Home Palm Leaf 8 – திருவள்ளூர்

8 – திருவள்ளூர்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !- ௮ (8 )



கரிவலம் வந்த நல்லூரில்   வரகுணபாண்டியருடைய  ஏட்டுச் சுவடிகள் எல்லாம்  ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் .


"வரகுணபாண்டியர் வைத்திருந்த  ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் இருக்கின்றனவாமே ?"

 

"அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன " 


"வாருங்கள் போகலாம் "

 

"அந்தக் கூளங்களையெல்லாம் எனன செய்வதென்று யோசித்தார்கள் .ஆகம சாஸ்திரத்தில்  சொல்லியபடி செய்து விட்டார்கள்"

 

"எனன செய்துவிட்டீர்கள் ? "

 

"பழைய ஏடுகளைக்  கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாதாம் .அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம் ,


இங்கே அப்படித்தான் செய்தார்கள் "


 "ஹா  !  "   என்று என்னையும் மறந்து விட்டேன்
                                       
                    —   என்சரித்திரம் (உ வே சா)  பக்கம்  666

 

 
நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓலைச்சுவடி தேடுதல் ஆரம்பித்தபோது முதலில் போன இடம்  கரிவலம் வந்தநல்லூர் தான்.

யார் சொல்லியும் அங்கே போகவில்லை! ஆனால் ஏனோ சென்றோம்.

என்னவோ சங்கரன் கோயிலில் தங்கியிருந்த ஐந்து நாளும் அங்கே போக நேர்ந்தது .அதன் அருகில் இருந்த ஓர் ஊரில்  நான்கு இடங்களில் இருந்து ஓலைகளைப் பெற்றோம்.  ஓரிடத்தில் அதிகச் சுவடிகள் கிடைத்தது.
ஆனால் கரிவலம் வந்த நல்லூரில் கோயிலுக்கு மட்டும் போக வில்லை;  காரணம் வழக்கம் போல் நேரமின்மை.
 
ஆச்சரியம் என்னவென்றால் அப்போது எங்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்தச் செய்தியை  நான்  படித்ததே சில நாட்களுக்கு முன்தான்  இந்த நூலைச் சில வருடம் முன் படித்தது உண்டு ஆனால் ஊரின்  பெயர் முற்றிலும் நினைவில் இல்லை.
 
ஆனாலும் இன்னும் ஹோமத்தில் இடப்படாமல் பல ஓலைச் சுவடிகள் அங்கே  கிட்டியது  நம்பிக்கையைத் தூண்டுகிறது.  ஏன் நேரே கரிவலம் வந்த நல்லூர் சென்றோம் ? ஏன் திரும்பித் திரும்பி அங்கே போக நேர்ந்தது ?  இதற்கெல்லாம் பதில் இன்னொரு முறை  அங்கே போனால்தான் தெரியும் போலிருக்கிறது !
 

திருவள்ளூரில் ! 

பிப் மாதம்  13  ஆம் நாள் அன்று எங்கள்  திருவள்ளூர் மாவட்டம் ஓலைச் சுவடிகள்  தேடுதல் துவங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் மூவரும் குறிப்பிட்ட  இடத்தில் சந்தித்தோம். திருவள்ளூர் மணவாள நகர் நாங்கள் சந்திக்கக் குறிப்பிட்டிருந்த  இடம். அங்கே இருந்து ஒரு மகிழ்வுந்து ஏற்பாடு செய்து கொண்டோம்.  திருவள்ளூர் மாவட்டம்  8 வட்டம் ,  14  ப்ளாக் கொண்டது.

இதில்  650  கிராமங்கள் இருக்கின்றன. எங்களிடம் இருக்கும்  NMM  பட்டியலில் மொத்தம்  126  முகவரிகள் இருந்தன . நாங்கள் இந்த மாவட்டத்தையும் ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம் .
 

எங்கள்" ஓலைச் சுவடி ஊர்தி" பயணத்தைத் தொடங்கியது. ஒரு நீண்ட ஆற்றின் பாலத்தைக் கடந்த போது  ‘இதுதான் குசஸ்தலை ஆறு’ என்றதோடு  அங்கிருந்த அகஸ்தியர் கோயிலையும் போகும்போதே காட்டினார் முனைவர் கோவை மணி ; அந்த ஆற்றின் கரையில் பல சிவன் கோயில்கள் இருப்பதைப்பின் அறிந்தேன். திரு கோவை மணி அவர்களுக்குப் பிறந்த ஊர் திருத்தணி பக்கம்தான். எனவே திருவள்ளூர் அவரது சொந்த மாவட்டம். என்ன இருந்தாலும் சொந்த ஊர்ப் பாசம் யாரை விடும்? மகிழ்வுடன் காணப்பட்டார் முனைவர்.  அவர் காட்டிய அகஸ்தியர் கோயிலை நோக்கி மனத்தில் ஒரு வேண்டுதலை விடுத்தோம்.
 
