அ.ச. ஞானசம்பந்தன்

அறிவுப் புதையல் அ.ச.ஞா!

ஜெயநந்தனன்

 

அ.ச. ஞானசம்பந்தன்

தளர்ந்துபோய், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே கட்டிக்காத்து வந்த தமிழ், மீண்டும் தழைத்து வளர்ந்த காலம் 20ம் நூற்றாண்டு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு அந்த மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும்,

திருவாவடுதுறை ஆதீனம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம்

போன்றவை ஆதரித்த தமிழறிஞர்களும், அந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தனர். நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும், பத்திரிகைகளும் கூடக் கணிசமான பங்களிப்பு நல்கின.

"தமிழ்த் தாத்தா" உ.வே. சாமிநாதய்யரின் பங்களிப்பும், சங்கத் தமிழ் இலக்கியங்களை அவர் தேடிப் பிடித்து அச்சில் பதிவாக்கித் தந்ததும் அளப்பறிய சாதனை. அதேபோல, வள்ளல் பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தோற்றுவித்த நான்காம் தமிழ்ச் சங்கமும், செந்தமிழ்க் கல்லூரியும் தமிழுக்கு மரியாதை தேடித் தந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகமோ, பல தமிழாராய்ச்சியாளர்களை உருவாக்கி, தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை தேடித் தந்தது.
 
அந்தத் தமிழ் மறுமலர்ச்சியின் காரணமாக நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அறிவுப் புதையல்தான் செந்தமிழ் வித்தகர் அ.ச. ஞானசம்பந்தன். நண்பர்களாலும், தமிழார்வலர்களாலும் "அ.ச.ஞா." என்று அன்புடன் அழைக்கப்படும் இந்தத் தமிழ் அறிஞர், பிறக்கும்போதே தமிழுடன் ஒட்டிப் பிறந்தவர் என்று சொன்னாலும் தகும். ஏறக்குறைய 35 ஆய்வு நூல்கள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், எண்ணிலடங்காத இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி சொற்பொழிவுகள் என்று "அ.ச.ஞா." ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டை, தமிழ் உள்ளளவும் மறக்க இயலாது.
 

கல்லணையை அடுத்த அரசங்குடி, பல தமிழறிஞர்களின் வேடந்தாங்கலாக இருந்த காலமொன்று இருந்தது. அதற்குக் காரணம் அங்கே வாழ்ந்து வந்த "பெருஞ்சொல் விளக்கனார்" அ.மு.சரவண முதலியார் என்பவர். அவரும் அவரது இல்லக்கிழத்தி சிவகாமி அம்மையாரும் சைவ சமயப் பற்றும், தமிழ்ப் பண்பில் பிடிப்பும் கொண்டு வாழும் நல்லறத் தம்பதியர். "அ.மு.ச." என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட சரவண முதலியார் சாதாரணமானவர் அல்ல. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடற் புராணத்திற்கு உரை தீட்டியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

20ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இன்றைய அளவுக்குக் கல்லூரிகளும், தமிழ் ஆராய்ச்சி சாலைகளும், நூலகங்களும் இல்லாத நேரம். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பதற்கேற்ப, அறிஞர் பெருந்தகையர் "தமிழாட" தமிழார்வலர்கள் மற்றும் அறிஞர்களின் ஊருக்குச் சென்று தங்கி, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி, தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு தத்தம் ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். அதேபோல, "அ.மு.ச."வைத் தேடித் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் அரசங்குடி வந்து தங்கி, தங்களது தமிழறிவை செம்மைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
 
இத்தனை பீடிகையும் எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்?
 
அத்தகைய தமிழ் ஆர்வலரின் மகனாக 10.11.1916ல் பிறந்தவர்தான் "அ.ச.ஞா." பிள்ளைப் பிராயத்திலேயே தமிழைச் சுவாசித்து வளர்ந்ததாலோ என்னவோ, பின்னாளில் அவர் தனது "தந்தையை விஞ்சிய தனயனாக" அனைவரும் போற்றும் தமிழறிஞராக வலம் வந்தார்.

அ.ச.ஞா.வைத் தமிழ் தேடி வந்து பற்றிக்கொண்ட கதை மிகவும் சுவையானது. 1935ல் லால்குடியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த "அ.ச.ஞா." தனது இடைநிலை வகுப்புக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதிலும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவை கற்று இடைநிலை வகுப்புத் தேர்விலும் வெற்றி பெற்றார். பட்டப்படிப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட பாடம் இயற்பியல். அதையும் அவர் விரும்பியேதான் ஏற்றதாகப் பின்னாளில் கூறியிருக்கிறார்.

அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நாவலர் சோமசுந்தர பாரதியாரின் கவனம் "அ.ச.ஞா."விடம் திரும்பியது. அ.ச.ஞா.வின் இலக்கணத் தெளிவும், இலக்கிய அறிவும், அவரது தமிழின் ஆளுமையும் நாவலர் சோமசுந்தர பாரதியாரை அசர வைத்தது. தமிழுக்குக் கிடைக்க வேண்டிய அரிய பொக்கிஷமொன்று, இயற்பியல் படிப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அன்றைய ஆசிரியர்கள் மாணவர்களின் வழிகாட்டிகளாக இருந்தனர் என்பது மட்டுமல்ல, திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது தங்களது கடமை என்றும் கருதினார்கள். "அ.ச.ஞா."விடம் தமிழ்த் துறைக்கு மாறிவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார் நாவலர். தனது தந்தை என்ன சொல்லுவாரோ என்கிற பயம் அ.ச.ஞா.வுக்கு. ஒரு நாள் நாவலர் சோமசுந்தர பாரதியாரே அரசங்குடிக்குச் சென்றுவிட்டார். அதுமட்டுமல்ல. அ.ச.ஞா.வின் பெற்றோரின் சம்மதத்துடன் இரண்டாண்டு இயற்பியல் படித்து முடித்திருந்த அ.ச.ஞா.வை, தமிழுக்கு மாறச் செய்து முதுகலைப் பட்டமும் பெற வைத்து விட்டார் அவர்.
அ.ச.ஞா.வின் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வரப்பிரசாதம், அப்போது அங்கே ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த "வெள்ளிநாக்குப் படைத்தவர்" என்று ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்ட சீனிவாச சாஸ்திரியாரின் நெருக்கம். அவரது அன்பும், ஆதரவும் அ.ச.ஞா.வின் ஆங்கிலப் புலமையைச் செழுமைப்படுத்தின எனலாம். பிற்காலத்தில் பல மொழிபெயர்ப்புகளில் அ.ச.ஞா. ஈடுபடுவதற்கு அந்த ஆங்கிலப் புலமை கை கொடுத்தது.

அவரது கல்லூரிப் பருவத்திலேயே, அ.ச.ஞா.வைக் கவர்ந்தவர்கள் "தமிழ்த் தென்றல்" என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையும். திரு.வி.க.வைத் தனது குடும்ப நண்பராக மதித்தவர் அ.ச.ஞா. திரு.வி.க.வின் மணிவிழாவுக்குத் தலைமை தாங்கியவர். அ.ச.ஞா.வின் துணைவியார் இராஜம்மாள்தான் என்று சொன்னால், அவர்களது உறவு எந்த அளவுக்கு நெருக்கமானதாக இருந்தது என்று புரிந்து கொள்ளலாம். திரு.வி.க.வைத் தனது குடும்ப நண்பராக கருதினார் என்றால், தெ.பொ.மீ.யைத் தனது குருநாதர் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் கொண்டார் அ.ச.ஞா.

சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை, போற்றிப் பேசப்பட்டதற்கு அங்கே பணிபுரிந்த தமிழ் பேராசிரியர்கள் முக்கிய காரணம். 1942 முதல் 1956 வரை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் "அ.ச.ஞா." பணியாற்றிய காலத்தில் பல தமிழ்ப் பணிகளை அவரால் மேற்கொள்ள முடிந்தது. அவரது மாணாக்கர்கள் பலர் தமிழாராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற உதவியதாலோ என்னவோ, அ.ச.ஞா.வின் மாணவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

1956 முதல் 1961 வரை "அ.ச.ஞா." இன்னொரு மிகப்பெரிய முயற்சியில் இறங்கினார். அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்த அவர், அதுவரை பண்டிதர்களால் மட்டுமே படிக்கப்பட்டு வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப காவியம் போன்றவற்றை நாடக வடிவமாக்கித் தமிழ்நாட்டில் பாமரர்களும் அந்த இலக்கியச் செல்வங்களைச் சுவைக்க வழிவகுத்தார்.

மதுரை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு "தெ.பொ.மீ." துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் அ.ச.ஞா.தான் என்பதில் அவரது குருநாதருக்கு சந்தேகம் இருக்கவில்லை. குருவின் கட்டளையை ஏற்று, 1970 முதல் 1973 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அ.ச.ஞா.வின் இறுதிக் காலம் சென்னையில்தான் கழிந்தது.
 
சென்னையிலும் அவரால் தமிழை விட்டுப் பிரிந்து இருக்க முடியுமா என்ன?
 
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் கம்பன் கழகம் போன்றவை அவரது தமிழார்வத்துக்கு வடிகாலாக அமைந்தன. சங்க இலக்கியம் தொடங்கி, சைவ சிந்ததாந்தம் வரை "செந்தமிழ் வித்தகர்" அ.ச. ஞானசம்பந்தனுக்குத் தெரியாத தமிழ் இலக்கியமே இல்லை எனலாம். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் இன்றும் பல முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கின்றன.

தனது 86 வயது வரை தமிழ்ப் பணி ஆற்றிய அ.ச.ஞா. 27.08.2002 அன்று காலமானபோது தமிழ் அழுதது!
 
தமிழ் இலக்கியம் தன்னைச் சுவைத்து இரசிக்கும் இரசிகனை இழந்தது! தமிழகம் ஒரு நல்ல தமிழ் அறிஞரின் இழப்பால் சற்று துவண்டது!
  
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *