ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறைகள்
சி. இலட்சுமணன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு ஆசிரியர்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். இவர் சைவ சமயப் பற்றுடையவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கியமைக்கு அவரது பதிப்புகள் சான்று பகர்கின்றன. நாவலர் அவர்கள் பதிப்பாசிரியர் என்பதோடமையாமல் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கியமை குறிக்கத்தக்கது.
ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்று எனத் தெரியவருகிறது. அவற்றுள் நிகண்டு, இலக்கிய இலக்கண நூல்கள், திரட்டுகள், நீதிநூல்கள், போன்றவை அடங்கும்.அப்பதிப்புகளைத் தொகுப்பு பதிப்பு, சுருக்கப் பதிப்பு, குறிப்பெதிர் பதிப்பு, எனமூன்று வகைக்குள் அடக்கலாம். தொகுப்பு பதிப்பாவது ஒருவருடைய அல்லது பலருடையபடைப்புகளிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருவதாகும். அகத்தியர் அருளியத்தேவாரத் திரட்டு, தாயுமானவ சுவாமிகள் திருப் பாடல் திரட்டு, நீதிநூல் திரட்டுஎன்பன. தொகுப்புப் பதிப்புகளாகும். ஒரு நூலினது மூலத்தை மட்டும் அல்லது நூற்பொதிகருத்துகளைப் பக்க அளவால் சுருக்கி வெளியிடுதல் சுருக்கப் பதிப்பாகும். இலக்கணச்சுருக்கம், இலக்கண வினா விடை, பால பாடம், போன்றவற்றைச் சுருக்கப் பதிப்பிற்குஎடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
அருஞ்சொற்பொருள், இலக்கணக்குறிப்பு பாடவேறுபாடு போன்றவற்றை அடிக்குறிப்பாகத் தந்து நிற்பவை குறிப்பெதிர்பதிப்புகளாம். சேது புரானம், கந்தபுராணம், திருக்குறள், சூடாமணி போன்ற இவர்தம்பெரும்பான்மை நூல்கள் குறிப்பெதிர் பதிப்புகளேயாகும்.
மேற்குறிப்பிட்ட பதிப்புகளில் காணப்படும் பதிப்புநெறிமுறைகளைச் சுருக்கமாகக் கூற முயல்வதே இக்கட்டுரைரையின் நோக்கமாகும்.
எந்தவொரு பதிப்பாசிரியரும் தமக்கெனச் சில பதிப்புநோக்கங்களைக் கொண்டிருப்பர். அத்தகைய நோக்கங்கள் அவர்தம் பதிப்புகள் சிறப்புற ஏதுவாகும். பழம் பதிப்பாசிரியர்கள் தத்தமக்கெனப் பதிப்பு நோக்கங்களை அவருடைய பதிப்புகளினின்று காணலாம்.
அ. ஓலைச் சுவடியில் உள்ளநூல்களை அச்சில் கொணர வேண்டும் என்பது அவர் நோக்கங்களுள் ஒன்றாகும். “ஏட்டிலுள்ள நூல்களை எல்லாரும் எளிதில் பெறும்படி அச்சிற் பதிப்பித்தல் வேண்டும் என்னும் ஆசையும் இவருக்கு உண்டாயிருந்தது”2 என்ற கூற்றிலிருந்து மேற்கருத்துநன்கு விளக்கம் பெறும்.
ஆ. அடி மாற்றம், சொற்களைத் திரித்தல் போன்ற எவ்வித மாற்றமுமின்றி நூலாசிரியர் கருத்தறிந்து மூலப் பாடத்தைத்தந்து திருத்தமான பதிப்பைச் செவ்விய வடிவமைப்புடன் கொணர்தல் அவரது அடுத்த நோக்கமாகும். இக்கருத்தைப் பின் வரும் கூற்று அரன் செய்யும்.
“இராச கோபாலப் பிள்ளை திருத்தி யச்சிற் பதிப்பித்தப்புத்தகத்தைப் பாராதீர். ஏனெனில் அவர் முதனூற் பகுத்தறியாதவராகையால் வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப் பெரியோர் வாக்கை அழிக்கப்படக் கூடாதென்று சிறிதும்அஞ்சாது சிவ பரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத் தள்ளியும் அநேகத்தைத் தள்ளியும் சிலஅடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும் மணம் போனவாறே அச்சிற் பதிப்பித்தார்.அதனால் அதனை நீக்கி வில்லிபுத்தூராழ்வார் பாடின படியே
ஆறுமுகநாவலர் அச்சிற்பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பதித்துப் பாரும். பாரும். உமது ஐயந்தீரும்.”3
எந்தவொரு நூல் பதிப்பிற்கும் நூலமைப்பு மிக முக்கியமானதாகும்.நாவலர் தம் நூற்பதிப்பு தலைப்புப் பக்கம், உள்ளுறை, இணைப்பு, பக்க அமைப்பு, கட்டமைப்புஎன்னும் நிலைகளில் நோக்கப் பெறுகின்றது.
