Home HistoryEtayapuram எட்டயபுரம்

எட்டயபுரம்

by Dr.K.Subashini
0 comment

 

கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி,  புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி


May 9

எட்டயபுரத்தை நோக்கி

 

சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது பல மடல்களின் வழியும் அதன் பின்னர் தொடர்ந்த எங்களது gtalk, தனி மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலமாகவும் பல்வேறு சிறப்புக்களை இந்த நகரம் கொண்டிருக்கும் உண்மையை நான் தெரிந்து கொண்டேன்.

அதில் முதலில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது எட்டயபுர ஜமீன் மாளிகை.

 

எட்டயபுர ஜமீன் மாளிகை

 

 

இணையத்தில் தேடியதில் விக்கிபீடியாவில் சில தகவல்கள் கிடைத்தன. ஆனால் இத்தகவல்கள் ஓரளவு அறிமுகமாக இருந்தனவேயன்றி எட்டயபுரத்தை அறிந்து கொள்ள உதவவில்லை. சீதாம்மா குறிப்பிட்ட அனுபங்களையெல்லாம் வாசித்த போது நேராக சென்று பார்த்தால் என்ன என்ற ஒரு எண்ணம் எனக்குத் தோன்றியது. இந்த எண்ணத்தை சீதாலட்சுமி அவர்களிடம் தெரிவித்த போது நிச்சயமாக சென்று ஜமீன் குடும்பத்தினரையும் சந்தித்து பேட்டி கண்டு வரவேண்டுமென்று மிகவும் ஊக்கப்படுத்தினார். எட்டயபுர ஜமீன் குடும்பத்தினருடன் இன்று வரை தொடர்பில் உள்ள இவர்கள் அமெரிக்காவிலிருந்து தமிழகத்தில்  சென்னையிலும் திருநெல்வேலியிலும் உள்ள ஜமீன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொண்டதோடு எனக்கு எட்டயபுரத்தை சிறு குறிப்புக்கள் மூலம் அறிமுகம்  செய்தும் வைத்தார்.

 

 

அரண்மனையின் ஜெஜ்ஜை மாளிகை

ஜமீன் குடும்பத்தினரைத் தவிர்த்து இந்த ஆய்வு களப்பணிக்காக நான் தமிழகத்தில் சந்திக்க வேண்டிய முக்கிய நபர்களாக திரு.கருணாகர பாண்டியன் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), திருமதி, கிருஷ்ணவேணி, திருமதி.சாவித்ரி துரைராஜ், திரு.இளசை மணியன் ஆகியவர்களையும் குறிப்பிட்டு அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய அறிமுகத்தையும் வழங்கினார்.

 

 

திரு.கருணாகர பாண்டியன், திரு.இளசை மணியன், திருமதி.சாவித்ரி துரைராஜ், சுபா

 

இந்த அடிப்படை ஏற்பாடுகளின் துணையோடு நான் எனது தமிழகத்துக்கான  பயணத்தை திட்டமிடலானேன். 2009 டிசம்பர் மாதம் என் அலுவலகத்தில் 17 நாட்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு தமிழகத்துக்கான பயண ஏற்பாட்டினைத் தொடங்கினேன்.  பயணம் உறுதியான போது எட்டயபுரத்துக்கானப் பயணத்துக்காக 4 நாட்களை ஒதுக்கிக் கொண்டேன்.

சீதாம்மா எனக்கு கடிதம் அனுப்பும் போது அதிகம் வசதிகளை இங்கே எதிர்பார்க்க வேண்டாம். ஐரோப்பாவில் பசுமையான சூழலைப் பார்த்துவிட்டு இங்கே வரண்ட நிலை ஏமாற்றம் அளிக்கக் கூடும் என்று கொஞ்சம் தயாரிப்பும் செய்ய மறக்கவில்லை. தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கு ஏற்கனவே ஒரு முறை சென்றிருக்கின்றேன். டாக்டர் நா.கண்ணன், டாக்டர் அனந்த கிருஷ்ணன் ஆகியோருடன் திருநெல்வேலிக்கு 2000 ஆண்டு சென்றிருந்த போது ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி, சுசீந்தரம், கண்யாகுமரி, நாகர் கோயில் போன்ற பகுதிகள் செல்லும் வாய்ப்பு அமைந்தது. ஆக எட்டயபுரம் எப்படியிருக்கும் என மனதில் ஓரளவு ஒரு கற்பனை தோன்றியது. ஆனாலும் எனது கற்பனையயும் விட மிக அழகாக அமைந்து என் மனதில் இடம் பிடித்த சிறு நகரமாக ஆகிவிட்டது எட்டயபுரம்.

மின்தமிழ் மடலாடற் குழுவில்  இந்த பயண அனுவத்தை ஒரு தொடராக வழங்க நினைத்து இன்று முதல் பகுதியை ஆரம்பிக்கின்றேன். இந்த  பயணத்தின் போது களப்பணிக்காக நான் சேகரித்த தகவல்கள், ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை தொடரோடு சேர்த்து  இப்பகுதில் இணைத்து வெளியிடப்படும்.   அது இந்த நகரத்தையும் இதன் அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிற்றூர்களையும் அவற்றின் சரித்திர சிறப்புக்களையும்  தெரிந்து கொள்ள பயன்படும்.

 

அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment