Home HistoryEtayapuram 43. எட்டீஸ்வரன்

43. எட்டீஸ்வரன்

by Dr.K.Subashini
0 comment

 

43. எட்டீஸ்வரன்

 

 

எட்டயபுரத்தில் உள்ள மிகப் பழமையான ஒரு கோயில் என்பதோடு மிகப்பெரிய கோயில் என்றும் இந்த எட்டீஸ்வரன்  கோயிலைச் சொல்லலாம். எட்டயபுர ஜமீன் அரண்மனையின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது இந்த சிவாலயம்.
 
வம்சமணிதீபிகை நூலிலுள்ள குறிப்புக்களின் படி இந்த சிவாலயம் ஆங்கில வருடம் 1565ல் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். எட்டயபுரத்தின் மன்னர்களின் பெயர் வரிசையை எட்டயபுர அரச வம்சத்தினர் பற்றிய பகுதியில் (பகுதி 27) வரிசைப்படுத்தியிருந்தேன். அதில் இந்த அரச வம்சத்தினரில் 20வது பட்டமாகிய ராஜா ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர்  தான் எட்டயபுரம் என்னும் நகரை உருவாக்கியர் என்றும் இந்நகரை உருவாக்கி இந்த நகரில் சிவாலயம் ஒன்றினைக் கட்டி இங்கே சிவனை பிரதிஷ்டை செய்து வைத்து இன்று எட்டயபுரம் என்றழைக்கப்படும் நகருக்கு வித்திட்டவர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்த ராஜா 19வது பட்டமாகிய ராஜா ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கரின் மகன்.
 
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மதுரை நாயக்க மன்னர் இன்றைய தமிழகத்தின் குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதி மீது படையெடுத்திருக்கின்றார்.  இவருக்கு இப்போரில் துணைபுரிந்திருக்கின்றார் எட்டயபுரத்து ராஜா.  இந்த மன்னர் போர் முடிந்து திரும்பி வரும் சமயம் காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவனால் அம்பெய்தி கொல்லப்பட்டிருக்கின்றார். இந்த சம்பவத்திற்காக மதுரையில் இராஜ்ஜியப் பரிபாலனம் செய்து வந்த கிருஷ்ணப்ப நாயக்கர் எட்டயபுர ஜமீனுக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கழுகுமலைக் கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் "இரத்த காணிக்கையாக" வழங்கியிருக்கின்றார்.  அதுமட்டுமன்றி எட்டயபுர மன்னர்களுக்கு அய்யன் எனும் பெருமை தரும் பட்டப்பெயரையும் வழங்கி சிறப்பித்திருக்கின்றார் மதுரை நாயக்கர். இதனால் 21வது பட்டம் தொடங்கி இந்த ஜமீன் பரம்பரையினரின் பெயரில் அய்யன் என்ற பெயரும் இணைந்தே வழங்கப்பட்டு வந்துள்ளது. எட்டயபுர அரச வம்சத்தினர் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய பகுதியில் (பகுதி 27, 28ல்) இதைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம். இச் செய்தியை வம்சமணி தீபிகை இப்படி குறிப்பிடுகின்றது.
 
"இவர்களிடத்தில் மதுரையிலிருந்து இராச்சியாதிகாரஞ் செய்த கிருஷ்ணப்பநாயக்கர் அய்யனவர்கள் மலையாளத்தைப் பிடிப்பதற்குச் சகாயம் செய்யும்படிகேட்டுக்கொண்டதில் இவர்கள் அநேகஞ்சேனைகளோடு நாட்டுக்கணக்கு சிதம்பரநாதபிள்ளை பெத்தணன் தளவாய் இவர்களோடுங் கூடப்புறப்பட்டு மலையாளத்திலிருந்த இரண்ணியலென்ற கிராமத்தின் கோட்டையைப் பிடித்து திரும்பிவரும் பொழுது ஊத்துமலைக் காட்டில் மறைவாக இருந்த ஒருவன்  எய்த அம்பினாற் காயப்பட்டுத் தேகவியோகமடைந்தார்கள். கர்த்தாக்கள் அந்தவிர்த்தாந்தங்களைக்கேட்டு விசனமடைந்து அவர்களுக்குக் கழுகுமலைச் சீமையை இரத்தமானியமாக விட்டுக் கொடுத்து ஐயனவர்களென்ற பட்டப்பெயருங் கொடுத்தார்கள்" (பக்கம் 33)
 