தலைப்புபக்கத்தில் நூலின் தலைப்பு, நூலாசிரியர், பதிப்பிக்கத் தூண்டியவர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர்ர், அச்சகம், பதிப்புப் பற்றிய விவரம், பதிப்பித்த காலம் (தமிழ் ஆண்டு, மாதம்), பதிப்புரிமை5போன்றவைகுறிப்பிடப்பட்டுள்ளன.நூலின் தலைப்பு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும் பெரும்பாலும் நீண்ட தொடராகவே உள்ளது.
இதற்குச்சான்றாக,
“ பெரியபுராணம் என்றுவழங்குகின்ற திருத்தொண்டர் புராணம் “
“ தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்”
என்பவற்றைக் காணலாம். இவற்றிலிருந்து நூலின் தலைப்பு தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்க வேண்டுமென்பதில் நாவலர் மிகவும் கவனம் செலுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. சில பதிப்புகளில் நூலாசிரியர் பெயர் உரையாசிரியர் பெயர், அவர்தம் சிறப்புணர்த்தும் அடைமொழிகளோடுகொடுக்கப் பெற்றுள்ளது.
“தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்தது “ 6
“வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தசேனாவரையருரை” 7
‘திருவாவடுதுறை ஆதீனத்துச்சுப்பிரமணிய சுவாமிகள்கட்டளைப்படி’ 8
’ இராமநாதபுரம் சமஸ்தானம் shree. பொன்னுசாமித் தேவரவர்கள் வேண்டுகோளின்படி’ 9
’ஆறுமுகநாவலரவர்கள் திருத்தியும், விளக்கியுங் கூட்டியும்புதுக்கியது’ 11
“சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலர்களால் வெளியிடப்பெற்றது” 12
”சென்னப்பட்டணம் வித்தியாநூபாலன யந்திரசாலையில் அச்ச்சிற் பதிப்பிக்கப்பட்டது” 13
‘பெரியபுராணப் பதிப்பில் புராணம் பக்கம் என்றஅமைப்பிலும் ஒவ்வொரு சருக்கத்தின் உட்தலைப்பு பக்கம் என்ற அமைப்பிலும் உள்ளுறைஅமைக்கப் பெற்றுள்ளது.’
முகவுரை,சிறப்புப் பாயிரம், நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றியச் சிறப்புச் செய்திகள்போன்றவை நூலின் முன்னும், சூத்திரமுதற் குறிப்பகராதி, பிழைத்திருத்தம் போன்றவை நூலின் பின்னும் இணைப்பாகத் தரப்பெற்றுள்ளன. 15 பிழைத்திருத்தம் என்பது திருத்தம் என்ற அமைப்பில் தரப்பெற்றுள்ளது.
பதிப்புப் பணியில் அச்சுப் பணி ‘சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ”நூலை எழுதுவது ஒருவகையான ஆற்றலேயாயினும் அதன் பிரதியை அச்சிற்குத் தருகின்ற வகையில் ஒழுங்கு படுத்துவது வேறொரு வகையான ஆற்றலாகும்”17. எந்தவொரு சிறந்த பதிப்பாக இருந்தாலும் அச்சுப் பணியைச் சரிவரக் கவனிக்கவில்லையாயின் நூலின் தரத்தையே அது குறைத்துவிடும். நாவலர்தம் பதிப்புகளில் அச்சுவேறுபாடு, அச்சுப்படி திருத்துதல் போன்றவற்றிற்குச் சிறப்பிடம் தந்துள்ளார். இயல்தலைப்பு, உள்தலைப்பு, நூற்பா, உரை, அடிக்குறிப்பு என் இவை ஒவ்வொன்றிற்கும் வெவேறுபுள்ளிகளில் அச்சுகளைத் தருவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி வேறுபாடுகளைக் குறித்து முழுமையாக்கும் பணீயானது பதிப்புப் பணியில் மிக முக்கியமானதொன்றாகும்.
ஒத்த ஓர் ஏட்டைத் தேர்ந்தெடுத்துப்பதிப்பித்தல் அல்லது பல ஏடுகளையும் ஒப்பிட்டுப் பிழைகளைந்து சரியான பாடத்தை நிறுவுதல் என்ற இடர்ப்பாடு மிகுந்த பணிநூலைப் பதிப்பித்தற்கு முன்னோடியாக அமைய்ம்பணி”. 19 என்பார் டாக்டர் காசிராசன். நாவலரவர்கள் எந்தப்பதிப்புப்பணியை மேற்கொண்டாலும் பல்வேறு பிரதிகளை ஒப்பு நோக்கிய பின்னரே அச்சிடுவார் என்பது ஈண்டு குறிக்கத்தக்கது.
நாவலரவர்கள் மேற்கொண்ட எந்த நூற்பதிப்பிலும் பதிப்புரை தந்ததாகத் தெரியவில்லை. எனவே இவர் தம்பதிப்பு ம்றைகள், பதிப்புக்கொள்கை, முந்தைய பதிப்புகள் பற்றிய விவரம், பதிப்பில் செய்துள்ள மாற்றம் ஆகிய எதையும் இவர் கூற்றாக அறிய இயலவில்லை.
பதிப்புப் பணியில் முகவுரை எழுதுவது இன்றியமையாதது எனலாம். இது, நூல் பற்றிய கருத்துகளை அறிமுக நிலையில் அறிந்து கொள்ள மிகவும் துணைசெய்யும்.
“ டாக்டர் உ. வே. சா. காலத்துப் பதிப்பாசிரியர் சிலர் முகவுரை எழுதுவதில்லை. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை இவ்வகையில் குறிப்பிடலாம்” என்பார் டாக்டர் இரா. காசிராசன். ஆயினும் பெரிய புராணம், கந்தபுராணம் போன்ற நூற்பதிப்புகளில் இவர் முகவுரை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நூலின் முகவரையில் நூலைப் பற்றிய செய்திகளைக்கூறுகிறார். பதிப்பு பற்றிய சில விவரங்களைஈண்டுகுறிப்பதுண்டு.
பெரியபுராணபதிப்பு முகவுரையில் சைவர் யார்? ஓதிஉணர்தற்குறிய நூல்கள் பெரியபுராணத்தின் சிறப்பு, போன்றவற்றை குறிப்பிடுகிறார்.இறுதியாகச் சந்தி விகாரங்களின்றி அச்சிற் பதிப்பித்டதைப் பற்றி நாவலரவர்கள் கூறுவதைக் கீழே காணலாம்.
“நிறைந்த கல்வியுடைய வித்வான்களும் குறைந்த பிறரும் ஆகிய யாவரும் எக்காலத்தும்எளிதில் வாசித்து உணரும் பொருட்டும், கல்வியில்லாத ஆடவர்களும் பெண்களும் பிறரைக்கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும் … … … …. … பெரும்பான்மையும் இயற்சொற்களும் சிறுபான்மை ஆவசியமாகிய திரிசொற்களும், வடசொற்களும் பிரயோகிக்கப்படும்கத்திய ரூபமாகச் செய்து வாசிப்பவர்களுக்கு எளிதில் பொருள் விளங்கும்படிபெரும்பான்மையும் சந்தி விகாரங்களின்றி அச்சிற் பதிப்பித்தேன்” 20
“நம்முடைய சைவ சமய நூல்களைஎல்லருக்கும் எளிதின் உபயோகமாகும் பொருட்டு வெளிப்படையாகிய வசன நடையிற் செய்து அச்சிற்பதிப்பித்து வெளிப்படுத்தின் அது பெரும் புண்ணியமாகும் என்று துணிந்து சிலவருடத்துக்கு முன்னே பெரிய புராணத்தை அப்படியே செய்தேன். அது அநேகருக்குப்பெரும்பயன் விளைத்ததைக் கண்டறிந்தமையால் கந்தபுராணத்த்டியும் அப்படியெசெய்தேன்” 21
ஆகவே பதிப்புரையில் கூறவேண்டிய முகவுரையில் தருவதால் இவர் பதிப்புரை தராதுவிடுத்திருக்கலாம்.
நாவலரவர்கள் தம் பதிப்பில் தாம் கூற விரும்பிய கருத்துகளை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். திருக்குறள் பதிப்பில் 260 அடிக்குறிப்புகளும் ஏனையவற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அடிக்குறிப்புகளும் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
சூடாமணி நிகண்டு -9
பெரியபுராணம் – 4
கந்தபுராணம்- 6
சேதுபுராணம் – 36
தொல். சொல். சேனா – 11
இலக்கணக்கொத்து – 3
தொல்முதற்சூத்திரவிருத்தி -1
நாவலரவர்கள் காட்டும் அடிக்குறிப்புகள் பெரியபுராணம்முகவுரைபல்வேறுகோணங்களில் பகுப்பாய்வு செய்ய இடம் தந்து நிற்கின்றன.அருஞ்சொற்பொருள் தரல், விளக்கம் அளித்தல், இடப்பெயர்களைச் சுட்டல் பிற பிரதிகளில்இல்லாதவற்றைச் சுட்டல். பிறநூல் சுட்டல்,
அரிய சொற்களுக்கு அடிக்குறிப்பில் பொருள்தருவதைப் பதிப்பு நெறியாக் கொண்டுள்ளார். மூலத்தை மட்டும் பதிப்பித்துள்ள நூல்களில்இத்தகைய அடிக்குறிப்புகள் அதிகமாகவும், உரையுடன் கூடிய பதிப்புகளில் அருகியும்காணப்படுகின்றன.
இலச்சினை – முத்திரை 22
பரிவருத்தனம் – பண்டமாற்றம் 23
சொற்களுக்குத் தொடர்நிலையில் உரை தந்து உரையில் பயின்ற சொற்களுக்கு விளக்கம் தருவதையும், சொற்களைப் பிரித்துப் பொருள்தந்து மேலும் விளக்கம் கொடுப்பதையும் நெறியாகவும் கொண்டுள்ளார். சான்றாக ”ஓரிடமேவல்” 24 என்னும் சொல்லுக்கு இருவகையான சமவாயமுஞ் சையோகமுமாம் எனஉரைத்து, அதில் பயின்றுள்ள சமவாயம், சையோகம் என்னும் இரண்டு சொற்களுக்கு முறையேஒற்றுமை, கூட்டம் என்று விளக்கமளிக்கிறார்.
இதே போன்று பஞ்சவடி25என்னும்சொல்லுக்கு மயிரினாலே அகலமாகச் செய்யப்பட்டு, மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும்வடமாம் என்ப் பொருள் விளக்கம் தந்து மேற்படிச் சொல்லைப் பஞ்சம், வடி என இரண்டாகப்பிரித்து முறையே விரிவு, வடம் என்று விளக்கமளிக்கின்றார்.
இலக்கியங்களில் இடம் பெற்ற இடப்பெயர்கள்தற்பொழுது என்னப் பெயரில் வழங்கி வருகின்றன என்பதையும் அடிக்குறிப்பில்சுட்டுகிறார்.
இலாடர் தம் விடயம் – இலாட தேசம் 26
வாட்போக்கி – இரத்தினகிரி 27
குடமூக்கு – கும்பகோணம் 28
என்பன போன்ற இடவியல் விளக்கம் அளிப்பதும் குறிப்பிடத் தக்கது.
பழம்பதிப்பாசிரியர்கள் தொகை விளக்கம்அளிப்பதற்குச் சிறப்பிடம் தருவர். இவை பதிப்பாசிரியரின் பரந்துபட்ட அறிவைப்புலப்படுத்தும். இவ்வடிப்படையில் நாவலர் பெருமானும் தொகை விளக்கம் தரும் நெறியைஅடிக்குறிப்பில் கையாண்டுள்ளார்.
பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்குகின்றசூழலில் பிற பிரதிகளில் இல்லாத பாடல்களை இவை இவை இல்லையென்று அடிக்குறிப்பில்சுட்டும் நெறிமுறையைக் கொண்டுள்ளார்.
சாக்கிய நாயனார் புராணத்தில் ”இந்நியதி பரிவோடும், கல்லாலே யெறிந்துதவு — — ” எனத் தொடங்கும் செய்யுள்கள் சில பிரதிகளில் இல்லை31என்றும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் ”திருச்சின்னம் பணிமாற ——- ” எனத்தொடங்கும் செய்யுள் சில பிரதிகளில் இல்லை32என்றும்குறிப்பிடுவார்.
இவ்வமைப்பு கற்போர் மேலும்விளக்கம் பெறவும் கல்விக்குத் தூண்டு கோலாகவும் அமையும்.
மக்கட் சுட்டு : ” மக்கட் சுட்டென்பது அன்மொழித்தொகை யென்றெனவும், இருபெயரொட்டாகுபெயரெனவும், சிவஞானமுனிவர் கூறினார். தொல்காப்பியச் சூத்திர விருத்தியிற் காண்க” 33
வெறு முயற்சி : ”நல்வினை தீவினை யிரண்டிலும் படாமுயற்சி” இலக்கணக் கொத்து வினையியல் பதினேழாஞ் சூத்திர உரையிற் காண்க.”
எ. 1) மேற்கோள் பாடல்களின் நூல் பெயர் முதலானவைசுட்டல்
மேற்கோள் பாடல்கள் இடம் பெற்றநூல், அதிகாரம், பாடல் எண், முதலானவற்றை அடிக்குறிப்பில் தருகின்ற நெறிமுறையையும்இவர் கையாண்டுள்ளார்.
”உறற்பால – தீண்டாவிடுதலரிது34 என்ற மேற்கோள் பாடல் அடிக்கு அடிக்குறிப்பாக
நாலடியார் பழவினை என்றும், நீரில் பலகான்மூழ்கல்35 என்ற மேற்கோள் பாடல் அடிக்கு அடிக்குறிப்பாக வெண்பாமாலைவாகைப் படலம் என்றும் குறிப்பிடுள்ளார்.
எ. 2) மேற்கோள் தொடரை முழுமை செய்தல்
உரைகளில் எடுத்தாளப்படும் மேற்கோள் பாடல்களின்தொடருக்குரிய முழுமையான பாடலை அடிக்குறிப்ந்பில் தருகின்ற நெறி முறையை நாவலர் தம்பதிப்புகளில் கையாண்டுள்ளார். ”நீர் பலகால் மூழ்குதல்” என்னும் மேற்கோள்தொடருக்குக் கீழ்க்காணும் பாடல் முழுமையும் தந்துள்ளமை தக்கச் சான்றாகும்.
‘நீர் பலகான் மூழ்கி நிலத்தசைஇத்தோலுடையாச்
சோர்சடை தாழச்சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டுகடவுன்விரும் தோம்பல்
வானகத் துய்க்கும் வழி’ 36
ஏ. இலக்கணக் குறிப்பு தரல்
உரையாசிரியர் மரபில் நிறு சில இடங்களில் இவர் இலக்கணக்குறிப்புத்தருதலும் உண்டு.
“ உவர்த்து =குறிப்பு வினமுற்று37
சேய்நாலூர் = சேய் ஞாலூர் எனப் போலியாயிற்று38
என்பனமேற்கருத்திற்குச் சான்றாகும்.
ஐ. வடமொழி கருத்துரைத்தல்
மூலநூல் அல்லது உரைநூல்களில்வரும்சொல்லுக்கு வடமொழிச் சொல் தருதல், வடமொழி இலக்கணக் கருத்துரைத்தல் போன்றநெறிமுறைகளையும் கையாண்டுள்ளார். இவை நாவலர் பெருமானின் வடமொழி இலக்கணப்புலமையைத்தெளிவாகக் காட்டுகின்றன.இவற்றிற்குப் பிவருவன சான்றாகும்.
”தன்வயத்தனாதல் : சுவதந்திரத்துவம்39
தூயவுடம்பினனாதல் :விசுத்ததேகம்40
அவாய்நிலை : ஒரு சொல் மற்றொரு சொல்லை வருவித்து முடிப்பதனை வடநூலார் அத்தியாகார மென்பர்.41
உடம்பொடு புணர்தல் :உடம்பொடு புணர்தல் என்பது ஓர் உத்தி இதனை வடநூலார் நிபாத மென்பார்.42
ஒ. சிறப்புப்பெயர் காட்டல்
இலக்கியங்களில் இடம்பெறும் சிறப்புப்பெயர்களை அடிக்குறிப்பில் தருவதுமுண்டு. அப்படித்தரும் பொழுது பெரும்பாலும் வடசொல்மிகுந்து அவற்றிற்குரிய விளக்கத்தைத் தருதலைக் காணலாம்.
தூல சென்னியன் – தூலசிரன்43
வயிரதந்தன் – வச்சிர தமிஷ்டிரன்45
சமயச் சார்புடைய புராணக் கதைக் கூறுகளையும்நாவலர்தம் பதிப்புகளில் காட்டுவதைக் காணலாம். இதனைப் பின்வரும் பகுதி காட்டும்.
வானோர் தலைவன்
ஆறுமுக நாவலர் தாம்பதிப் பித்த நூல்களுள் சூடாமணிநிகண்டு, திருவிளையாடற் புராணம் ஆகிய இரண்டு நூல்களுக்கே பாடவேறுபாடுகள்தந்துள்ளனர்.சூடமணி நிகண்டு பதிப்பில் 9 பாடங்களையும், திருவிளையாடற் புராணப்பதைப்பில் 30 பாடங்களையும் நாவலரவர்கள் குறிப்பிட்டுள்ளார். பாடவேறுபாடு, சுவடிவேறுபாடு, பிரதிபேதம் என்று அவற்றை குறிப்பிடவில்லை. பாடம் என்றேஅடிக்குறிப்பில் தந்துள்ளார். பல்வேறு பிரதிகளைப் பரிசோதித்து வெளியிடுவதாககுறிக்கப் பட்டிருப்பதிலிருந்து பாடவேறுபாடுகள் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.இருப்பினும் அவற்றை தராது விடுத்திருப்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.பாடவேறுபாடுகளைக் காட்டுவதற்கு இன்றியமையாமை தரவில்லை என்பதொன்று. பதிப்பாசிரியர்எந்தப் பொருள் ஏற்றதென்று துணிந்தாரோ அந்தப் பாடமே அவருக்குச் சிறப்புடைத்து என்றுகருதிய காலச் சூழல் மற்றொன்று. நாவலரவர்கள் கொண்ட பாடல்களை இனங்காண வேண்டுமாயின்அவர் பதிப்போடு பிறபதிப்புகளை ஒப்பு நோக்க வேண்டும். அத்தகு முயற்சியினாலே அவரதுமூலபாடத் திறனாய்வை ஒருவாறு ஊகிக்கலாம். கீழ்க்கண்டவை அவர் காட்டும் பாடல்களில்சிலவாம்.
“ஆவரிப் பிறவி தன்னிலவர் கதிக்கரையைச்சார்வர்” கதிக்கரசராவர்” 46
”குவிந்துள்ள மெய்மொழிகர்ணங் குணமூன்று
மொன்றித்தன் கொடிய பாவம் – பாசம்” 47
“ஆசாவிகார்மய மாயினேஸனப்பொருட்படுத்தி
மலமாயினேனான்” 48
“ஈகை பொன்குடை மீங்கை இண்டை” 49
“உறழ்வென்ப் புணர்வு காலஞ்செறிவில்
யீண்டொப்பைம்பேர் – உணர்வு” 50
நாவலர் பதிப்பு நெறிமுறைகளில் கீழ்க்கண்டவைஅவற்றின் சிறப்புக் கருதி சிந்திக்கப்பெறுகின்றது. எண் தரல், சந்தி விகாரம்நிறுத்தக் குறியீடுகள், சொற்களைப் பிரித்தல், உள் தலைப்பு தரல், விளக்கமளித்தல்போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதே போன்று நாவலர் பதிப்புகளில் நன்னூல், திருக்குறள்இவற்றின் தனித்தன்மைகளும் கண்டு பேசப்படுகின்றன.
1. நுற்பாவின் தொடக்கத்தில் ( இடப்பக்கம் ) எண்தருதல்
2. நூற்பாவின் இறுதியில் ( வலப்பக்கம் )எண்தருதல்
3. தலைப்புக்கு எண்தருதல், உள் தலைப்புக்குஎண்தருதல், இயல் தலைப்புக்கு எண்தருதல்
4. தொகைவருமிடங்களில் எண் தருதல்.
5. எடுத்துக்காட்டுக்குவரிசை எண் தருதல்
கற்றவர்களுக்கும், மற்றவர்களும் எளிதாக வாசிக்கும்பொருட்டுச் சொற்களை ஏற்றமுறையில் பிரித்தும் சந்தி விகாரங்களின்றியும் அச்சிற்பதிப்பித்துள்ளார். இது குறித்து நாவலரவர்களே பெரிய புராணம் முகவுரையில்குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில முறையைப் பின்பற்றி இடம் நோக்கி நிறுத்தக்குறியீடுகளை நாவலர் தம் பதிப்புகளில் பயன்படுத்தியுள்ளார்.52
தமிழில் நிறுத்தக் குறியீடுகளை இடமறிந்து முதன்முதலில்பயன்படுத்தியவர் இவரே என்று சொல்லப்படுகிறது.
எந்தவொரு கருத்தையும், ஒருதலைப்பின் கீழ்க் கொண்டுவருவது இவரது பதிப்பின் சிறப்பம்சமாகக் கருதலாம். நூற்பா, தொகுப்புரைகள்போன்றவற்றிற்குக் குறிப்பாகத் தலைப்பு தந்துள்ளார். நூற்பாவிற்குத் தலைப்புத்தரும்போது அவற்றை அடைப்புக் குறிக்குள் தந்து பதிப்பாசிரியரால் இவை தரப் பெற்றவை எனஇனங்காட்டுவார்.53 இதைபதிப்புப்பணியின் அறமாகக் கூறலாம். பெரியபுராணப் பதிப்பில்காணப்படும் சூசனம் தலைப்புடன் தரப்பெற்றுள்ளது. தலைப்புகள் நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளது.
1. சிதம்பரதினதுமகிமை
2. தில்லைவாழந்தனவர்களது மகிமை
.3. வேதவுணர்ச்சி
4. சைவாகம் உணர்ச்சி
இவ்விரு நூல்பதிப்புகளிலும் சில தனித்தன்மைகளைக்காணலாம். நன்னூல் காண்டிகை உரைப்பதிப்பில் ஒவ்வொரு நூற்பாவுக்கும் தலைப்புகள்கொடுத்துள்ளார். தலைப்புகள் ஒரு சொல்லில் அமையாமல் தொடர்நிலையில் தெளிவாக உள்ளன.எடுத்துக்காட்டாக,
“ உரையினது பொதுவிலக்கணம் காண்டிகையுரைஇன்னதென்பது நூலென்னும் பெயர்க்காரணம் !”
என்பனவற்றைக் கூறலாம். தலைப்பு பதிப்பாசிரியரால் குடுக்கப்பட்டது என்பதைஇணங்காண்ப் பகர அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.இதைப் பதிப்புப்பணியின்அறமாகக் கூறலாம். மேற்படித் தலைப்புகளைத் தொகுத்து அகரவரிசைப் படுத்தினால் அதுவேசிறந்த பொருளடைவு அகராதியாக இருக்கும் எனலாம். ஒவ்வொருபாடப்பகுதி முடிந்ததும்பரிட்சை வினாக்கள் தரப்பட்டுள்ளன. இவை தற்கால கல்வியல் முறையில் திட்டமிட்டுக்கற்றல் என்னும் கொள்கைக்கு ஏற்றமுடையதாய் உள்ளது. இதே போன்று நூலின் இறுதியில் 60 அப்பியாசங்களை ( பயிற்சிகள்) அமைத்துள்ளார். நாவலர் பதிப்பின் தனித்தன்மையாக இதனைக்கூறலாம். இலக்கணவமைதி, பகுபதமுடிபு, சொல்லிலக்கண சூசி, உபாத்தியாருக்கு அறிவித்தல், மாணாக்கர்களுக்கு அறிவித்தல் போன்றவை நூலின் பின் இணைப்பில் அமைந்துள்ளமைசிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.
செய்பவரே” 54
நூற்பா முதற் குறிப்பகராதி போன்ற பல்வேறு அக்ராதிகளின்இணைப்புகள் பதிப்பு நெறிமுறைகளில் ஒன்றாக இன்று கருதப்படுகிறது. அவ்வடிப்படையில்நாவலர் அவர்களும், புராண அகராதி 55 பாலியலதிகாரவகராதி 56 திருக்குறள் அகராதி 57 ( செய்யுள் முதற் குறிப்பகராதி ) சருக்க வகராதி 58 என்பனவற்றைத் தமது பதிப்புகளில்இணைத்துள்ளார்.அருஞ்சொற் பொருளகராதி, நூற்பா சொல்லடைவு அகராதி, உதாரண மேற்கோள்அகராதி, உரைப்பொருளடைவு அகராதி போன்றவற்றிற்கு முக்கியமின்மை கருதி அக்காலச்சூழலில் நாவலரவர்கள் தராது விடுத்திருக்கலம்.
நாவலர்தம் பதிப்பு நெறிமுறைகள் அவரது பதிப்புகளுக்குச்சிறப்புத் தருவதாயும், படிப்பார்க்கு அவரது பரந்துபட்ட அறிவைக் காட்டுவனதாயும்அமைந்துள்ளன. நாவலர் பதிப்புகளை ஆய்வுப் பதிப்புகள் என்று கூறுவதைவிட விளக்கப்பதிப்புகள் என்று கூறுவதற்கு அவர் தம் பதிப்பு நெறிமுறைகள் துணை புரிகின்றன.
ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்த நூல்கள்
( அகர வரிசையில் )
1. அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு.
2. அன்னம் பட்டியம்
3. இலக்கணக் கொத்து
4. இலக்கணச் சுருக்கம்
5. இலக்கண விளக்கச் சூறாவளி
6. இலக்கண வினா விடை
7. இலங்கை பூமி சாஸ்த்திரம்
8. ஏரெழுபது
9. கந்த புராண வசனம்
10. கந்தபுராணம் பகுதி 1-2
11. கொலை மறுத்தல்
12. கோயிற்புராணம் ( புதிய உரை )
13. சிதம்பர மான்மியம்
14. சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
15. சிவஞானபோத சிற்றுரை
16. சிவராத்திரி புராணம்
17. சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மை விளக்கம்
18. சிவாலய தரிசன விதி
19. சுப்பிரமணிய போதகம்
20. சூடாமணி நிகண்டு மூ. உரை
21. சேதுபுராணம்
22. சைவ சமய நெறி
23. சைவ தூஷண பரிகாரம்
24. சைவ வினாவிடை
25. சௌந்தர்ய லகரி உரை
26. ஞான கும்மி
27. தருக்க சங்கிரகம்
28. தருக்க சங்கிரக தீபிகை
29. தனிப் பாமாலை
30. தாயுமானசுவாமிகள் திருப்பாடல் திரட்டு.
31. திருக்குறள் மூ. பரிமேலழகர் உரை
32. திருக்கை வழக்கம்
33. திருக்கோவையார் மூலம்
34. திருக்கோவையார் நச். உரை
35. திருச்செந்தூர் நிரோட்ட யமக வந்தாதி
36. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
37. திருத்தொண்டர் புராணம்
38. திருமுகாற்றுப்படை
39. திருவாசம் – மூலம்
40. திருவிளையாடற்புராணம் – மூலம்
41. திருவிளையாடற்புராணம் – வசனம்
42. தெய்வயாணையம்மை திருமணப் படலம்
43. தொல்காப்பியம் சூத்திர விருத்தி
44. தொல்காப்பியம் சொல். சேனா. உரை
45. நன்னூல் – காண்டிகை உரை
46. நன்னூல் – விருத்தி உரை
47. நீதிநூல்திரட்டு மூலமும் உரையும்
48. நைடத உரை
49. பதினோராம் திருமுறை
50. பாலபாடம் – 4 தொகுதிகள்
51. பிரபந்தத் திரட்டு
52. பிரயோக விவேகம்
53. புட்பவிதி
54. பெரியபுராண வசனம்
55. போலியருட்பா மறுப்பு
56. மார்க்கண்டேயர்
57. யாழ்ப்பாணச் சமயநிலை
58. வக்கிர தண்டம்
59. வாக்குண்டாம்
60. விநாயக கவசம்
குறிப்பு:
1. பதிப்பித்த நூல் விவரம்பின் இணைப்பில் காண்க.
2. ஆறுமுக நாவலர் சரித்திரம் – பக்கம் – 23
3. ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு – பக்.134
4. அச்சும் பதிப்பும் – பக்.241
5. நாவலர் பதிப்புகள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றது.
6. திருக்குறள்
7. தொல்காப்பியச் சொல்லதிகாரம்
8. இலக்கணக்கொத்து
9. திருக்குறள்
10. தொல். சொல்லதிகாரம்
11. நன்னூற் காண்டிகையுரை
12.& 13. சேது புராணம்
14. திருமணச் சருக்கம் – திருமணச் சிறப்பு
15. பெரியபுராணப் பதிப்பு
16. கிரவுன் 1/8, திம்மி 1/ 8 போன்ற பல்வேறு வடிவம்
17. பதிப்புப் பார்வைகள் – பக் 60
18. பிரபந்தத்திரட்டு – பக் 28
19. காப்பியப் பதிப்புகள் – பக் 3
20 பெரியபுரணம் – முகவுரை
21 கந்தபுராணம் – முகவுரை
22. பெரியபுராணம் – பக் -132
23. சேதுபுராணம் – பக் – 11
24. இலக்கணக்கொத்து – பக் -50
25. பெரிய புராணம் – பக் – 102
26. சேதுபுராணம் – பக்-180
27.& 28 பெரியபுராணம் – பக் – 20
29. பெரியபுராணம் – பக் – 4
30. கந்தபுராணம் – பக் – 41
31. பெரியபுராணம் – பக் – 18
32. பெரியபுராணம் – பக் – 365
33. தொல்.சொல்லதிகாரம் – பக்- 3
34. திருக்குறள் – பக் – 11
35. & 36 திருக்குறள் – பக் – 11
37. சேதுபுராணம் – பக் – 208
38. கந்தபுராணம் – பக் – 83
39 & 40 திருக்குறள் – பக் – 5
41. திருக்குறள் – பக் – 7
42. திருக்குறள் – பக் – 11
43. சேதுபுராணம் – பக் – 42
44. சேதுபுராணம் – பக் -73
45. சேதுபுராணம் – பக் – 238
46. திருவிளையாடற்புராணம் – பக் – 46
47. திருவிளையாடற்புராணம் – பக் – 46
48. திருவிளையாடற்புராணம் – பக் – 294
49. சூடாமணி நிகண்டு – பக் – 74
50. சூடாமணி நிகண்டு – பக் – 74
51. ( உளஎ ) – உ0எ ( ளயஅ ) – ககஅ ( ளய ) – கக0
52. அச்சும் பதிப்பும் பக்- 241
53. நன்னூற்காண்டிகைப் பதிப்பு காண்க.
54. பதிப்புப் பார்வைகள் – பக் – 62
55. பெரிய புராணப் பதிப்பு
56 & 57 திருக்குறள் பதிப்பு
58. சேது புராணப் பதிப்பு
இந்தக் கட்டுரை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்" என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து பதிப்பிக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து வழங்கியுள்ள திரு.வடிவேலு கன்னியப்பன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.