்பனை உலகில்
வாழக் கற்றுக் கொண்ட இடம் அந்த வீடு. இன்றுவரை கற்பனை உலாவை நான் நிறுத்தவில்லை.

நித்தமும் கனவுகண்டால் நெஞ்சத்தே சுகமுண்டாம்.
நினைப்பதுவே இன்பமென்றால் கிடைத்து விட்டால் எந்நிலையாம்.

சில வீடுகள் தள்ளி அமைந்திருந்தது பாரதி பிறந்த வீடு. அங்கே வசித்து வந்த சாம்பசிவ அய்யரைத் தேடி தினமும் சென்று விடுவேன். “மாமா, பாரதி கதை சொல்லுங்கோ , அவர் பாட்டு பாடுங்கோ “
 

உற்சாகமாய் ஊர்வலம் தொடரும்…!

 


 

எண்ணங்களின் ஊர்வலம்  -4

 30-07-2009

 

 

சரித்திரம் தேர்ச்சி கொள்.

பழங்கதை தெரிந்து கொள்வதில் அர்த்தமென்ன இருக்கின்றது? பின் பாரதி உள்ளிட்டப் பல பெரியவர்கள் எதற்காக இதற்கு முக்கியத்துவம் கொடுக் கின்றார்கள் ? சிந்திக்க ஒரு கேள்வி. வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அனுபவசாலிகளின் கூற்று பொருளற்றதா? தெரிந்து
கொண்டதில்  நல்லன ஏற்று அல்லன ஒதுக்க அது ஒரு குறிப்பேடு என்றும் எடுத்துக் கொள்ளலாமே.. வாழ்க்கை செம்மையாகவும், செழுமையாகவும்  அமைய அது ஒரு வழிகாட்டி. இக்கருத்தை எனக்குள் புதைத்தவர்கள் என் தாயும் தந்தையும்.ஆவார். தாய் மூலம் சேய் அறிந்து கொள்வதில் பல உணர்ச்சி
பூர்வமானவை.

என் தாய் சொன்ன செய்திகளின் தாக்கம் இன்றும் என்னுடன் இருக்கின்றது.. என் தாய்க்குக் குறைபிரவசம் இருமுறை நிகழ்ந்து விட்டது.  குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளாகும். குழந்தை வேண்டி அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள். அது அவர்களின் நம்பிக்கையில் தோன்றியது. ஷஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் இருவரும் மனப் பூர்வமாக நம்பினார்கள். விரதம் ஆரம்பித்தார்கள்.

 

முருகனைப் பூஜிப்பதிலும், பாடல்கள் பாடுவதிலும் நாளைக் கழிப்பதுடன், ஒரு சங்குப் பால் மட்டும் உணவாக எடுத்து, படுக்கும் பொழுது ஒரு துணிவிரித்து  இறை நாமத்தை ஜபித்துப் பின் உடல் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை..

கடவுள் வழிபாடு என்பதே நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்ற கூற்றும் உண்டு.

ஆறு ஷஷ்டிகள் முடியவும் என் தாய் வயிற்றில் நான் ஜனித்தேன். என் தாய் எனக்கு பால் ஊட்டும் பொழுதே “முருகன் கொடுத்த பிச்சை”  என்ற எண்ணத்தையும் என் இதயத்தில்  பதித்து விட்டாள்.ஒவ்வொரு தாயும் தன் சேய்க்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துவதுதான். இதில் அதிசயம்
ஒன்றும் இல்லை. பின்னால் நான்சொல்லப் போகும் செய்திகளில் என்னிடம் காணப் போகும் முரண்பாட்டின் பிறப்பிடம் இப்பொழுதே காட்டுகின்றேன். இது ஒரு சிறு கதையாக இருந்தால் சொல்லியிருக்க மாட்டேன். என் வாழ்வில் இது ஒரு தொடர்கதையாக அமைந்து விட்டது. இதுமட்டுமா, இன்னொருநிகழ்ச்சியும் என் தாயின் எண்ணங்களால் என்னிடம் ஒட்டிக் கொண்ட உணர்வு. இந்த உணர்வால் என் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது.

 

1934-ஆம் ஆண்டு அண்ணல் மகாத்மா காந்தியவர்கள் தமிழகம் வந்தார்.

அப்பொழுது அவர் மதுரை, எட்டையாபுரம் ஆகிய இடங்களுக்கும் வருகை புரிந்தார். மதுரைக்கு வந்த பொழுது என் தாயார் ஊர்வலத்திற்குச் சென்று பார்த்திருக்கின்றார்கள். அண்ணலைப் பார்த்தது வியப்பில்லை.

ஓர் அப்பாவிப் பெண்ணின் நம்பிக்கையைக் கூறுகின்றேன். குழந்தை வேண்டி ஷஷ்டி விரதம் எடுத்துக் கொண்டிருந்த காலம். காந்திஜியைப் பார்க்கவும் என் தாய் கையெடுத்துக் கும்பிட்டு, “ எனக்கு உங்களைப்
போல் ஒரு நல்ல குழந்தை கொடுங்கள் “ என்று கடவுளை வேண்டுவது போல் வேண்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிலரைப் பார்க்கும் பொழுது வணங்கத் தோன்றும். வேறு சிலரைப் பார்க்கும் பொழுதே ஒதுங்கத்தோன்றும். சில மனிதர்களைச் சுற்றி ஓர் காந்த அலை இருப்பதை
மறுப்பதற்கில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கின்றோம்.

ஒரூ சிலர் முன் பேசும் சக்தி இழந்து விடுகின்றோம். மாகாத்மா காந்தி கோடானு கோடி மக்களின் அன்பைப் பெற்றவர். தமிழகம் வந்த பொழுதில் சட்டை இல்லாத ஏழையைப் பார்த்துத் தானும்
மேல் சட்டை போடுவதைவிட்டு , அரை நிர்வாணப் பக்கிரி என்ற பெயரைக் கூடப் பெற்றுக் கொண்டவர். அப்பேர்ப்பட்ட மாமனிதனைப் பார்த்து என் தாய் தெய்வமாக நினைத்தது பொருத்தமானதே. என் தாயாருக்கு மிகவும் பிடித்தமானவர். அவர்கள் சாகும் வரை , என்னிடம் காந்தியைப்பற்றிப் புகழ்வதை நிறுத்தவில்லை.

 

என் தாயாரால் அறிமுகப் படுத்தப்பட்டவர்கள் முருகனும் காந்தியும். கல்கியையும் பாரதியையும் அடையாளம் காட்டியவர் என் தந்தை. பாரதி சிறிது காலம் வாழ்ந்த இல்லத்தில் நானும் சிறிது காலம் வாழ்ந்தது  எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு, அதுவே என் வாழ்க்கை அமைவுக்கு ஓர்
அஸ்திவாரமாகி விட்டது. அந்த வீடு ஓர் கற்பனைக் கருவூலமாக உணர்ந்தேன். வீட்டில் இருக்கும் பொழுது எனக்குச் சொல்லப்பட்டவைகளை மனத்தில் அசைபோட்டுக் கொண்டு கற்பனையில்
மூழ்கும் பழக்கம் தொடங்கியது.

பல்ளியில் இருந்து திரும்பியபின் விளையாட என் வயதுப் பிள்ளைகள் அந்தத் தெருவில் எனக்குக் கிடைக்கவில்லை. அதே தெருவில் இருந்த பாரதியார் இல்லத்திற்குச் சென்று விடுவேன். பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர் இருப்பார். அவரிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பேன்.அப்பொழுது சுதந்திரம் கிடைக்காத காலம். பாரதியும் காலமாகி விட்டார். சாம்பு மாமா என் ஆர்வத்தைப் பார்த்துக் கதை சொல்லுவார். பாரதியைப் பற்றிப் பேசுவார். பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தூணைக் கட்டிக் கொண்டு நின்று கேட்பாராம். சட்டென்று அவருக்குத் தோன்றியதைத் தயங்காமல் கூறுவாராம். பாரதியின் துணிச்சலைப் புகழ்வார். மாமாவைப் பாடச் சொன்னாலும்
அவர் அடிக்கடி என்னிடம் பாடிக்காட்டிய பாடல்

“ஜய பேரிகை கொட்டடா”
உரத்துப் பாடுவார், “கொட்டடா” என்பதை ஏற்றத்தில் ஒருமுறை இறக்கத்தில் ஒரு முறை பாடுவார். அவர் உடல் முழுவதிலும் துடிப்பு இருக்கும். மாமாவே இப்படி யென்றால் மருகன் எப்படி இருந்திருப்பார்? பாரதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டதற்கு அழுகையாக வரும். குழந்தைப் பருவத்தில் இழப்பின் துயரை முதலில் எனக்கு உணர்த்தியது பாரதியின் மரணம்.

 

பாப்பா பாட்டைப் பாடிக் காண்பிப்பார்.
நல்ல எண்ணங்களைப் பிஞ்சுப் பருவத்தில் பதிய வைப்பது பலன் உண்டு என்பதைப் புரிந்தவர் பாரதி.
“ஓடி விளையாடு பாப்பா “அருமையான பாட்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிந்திருக்க வேண்டிய பாட்டு.
“பொய் சொல்லக் கூடாது பாப்பா
புறஞ்சொல்லக் கூடாது பாப்பா”
பெற்றவள் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாட்டு.

அர்த்தமில்லா பாட்டுக்களைப் பாடும் பிள்ளைகளை ரசிக்கும் பல தாய்மார்களைக்
காணும் பொழுது மனம் வருந்துகின்றது.

“பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளக்கூடாது பாப்பா”
அப்பப்பா, இந்த வார்த்தைகள் எனக்குள் புதைந்து , சூறாவளிச் சுருளில் நான் சுருண்ட பொழுதிலும் தலை நிமிர்ந்து நடக்க வைத்த மந்திரச் சொற்களாய் வாழ்ந்து வருகின்றன.

பாரதியின் துணிச்சல் பிடித்திருந்தது. இன்றுவரை என்னை அறிந்தவர்கள் என்னைப்பற்றிக் குறிப்பிடுவது
“துணிச்சல்காரி “ எனக்குள் பாரதி இருக்கின்றான்.

இன்னும் நினைவில் இருக்கும் வரிகள்
“குன்றென நிமிர்ந்து நில்”
“கொடுமையை எதிர்த்து நில்”
“புதியன விரும்பு”
பாரதியார் தெருவில் சாம்பு மாமாவால் கற்றுக் கொடுக்கப் பட்டவை.

 

பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவர் பெருமையை, அவரின் சக்தியைப் பெரும்பாலோர் புரிந்து கொள்ளவில்லை. அவர் பிறந்த மண்ணில், அரண்மனையில் பெரியவர்களால் அடையாளம் கண்டு
கொள்ளப் பட்டவர். எட்டையபுரம் சமஸ்தானம் கலைஞர்களுக்கு ஒரு தொட்டில்..

பாரதி பட்டமே கிடைத்தது அங்கேதான்.

ஒரு செவிவழிச் செய்தி.

பக்கத்தில் இருக்கும் கோயில் வெளியில் திண்ணையில் உட்கார்ந்து திடீரெனப் பாடுவாராம். ஒரு முறை தெருவில் நடந்து கொண்டிருந்தவர் அவரிடம் ,” உனக்குப் பாட வேறு இடம் கிடைக்க வில்லையா?” என்று கேட்கவும் உடனே பாரதி எழுந்து”தெருவில் உட்கார்ந்து பாடட்டுமா?” என்று பதில் கொடுத்தாராம். இளசை என்ற பெயர் ஊரின் எழிலுக்காக வந்த பெயர். ஆனால் நான் பார்த்த எட்டையபுரம் தண்ணீர்ப் பஞ்சமுள்ள ஊர். இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று நல்ல தண்ணீர்க் குளம். இதிலிருந்துதான் குடி தண்ணீர் எடுக்க வேண்டும். குளம் வற்றும் பொழுது வடிகட்டித்தான் தண்ணீர் குடிக்க முடியும். இங்கே கவிஞர்களும், கலைஞர்களும் வாழ்ந்தது கலையுள்ளமும் கருணை மனமும் கொண்ட
எட்டயபுரம் சமஸ்தான மன்னர்கள் புரவலர்களாக அமைந்தது தான்.

பாரதி இந்த ஊரை விட்டு வெளிச் சென்று விட்டார். ஒரு ஊருக்கு மட்டும் சொந்தமானவரல்லவே. அவர் இறுதி ஊர்வலத்திற்கு பதினைந்து பேர்கள்தான் சென்றனர் என்ற செய்தி மனத்தைக் காயப் படுத்தாமல்
இருக்க முடியாது.

“நெஞ்சு பொறுக்குதில்லையே மனிதா” என்று பாடத் தோன்றுகிறது.

 

குழந்தைகளுக்குக் கதை கேட்கப் பிடிக்கும். கதைகள் சொல்லவும் பிடிக்கும். அவர்களின் கற்பனை வேடிக்கையாக இருக்கும். நானும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஆம். பாரதி வாழ்ந்த வீட்டில்
ஓர் எழுத்தாளன், பேச்சாளன் உதயமாகிவிட்டான்!

 

பாரதியார் தெருவை விட்டு மேலவாசலில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போக நேர்ந்தது. என் தந்தை அரண்மணை வேலையை விட்டு , மேலவாசலில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தார். கடைக்கு அடுத்து இருந்த வீட்டில் குடும்பம் இருந்தது.

 

பத்திரிகைகள், புத்தகங்கள் நிறைய வாங்கிப் போட்டார். நான் படிக்க ஆரம்பித்து விட்டேன். இக்காலத்தில் குழந்தைகள் படிப்பதற்கென்று புத்தகங்களும் வருகின்றன. எங்கள் காலங்களில் குழந்தைப் பருவத்தில்
புத்தகங்கள் படிக்கச் சொல்லுவதில்லை. தொடர்கதைகளும் படித்தேன். கல்கியை எழுத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்..

எல்லோருடைய வாழ்க்கையிலும் பள்ளி வாழ்க்கை மறக்க முடியாது. என்னை உருவாக்கிய பள்ளி சாதாரணமானதல்ல.பாரதியும், ஸ்வாமி சிவானந்தரும் படித்த பள்ளி. பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமுதாயப் பணியாளர்களையும் உருவாக்கிய பள்ளி.

 “ராஜா உயர் நிலைப்பள்ளி “

இப்பள்ளியைப்பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் காலத்தில் பள்ளிக்குப் பெருமை தேடித்தந்தவர் ஓர் ஆசிரியர். கே.பி. எஸ் நாராயணன் அவர்களை எங்கள் காலத்து மாணவர்கள்
மறக்க முடியாது.அப்படி அவர் என்ன செய்தார்?

ஊர்வலம் தொடரும்…

 


 எண்ணங்களின் ஊர்வலம் – 5

  31-07-2009

 

எட்டையாபுரக் கடைத்தெருவில் ஊர்வலம் நுழைந்து செல்ல ஆரம்பித்தது.

அந்தத் தெருவின் மத்தியில் எங்கள் ஹோட்டல் “லலிதாமணி பவன் “ அமைந்திருந்தது. அதையொட்டிய வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம். கடையின் பின் புறமும் வீட்டுப் பின் புறமும் தடுப்பின்றி சேர்ந்து ஒரே முற்றமாக இருந்தது எங்களுக்கு வசதியாயிற்று.

அமைதிச் சூழலிலிருந்து பரபரப்பு வட்டத்திற்குள் நான் அடியெடுத்து வைத்தேன். மனம் மட்டும் ஊருக்குள் புகுந்து சுற்றிவிட்டு வரும்.

நவராத்திரியின் பொழுது, சேர்ந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் போய்ச் சுண்டல் வாங்கிச் சாப்பிடுவோம். நாங்களும் அலங்கரித்துக் கொண்டு பவனி வருவோம்.. பாடச் சொன்னால் ஏதோ ஒரு பாட்டு பாடுவோம்.

இதைப் போலவே இன்னொரு பண்டிகையும் உண்டு. மண்ணிலே பசு செய்து ஒரு வீட்டில் வைத்து பத்து நாட்கள் பூஜை செய்வோம். சின்னப் பெண்களுக்குக் கொண்டாட்ட விழா. குஞ்சம் வைத்த பின்னல்
ஆட, கூந்தலில் மல்லிகை மணக்க,  தழையக் கட்டிய பாவாடை தெருவைத் தழுவ, மைய்யிட்ட சுடர் விழிகள் சுற்றிச் சுழல, தெருக்களில் ஆடிய கோலாட்டம் தெருவே மகிழ்ந்து சிரிக்கும். இது பத்து நாட்கள் கொண்டாட்டம்.

எல்லாத் திருவிழாக்களும் மூட நம்பிக்கை காரணம் காட்டி ஒதுக்குதல் சரியல்ல என்பது என் கருத்து. நான் ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்ற பொழுது ஆங்கு ஒரு செய்தி படித்தேன். பழங்குடியினர்  கூட்டம்
கூட்டமாகப் பிரிந்து வாழ்வது பழக்கம். வருடத்தில் ஒன்றிரண்டு தினங்களில் ஒரே இடத்தில் கூடிக் கொண்டாடுவதை வழக்கமாக்கி அதனைத் திருவிழாவாக்கி மகிழ்கின்றனர் இப்பழங்குடியினர் அங்கு குடியேறி சுமார் 40000 ஆண்டுகளாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.ஆக திருவிழாக்கள் தொன்மையானது என்று தெரிய வருகின்றது. .கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறி, சுதந்திரப்
பறவைகளாய் வாழும் மேலை நாட்டார், நன்றி தெரிவிக்கும் தினம், தாயார் தினம், தந்தை தினம், ஏன் காதலர்களுக்கும் ஒரு தினமென்று கூடி மகிழ்கின்றனர், உறவுகளும், நட்புகளும் ஒன்று கூடி மகிழ்வதைத் திருவிழாக்களாய்க் கொண்டாடி மகிழ்ந்தோம். காலம் மாறினாலும் பெயர்கள் மாறியிருக்கிறதேயொழிய அந்தப் பழக்கங்களில் நாம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றோம். இரண்டையும் பார்த்த எம்போன் றோர்க்கு அதில் உணர்ந்த இனிமையும், உள்ளுணர்வின் சுகமும்
இதில் இல்லை.பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே என்பது இலக்கணம். ஒப்புக்கொள்கிறேன்.

பறந்து சென்ற மனப்பறவையைக் கூட்டுக்குள் வைத்து நிகழ்காலத்திற்கு வந்தேன். என் தந்தை கர்நாடக சங்கீதம் கற்றவர். என் தாயாரை என் தந்தைக்கு மணமுடித்து வைத்தவர் அந்த பாட்டு வாத்தியார்தான்.
எனக்கு சங்கீதப் பயிற்சி ஆரம்பமானது. ஹார்மோனியப் பெட்டி முதலில் வந்தது. ராஜம் டீச்சர்தான் சரளிவரிசை ஆரம்பித்தார்கள். மூன்று மாதங்களில் வருவதை நிறுத்திவிட்டார்கள்.தூரத்தைக் காரணம் காட்டினார்கள். அடுத்து நாதஸ்வர வித்துவான் காளிதாஸ் வந்தார்.

அவரும் மீண்டும் சரளி வரிசையிலிருந்து ஆரம்பித்தார். அவரும் வராமல் நின்று விட்டார். மூன்றாவதாக வந்த அம்பி அய்யர் சாது.  அவர்தான் பொறுமையாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

மோகன வர்ணம் தொடங்கவும் பிரச்சனையும் ஆரம்பித்தது.

“நின்னுக்கோ “ என்று ஆரம்பிக்கவும், நான் நின்று கொண்டு “ நின்னுக்கோ, உக்காந்துக்கோ “ என்று ஆடுவேன். ஸ்வரங்களைக் கேலி செய்வேன். பாவம் அவர். இப்பொழுது நினைத்து மனம் கஷ்டப்
படுகின்றது. என் தந்தை மூலமாக அடுத்து இடையூறு. “தமிழ்ப் பாட்டு சொல்லிக் கொடுய்யா. உடனே கண்ணன் வரக் காணேனே கழுதை வரக் காணேனே என்று பாட்டு சொல்லிக் கொடுக்கக் கூடாது. “சத்தியம் வெல்லும் “ பாட்டு, வந்தே மாதரம் பாட்டு சொல்லிக் கொடு. தேசிய கீதங்கள் அவள் பாட வேண்டும் “.  வாத்தியாருக்கு இது பெரிய சோதனை. தியாகராஜரின் தெலுங்குக்  கீர்த்தனைகளும் தீட்சதர், சாமாசாஸ்திரிகள் பாடல்களும் தான் சொல்லிக் கொடுத்துப் பழக்கம். அவர் வருவதை நிறுத்தவில்லை.
அவர் தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொண்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சேட்டை செய்யாமல் நான் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

 

என் தந்தை தேசியப் பாடல்கள் கற்றுக் கொள்ளச் சொன்னதில் அர்த்தமுண்டு. அப்பா ஒரு காங்கிரஸ்காரர். தேசியவிடுதலைப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். இன்னும்
போராட்டம் முடியவில்லை. ஒன்றிரண்டு ஊர்வலங்களில் முதலில் காங்கிரஸ் கொடி பிடித்து என்னை நடக்கச் சொல்லுவார். தேசியப் பாடல்கள் பாடச் சொல்லுவார். தூத்துக்குடிக்கு ஏ.பி.சி
வீரபாகு, நெல்லையில் சோமையாஜுலு போன்றவர்களைப் பார்க்கப் போகும் பொழுது என்னையும் பல முறை கூட்டிச் சென்றிருக்கின்றார்.

கூடிக் கூடிப் பேசுவார்கள். புரியாத பொம்மையாய் உட்கார்ந்திருப்பேன். போகப் போக அவர்கள் பேச்சுக்கள் புரியா விட்டாலும் அவர்களின் துடிப்பும் வேகமும் புரிந்தது. எங்கும், எந்த நேரத்திலும் பய உணர்ச்சி வரவில்லை.இந்த அனுபவங்கள் நல்ல அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்தன.என் தந்தை
உள்ளூரிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். எனவே வருவோரும் போவோரும் அதிகமாக இருந்தனர். அரசியலையும், அரசியல்வாதிகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.காங்கிரஸ்காரர்கள் கதர் உடுத்தி யிருப்பார்கள்.  நானும் சர்க்கா, அதாவது ராட்டை நூற்கக் கற்றுக் கொண்டு, சிட்டங்களைக் கதர்க் கடையில் போட்டுத் துணி வாங்கி , பாவாடை
சட்டை தைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றேன். சின்ன வயதில் கதராடை உடுத்தி வளர்ந்தவள். “அதிகமாக ஆடைகள் தேவைக்கு மேல் வைத்திருக்கக் கூடாது, வைத்தால் அவன் திருடன்” என்று என் தந்தை கூறுவார். ஏழையின் கஷ்டத்தை உணர்ந்து எளிய ஆடை உடுத்திய காந்தியோ, தேவைக்கு மேல்
வைத்துக் கொள்வது தவறு என்று சொன்ன என் தந்தையோ பொது உடைமை வாதிகளல்ல. மனித நேயம் என்பது மனிதத்திற்கு முக்கியமானது. இது ஒரு ஒழுங்குமுறை.

 

இன்னொரு சம்பவம் கூற வேண்டும். என் வீட்டில் ஒரு புது வரவு.

அவள் பெயர் முத்து. வீடு பெருக்க என்று வந்தவள் எனக்கு அக்காள் ஆனாள்.எங்களெல்லோருக்கும் பிடித்த பெண்ணானாள். காலையில் வந்தால் இரவில் தான் வீட்டுக்குச் செல்வாள். ஒரு நாள் ஹோட்டலில் பெருக்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று அங்கே வந்த ஒருவன் என் தந்தையை அடித்திருக்கிறான். அதைக் கண்ட முத்து கையில் இருந்த விளக்குமாற்றால் அவனை ஓட ஓட அடித்திருக்கின்றாள்.  அவள் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியுமா? அரசியல் பகையில்
அவன் ஏவப் பட்டவன். போலீஸ் விபரம் கேட்ட பொழுது என் தந்தை காட்டிக் கொடுக்கவில்லை. “எய்தவன் இருக்க இவனைப் பேசுவதில் சரியல்ல “ என்று கூறிவிட்டார். சில நாட்கள் கழித்து வந்து மன்னிப்பு  கேட்டு அழுதான். பாரதியின் பாட்டு நினைவுக்கு வந்தது.

“பகைவனுக்கருள்வாய் “அருமையான கருத்து. ஆனால் கடைப் பிடிப்பது கடினம். நாம் மனிதர்கள். பல குணங்களின் கலவை.

 

பத்திரிகைகள் படிக்க ஆரம்பிக்கவும் எனக்கும் கதை எழுதும் ஆசை வந்தது. பழைய ஆனந்த போதினிகளும் படித்தேன். வைமுகோவும் வடுவூராரும் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்தவர் கல்கி. அவர் தொடர்கதைகளில் நான் ஐக்கியமாகி
விடுவேன். பாரதி நினைவு மண்டபத்தின் அஸ்திவார விழா நடந்தது.

சுவாமிநாதனின் கடுமையான உழைப்பும் கலந்து உருவான கட்டடம். எங்கள் அன்புக்குரிய ஆசிரியர் கே.பி. எஸ் நாராயணன் அவர்களையும் கவிஞர் .பா..நா .கணபதி அவர்களையும் பாரதி மண்டபத்தில் காண முடியும்..

கல்கி வந்த பொழுது அவரைப் பார்க்கும் ஆவலில் ஓடினேன். இப்பொழுது அவரை அவர் கதையால் தெரியும். என்னமோ அவரிடம் பேசினேன். எங்கள் ஊருக்கு கல்கி வந்தார் என்று மிகவும் பெருமை.
கல்கி பத்திரிகை மூலம் பணம் வசூலித்துக் கட்டப்பட்டது. போதும் ,போதும் என்று கூறி வசூலை நிறுத்தும் அளவில் மக்களின் பங்களிப்பு இருந்தது.சுதந்திரம் கிடைக்கும் முன் ஆரம்பித்த திட்டம். சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில் பாரதியின் மணிமண்டபம் திறக்கப்பட்டது.  பாரதியின் சிறப்பும் உள்ளூரின் ஒத்துழைப்பும் மண்டபம் எழும்பக் காரணங்களானாலும், கல்கியும், கல்கி பத்திரிகையும் பெருமை படுத்தப் படவேண்டும். ஒரு சமயம் சுணக்கம் ஏற்படுவதுபோல் தோன்றும் பொழுதே உடனே
ஊக்கம் கொடுத்து வழிநடத்திய மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்கள் மூலகர்த்தா.

பாரதியின் உடல் இடுகாட்டுக்குப் போகும் பொழுது வழியனுப்பப்பட்ட விதத்திற்குத் தமிழ் மக்கள்
அவனுக்கு மண்டபம் எழுப்பி அஞ்சலி செலுத்திப் பரிகாரம் செய்து விட்டனர். அரசு, எழுத்துலகப் பிரம்மாக்கள், கலையுலகப் பெரியவர்கள், சிந்தனையாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து வருடந்தோறும் விழா நடத்திவருகின்றனர்.

 

எட்டயாபுரம் சமஸ்தானத்தாலும் , ஆங்கு வாழ்ந்த பெரியவர்களாலும் அவர்கள் நினைவையொட்டி, கேளிக்கைகள், விழாக்கள் நடை பெறுவது எங்களுக்குக் கொண்டாட்டம்.என் ஆசான், என்னை உருவாக்கிய சிற்பி, என்னை மட்டுமா, எத்தனை பேச்சாளர்கள், எத்தனை சிந்தனையாளர்கள், எத்தனை எழுத்தாளர்கள், எத்தனை கலைஞர்கள்அத்தனை பேர்களை உருவாகிய பெருமைக்குச்  சொந்தக்காரரை அறிமுகப் படுத்தப் போகிறேன்.  அவர்தான் எங்கள் “ கே.பி.எஸ் “ அவர்கள் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் எங்கள் கே.பி.எஸ்.

 

ஊர்வலம் தொடரும்

 


 

 

You may also like

Leave a Comment