அகத்தியர் கோயில் இல்லாத மாவட்டமே தமிழ் நாட்டில் கிடையாது .

ஆனால் அவர் வடக்கே கயிலாயத்தில் இருந்துதானே வந்ததாக வரலாறு கூறுகிறது எனவே  திருவள்ளூர் வந்திருக்க வாய்ப்பு இருக் கிறது என்று எண்ணி இந்த மாவட்டத்தில் கையில் கொஞ்சமாவது ஓலைச் சுவடிகள் கிடைக்க அவர் அருள் வேண்டினோம். முதலில் திருவாலங்காடு பிளாக் பாதையை தேர்ந்தெடுத்து எங்கள் பயணம் அமைந்தது. வழக்கம் போல் பட்டியலில் இருந்த பெயர்கள் சில சமயம் கொஞ்சம் குழப்பத்தை அளித்தன.

ஒரு பிளாக் என்று கொள்ளாமல் போகும் வழியில் இருந்த ஊர்க ளையும் பார்த்துக் கொண்டு சென்றோம். அலைந்து திரிந்து முகவரி களைத் தேடியபோதும் இல்லை என்ற பதிலையே பெறமுடிந்தது.
அம்மையார் குப்பம், அருங்குளம், திருமுல்லை வாயில் எனப் பார்த்த ஊர்கள்; ஊர்கள் வரிசைதான்   நீண்டன .

A ARUMUGAM
AMMAIYARKUPPAM
AMOIL TAMIL SANGA ST, 
TIRUVALLUR DIST
என்று இருந்த முகவரியைத்தேடி ,அலைந்து ஓய்ந்த போதுதான் தெரிந்தது அது அறநெறி தமிழ்ச் சங்க தெரு என்று; இப்படிப்பட்ட குழப்பங்கள் நிறையவே  இருந்தன.

அருங்குளம் எனும் சிற்றூர் எங்களை வியப்பில் ஆழ்த்தியது .எங்கள் பட்டியல்படி சிவன் கோயில், சமணர் கோயில் என இரண்டு முகவரி கள் இருந்தன. ஆனால் சமணர் கோயில்தான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது . அருகில் சென்ற போது ஏனோ  திருவதிகை சிவாலயம் நினைவு வந்தது; உள்ளே சென்று பார்த்தால் மிகப்பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் நடுவில் அமைத்த கருவறை, உள்ளே சென்று  பார்த் தாலோ சமணர்களின் தீர்த்தங்கரர் வடிவம். இத்தனை பெரிய கருங்கல் பாறைகளால் அமைந்த சமணக் கோயிலை நான் இதுவரைக் கண்ட தில்லை; ஆனால் நின்று பார்க்க நேரம் இல்லாததால் மீண்டும் ஒரு முறை இதைப் பார்க்கவென்று  வரவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அங்கே  இருந்த அகஸ் தீஸ்வரர் கோவிலையும் தொலைவில் இருந்தே ஒரு பார்வை பார்த்து நகர்ந்தோம்.

 

இந்த மாவட்டப் பட்டியலிலும் நிறையக் கோயில்கள்  இடம் பெற்றி ருந்தன; எதையும் விடமனமில்லாமல் கோயில் கோயிலாக அலைந் தோம் . திருமுல்லைவாயில் கோயிலிலே வெள்ளெருக்கு வேர்களினா லேயே கருவறைத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்; குருக்கள் உள்ளே இருந்ததால் அங்கே செல்ல நேர்ந்தது .

பெரியபாளையம் கோயிலுக்குச் சென்று ஓலைச் சுவடிகளைப்பற்றிப் புலன்விசாரணை செய்து விட்டு இல்லை என்றதும் கிளம்பினோம்; கோயில் அதிகாரி "இருந்து அம்மனை தரிசித்துவிட்டுப் போங்களேன் " என்று கூறியபோது நேரமில்லை எனக் கூறி விரைந்த எங்களை வியப் பாகவே பார்த்தார் அந்த  அதிகாரி. எனன செய்வது எங்கள் அவசரம் எங்களுக்கு; ஐந்து நாளில்  126  முகவரியைப்  பார்க்க வேண்டுமே !

 

திருநின்றவூர் என்ற அழகிய ஊர் அந்த ஊரின் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது; சிறந்த வைணவத் தலம்.  அங்கும் அப்படிதான் "என்னைப் பெற்ற தாயார்" எனப் பெயர் பெற்ற அந்தப் பிராட்டியையும் பார்க்க நேரம் இல்லாமல் விரைந்தோம்; வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கிவிட்ட பக்தவத்சலனாரையும் பார்க்க நேரமில்லை.

திருமழிசைக் கோயில் எங்கள் பட்டியலில் இல்லை; எனவே உள்ளே செல்லும் பேறும் கிட்டவில்லை. கோபுர தரிசனம்   மட்டுமே கிடைத்தது. பிராயம் பத்து என ஓர் ஊர்; திருமழிசை ஆழ்வார்  10 வயதுவரை அங்கு இருந்ததால் அந்தப் பெயராம் அந்த ஊருக்கு.  அங்கும் இந்தக் கதை சொல்ல வந்த பெண்மணியிடம் பேச நேரம் இல்லை என ஓட்டம்.

திருவாலங்காடு இருமுறை செல்ல நேர்ந்தது ஆனாலும் கோயிலின் மதில் சுவரை மட்டுமே தரிசித்தோம். அத்தனை வேகம் எங்கள் குறி யெல்லாம் ஓலை சுவடியிலே ! திருவேற்காடு சென்றோம், அங்கேயும் அப்படித்தான்; கோயில் அருகில் கூடச் செல்லவில்லை. ஓலைச் சுவடி இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை என்பது போல் ஒரே ஓட்டம்தான்;  எப்படியாவது இந்த மாவட்டத்தில் ஓலைச் சுவடிகளைப் பெற்றிடவேண்டும் என்னும்  துடிப்பு எங்கள் அனைவரிடமும் இருந்தது.

அங்கே ஐயப்ப சாமி மடம் என ஒரு முகவரி இருந்தது. எங்களுக்கு உண்மையிலேயே அதன் முக்கியத்துவம் தெரியாது. வழக்கம் போல் விசாரிப்புக்கு உள்ளே சென்றோம். சென்றதும் வியப்படைந்தோம் ! தஞ்சைப் பெருவுடையாருக்குக் குடமுழுக்கு நடத்திவைத்த வயது எண்பதுக்கு மேல் ஆகிப் பழுத்த ஞானியாக விளங்கும்  ஐயப்ப சுவாமி கள் அங்கே  அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் .

 

நாங்களும் அருகில் சென்று எங்கள் ஓலைச் சுவடி தேடுதல் பற்றிப் பணிவுடன் கூறினோம் ; எங்கள் மூவரையும் தலையில் கைவைத்து வெற்றி பெற வாழ்த்தினார். ஆனாலும் அங்கேயும் ஓலைச் சுவடி கிடைக்காதது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அங்கே ஆசியுடன் சுவையான சாப்பாடும் எங்களுக்குக்  கிடைத்தது. சுவாமிகளின் அன்புக் கட்டளையைத் தட்ட  இயலாமல் அங்கே கிடைத்த உணவை உண்டு அடுத்த இடம் நோக்கி புறப்பட்டோம்.

திருத்தணி வட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான கோயிலை கண்டோம். சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே அமைத்து இரண்டையும் சேர்த்து வழிபடும் வியப்பினை அங்கே கண்டோம்.  சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலில் வேறு வேறு இடங் களில் இருப்பதைக் கண்டதுண்டு.  சிவனும் விஷ்ணுவும் பாதி பாதி உடலாக அமைத்த  ஓருருவம் கொண்ட சங்கர நயினார் கோயிலும்  கண்டதுண்டு. ஆனால் சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே நிறுத்தி வழிபடுவதை இங்குதான் கண்டேன்.

இப்படியாக எங்கள் தேடல் அலைச்சல்  முதல் சுவடிக்கட்டுகளைப் பெறப்போகும் பழவேற்காடு போகும் வரை நீண்டது .அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றிதான்.  பழவேற்காட்டில்தான் எங்கள் தேடுதலின் முதல் வேட்டை கிடைத்தது. அந்த விபரம் அடுத்த பதிவில் பார்ப்போம்.
 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment