அருள்மிகு முருகன் திருக்கோயில் [ ஜுரோங் ]
Jurong Arulmigu Murugan Temple
கிருஷ்ணன், சிங்கை.
ஜுரோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முருகன் ஆலயம், இந்த நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஆலயமாகும் . ஜுரோங் சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்குகிறது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் ஜுரோங் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அப்பகுதியில் வாழும் இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியர்கள் மிக குறைந்த அளவில் இவ்வட்டாரத்தில் வாழ்ந்த போதும், சுமார் நான்கு மில்லியன் வெள்ளிக்கு மேல் நிதி திரட்டி இவ்வாலயத்தை அமைத்துள்ளார்கள்.
முதல் மகா கும்பாபிஷேகம் 28-11-2004 அன்று நடைபெற்றது. ஒத்துழைப்பும், எழுச்சியும் கொண்ட 15,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.மகா கும்பாபிஷேகம் நடைபெற சரியாக ஐந்து நிமிடங்கள் இருந்த போது வியக்கத்தக்க வகையில் கருடன்கள் வானத்தில் வட்டமிட்டன.
பல்வேறு நிறுவனங்கள், மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு 15.1.2005 முதல் ஸ்ரீ முருகனின் வெள்ளி இரத ஊர்வலமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அமைதியான சூழலில் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மூலவராக முருகப் பெருமான் வேலுடன் மிகக் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இடப்புறம் விநாயகப் பெருமானும், வலப்புறத்தில் இடும்பனும் இருக்கிறார்கள்.
தனி சன்னிதியில் சிவபெருமானும், அம்பாளும் இருக்கிறார்கள். தனி சன்னிதிகளாக நவக்ரஹங்களும், தியான நிலையில் ஆஞ்ஜநேயரும் அருள் பாலிக்கின்றனர். சன்னிதியின் இடப்புறம் சுமார் ஏழு அடி உயரத்தில் துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். சுதையிலான துர்க்கை அம்மன் பொன் நிறத்தில் மிளிர்கிறாள். அப்படி ஒரு பிரகாசமான அழகு! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
அதிக சன்னிதிகள் இல்லாமல் கச்சிதமாக, விலாசமான முற்றத்துடன் இவ்வாலயம் திகழ்கிறது. தியானம் செய்வதற்கேற்ற அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது [ஜுரோங்] அருள்மிகு முருகன் திருக்கோயில்.
ஆலய முகவரி
Arulmigu Murugan Temple,
Jurong Street. 21
Singapore.149594
65633613 /Fax. 64725883