தி.வே. கோபாலையர்
முன்னுரை
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சுப்பொறி தமிழகத்தில் அறிமுகமானபிறகும் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொட்டே ஏட்டுச்சுவடியிலிருந்த இலக்கண நூல்கள் பலவும் அச்சிடப்பெறுவவாயின. மழவை மகாலிங்கஐயர், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை முதலிய சான்றோர் பலரால் சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற இலக்கண நூல்கள் பலவும் ஏனைய பலராலும் பின்னர் அச்சிடப்பெறவே, ஒவ்வொரிலக்கண நூலும் இக்காலத்துப் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. அப்பதிப்புக்களுள் ஆய்வுப்பதிப்பு என்ற சிறப்பிற்குறிய பதிப்புக்கள் மிகச் சிலவே.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர் பலரும் தாமே ஏட்டில் எழுதுவதிலும், ஏட்டில் எழுதப்பெற்றவற்றை வாசிப்பதிலும் வல்லவராயிருந்தனர். சிறார்கள் கூடப் பனையோலையைப் பதப்படுத்தி அதன்கண் எழுதப்பழகினர். ஒரே சுவடியைப் பலரும் பெயர்த்து எழுதிக்கொண்டு பாடங்கேட்கும் நிலையே பெரும்பாலும் இருந்தது. இச்சுவடிகளை மூன்று திறத்தனவாகப் பகுக்கலாம். அறிவு குறைந்த நிலையிலுள்ள மாணாக்கர் ஆசிரியரிடம் பாடம் கேட்பதற்காக எழுதிவைத்த சுவடிகள் சில. சுவடியில் எழுதுவது எளிய செயல் அன்று ஆதலின், சுவடியில் எழுதுதலில் பழகியவர் தேவைப்பட்டவருக்குக் கூலிக்காக எழுதிக்கொடுத்த சுவடிகள் சில. கற்று வல்ல சான்றோர் தாம் பின் ஆராய்ச்சி செய்வதற்காகத் தமக்குக் கிட்டிய புதிதில் மேம்போக்கான பிழைகளை நீக்கிச் சுவடிகளில் வரைந்து வைக்க அங்ஙனம் அமைந்த சுவடிகள் சில. பிழைகள்களையப்படாமல் இருந்த மூலச்சுவடியைப் பார்த்து மாணாக்கர் பலரும் படியெடுத்த காலத்து அவர்களுடைய அயர்வாலும், எழுத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலாமையினாலும் ஏற்பட்ட வழுக்களைக் கொண்ட சுவடிகளே பெரும்பான்மையவாம். அவற்றுள் மாணாக்கருக்கு ஆசிரியர் பாடம் சொல்லியபொழுது அவர் குறிப்பிட்ட அருஞ்செய்திகள் சுவடிகளில் மாணாக்கரால் குறித்துக் கொள்ளப்பட அவையும் மூலத்தின் கூறுகளாக மயங்கிக் கொள்ளப்படும் நிலையும் உண்டு.
இத்தகைய நிலைகளை உடைய சுவடிகள் பலவற்றையும் ஒப்பு நோக்கித் தம்மால் இயன்ற அளவு வழுக்களைக் களைந்து சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சான்றோர் இலக்கண நூல்கள் பலவற்றை அச்சேற்றினர். சுவடிகளில் மெய்யெழுத்துக்கள் புள்ளியிடப்படமாட்டா; ஒரே கொம்பே நெடிலுக்கும் குறிலுக்கும் பயன்படுத்தப்பட்டது. இடையின ரகரத்திற்கும் உயிர்மெய் நெடில்கள் சில பெறும் ஒலிகளுக்கும் வேறுபாடு புலப்படுத்தப்படவில்லை. சுவடிகளில் இந்நிலையில் பொனபினனே-பேரன்பினனே என்பதைப் போனபின்னே எனவும், கொதை கொளவாமன-கோதை கேரளவர்மன் என்பதனைக் கோதை கொள்வர்மன் எனவும் பிறழ உணர்ந்து பதிப்பித்தற்கண் தவறு ஏற்படுதல் இயல்பே. ஏட்டுச்சுவடிகளில் நூற்பா எண்ணையடுத்து நூற்பா, அந்நூற்பாப் பாயிரம் அதன் பதவுரை அல்லது பொழிப்புரை விசேடவுரை, எடுத்துக்காட்டுக்கள் முதலிய யாவும் தொடர்ந்து எழுதப்பெற்றிருக்கும். நிறுத்தக்குறிகள் இடம்பெற மாட்டா; எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் உரைநடைக்கும் வேறுபாடு புலப்படாது. மேலும் சென்ற நூற்றாண்டின் முற்பகுதி இடைப்பகுதிகளில் மக்களிடையே சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் முதலிய பழைய செய்யுள்கள் பற்றி அறிவு மங்கியிருந்ததால் சங்க இலக்கியம் முதலியவற்றிலிருந்து குறிப்பிடப்பட்ட மேற்கொள்கள் சிற்சில இடங்களில் பிழைபட எழுதப்பட்டிருத்தலும் கூடும். இவ்வளவு குறைபாடுகளையும் தம்மகத்துக் கொண்ட ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு முதன்முதல் இலக்கண நூலகளைப் பதிப்பித்த சான்றோர் பலரும் அரும்பாடு பட்டிருக்கிறார்கள் ஏட்டுச் சுவடிகளில் தாமே எழுதிப் பழகிய அப்பெரியோர்கள் ஏட்டில் எழுதிப் பழகாத நம்மைவிட ஏட்டுச் சுவடிகளை விரைந்து பிழையற வாசிப்பதில் வல்லவராயிருந்தமை தேற்றம். ஒற்றைக் கொம்பு இரட்டைக் கொம்பு வரைய வேண்டிய இடங்களில் வரைந்து மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டு நெடில்களுக்கு வரையப்படும் கால்களுக்கும் இடையின ரகரத்திற்கும் வேற்றுமை காட்டி, ஒவ்வொரு செய்தி முடிந்த பின்னரும் முற்றுப்புள்ளியிட்டு முதலில் பதிப்பிக்கப்பெற்ற இலக்கண நூல்களில் உரை, எடுத்துக்காட்டு, பாடல்கள் முதலியன தனித்தனியே பிரித்துப் பதிப்பிக்கப்படவில்லை எனினும் ஏட்டுச்சுவடிகளான் அல்லலுற்ற கற்சிறாருக்குத் தொல்லையின்றி எளிதில் செய்திகளை வாசித்தறியும் அளவிற்கு அப்பதிப்புக்கள் பெரிதும் பயன்படுவவாயின.
