Home Palm Leaf 7 – சென்னை

7 – சென்னை

by Dr.K.Subashini
0 comment

 

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !   ௭  – (7 )

 

ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத்  தேடுதல்  !

கோயில்களுக்கு அடுத்தபடியாக  எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடிச்சென்று பார்த்தோம். ஆனால்  நாடி ஜோதிடர்கள் யாரும்  நாங்கள் அவர்களை   நாடியபோதும்  திறந்த மனத்துடன் எங்களை வரவேற்க வில்லை; எங்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர்.
.
ஒரு நாடி ஜோதிடர் எங்களைப் பார்த்ததும் ஏதோ சரியான கிராக்கி கிடைத்து விட்டது என அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வந்தவர்,  நாங்கள் சுவடி தேடி வந்திருக்கிறோம் என்றவுடன் முகம் மாறி, உடல் வேர்த்து  ‘ எங்களிடம் எந்தவித ஓலைச் சுவடியும் இல்லை;  தேவைப் படும் போதெல்லாம் வைத்தீஸ்வரன் கோவிலில் எங்கள் குருவிடம்    கேட்டுவாங்கிப் பின் திருப்பி அனுப்பிவிடுவோம்"  என்றார். எங்களை விரைவில் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார். ஒரு வழியாக நாங்கள் கிளம்பியதும்  ’யாருயா இந்த மாதிரி ஆளுங்களை உள்ளே விட்டது ?  இனி சரியாக விசாரித்து உள்ளே விடுங்கப்பா’ என இரைந்தது நாங்கள் தெருக்கோடி போகும்வரை எங்கள் காதில்  ஒலித்தது. மனிதரில் இத்தனை விதமா?   என வியந்தபடி அடுத்த இடத்திற்கு நடையைக் கட்டினோம் .

ஆனால் மதுராந்தகத்தில் ஓர் உண்மையான நாடி ஜோதிடரைப் பார்த்ததையும் அவரிடம் இருந்த சுவடிகள் அனைத்தையும் காட்டிய தையும், அத்தனையும் உண்மையான ஜோதிடச் சுவடிகளாக இருந்த தையும் பின்னால் விரிவாகக்  கூறுகிறேன்.

முருகு ராஜேந்திரன் என்ற ஒரு முதிய  ஜோதிடரை வடபழநியில் சந்தித்தோம்; எனக்கும் அவரைத் தெரியும் .இரண்டு ஜோதிடப் பத்திரிக் கைகளை நடத்தி வருகிறார்.  அவர் எங்களை அன்புடன் வரவேற்றார். அவரது மகனும் (B.A.B.L )  ஜோதிடம் பார்த்து வருவதையும்    கூறி அறிமுகப்படுத்தினார் .அவரிடம் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த ஜோதிட  நூல்களை மின்னாக்கம்  செய்து கொள்ள அனுமதி வழங்கினார்.

பிறகு வேறு சில இடங்களைப் பார்த்து அரும்பாக்கம் சித்த மருத்துவ  ஆராய்ச்சி நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கே அலுவலகத்தினுள் சென்றதுமே கண்ணாடி அலமாரிகளில் அடுக்கடுக்காக ஒவ்வாரு தட்டிலேயும் அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள்தான் எங்கள் கவனத்தை முதலில் ஈர்த்தன; அத்தனை சுவடிகளை ஒரே இடத்தில் எதிர்பார்க்கவில்லை! சந்தோஷமும் இத்தனை அத்தனை இல்லை எங்களுக்கு ! அந்த  நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ  இயங்குவது. நாடெங்கிலும் கிடைக்கும் சித்த மருத்துவ ஏடுகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறார்கள். அனைத்தும் அருமையான சித்த மருத்துவ நூல்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே  வள்ளுவரே இத்தனை சிறப்பாக, விளக்கமாக மருந்து என ஒரு அதிகாரமே யாத்திருக்கிறார் என்றால், அதற்கு எத்தனை காலம் முந்தையதாக நமது தமிழ் மருத்து வம் இருந்திருக்கும் ? அத்தனை தமிழர் தொல் அறிவும் இப்படி உலகால்  அறியப்படாமல் அங்கீகாரம் இன்றி உறங்குவது ஏக்கத்தைத் தந்தது .

என்னசெய்வது, எதற்கும் காலம் கூடிவரவேண்டுமே என எண்ணிக் கொண்டே , அந்த நிறுவனத்தின்  இணை இயக்குனர்  Dr. ஜகஜோதிப் பாண்டியன் அறைக்குள் நுழைந்தோம். அவரும் எங்களை இன்முகத்து டன் வரவேற்றார். சுவையான பேச்சு சிறிது நேரம் சித்த மருத்துவத்தின் ஆழம் குறித்து நடந்தது. சுவடிகள் பாதுகாப்பு அவர்களின் பணிகளில் ஒன்று; எனவே  சுவடிகளைக் கொடையாகப் பெறும் பேச்சுக்கே இட மில்லை. ஆனால் இதுவரை சுவடிகள் மின்னாக்கம் செய்யப் பட வில்லை என்பதறிந்து அவரிடம் அனுமதி கேட்டோம். அவர் முறைப் படி அணுகக் கூறினார் .

பின் அடுத்த தேடுதலை நோக்கிய பயணத்திற்காகச்  சுவடிகளை ஏக்கப்பார்வை  பார்த்தபடியே  விடைபெற்றோம் .

பிறகு அஹோபில மடம் சார்பில் நடத்தப்பெறும் நரசிம்ஹ பிரியா பத்திரிக்கை அலுவலம்,கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி முதலிய இடங்களுக்கும் ஆசையுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பினோம் .
சில பள்ளிக்கூடங்களும் பட்டியலில் இருந்தன; அங்கும் சென்றோம்.

வடபழனியில் ஒரு வீட்டில் முகவரியில் இருக்கும் கார்த்திக் என்பவரின் கைபேசி எண்ணை மிகுந்த சிரமத்தின் பேரில் பெற்றோம். வீட்டில் இருப்பவர்களும் ஓலை அவரிடம் இருப்பதாக கூறியதும் எங்கள் ஆவல் எல்லை மீறியது .ஆனால் கார்த்திக்கிடம்  50 ஏடுகள் வடமொழி மந்த்ரம் அடங்கிய சுவடி இருப்பதாகவும், ஆனால் அவர் காஞ்சியில் வேலை செய்வதாகவும்,  வரும்போது தெரிவிப்பதாகவும் கூறினர்.
இவ்வாறு எங்கள் தேடுதல் நிர்ணயித்த ஐந்தாம் நாளை அடைந்தது.

பெரும்பாலும் எல்லா முகவரிகளையும் பார்த்துவிட்டோம்; பட்டியல் எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் என மெல்லப் புரிய ஆரம்பித்தது .

ஆனால் எதிர்ப்பார்த்த சில இடங்களில் கூடச் சுவடி இல்லாதது வியப்பை அளித்தது; உதாரணமாக  Chennai fort museum  முகவரி கூடப் பட்டியலில் இருந்தது . அங்கே தக்க அதிகாரிகளை அணுகிப் பார்த்த போது சுவடிகளே அங்கே இல்லை; இது சற்று  வியப்பாகவே இருந்தது.

ஒருவாறு  சென்னை மாவட்ட  5  நாள் தேடல் முடிந்தது; தொடர்ச்சியாகச் சுவடிகளைப் பார்த்தோம்; ஆனால் கொடையாகப் பெற முடியவில்லை. மின்னாக்கம் செய்ய அனுமதி கேட்டோம். எப்படி அணுகுவது என ஒரு தெளிவு பிறந்தது. ஒருவழியாக அடுத்த தேடுதல் திருவள்ளூர் மாவட்டம் என முடிவு செய்து அவரவர் ஊருக்கு அடுத்த பயணம் ஆயத்தப் படுத்திக்கொள்ளப் புறப்பட்டோம்.
 

அடுத்து திருவள்ளூரில் ! 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

You may also like

Leave a Comment