ஆக, ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் ஆட்சி செய்த காலம் மொத்தம் 19 வருடங்கள். இவரது மறைவுக்குப் பின்னர் இவரது குமாரன் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன் ஆட்சிக்கு வந்தார். இந்த மன்னர் தொடங்கி அய்யன் என்ற பட்டப்பெயர் இந்த ஜமீன் பரம்பரைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

 
1565ல் எட்டயபுரம் என்ற நகரத்தை உருவாக்கி அங்கே சிவாலயம் எழுப்பி எட்டீஸ்வரனை பிரதிஷ்டை செய்து வைத்த பெருமைக்குரியவர் இந்த ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர்.
ஆக ஏறக்குறை 420 வருட பழமை வாய்ந்தது இந்த எட்டீஸ்வரன் கோயில்.
 
 ஜமீன் அரண்மனையிலிருந்து பார்க்கும் தூரத்திலேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயில் வாசலில் இடது புற சுவற்றில்  வீரபாண்டிய கட்ட பொம்மனின் தூக்குத் தண்டனைக்குப் பின்னர் பானர்மேன் கட்டளையின் படி மீண்டும் புரட்சி வராமல் தடுக்க பாளையக்காரர்கள் செய்ய வேண்டியன பற்றிய குறிப்புக்கள் அடங்கிய பட்டயம் பொறிக்கப்பட்டள்ளது. இப்பட்டயம் பற்றிய செய்திகளைப்  பற்றி மேலும் தெரிந்து கொள்ள இத்தொடரின் பகுதி 26- ஐ வாசிக்கவும்.
 

 

இக்கோயில் அமைப்பில் சற்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.   நீளமான வாயிற்பகுதி.  ஆலயத்தின் உள்ளே நாயன்மார்களின் சிலைகள் ஒவ்வொன்றாக வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. 

 

 

 மற்றொரு பகுதியில் பஞ்சபூதங்களை லிங்க வடிவமாக பிரதிஷ்டை செய்து வைத்திருக்கின்றனர். அப்புலிங்கம், பிரதிவிலிங்கம், தேயுலிங்கம் என ஒவ்வொன்றாக லிங்க வடிவில் அமைத்துள்ளனர்.  
 
 

 

 
ஒரு பகுதியில் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இதற்கு ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரர் என்று பெயரிட்டிருக்கின்றனர். இதைப் போலவே நந்தியுடன் கூடிய காசி லிங்கமும்   ஒரு பகுதியில் உள்ளது. மற்றொரு பகுதியில் தனி சந்திதியுடன் கூடிய லிங்கோத்பவர் பிரதிஷ்டை செய்யபப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் எட்டிஸ்வரனின் சந்திதி அமைந்திருக்கின்றது. 
 
 

 
லிங்க வடிவங்கள் மட்டுமின்றி கோயிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள சுவர் தூண்களைச் சார்ந்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் கற்சிலைகளும் இக்கோயிலின் அழகுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. ஆயினும் இங்கே அதிகமான சிற்ப வேலைப்பாடுகள் கூடிய கற்சிலைகளையோ சிலை வடிவங்களோ இல்லை. 
 
 
 

 
 
இந்த ஆலயத்தின் கோபுரங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையிலும் கூட கோபுரத்தின் மேலுள்ள சிற்பங்கள் மிகச் சிறப்பாக உள்ளன என்றே குறிப்பிட வேண்டும். நுண்ணிய கலை வேலைப்பாடுகள் கூடிய சிற்பங்கள் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முறையாகப் பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசி அழகு படுத்தப்பட்டால் அது இச் சிற்பங்களின் எழிலைக் மேலும் கூட்டும். 

 

 

 

 

 
 
தொடரும் .. 
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment