"குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்பா
கலைமாமணி விக்கிரமன்
தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியாருக்குப் பிறகு எளிய நடையில் பாடல்கள் பாடி, சின்னஞ்சிறு கதைகள் எழுதியவர்கள் பலர் இருந்தனர்.
ஆனால், அழ.வள்ளியப்பாவின் பாடல்கள்தான் பிள்ளைகள் மனதைப் பெரிதும் கவர்ந்தன.
கை வீசம்மா கைவீசு
மாம்பழமாம் மாம்பழம்
என்ற அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பாடும்போது வாய் தேனூறும்.
சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும், ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பா, "குழந்தைக் கவிஞர்" என்ற அடைமொழிக்கு உரியவர்.
புதுக்கோட்டை மாவட்டம், இராயவரம் என்ற சிற்றூர் பல எழுத்தாளர்களைப் பெற்றெடுத்தது.
அக்காலத்தில், புதுக்கோட்டையில் கண்ணபிரான் என்ற அச்சகம், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டு வந்தது.
எழுத்தாளர்கள் பலர் கூடும் சங்கப் பலகையாகவும் அது திகழ்ந்தது.
அதன் உரிமையாளர் பரசுராமனும் அவர் மகன் வெங்கட்ராமனும் சிறுவர் பத்திரிகை ஒன்றைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்தனர்.
குழந்தை இலக்கியத்தை வளர்த்த அந்த இராயவரத்தில், 1922ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சிக்கு மூன்றாவது குழந்தையாக வள்ளியப்பா பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன்.
பிற்காலத்தில் வள்ளியப்பா ஆனார்.
செட்டிநாட்டில் நகரத்தார்கள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை முதல் எழுத்துகளாகக் கொள்வர்.
அந்த வகையில், "அழ.வள்ளியப்பா" ஆனார்.
வள்ளியப்பா, இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
பிறகு இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வர ஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
அதே பள்ளியில்தான்,
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- கல்கி சதாசிவம்
- பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்ப செட்டியார்
ஆகியோர் படித்தனர்.
இந்தப் பள்ளிக்கு 1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்திருக்கிறார்.
அந்தப் பள்ளியில் படித்தபோதுதான், அழ.வள்ளியப்பா குழந்தைக் கவிஞராக அவதாரமெடுத்த முதல் நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு நாளும் மாலையில் பள்ளி முடிந்தவுடன், பள்ளித் தோழர்களுடன் வள்ளியப்பா நடந்தே வீட்டுக்குச் செல்வார்.
அப்போது இராமசந்திரபுரத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது.
"இலாஸ்ட் ஜங்கிள்" என்ற ஆங்கிலப் படத்தை "காணாத காடு" என்று தமிழில் மொழிபெயர்த்துச் சுவரொட்டிகளில் அச்சிட்டிருந்தனர்.
"காணாத காடு" என்ற அந்தப் பெயரை வள்ளியப்பா உரக்கப் படித்தார்.
பிறகு, "காணாத காடு… கண்டுவிட்டால் ஓடு" என்று உரக்கப் பாடினார்.
உடனிருந்த பள்ளித் தோழர்களும் அதைப் பாடிக்கொண்டே வள்ளியப்பாவைத் தொடர்ந்து ஓடினர்.
சிறுவன் வள்ளியப்பா மீண்டும், அடுத்து ஒரு வரியைச் சேர்த்து, "காணாத காடு…கண்டுவிட்டால் ஓடு…ஒளிய இடம் தேடு" என்று பாடினார்.
இப்பாடலை நண்பர்களும் உரக்கப் பாடிக்கொண்டே ஓடினார்கள்.
மீண்டும்,மீண்டும் பாடிக்கொண்டே ஓடினர்.
புதிதாக ஓரிரு வரிகள் சேர்ந்தன.
"காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு
ஏழைகள் படுவதோ அரும்பாடு
டிக்கெட் விலையோ பெரும்பேடு!”
முழுப் பாட்டு பிறந்துவிட்டது.
வள்ளியப்பா, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிந்தவுடன் மேலே படிக்க முடியவில்லை.
அந்த ஊரைச் சேர்ந்த வை.கோவிந்தன் தாம் தொடங்கியுள்ள "சக்தி" காரியாலயத்தில் பொருளாளராக நியமிக்க சென்னைக்கு அழைத்து வந்தார். அங்கேதான் தி.ஜ.ர. முதலிய பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்தார் வள்ளியப்பா.
"ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.
அந்தக் கதைக்குக் கிடைத்த பாராட்டே பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளராக – கவிஞராக உயர்வதற்கு வழிவகுத்தது.
சென்னை வாழ்க்கை அவருக்குப் பல மாறுதல்களை அளித்தது.
உரிய வயதில் வள்ளியப்பாவுக்குத் திருமணம் நடைபெற்றது.
மனைவியின் பெயர் வள்ளியம்மை.
வள்ளியப்பாவுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.
பிறகு, இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார்.
அங்கிருந்தபோதுதான் வங்கி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைத் தந்து பாராட்டைப் பெற்றார்.
ஸ்டேட் வங்கியும், வங்கியில் பயன்படும் சொற்களுக்காக குழு ஒன்று அமைத்து, கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியபோது, அந்தக் குழுவுக்கு ஆலோசனை கூறிப் பாராட்டைப் பெற்றார்.
வள்ளியப்பா என்ற பெயரைச் சொன்னவுடன் "மலரும் உள்ளம்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட குழந்தைப் பாடல்கள் தொகுப்பே அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
"மலரும் உள்ளம்" வள்ளியப்பாவின் முதல் கவிதைத் தொகுதி, 1944ஆம் ஆண்டு வெளிவந்தது.
அந்த முதல் தொகுதியில் 23 பாடல்களே இருக்கும்.
1954இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும்,1961இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார்.
"சிரிக்கும் பூக்கள்" என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், "குழந்தைக் கவிஞர்" என்ற பெயரிட்டு அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.
"மலரும் உள்ளம்" என்ற பெருந்தொகுதியிலிருந்து சில கவிதைகளைப் பிரித்து
- பாப்பாவுக்குப் பாட்டு
- சின்னஞ்சிறு பாடல்கள்
- சுதந்திரம் பிறந்த கதை
என்று தனித் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
- நேரு தந்த பொம்மை
- பாட்டிலே காந்தி
என்ற சிறுவர்களுக்கான காப்பியமும் வெளிவந்துள்ளன.
கவிஞர் அழ.வள்ளியப்பாவுக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடம் பெரிதும் மதிப்புண்டு. அவரிடம் நேரில் சென்று வாழ்த்துப்பெற விரும்பினார் வள்ளியப்பா. தேசிக விநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பாவின் பாடல்களை முழுமையும் படித்து மகிழ்ந்தார். உடனே, ஐந்து வாழ்த்துப் பாடல்களை எழுதிக் கொடுத்து வாழ்த்தினார்.
"பாலும் பழமும் ஏனம்மா? பசியே இல்லை" எனக் கூறிச்சீலச் சிறுவர் சிறுமியர்கள் சிறந்த "மலரும் உள்ளம்" இதைக்காலை மாலை என்றென்றும் கற்று மகிழச் செய்யும் இந்திரஜாலக் கவிஞன் வள்ளியப்பன் தழைத்து வாழ்க, வாழ்கவே! இந்த வரிகள் போதுமே… நோபல் பரிசைவிடச் இந்தப் பாராட்டு சிறந்ததன்றோ? ஒரு கவிஞரைப் பிரபல கவிஞர் ஒருவர் பாராட்டுவது முற்பிறவிப் புண்ணியமல்லவா?"
வள்ளியப்பா தன் பாடல்களில் உயர்ந்த கருத்துடன், ஓசை நயமும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
பாடல்களின் சந்தம் சிறுவர்களைக் கவரும்.
அத்தகைய இன்பத்தை அளிப்பவை வள்ளியப்பாவின் பாடல்கள்.
பல நாட்டு விடுகதைகள் போல் நம் குழந்தைகளும் கேட்டு, பாடி மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பல நாட்டு விடுகதைகளை "வெளிநாட்டு விடுகதைகள்" என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார்.
குழந்தைக் கவிஞர் என்று பாராட்டப்பட்ட அழ.வள்ளியப்பா, நகைச்சுவையுடன் நற்பண்புகளை வளர்க்கும் கதைகளையும் எழுதியுள்ளார்.
பத்திரிகை நடத்துவதிலும் அதிக விருப்பம் உடையவர்.
சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று பத்திரிகைகளைத் தயாரிக்க, படத்துடன் தகவல்களையும் அனுப்பிய சாதனையாளர்.
அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் "பூஞ்சோலை".
தமிழ் எழுத்தாளர் சங்க வளர்ச்சிக்கு வள்ளியப்பாவின் பங்கு அளவிடற்கரியது.
குழந்தைகளுக்காக, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவி, திறம்பட நடத்தி, பல குழந்தை எழுத்தாளர்களை அவர் உருவாக்கியது, குழந்தை எழுத்தாளர்களால் மறக்க முடியாதது.
பல எழுத்தாளர்களுக்கு இக்கட்டான நிலையில் காலமறிந்து உதவியவர் அழ. வள்ளியப்பா.
இந்தியன் வங்கியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு காரைக்குடியில் வட்டார மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுக் காரைக்குடிக்குச் சென்றார்.
குழந்தைக் கவிஞர் எழுதிய நூல்கள்,
- பாடல்கள் தொகுதி 11
- கதைகள் 12
- கட்டுரை நூல்கள் 9
- நாடகம் 1
- ஆய்வு நூல் 1
- மொழிபெயர்ப்பு 2
- தொகுப்பு நூல் 1
ஆக, 37 நூல்கள்.
இவற்றில்,
- இந்திய மத்திய அரசின் பரிசு பெற்றவை 2
- தமிழக அரசின் பரிசு பெற்றவை 6
குழந்தை இலக்கிய மேம்பாட்டுக்காகவே தம் வாழ்நாள் முழுமையும் கழித்த குழந்தைக் கவிஞர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர் என்ற முறையில், "குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்.
பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் 1989ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி காலமானார்.
"உயிர், குழந்தை இலக்கியத்துக்கு;
இந்த உடல்தான் தமிழ் மண்ணுக்கு",
என்று வாழ்ந்த வள்ளியப்பாவின் மறைவு குறித்து இலக்கிய உலகமே கண்ணீர் வடித்தது.
நன்றி:- தினமணி