பொதுவாக ஏடுகளிலோ காகிதங்களிலோ எழுதுபவர் விரைவாக எழுதப்பழகுதல் வேண்டும். அங்ஙனம் எழுதும்போது எழுத்துக்களின் வடிவு அளவு தெளிவு என்பனவற்றை உட்கொண்டு எழுதுதல் வேண்டும். வடிவானது-ஒவ்வொரெழுத்துக்கும் சான்றோர் வகுத்துள்ள வடிவம். அளவாவது பல எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதும்போது ஓரெழுத்து சிறியதாகவும் பிறிதோரெழுத்து பெரியதாகவும் அமையாமல் யாவும் ஒரு சீரான அளவினவாக இருத்தல், தெளிவாவது விரைந்து எழுதும்போது ஓரெழுத்து பிறிதோரெழுத்தோடு சேர்ந்து வடிவில் வேற்றுமை தோற்றி வாசிப்பவருக்கு இஃது எந்த எழுத்தோ என்று மயங்கும் நிலையைத் தாராமல் ஐயுறவு இன்றி வாசிப்பதற்கு ஏற்பத் தெளிவாக அமைந்திருத்தல். எழுதும்போது வடிவு அளவு தெளிவு விரைவு என்ற நான்கும் உள்ளத்துக் கொள்ளப்படல் வேண்டும். எனினும் இறுதியில் கூறப்பட்டுள்ள விரைவு நிகழும்போது ஏனைய மூன்றும் நெகிழ்க்கப்படுகின்றன.
இந்நிலை ஏட்டுச் சுவடிகள் பலவற்றில் காண்கிறோம். நல்ல காகிதத்தில் மை நிரப்பப் பெற்ற எழுதுகோலால் எழுதும்போதே, இக்காலத்தும் பலர் எழுதும் செய்திகளைப் பிழையறப் படித்து உணர இயலாத நிலையில் அவர்தம் எழுத்தமைப்பு உள்ளமை வெளிப்படை. பெரிதும் பழக்கத்தில்லாத இலக்கண நூல்களைச் சிறிதளவே கல்வி பயின்றவர் பொருள் விளங்காமலே பிறிதொரு சுவடியைப் பார்த்துப் படியெடுத்த சுவடியைப் பிழையறுத்து உள்ளவாறு உணர்வதற்கண் உள்ள உழைப்பு அளவிடற்பாலதன்று. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சான்றோர் பலரும் தாமும் ஏட்டுச் சுவடியில் எழுதிப் பழகிய காரணத்தால்தான் பழுதுபட்ட சுவடிகளைக் கூட ஓரளவு உணர்ந்து பதிப்பித்தற்கண் ஆற்றல் பெற்றிருந்தனர். அவர்கள் தம்மால் உண்மை நிலை காண இயலவில்லை என்று விடுத்த பகுதிகள் இன்றும் உண்மை நிலை காணப் பெறாத நிலையிலேயே உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பரிபாடல் முதற்பாடலில் உள்ள அராகங்களையும் வீரசோழியத்தில் உள்ள எட்டாரைச் சக்கரத்தையும் குறிப்பிடலாம்.
பத்திப்பிரிப்பு எதுவும் இன்றிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புக்களை அடுத்துத் தேவையான இடங்களிலெல்லாம் பத்திகளைப் பிரித்தும், உரைநடை மேற்கோள்களையும், செய்யுள் மேற்கோள்களையும் வேறுபிரித்துக் காட்டியும், சுருக்கமான முன்னுரை வரைந்தும் இலக்கண நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினர்.
இலக்கண நூலுக்கு விரிவான பதிப்புரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, நூற்சிறப்பு, உரைநயம் முதலியவற்றை முதற்கண் வரைந்து நூற்பாக்களுக்குத் தலைப்பிட்டு, நூற்பா உரைப்பாயிரம், பதவுரை அல்லது பொழிப்புரை, எடுத்துக்காட்டு, பிறர் கருத்தை மறுத்தல் போன்றவற்றைத் தனித்தனிப் பத்திகளில் அமைத்து, எடுத்துக்காட்டுப் பாடல்கள் எந்த நூல்களைச் சேர்ந்தன என்பதனைக் குறிப்பிட்டு மறுக்கப்பட்ட கருத்து யாருடையது, அஃது எங்குள்ளது என்பதனை அடிக்குறிப்பில் தந்து, இறுதியில் விளங்கா மேற்கோள் அகராதி முதலிய பிற்சேர்க்கைகளுடன் நன்னூல்-சங்கரநமசிவாயருரையின் இரண்டாம் பதிப்பு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
ஐயரவர்கள் பதிப்பித்த இலக்கண நூல்கள் புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கர நமசிவாயர் உரை, தமிழ் நெறி விளக்கம் என்பனவேயாகும். இவை ஏனைய இலக்கண நூல்களை யாங்கனம் பதிப்பித்தல் வேண்டும் என்பதற்கு முன்னோடியாக உள்ளன. இன்று பெரும்பாலான தமிழ் இலக்கண நூல்கள் பதிப்பில் வந்துவிட்டன. தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் பல பதிப்புக்கள் வந்துள்ளன. அவற்றுள், சுன்னாகம் கணேசையர் பதிப்பு மிகச் சிறந்த பதிப்பு என்று சான்றோர் பலரும் கொள்வர். அவருடைய பதிப்பில் எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள் வந்துள்ள பாடல்கள் பலவும் எவ்வெந் நூலைச் சார்ந்தவை என்பது பெரும்பாலும் சுட்டப்பட்டுள்ளது. எனினும் ஐயர் பதிப்பை ஒத்த நிறைவு அதன்கண் இல்லை இன்றே கருத வேண்டியுள்ளோம். ஒரு சில எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.
1. ‘ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை’ தொ.எ.180 சிறுபான்மை இன் சாரியை வரும் என்று கொள்க. ‘ஒன்றாக நின்ற கோவினை அடக்க வந்த எனவரும்… ஒன்னாது நின்ற, கோவினை அடர்க்கவந்து’ சிந். 316 அடி 2-3 என்பதே உண்மையான பாடம். இதனை ஐயர் அவர்கள் சிந்தாமணிப்பதிப்பில் பிரயோக விளக்கம் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2. ‘மின்னும் பின்னும் பன்னும் கன்னும்’
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல’
…தொ.எ.345.3
இந்நூற்பா உரையுள், வரலாறு குறிப்பிடும் இடத்து ‘மின்னுச் செய்விளக்கத்துப் பின்னுப் பிணியவிழ்ந்த’ எனவும் மின் என்பது மன்னுதற் றொழிலும், ‘மின்னு நிமிர்ந்தன்ன’ என மின்னெனப் படுவதோர் பொருளும் உணர்த்தும் எனவும் செய்திகள் காணப்படுகின்றன.
மேற்கோள் குறிக்குள் அமைக்கப்பட்டுள்ள ‘மின்னுக்…..யவிழ்ந்த’, ‘மின்னு நிமிர்ந்தன்ன’ என்ற தொடர்கள் எவ்வெந்நூலைச் சார்ந்தன என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை.
இவற்றுள் ‘மின்னுநிமிர்ந்தன்ன’ என்ற தொடர் புறநானூறு 57 ஆம் பாடல் எட்டாம் அடியில் உள்ளது.
‘மின்னுச்செய் விளக்கத்து’என்ற தொடர் கலித்தொகை 41 ஆம் பாடலின் 6ஆவது ஆடியில் ‘கொடிவிடுபு இருவிய மின்னுச் செய்விளக்கத்து’ என அமைந்துள்ளது.
‘பின்னும் பிணியவிழ்ந்த’ என்ற தொடர் யாப்பருங்கலக்காரிகை 41ஆம் காரிகை உரையுள், பகர மெய் வருக்க மோனைக்கு எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பட்டுள்ள ‘பகலே பல்பூங்கானல்’ என்ற பாடலின் மூன்றாவது அடியாகிய ‘பின்னுப்பிணியவிழ்ந்த நன்னெடுங்கூந்தல்’ என்பதன்கண் உள்ளது. வெவ்வேறிடங்களிலுள்ள இரண்டு தொடர்களையும் இணைத்து, ‘மின்னுச் செய்விளக்கத்துப் பின்னுப்பிணியவிழ்ந்த’ என்று ஒரே மேற்கோள் குறிக்குள் நாற்சீர்கொண்ட செய்யுளடிபோல அமைந்திருத்தலை அப்பதிப்பிலும் காண்கிறோம்.
3. கதழ்வும் துனையும் விரைவின் பொருள’ தொ.சொ.315
இதன் பொருள்:- ‘துனைபரி நிவக்கும் புள்ளின்மான’ எனவும்… விரைவாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு-என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.
’துனைபறை நிவக்கும் புள்ளினம் மான’ –மலைபடுகடாம் அடி 55 என்பதே உண்மையான பாடம்.
4. ‘பேநா முருமென வரூஉம் கிளவி
யாமுறை மூன்று மச்சப்பொருள’ தொ.சொ.365
…………..நா நல்லார்’ எனவும் ….. அச்சமாகிய குறிப்பு உணர்த்தும் என்றவாறு என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.
நூற்பாவும் சொற்பிரிப்பின்றிச் சந்தி சேர்த்தே பதிப்பிக்கப்பட்டநிலையில் உரிச்சொல் பேம், நாம், உரும் என்பன நூற்பாவைக் கண்டவுடனேயே அறியும் நிலையில் இல்லை. எடுத்துக்காட்டகிய ‘நாநல்லார்’ என்பதும் மயக்கம் தருவதாகவே உள்ளது.
எடுத்துக்காட்டு ‘நாமநல்லவரா’ அகம். 72 அடி 14 என்பதாகும். இதனைச் சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரையாலும் தெளியலாம்.
5. ‘இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப’-தொ.பொ. 303.
துனியுறு கிளவிக்குக் ‘கராத்தின் வெய்யவெந் தோள்’ (ஐந்,ஐம். 24) என்பது எடுத்துக்காட்டகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கராம்-முதலை என்ற அடிக்குறிப்பும் காணப்படுகிறது. சுவடிகளில் காரம் என்பதும் கராம் என்பதும் ஒரே வடிவில் எழுதப்படும் எனினும், இப்பாடலின் ஈற்றடியாகிய இதனை ஈற்றயலடியாகிய ’சார்தற்குச் சந்தனச் சாந் தாயினேம் இப்பருவம். என்பதனோடு கொண்டு நோக்க, ‘காரத்தின் வெய்ய எந்தோள்’ என்பதே உண்மைப் பாடமாகக் கொள்ளத் தக்கமை புலப்படும்.
6. ‘வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்’-தொ.பொ. 307.
இந்நூற்பா உரையுள் ‘வையுங்காவலர்’ என்ற எட்டாம் புறப்பாடல் இடம் பெறுகிறது. சந்திரனைச் சேரமன்னனோடு ஒப்பிடுவதாகப் பேராசிரியர் கொள்ளும் இப்பாடலில் சந்திரன் விலங்கு செலல் மண்டிலம் என்று குறிக்கப்படவேண்டுவதாகும். சூரியனச் சேரமன்னனோடு ஒப்பிடுவதாகக் கொள்ளும் புறநானூற்று உரைக்குரிய ‘வீங்கு செலல் மண்டிலம்’ என்ற பாடத்தை இங்கும் கொண்டுள்ளமை பொருந்துவதன்று. பல்லாண்டுக்காலம் பண்டிதத் தேர்வுக்குப் பாடம் சொல்லிய பேரறிஞராகிய கணேசையர் பதிப்பின்கண்ணும் மேற்கோள் செய்யுள்களைச் சுட்டுமிடத்து இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன என்பதைச் சுட்டுவதன் வாயிலாக இலக்கணச்சுவடிகளில் ஆய்வுப்பதிப்பினைக் கொண்டு வருபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கோள் எடுத்துக்காட்டு என்ற நிலையில் வரும் பாடலடிகளைக் கவனிக்கவேண்டும் என்பதனை உணர்கிறோம்.
நச்சினார்க்கினியர் தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பனவற்றிற்கு உரைவரைந்த சான்றோராவர். தொல்காப்பிய உரைக்கு ஏனைய மூன்று நூல்களுக்கும் வரைந்த உரை உதவும்.. அவர் இலக்கியத்தில் வரைந்த உரைக்கும், இலக்கணத்தில் வரைந்த உரைக்கும் வேறுபாடு இருக்குமாயின், இலக்கண உரையில் அப்பகுதி வருமிடத்து அவ்வேறுபாட்டை அடிக்குறிப்பில் சுட்டுதல் ஆய்வுப் பதிப்புக்கு இன்றியமையாததாகும்.
1.நச்சினார்க்கினியர் முல்லை,குறிஞ்சி முதலிய பெயர்கள் உரிப்பொருள் அடியாக ஏற்பட்டவை என்னும் கருத்தினர். அதற்கேற்ப ‘மாயோன்மேய’ தொ.பொ.5.என்ற நூற்பாவுரையுள்,
இனி முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறை
என்னையெனின். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய
ஒழுக்கமாதலின், கற்பொடு பொருத்திக் கணவன்
சொற்பிழையாது இல்லிருந்து நல்லறம் செய்தல் மகளிரது
இயற்கை முல்லையாதலின் அதுமுற்கூறப்பட்டது. எனவே
முல்லை என்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று; ‘முல்லை
சான்ற முல்லையம்புறவின்’ என்பனவாகலின். புணர்தலின்றி
இல்லறம் நிகழாமையின் புணர்தற்பொருட்டாகிய குறிஞ்சியை
அதன்பின் வைத்தார். இதற்கு உதாரணம் சிறந்தது. ‘கருங்காற்
குறிஞ்சிசான்ற வெற்பணிந்து என்பது கரு’
என்று வரும் பகுதியைச் சற்று நோக்கவேண்டும். தாம் கொண்ட கொள்கையை நிறுவுவதற்கு உரிய மேற்கோள் தரும் இடம் இது.
முல்லைசான்ற புறவணிந்து ஒருசார்-மதுரை– அடி 285
கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து-மதுரை- அடி 300
மருதஞ்சான்ற தண்பனை சாற்றி ஒருசார்-மதுரை- அடி 270
நெய்தல் சான்ற வளம்பல பயின்று-மதுரை- அடி 325
என்ற மதுரைக் காஞ்சியடிகளில் நச்சினார்க்கினியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு சொற்களுக்கும் இருத்தல், புணர்ச்சி, ஊடல், இரங்கல் என்ற பொருள்களே தந்திருப்பதனை நோக்க, ‘இதற்கு உதாரணம் ‘கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து’ என்பது என்பதே நச்சினார்க்கினியர் கருத்தாகிய பாடமாக இருத்தல் வேண்டும். ‘இறந்தது,கரு’ என்ற இரு சொற்களும் ஏடெழுதியோர் பின்னர்ச் சேர்த்த சொற்களாதல் வேண்டும். தொல்காப்பியத்துக் காணப்படும் பொருளும், மதுரைக் காஞ்சியில் காணப்படும் பொருளும் வேறுவேறாயிருப்பதனை ஐயரவரகள் மதுரைக் காஞ்சி 300ஆம் அடி உரையின் அடிக்குறிப்பாகத் தந்திருக்கவும், பொருளதிகார நச்சினார்க்கினியத்தின் பதிப்பாசிரியராகிய கணேசையர் அவர்கள் இதுபற்றி எதனையும் குறிப்பிடாமலும் ‘கருங்காற்குறிஞ்சி சான்றவெற் பணிந்து’ என்பதன் இருப்பிடம் குறிப்பிடாமலும் விடுத்தமை வியப்பாக உள்ளது.
2. ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புல்விய எதிரும்’- தொ. பொ. 107
புரைதீர் கிளவி-தலைவன் உயர்விற்கு ஓயாது இயற்பழித்து உரைக்கும் கிளவி. அது ‘பாடுகம் வாவாழி தோழி’ என்னும் குறுஞ்சிக்கலியுள் (கலி 41)
‘இலங்கும் அருவித்தே…..பொய்த்தான்மலை’ எனத் தோழி இயற்பழித்த வாய்ப்பாட்டான்
வரைவு கடாவ, அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதான் ‘பொய்த்தற்குரியனோ…..தீத்தோன்றியற்று’ எனத் தலைவி இயற்படமொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க என்பது நச்சினார்க்கினியர் உரை.
கலித்தொகை உரையுள் தலைவி இயற்பழித்ததாகவும் தோழி இயற்படமொழிந்ததாகவும் நச்சினார்க்கினியர் உரை செய்துள்ளார். இதுபற்றித் தொல்காப்பிய உரையுள் அடிக்குறிப்பும் எதுவும் இல்லை. நச்சினார்க்கினியர் உய்த்துக் கொண்டுணர்தல் என்ற உத்திவகையான் இருவகையாகப் பொருள் செய்தல் பொருளதிகாரத்திலேயே,
‘மாய்பெருஞ்சிறப்பின் புதல்வன் பெயரத்
தாய்தப வரூஉம் தலிப்பெயல் நிலையும்’ -தொ.பொ. 79
வருத்த மிகுதி சுட்டுங் காலை
உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்’ -தொ.பொ. 226
உண்டற்குரிய அல்லாப்பொருளை
உண்டனபோலக் கூறலும் மரபே’ -தொ.பொ. 213
’சுரமென மொழிதலும் வரைநிலை இன்றே’ –தொ.பொ; 216
என்றாற் போலக் காணப்படுதலின், வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும்’ என்ற தொடருக்கு ‘வரைதல் வேண்டி (தலைவி) செப்பிய புரைதீர் கிளவிக்குத் தோழி புல்லிய எதிரும்’ என்றும் பொருள் கொண்டு தலைவி இயற்பழிக்கத் தோழி இயற்பட மொழிதற்கண்ணும் தலைவியின் கூற்று நிகழும் என்று குறிப்பிடப்பட்ட தொடர் நெகிழ்க்கப்படிருக்கலாம் போலும். பெரும்புலவர்கள் பதிப்பித்த பதிப்புக்களில்கூட விடுபட்டுள்ள இத்தகைய அடிக்குறிப்புகள் இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு இன்றியமையாதவை என்பதனை உணர்கிறோம்.
இனி, இந்நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணப் பதிப்புக்கள் முற்பட்ட காலப் பதிப்புக்களைவிடச் செப்பம் மிகுதியும் நிறைந்தவை. இப்பதிப்புக்களில் காணப்படும் நிறுத்தக் குறியீடுகள் பெரிதும் பொருள் தெளிவை நல்குகின்றன. எனினும் சிற்சில இடங்களில் நிறுத்தக் குறியீடுகள் பிறழ இடப்படுவதனால் பொருள் மயக்கம் தருதலையும் காண்கிறோம்.
யா, பிடா, தளா என்ற பெயர்கள் யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளா அங்கோடு என்றாற் போல வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்துமிக்கு முடியும் என்று கூற
‘வல்லெழுத்து மிகினும் மானமில்லை’ –தொ. எ. 230. இஃது
எய்தியது இகந்துபடாமல் காத்தது, அகரத்தோடு
மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறும் என்றலின் என்று
நூற்பாவுக்குப் பாயிரம் வரைந்து யா அங்கோடு முதலாக
எடுத்துக் காட்டும் தந்த நச்சினார்க்கினியர் ‘மானமில்லை.
என்றதனால் இம்மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை (எ.
173) பொருட்கண் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க
யாவின் கோடு, பிடாவின் கோடு, தளாவின் கோடு எனவரும்.
சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. இன்னும் இதனானே யா
அத்துக்கோடு என அத்துப் பெறுதலும் கொள்க’
என்று குறிப்பிட்டார்.
யா, பிடா, தளா என்பன ஓரெழுத்து மொழியும் குறியதன்முன்னர்வரும் ஆகார ஈற்று மொழியுமாகும்.
‘வேற்றுமைக் கண்ணும் அதனோர்றே’ தொ. எ. 225
‘குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக்கிளவி’ தொ. எ. 226
என்ற நூற்பக்களால் யா, பிடா, தளா என்பன அகரமும் வல்லெழுத்தும் பெற்றுப் புணரும் எனினும் மெல்லெழுத்துப் பெற்றுப்புணர்தல் பெரும்பான்மை. இந்த யா, பிடா தளா என்பன பர்றிய நூற்பாக்களைக் ‘குறியதன் முன்னரும்’என்ற நூற்பாவை அடுத்து வைத்தலே முறை. அங்ஙனம் வையாமல் இரா, நிலா என்பன பற்றிய நூற்பாக்களை அடுத்து அமைத்து இவை பற்றிய நூற்பாக்களைத் தொல்காப்பியனார் பின்னரே அமைத்துள்ளார். இதனை ஒரு காரணமாகக் கொண்டு, இரா, நிலா என்பன இராவிற்கொண்டான், நிலாவிற்கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்த்தலை ஈண்டுக் குறிப்பிடுகிறார்.
இந்நூற்பா உரையுள் ‘அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின், யாமரக்கிளவி என்பதனைக் குறியதன் முன்வரும் என்பதனை பின்னாவையாததனால், இராவிற் கொண்டான், நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க-எனச் சொற்றொடர் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கணேசையர் அவர்கள் பதிப்பில் ‘இன்னும் இதனானே யாஅத்துக் கோடு, பிடாஅத்துக் , கோடு, தளா அத்துகோடு என அத்துப் பெறுதலும் கொள்க. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்று ஒரு பத்தி அமைக்கப்பெற்று ’யாமரக் கிளவி என்பதனைக் குறியதன் முன்னரும்…..வீழ்க்க …..’என்று காணப்படுகிறது. இத்தகைய நிறுத்தக் குறியீடுகளும் பத்திப்பிரிவும் பொருள் மயக்கம் தருவதனைக் காணலாம்.
நிறுத்தக் குறியீடுகள் செம்மையாக அமையின் பொருள் தெளிவினைத் தருகின்றமை போலவே தவறாக அமையின் பொருள் மயக்கம் தரும் என்பதற்கு இலக்கணத் தொடர்பான ஒரீரெடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.
கலித்தொகையின் அனந்தராமையர் பதிப்பு சான்றோர் பலரும் போற்றும் தகுதிவுடையது.
1. இது நான்குறுப்பான் வந்ததேனும், தேவபாணியான் வருதலின் முதனிலை ஒத்தாழிசையாகாது. ’ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே என்பதனால் தேவர்ப் பராயிற்றேனும் வண்ணகமுமாகாது எண்ணும் சின்னமும் இழத்தலின் ஆகலின் இஃது என்ணிடையிட்டுச் சின்னம் குன்றிய கொச்சக ஒருபோகுமாயிற்று.
’இது நான்குறுப்பான் வந்ததேனும்; தேவபாணியான் வருதலின் முதனிலை ஒத்தாழிசையாகாது; ‘ஏனை ஒன்றே, தேவர்ப்பராஅய முன்னிலைக் கண்ணே’ என்பதனான். என்றே இப்பகுதி நிறுத்தக்குறியேடு அமைக்கப்படல் வேண்டும். இது முதனிலை ஒத்தாழிசை ஆகாமைக்குக் காரணம் ‘ஏனை ஒன்றே, தேவர்ப்பராஅய முன்னிலைக் கண்ணே என்பது’. ‘ஏனை….. கண்ணே’ என்பது தேவர்ப் பராஅவுதற்குக் காரணம் அன்று. ஆதலின் நிறுத்தக்குறியீடு தவறிய வழிப்பொருள் புலப்பாட்டில் மயக்கம் உண்டாதல் தேற்றம்.
‘இது ஏனை ஒன்று எனப்பட்ட தேவபாணி ஒத்தாழிசையாகலான் உறுப்பு ஒன்றியும் முதனிலை ஒத்தாழிசையாகாது. ‘தொ. பொ. 461. என்ற பேராசிரியர் உரையும் இதற்கு அரண் செய்யும்.
கலி 52ஆம் பாடலின் நச்சினார்க்கினியர் உரை ஈற்றில் அமைந்ததோர் இலக்கணக்குறிப்பை நோக்குவோம்.
‘புதுவை போலும் நின்வரவும் இவள்
வதுவைநாண் ஒடுக்கமும் காண்குவல்யானே’ –கலி 52-24-25
உரை:- அதற்குக் காரணம் என்னெனின், அப்பொழுது நீ புதியாய்போல வரும் நின் வரவையும் இவன் கல்யாணத்தில் தோன்றிய நாணால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காண்பேனாதலால் என்றார். ஏகாரம் பிரிநிலை.
இவர்கள் முன்னர்க் களவொழுக்கம் ஒழுகியவாறும் அக்காலத்து அவன் புதயனாக நடித்தவாறும் இவள் ஒடுங்கியிருந்தவாறும் பிறர் அறியாராகலின், இத்தாழிசைகள் ‘பொழுதும் அறம் காப்பும் என்றிவற்றின்’ என்னும் பொருளியற் சூத்திரத்திற்கூறிய காப்பின் வழுவுணர்த்தியன.
‘ஏகாரம் பிரிநிலை, இவர்கள்….. அறியாராகலின் ஏகாரம் பிரிநிலை என்பதற்குரிய காரணத்தை இவன்அறியராகலின் என்ற சொற்றொடர் உணர்த்தின ஆதலின் ஏகாரம் பிரிநிலை என்பதனை அடுத்துக் காற்புள்ளியும், ‘இவன்…..அறியாராகலின்‘என்பதை அடுத்து முற்றுப் புள்ளியும் இடப்பட்டு இவை உரைப்பகுதியை அடுத்த பத்தியாக அமைதல் வேண்டும். இத்தாழிசைகள்…..வழுவுணர்த்தின என்பது தனிச் செய்தியாதலின் அது தனிப் பத்தியாக இருத்தல் வேண்டும்.
பொருள் புலப்பாட்டிற்கு ஏற்ப நிறுத்தக் குறிகள் வழாது அமைக்கப்பட வேண்டுவதன் இன்றியமையாமை இதுகாறும் விளக்கப்பட்டது.
இனி மிகுதியும் பழக்கத்திலில்லாத வீரசோழிய நூல் பதிப்புப் பற்றி ஒரு சில நோக்குவோம். பெரும்பான்மையான சுவடிகள் ஒரே சுவடியின் படிகள் ஆதலின் ஒரே வகைப்பட்ட பிழைகள் சுவடிகள் பலவற்றில் காணப்படுகின்றன. 22ஆம் காரிகை முதலடி ‘ஈறாம் லகரம் மதவந் தெதிர்ந்திடில்’
லகர ஒற்றிற்று நிலைமொழிப் பதத்தின்பின்னர் வருமொழி முதல் மகார நகாரங்கள் வந்து புணர்ந்தால் அந்த லகரமானது னகாரமாம் என்பது உரை.
‘லகார இறுதி னகார இயற்றே’ –தொ. எ. 332
னகார இறுதி வல்லெழுத் தியைவின்
றகார மாகும் வேர்றுமைப் பொருட்கே’ –தொ.எ. 332
‘மெல்லெழுத்தியையின் னகாரமாகும்’ –தொ. எ.336
என்பதே விதியாகலின் –காரிகையின் முதலடி ‘ஈறாம் லகாரம் மந வந்து எதிர்ந்திடில்’என்றே இருத்தல் வேண்டும். சுவடிகளில் இங்ஙனம் இல்லையே எனது கருதித் தவறான பாட்த்தைத் கொள்ளுதல் ஆராய்ச்சி[ பதிப்பு ஆகாது. காரணம் காட்டித் திருத்தம் செய்வதில் தவறு இல்லை.
58ம் காரிகை, இக்காரிகையில் ஷகரம் ககரமாதலும், க்ஷ இரு ககரமாதலும், ஷ ஒரோவழி கெடுதலும் ஒரோவழி யகரமாகவும் வகரமாகவும் ககரமாகவும் ஆதலும் கூறப்பட்டுள்ளன.
பரிஷ்காரம் பரிக்காரம் ஷ் கெட்டு க் வந்தது
தக்ஷன் தக்கன் க்ஷ் கெட்டு இரு ககர ஒற்று வந்தன
ஹரன் அரன் ஹ என்ற ஒற்று நீங்கியது.
வைதேஹி வைதேவி ஹ் வ் ஆயிற்று
மஹிதலம் மயிதலம் ஹ் ய் ஆயிற்று
மஹிமை மகிமை ஹ் க் ஆயிற்று
‘முதலொற்று இரட்டிற்கும் முப்பத் தொன்றெய்திடின் முன்பின் இஃது ‘முப்பானுறு மூன்றதனுக்கு லோபமும் கவ்வும் அறைவர்களே’ என்று பதிப்பில் உள்ளது.
உ.வே.சா. நூல்நிலையச் சுவடியில் இக்காரிகையின் முதலடி, ‘முதலொற்று இரட்டிக்கும் முப்பத்தொன்றெய்திடில், முப்பத்தொன்றே’ என்று உள்ளது.
உடையில் 35 ஆம் எழுத்தாகிய க்ஷ என்பதும் குறிக்கப் பெற்றிருத்தலானும் அதனைக் கூறாவிடுத்தல் குன்றக் கூறலாமாகலானும் காரிகை ‘முதலொற்றி ரட்டிக்கும் முப்பத் தொன்றைந் தெய்தின் முப்பத்தொன்றே’ என்று முதலடியைக் கொண்டிருத்தல் வேண்டும். ஹ் – வ் ஆதலுக்கு எடுத்துக்காட்டு உள்ளதால் – ஈற்றடியில் – யவ்வொரு என்பது யவ்வொடு என்றே இருத்தல் வேண்டும். அதற்கேற்பக் காரிகையின் ஈற்றடி ‘மூப்பானுறுமூன்றதனுக் குலோபமும் யவவொடு கவ்வு மறைவாறெ’ எனக் காரிகை யாப்பிற்கு ஏற்ப அமைந்ததாதல் வேண்டும்.
சுவடிகளில் முழுமையாகக் காணப்படாவிடினும் உரை, எடுத்துக்காட்டு இவற்றை நோக்கிக் காரணம் காட்டிக் காரிகையைச் செப்பம் செய்து கோடல் தவறில்லை. இதுவும் ஆராய்ச்சிப் பதிப்புக்கு ஏற்றதே.
தேற்றுதல் என்ற சொல் தெளிவித்தல் பொருளிலும், தெற்றுதல் என்ற சொல் மாறுபாடுதல் பிழை செய்தல் முதலிய பொருள்களிலும் வருவதனைக் காண்கிறோம். எனவே பிழைசெய்தல் என்ற பொருளைக் குறிக்குமிடத்து இருப்பது பிழையாகும். சுவடிகளில் தெற்றுதல், தேற்றுதல் இரண்டும் ஒரே வடிவினவாக எழுதப்பட்டிருத்தலின் பொருள் நோக்கத் தெற்றுதல் என்ற சொல்லையே கோடல் வேண்டும். எனவே 82 ஆம் காரிகையில்
‘ஈரெட்டு மூவைந்து மாமுடல் தேற்றவும், ஈற்றுவன்ணம்
தே ரிட்டு மூன்றா முடலொடு தேற்றவும்
என்ற பகுதியில் ஈரிடத்தும் தெற்றவும் எனவே பாடம்
கொள்ளப்படல்வேண்டும்.
காரிகை எண். 101.
‘பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலையும் வென்றோர் விளக்கமும்
தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்’ – தொ. பொ. 63.3
என்பதனை உட்கொண்டு.
‘நிரவும் வழிவொடு சோற்றுநிலை கொற்றவர் மெலிவு’ என்ற அடி அமைக்கப்பட்டுள்ளது.
‘கொற்றவள்ளையாவது பகைவர்நாடு அழிதற்கிரங்கித்
தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டாகும் (நச்)
தொல்காப்பிய அடிகளை நோக்க 101 ஆம் காரிகையின் மூன்றாமடி ‘நிரவும் அழிவோடு தோற்றுநிலை தோற்றவர் மெலிவு’ என்றே இருத்தல் வேண்டும். இத்தகைய சிறுபிழைகள் ஏடெழுதுவோரால் ஏற்பட்டிருத்தல் இயல்பு ஆதலின், இத்தகைய பிழைகளைக் காரணம் காட்டி நீக்குதற்கண் தவறு இல்லை. 116 ஆம் காரிகை உரை
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு உறுப்பாகிய தரவு அளவடியான் வரும். பிறபாவின் தரவிற்கு அடிவரையறை இல்லை.
யாப்பருங்கலக் காரிகைச் செய்தியை ஒட்டி அளவடியான் என்பது ஆறடியான் என்றே இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டுப் பாடல்கள் மூன்றும் ஆறடித்தரவு உடையனவாயிருத்தலும் இத்திருத்தத்துக்கு அரண் செய்யும்.
யாப்பருங்கலக் காரிகைக்குப் பின்னர்த் தோன்றிய வீரசோழியச் செய்யுளியலில் ‘இருமூன்றடியே, தரங்கக்கும் வண்ணகக்கும் தரவாவது’ – காரிகை 42
இங்ஙனம் வீரசோழிய எடுத்துக்காட்டுப் பாடல்கள் பல பெருந்தொகையில் காணப்படும் திருந்திய பாடங்களால் திருத்திக் கொள்ளப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நோக்குவோம்.
118 ஆம் காரிகை உரை
திருந்திலைய இலங்குவேல் திகழ்தண்தார்க் கதக்கண்ணன்
விரிந்திலங்கும் அவிர்பைம்பூண் தடமார்பன் வியன்களத்து
முருந்திறைஞ்சு முத்திற்கு முட்டியெல்லாம் தனித்தனியே
அருந்திறல்மா மாமன்னர்க்(கு) அழுவனவும் போன்றனவே.
முரிந்திறைஞ்சு முத்துதிர்க்கும் முடியெல்லாம் தனித்தனியே –
பெருந்தொகைப் பாடம்
அடலமுங் கழற்செவ்வேல் அலங்குதார்ச் செம்பியன்றன்
கெடலருங் கிளர்வேங்கை எழுதத்தம் உயிரோம்பாது
உடல்சமத்துக் குத்தெரிந்த ஒன்னாப்பல் லரசர் தம்
கடகஞ்சேர் திரள்முன்கை இற்றோட வைசினவே
அடல்வணங்கு அழற்செவ்வேல் அலங்குதார்ச் செம்பயன்றன்
கெடலருங் கிளர்வேங்கை எழுதித்தம் உயிரோம்பாது
உடல்சமத்துக் குருத்தெழுந்த ஒன்றாப்பல்லரசர் தம்
கடகஞ்சேர் திரள்முன்கை கயிற்றோடும் வைகினவே
-பெருந்தொகையின் பாடம்
அருமொழிதன் கோயில் அடலாரசர் பிண்டித்
திருமகட்குக் கொடிகள் தேய்த்த –பருமணிகள்
ஒத்த தமுதனைய ஒண்ணுதலார் மென்மலராம்
பாதத்தி னூன்றும் பரல்
திருமருட கொடிகள் தேய்த்த – -பெருந்தொகையின் பாடம்
இங்ஙனம் பிற நூல்களால் திருந்தக்கூடிய பாடங்கள் வீரசோழியத்தில் பல உள.
115 ஆம் காரிகை உரை எடுத்துக்காட்டு
இந்திரன் ஏறக் களிறிந் தனரே, முத்திகழ்ப் பூவின் முடிசூ டினரே
மந்திரக் கோடி மனத்தளித்தனரே, சுந்தரக் கோபுரச் சுருதிவாய்
மையரே
முந்திகழ்ப் பூவின் முடிசூட்டினரே, மந்திரக் கோடி
மணத்தளித்தனரே, சுந்திர சோழச் சுருதிவாய்மையரே
என்ற பாடங்கள் ஏடெழுதுவோரால் பிறழப் படித்து முன்கண்டவாறு எழுதப்பட்டிருத்தல் கூடும். சோழ என்பதனைக் கோபுர எனப் பிறழ உணர்தல் எழுத் தமைப்பைப் படிக்கும்போது ஏற்படக்கூடியதே.
இங்ஙனமே வீரசோழியப் பொருட்படலத்து உரையில் காணப்படும் குறிஞ்சி நடையியல் என்ற நீண்ட பாடலிலுள்ள செய்திகள் பிறழ்ந்து இருத்தலும் குறிஞ்சி நடையியற்செய்திகள் நெய்தல் நடையியற் செய்திகளோடு மயங்கியிருத்தலும் கூர்ந்து நோக்கின் புலப்படும். ஆய்வுப் பதிப்பில் இவற்றை முறைப்படுத்தி அமைக்கவேண்டுதலும் ஒரு கடப்பாடாகும். சுவடிகளில் காணப்படாவிடினும் பொருள் பொருத்தம் நோக்கி மாற்றிப் பதிப்பித்தலும் இன்றியமையாதது என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. இங்ஙனமே 119 ஆம் காரிகை உரையுள் காணப்படும் கூன் பற்றிய செய்திகள் யாவும் கூன்பற்றிக் குறிப்பிடும் 120 ஆம் காரிகை உரையுள் இடம் பெறல் வேண்டும்.
முடிப்புரை
பெரும்பான்மையவாகிய இலக்கண நூல்கள் ஓரளவு செப்பம் செய்யப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை, மணிமேகலை முதலிய சிறந்த இலக்கியங்களும் நல்ல பதிப்புக்களைப் பெற்றுள்ளன. இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு இவையாவும் துணை செய்வன.
பழைய ஏட்டுச் சுவடிகளை மட்டும் கருத்தில் கொண்டு ஆய்வுப்பதிப்பினைக் கொண்டுவருதல் பொருத்தமாகத் தெரியவில்லை. நூற்செய்திகள், எடுத்துக்காட்டுக்கள், மேற்கோள்கள் முதலியன காணப்படும் பிற நூல்களின் துணையையும் முழுமையாகக் கோடல் வேண்டும். சுவடிகளில் வெளிப்படையாக நமக்கு பிழை என்று புலப்படும் பாடவேறுபாடுகளைக் குறிக்கவேண்டிய தேவை இல்லை. தெளிவையும் எளிமையையும் கருதிச் சொற்றொடர்களைத் தேவையான அளவு பிரித்தே குறிப்பிடுதல் வேண்டும். சுருங்கக் கூறின் இலக்கண ஆய்வுப்பதிப்புக்கு உரியவை :-
1. விரிவான பதிப்புரையில் அப்பதிப்பின் தேவையும் அதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளும் பயன்பட்ட நூல்கள் பற்றிய செய்திகளும் இடம்பெறல்வேண்டும்.
2. அடுத்து ஆசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, உரைநயங்கள் என்பன பெரும்பாலும் அகச் சான்றுகள் கொண்டு வரையப்படல்வேண்டும்.
3.நூலாராய்ச்சி என்ற தலைப்பில் பழைய பாடங்களை விடுத்துப் புதிய பாடங்கள் கொள்ளப்பட்ட காரணங்களும், அந்நூல் உரை இவற்றால் அறியப்படும் சிறப்பான செய்திகளும் இடம்பெறல் வேண்டும்.
4. நூற்பாக்களுக்குச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தலைப்பு அமைத்தல்வேண்டும்.
5. நூற்பாவை அடுத்து நூற்பாப் பாயிரம், பதவுரை அல்லது பொழிப்புரை எடுத்துக்காட்டு விளக்கவுரை முதலியன தனித்தனிப் பத்திகளில் பொருத்தமான நிறுத்தக் குறியீடுகளுடன் அமைக்கப்படல் வேண்டும்.
6. எடுத்துக்காட்டுப் பாடல்கள் இயன்றவரை இடம் சுட்டப்படல்வேண்டும். அவை எந்நூலைச் சேர்ந்தன முன்பது புலப்படாதவிடத்து அவை எடுத்துக்காட்டப் பட்டுள்ள பிறநூல்கள் பற்றிய குறிப்பு உளவாயின் அவை அடிக்குறிப்பில் இடம் பெறல்வேண்டும்.
7. பெயர் சுட்டப்படாமல் மறுக்கப்பட்ட கருத்துக்கள் யாருடையன, அவை எங்கு உள்ளன என்பனவும், அடிக்குறிப்பில் இடம் பெறல் வேண்டும்.
8. நூற்பா அகரவரிசை,எடுத்துக்காட்டுப் பாடல்கள் அகரவரிசை, எடுத்துக்காட்டுச் சொற்கள் சொற்றொடர்கள் அகரவரிசை மேற்கோள் அகரவரிசை முதலியன எஞ்சாது நூல் இறுதியில்காணப்படல் வேண்டும்.
9. தேவைப்படும் என்று கருதப்படின் ஒவ்வொரு நூற்பாவை அடுத்தும் அதன் விளக்கமும் அதனை ஒத்த பிறநூல்களின் நூற்பாக்களும் குறிப்பிடலாம். அளவு பல்கும் என்ற கருத்தால் இவை நீக்கப் படுதலும் கூடும்.
10.நூல் நல்ல காகிதத்தில் தெளிவான எழுத்துக்களைக் கொண்டு, நூற்பா உரை அடிக்குறிப்பு இவற்றுக்குத் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தி அச்சிடப் படல் வேன்டும்.
பெரும்பாலும் இவை யாவும் நிறைவுறப் பெற்ற உ.வே.சா. அவர்களின் நன்னூல் சங்கரநமசிவாயர் உரை இரண்டாம் பதிப்பு, இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு முன்னோடியாகக் கொள்ளத்தகும். பழுத்த புலமையும், நிறைந்த ஆர்வமும், சலியாத உழைப்பும் பதிப்பும் சிறப்புற உதவும் என்பது வெளிப்படை.
குறிப்பு
இக்கட்டுரையில் மிகச்சிறந்த சான்றோருடைய பதிப்புக்களிலும், அருகித் தவறு காணப்படுகின்றன என்று சுட்டியுள்ள செய்திகள் அவர்களிடத்து எளியேன் கொண்டுள்ள பெரு மதிப்பால் குறிப்பிடப் பட்டனவேயன்றி அவர்கள்பால் குறைகண்டு கூறியனவாகக் கொள்ளற்பாலன வல்ல. ஆய்வுப்பதிப்புக்களில் அருகித் தவறு நேரும் இடங்கள் எவ்வெவ்வாறு அமையலாம் என்பதற்கே அவை எடுத்துக்காட்டாகக் கொள்ளற்பாலன. இதுகாறும் சிறந்த பதிப்புக்களை நமக்கு வழங்கியுள்ள சான்றோர் பலருக்கும் எளியேனுடைய தலைதாழ்ந்த வணக்கம் என்றும் உரித்து.
தட்டச்சு செய்து உதவியவர் – திரு.ஜி. ஸன்தானம்