Home First Tamil Novel ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3

ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3

by Dr.K.Subashini
0 comment

குறவஞ்சி

 

தென் தினனாத் தினதினனாத் தினதினனாத்
தினனாத் தினத் தினதினனா தினனா தென்னானத்
தினதினனாத் தினதினனா த்தினனா
அவதானி கல்யாணச் செலவதனைக்கேளீர்

நீஙகள் செலவதனைக்கேளீர்
அழகாக விவரஞ்சொல்லி யறைகுவன் நீர்கேளிர்
கோலவிளை யாடல்விலை கொண்டதிருபத்து,
ரூபாய் கொண்ட திருபத்து(20)
கூறை பட்டுவாங்க மூன்றுபத்து விலைகொடுத்தோம்(30)
ஆனதாரை வார்த்தவர்க்கே அழகுவேட்டிபுடவை

அழகுவேட்டிபுடவை
அவைவாங்க பிடித்த தொகை யையைந்து மைந்து(30)
பாக்கிரண்டு மணங்குக்காகப் பழுத்ததறுநான்கு
ரூபாய் பழுத்ததறுநான்கு(24)
பண்பான குளிமஞ்சள் மணங்கு பத்து ரூபாய்(10)
வெற்றிலைக்குக் குத்தகையாய் விட்டதெட்டு ரூபாய்,

அய்ய விட்ட தெட்டு ரூபாய்
வேண்டிய நன்மாலைபுட்ப முதவப் பத்துவெள்ளை(10)
பந்தலுக்கு குத்தகைதான் பதினைந்து ரூபாய்
அய்ய பதினைந்து ரூபாய்(15)
பாங்கான காவற்காரரிருவர்க்கும் பத்து(10)
பழமிலைகாயதவுதற்குத் தோட்டக்காரன் பற்று

அய்ய தோட்டக்காரன் பற்று
பதினைந்து தேங்காய்க்கு பதினெட்டுரூபாய்(33)
ஆனகறியமுதுவகை யடுப்புக் கெரி துரும்பு
அய்ய அடுப்புக்கேரிதுரும்பு
ஆவின்பால் தயிர்நெய்கள் ஐந்துபத்து ரூபாய்(50)
மேளங்கள் நாதசுர நாலுநாளுமுழங்க

அய்ய நாலுநாளு முழங்க
மிதமாகக் கொடுத்ததொகை விரிக்கப் பத்து ரூபாய்(10)

பச்சரிசி பருப்புளுந்து பயறுகாராமணியும்

நல்ல பயறுகாராமணியும்
பரிவாகக்கொண்டதொகை பயிற்றைந்து மெட்டும்(58)
நல்ல வெல்லம் சர்க்கரைக்கும் நான்மூன்று ருபாய்

அய்ய நான்கு மூன்றுரூபாய்(12)
நல்லெண்ணெய் நான்குரூபாய் விளக்கெண்ணெ யெட்டு(12)
கோதுமைமா ரவைதமக்கு கொடுத்ததைந்து ரூபாய்
அய்ய கொடுத்ததைந்து ரூபாய்(5)
குணமாமுந் திரிபருப்பு கொண்டதொரு மூன்று(3)
கடைசரக்கு மிளகுமுதல் கணக்கு பத்துரூபாய்

அய்ய கணக்கு பத்து ரூபாய்(10)
கலியாண தக்ஷனைக்குப் பிடித்ததைந்துபத்து(50)
கணக்கிலகப் பட்டதொகை காட்டிணண் நானூறு
அய்ய காட்டினன்நானூறு
காணாத தொகைகளின்னங் கைவிட்டுக் கொடுத்தேன்
குறம்பாடியிந்தவண்ணம் கொடுத்த வொரு கணக்கை

யவர் கொடுத்த வொரு கணக்கை
அறம்பாடாதவதானியனு மதித்தாராங்கே[தெனதினனா(&c)]
நற்றோழர் ஆகையினால் நானிப் பணிப்பொறுத்தேன்
மற்றதொரு நூறு மண்டிக்குப் பாக்கியென்றார்
ஏற்ற செலவுதனக் கென்செய்வோ மென்றிரங்கி
நூற்றுக்கு நான்கு வட்டி நோட்டெழுதி தான்கொடுத்து
இதுவும் விதியென் றிருநூறு கைக்கடனாய்
சதிரிலாக் கல்யாணம் சாயவைத்தார் ஆங்கவரும்.

காந்தாரி யம்மையவள் கண்குளிரக் கண்டிருந்தாள்
தான்தந்த தீங்கதனை நினையாமல் தாயிருந்தாள்
நாகவல்லி நாளில் நடந்ததொரு காரியத்தில்
சோகமுற வேது தொடர்ந்தவ தானியர்க்கும்
அடைவாய் சுருளை யகவாயிற் கொள்ளுகையில்
மடக்கியே கண்கிட்ட வைத்தது தானறிந்து
கலியாணப் பெண்ணுங் கருதி உரைக்கலுற்றாள்

வயிற்றெரிச்சற் பெண்ணுக்கு மாலைக் கண்ணமுடையான்
பயித்தக் காரர் பரிந்தென்னைப் பெற்றவர்கள்
அவ்வுரை கேட்டே யவதானி நெஞ்சழிந்து
இவ்விதற் கென்னசேய்வோம் ஈசாவென கலுழ்ந்து
சின்னஞ்சிறுமியவள் சிற்றாடை கட்டறியாள்
எண்ணிஒருவார்த்தை உரைத்தாள் புதுமையென்றே
உள்ள முருகி யொருவரோடுஞ் சொல்லாமல்
மெல்லச் சலித்தே வினையாளர் தாமிருந்தார்

சம்பந்தி மாரைத் தமதிருக்கை மேவியபின்
அன்பாயழைத்தே யழகு விருந்து செய்யப்
போகா வழிதமையன் பொய்யறியாப் புண்ணியவான்
வாகு தொரியாத வன்கோபந் தாமுடையான்
ஆங்கவரைத் துபமிட்டே யஞ்சாத நெஞ்சுடைய
வீங்கலாங் குண்டுணியும் வெங்கண்ண ராங்கவர்தம்
தங்கைப் படுநீலி சண்டிப் பிடாரியவள்
காந்த னழிகண்டனொடு கட்டிக் கலகஞ்செய்தார்

மஞ்சள்நீரோடு வாழைச்சாறு விளக்கெண்ணெய் கூட்டி
மிஞ்சவே யந்த வெகுளி பிராமணன் மேல்
தான்தோன்றி கைகொடுத்துத் தான்பொழிய விட்டார்கள்
தான்தரித்த நற்றுகிலும் தன்னுடம்பும் தான்கெடவே
ஆங்காரத் தோடவரும் அம்மகனைத் தானறைந்தார்.

ஊங்காரத் தோடிதனை யுண்டுபண்ணச் சண்டாளர்
கையோடு கைமோதிக் கடகடவென பற்கடித்தே
ஐயோ நீபாவி யடிப்பாயோ பாலகனை
கண்ணைப்பிடுங்கிடுவோம் கையை யொடித்திடுவோம்
மென்னை யறந்திடுவோம் விட்டோ மோ வுன்னையென்று
புலுபுலென வவரைப் புல்லர்கள் போய்வளைந்து
கலகமிழைத்தார் கரத்து முகஞ்சுளித்தே
அடபயலே நீதான் அடிப்பாயோ பாலகனை
எடுசோடு பாப்பாச்சிங் கென்றானே குண்டுணியும்
மட்டிப் பயலேயுனை மண்வெட்டிகொண்டிரண்டாய்
வெட்டிப்புதைப்பேனென்று வெகுண்டாரே வெங்கண்ணர்
கிட்டித் துணக்குமிப்போ கேடென்று ரெத்தமுந்து
அட்டா துட்டங்கள்பேசி யார்த்தழிகண்டனின்றான்
வெட்டுணி தங்கையொடு வீரப்பிடாரியுமாய்

கட்டையில் வைக்கவுன்றன் கண்ணைக் கழுபிடுங்க
பாம்புபிடுங்கியுன்றன் பல்லுக் கருக வென்றார்
தீம்பர்க ளிவ்விதமாய்ச் சேர்ந்து படைகள் செய்யப்
போகாவழி தமையன் புத்திகலங்கி யொன்றும்
ஆகாமற் றானடுங்கி யவரவர்க்குத் தாழ்ந்துரைப்பார்

தெரியாமல் நானடித்தேன் செய்தபிழை நீர்பொறுப்பீர்
வருகாத கோபம்வர மைந்தனை நானடித்தேன்
கெஞ்சி யிரந்தாலும் கேளாராம் வஞ்ச மக்கள்
நெஞ்சிற் கறுவால் நெடுஞ்சண்டை தாம்விளைத்தார்

கதையென்று காந்தாரி கட்டுரை தானுரைப்பாள்
விதியோ விதுநீங்கள் வேண்டுமென செய்தவினை
சும்மா யிருப்பவன்மேல் சூதுகள்ளப் பாவிகள்நீர்
திம்மாக்குக் கொண்டு சிறுவனை யேவிவிட்டு
முன்கோபி யென்றறிந்தும் மூர்க்கம் விளைக்கவவன்
தன்மேலே கெட்ட சகதிநீர் கொட்டவைத்து
பின்பு மகனை பிடித்தறையப் பார்த்திருந்து
சண்டை விளைத்தீர் சதிகாரப் பாவிகளே
மண்டையுளநாளும் வன்பகை விட்டதில்லை
காந்தாரி சொற்கோட்டுக் கண்சிவந்து மெய்வியர்த்து
தாந்தம் வெறுவாய்கள் தந்தெலாங் தாங்கொழித்தார்.

பிள்ளைக்கு கலியாண மான பெருமையடி
சள்ளுப் புள்ளென்று தலை துள்ளிப்பேசுகிறாய்
வெட்டுணி யுன்மகனை மெல்ல வளவாக்கால்
பொட்டைப் பயலுக்கிந்த பொங்கு விளையுமோதான்
வெட்டுணி யூரிலில்லா வேளையிலே மோசஞ்செய்தாய்
கிட்ட வவனிருந்தால் கீளெங்குங் கண்ணாலம்

செக்குலக் கைபோலச் சிரமசையாதுன்மகன்றான்
பக்கத்தடியுண்ட பாலகனைப் பார்த்திருந்தான்
கொடுங்கண்ணி நீயுமனம் கூசாமற் பார்த்திருந்தாய்
அடமாடித்தான்விடுவான் அந்த வெட்டுணிகண்டால்
மணமென்று வந்தக்கால் மஞ்சள்நீர் ஊற்றாரோ
பிணம்பட்ட வீடோ டி பேசாமற் போவதற்குப்
பன்னி யிவ்வண்ணம் பழிகாரர் தாமுரைக்க
மன்னிய சம்பந்தி வர்க்கத்தார் போய்மறைந்தார்

கண்ட அவதானி காய்ந்தங்கே யேதுரைப்பார்
பண்டுங் களைநானும் பாக்கிட் டழைத்தேனோ
வதுவைத் தடுக்கவந்தீர் மற்றது வாய்க்கவில்லை
சதிக ளிழைத்துவிட்டுத் தனிப்போக வெண்ணினீர்கள்
எண்ணம் பலித்ததிப்போ தேகுமின் வீடுவிட்டுப்
பண்ணும் பழந்தீமை பாதகரே நானறிவேன்
ஊர்கூட்டி வைப்பேன் உங்கள் பவிஷெடுப்பேன்
ஆரென்று பார்த்தீர் அவதானி யென்றறிவீர்.

சொன்ன வுடனிருந்த சோடின்றிப் போனார்கள்.
பின்னை யவதானி பீடழிந்து வாடிமனம்
அலைச்சல் திரிச்சலினால் அங்க மெலிவடைந்து
பரிந்து மருந்துவகை பண்ணும் வரிசையினால்
ரசகந்த பாஷாண நச்சுப் புகையேறி
நாடி தளர்ந்து நரம்பின் பலமொடுங்கி
ஓடி யுழைக்க வுள்ளபலன் றானொடுங்கி
கடன்காரர் சள்ளையினால் கண்ணியந் தான்குறைந்து
திடங் கெட்டுப்போனதினால் சிந்தை மறுக்கத்தினால்
ஒற்றைத் தலைநோயும் ஓயாத வெஞ்சுரமும்
பித்த மயக்கும் பெரு ரத்த பேதியுடன்
பக்கப் பெருஞ்சூலைப் பாரிச வாயுவுமாய்
மிக்க வருந்தி மெலிந்தா ரவதானி
இனியே தெனவிரங்கி யெல்லோரு முள்ளுடைந்தார்
சனிபோற் கடன்காரர் சந்தியிலே தாமிழுத்தார்
எரியின் மெழுகாகி யேங்கி யவதானி
பரிகின்ற தாய்முகத்தைப் பார்த்தவ ரேதுரைப்பார்
வீணான கல்யாணம் வேண்டாமென வுரைத்தோன்
கோணல் வழக்குரைத்துக் கூட்டிவைத்தாய் நீயதனை
கொள்ளக் கிடைக்காக் குணமுள்ள பெண்கொணர்ந்தாய்
மெள்ள வதுநடக்க விக்கினங்கள் நூறாச்சு
பாழுக் கிறைத்துப் பணமெல்லாம் பாழாச்சு
ஏனழக் குடித்தனந்தான் எப்படிமேலெழும்பும்
படுத்து வீழ்ந்து நானும் பாயொடு பாயானேனே
எடுத்துக் கைதூக்கிவிட யீங்கொருவ ரில்லையே
முன்பு படித்தோர் முறைவைத்துச் சோறளித்துத்
தென்புகள் தப்பித் திகைத்திருக்கும் வேளையிலே
கடன்காரர் சல்லியத்தைக் கண்டக்கா லேதுரைப்பார்

கடனில்லாக் கஞ்சியது காற்கஞ்சி யானாலும்
உடம்பிலே யொட்டுமம்மா உன்புத்தி கேட்டடியேன்
மடமை மதியாலே வாங்கினேன் வீங்குகடன்
நூற்றுக்கு நாலாக நொள்ளைவட்டி யிட்டழிந்து
சோற்று வரும்படியைத் துட்டருக்குத் தானழுதும்
ஐய ரிறந்தக்கால் ஆசைமுதல் மோசமென்று
மெய்யாகக் கோட்டில் விதிவழுக்குத் தாந்தொடுத்தார்.

சிறையிலே யம்மாவென் சீவனொழிக்க வேண்டும்
அறிவில்லாப் பேய்மதியா லானதிது வென்றழுதார்.

அம்மையது கேட்டே யாவென்று தானழுதாள்
விம்மி வெறுத்து விதியை நினைந்தழுதாள்.

அவதானி தம்முடைய வந்தரங்கத் துள்ளொருவர்
இவர்படும் பாடதனை யெண்ணியே சிந்தையிட்டுப்
புண்ணிய வானுக்கிந்தப் புன்மை வரலாகாது
நண்ணுநம் நண்பர் நலங்குலை தல்கூடாது
மானத்தா லன்பர் மனமறுகப் போகாது
நானிருந்து நண்பர் நலிந்து குழைவாரோ
பாரிலே நாமும் பழமையாந் தோழரன்றோ
சீராம வருயிரிற் செல்வஞ் சிறந்ததுண்டோ
என்றே நினைந்துருகி யேன்றகடன் காரருக்கு
நின்ற தொகைகொடுத்து நேயருக்குஞ் சொல்லாமல்
அவதானி தேருதற்கு மான வுதவிசெய்தார்
தவறாக் கொடைசொரியுந் தர்மமிட்ட ரென்பவரும்.

வில்லங் கந்தீர்ந்த விதங்க ளறியாமல்
நல்லதோ ரன்பர் நயங்கள் தெரியாமல்
கடன்காரர் வாராமற் கண்மறைந்து போனதற்கு
படுபாவ மஞ்சாத பாதகர் போனதற்கு
வியந்து மனதில்தரு மிட்டர் முகம்பார்த்து
நயமுள்ள தோழாவோ நாடிக் கழுத்தறுக்கும்
கடன்காரப் பாவிகளென் கண்முன்னே காணோமே
தொடர்ந்தே யவரிழைக்குந் தொல்லையொன்றுf காணோமே
என்று கதைக்கலுமே யேற்ற வுயிர்த்தோழர்

கன்றிக் கலுழேல் கடன்காரர்க் கொன்றுரைத்துக்
காட்டி யெதிரில்வைத்தார் காதறுத்த நன்முறியைக்
கூட்டியே கட்டிமடி கொண்டங் கவதானி
நன்றி யுரைப்பதற்கு நாவழிந்து வாய்குழறி
நின்ற நிலைதனிலே நெட்டுயிர்ப்புத் தானெறிந்த
உண்டோ வுலகி லுனக்குத் துணையுமப்பா!

கண்டது கொண்டோ டுங் காலத்தி லிந்நினைவு
இப்போதோ பின்னையோ வென்றிருக்கு மென்றனுக்காய்
ஒப்பிக் கடன்தீர்த்தே யுபகாரம் பண்ணிணையே
என்னுடைய புத்தகங்கள் ஏற்குமற்ற நற்பொருள்கள்
உன்னுடைய வீடதனில் ஒப்புடனே கொண்டுசெல்வாய்
இதிலே யெழுந்திருந்தால் எற்றவையை மீட்டிடுவேன்
இதிலே யிறந்தாலோ வீறலின்றிப் பார்விடுவேன்
என்றவர் கூறியுள்ள யாவு மனுப்பிவிட்டார்
கன்றிய தோழர் கருத்தை மறுத்தவரும்.
ஈச னருளாலும் ஏற்ற மருந்தாலும்
நேசர் துணையாலும் நெஞ்சிற் களிப்பாலும்
ஈராண்டில் நோய்தீர்ந் தெழுந்தா ரவதானி
நேராய்த் தெளிந்தவரு நேர்ந்த முயற்சியினால்
சம்பா தனைகள்செய்து தாயார் வழியாக
முன்புள் ருணங்கள் முதல்வட்டி யோடிறுத்தார்.

சாக விரும்பிநின்ற தாயாதிக் கூட்டமெல்லாம்
யோகம் பழுத்தகண்டு மொட்டிக் கெடுக்கவந்தார்.

தாயாதிப் போன்றிச் சந்துகண்டு வாய்திறந்தே
ஓயாத பந்தூக்கள் ஓரோருவராக வந்தார்
முந்தை யுறவுடனே முன்னுறவு பின்னுறவு
சந்தையில் நாய்களெனத் தாட்டிக மாகவந்தார்
புக்காத் துறவுபுறந்தாத்துப் பேருறவு
அக்கா ளுறவுடனே யத்திம்பேர் நல்லுறவு
பாட்ட னுறவுடனே பாட்டிதன் மேலுறவு
காதுவைத்து மூக்குவைத்துக் கட்டுரைத்துச் சொல்லுறவு
பேதம் பாராட்டாத பேயர் தருமுறவு

வந்த வுறவினர்க்கும் வண்மையுப சாரஞ்செய்து
சிந்தை மகிழ்ந்துதாயும் சீர்செலுத்தி வாழ்ந்திருந்தாள்.

சற்றுமுன் பிள்ளைபட்ட சங்கடங்கள் தானினையாள்
உற்றமருகி தன்னால் ஒடித்தனிட்ட மென்பாள்
அவதானி தானுமந்த வம்மைவழி போகாராம்
தவஞ்செய்து பெற்றெடுத்த தாயுரையை மீறாராம்.

காந்தாரி கண்டவொரு கண்ணா மருகிதன்னை
வேந்தர் மகள்போல மேன்மையாய்த் தான்வளர்த்தாள்
கொசராக வந்த குமரனையுந் தான்வளர்த்தாள்
அசலா யவன்தனக்கு மானகலை யோதிவைத்தாள்
வாய்த்த மகிழ்வால் மதிமயங்கி மெய்மறந்தாள்
பேய்த்தன மாகப் பிலாமுரட்டைத் தான்மருவி
போன வழியெல்லாம் போகவிடங் கொடுத்துப்
போன வழியெல்லாம் போகவிட்டுத் தான்மகிழ்ந்து
எனக்கோ ரதிகார மேதுமில்லை கண்மணியே
உனக்கே யதுவெல்லாம் உன்வேலை நான்பொறுப்பேன்
ஆம்பான் கொணர்ந்தவெல்லாம் அங்கையில் வாங்கிடுநீ
ஆம்பா! நகையிடென்றே யஞ்சாமல் நீகேளு
தேட்டத்தைக் கைமேலே சிந்தாமல் நீகொடுத்துப்
போட்டத்தைத் தின்று புழுக்கைபோல் நீகிடவாய்
எசமானி நானலவோ வேற்ற குடித்தனத்தில்
நிசமாக நானும் நிருவாகம் செய்துவைப்பேன்
சம்பா தனைகளெல்லாம் தந்துவிடா யென்றனிடம்

என்பாடு பின்கணக்கு மேதென்று கேளாதே
ஏதென்று கேட்டாயோ ஏறெடுத்து நான்பாரேன்
வாது நீசெய்தால் மனங்கனிந்து நான்பேசேன்
முத்த மிடவந்தால் முகங்கொடுக்க நான்மாட்டேன்
பத்தி செய்வையானால் பரிவாக நானடப்பேன்
இந்த விதமாக வீனமொழி வாய்தனிலே
வந்த படிக்கே வழங்கியந்தக் காந்தாரி
மருமகளுக் கோதியவள்வைத்தாள் மதிகேடி
அருமை மகனுரையை யாங்கவள் கேளாளாம்.

அறிவில் முரட்டுக்க கந்தையிது வோதிவைத்தால்
குறி கெட்டுப்போகுங் கூறுங் கலையுரைத்தால்
பின்னுக்கு நன்மையென்று பேசினா ராங்கவரும்.

என்னக் குலுங்கநகைத் தேதுரைப்பாள் நற்றாயும்
பேய்ப்படு வாய்நீயினியுன் பெண்டாட்டி தான்படித்து
வாய்த்த பெரியவரை மட்டா மதியாமல்
பரங்கி கள்போலப் பரியவொரு வண்டியிலே
விரியும் நிலவில்நீங்கள் வேடிக்கை யாய்த்திரியக்
கருத்தோ வுனக்கென்று கைகொட்டித் தான்சிரித்துத்
தரித்தரப் புத்தியிதைத் தள்ளென்று தாயுரைத்தாள்.

உரைத்த மொழிகேட்டே யுண்ணெந் தவதானி
நரைத்த கிழங்களுக்கு ஞாயந் தெரியாது
நல்ல திட்டமில்லை நமக்கென்று நாவுலர்ந்தே
அம்மா வதுவேண்டாம் ஆகாதை யோதாதே
சும்மாய் வருமகந்தை சொல்லாதே யென்றுரைத்தார்.

சொல்லதனை கேட்டே சுறுக்கிட்டுக் காந்தாரி
நல்ல மருகிதனை நாடிப் பழிக்கலுற்றாய்
என்னம்மா வந்தாள் இளைத்தகுடி மேலாச்சு
பொன்னம்மா வந்தாள் புகழுனக்கு வாய்த்தடா
குழந்தை யெனவந்தாள் கோணல்வழி தானடக்க
மொழிந்த சரசமதால் மோசமுண்டோ பேய்மகனே?
பேசலு மென்னவிதுபேய்க்கூத்துமாமணக்கும்
நீசெய்வ தம்மா நினைவழிந்து போகாதே
பெற்ற தாய்நெஞ்சம் புழுங்குமென நான்பயந்து
செத்த பிணம்போலச் செப்பினது கேட்டிருப்பேன்
முன்பே பலாமுருடு மூர்க்கம் முதிருமின்னம்
பின்பு தெரியுமிது பேமாலங் கொண்டவளே
சொல்லி யவதானி சூழ்வினையைத் தானினைந்து
நல்லக நமக்கு நாடுமோ வென்றிருந்தார்.
பலா முருடுமப்போ பதங்குலைந்து மாமிதன்னால்
தலைமீது லேறிவிடத் தாறுமாறாய் நடந்தாள்
செல்லங் கொடுக்கத் திறங்கெட்டுத் தானடந்தாள்
நல்லதும் பொல்லாதும் நாடி யறியாமல்

மாமியார் தன்னை மதியாமல் தானடந்தாள்
பூமி யதிர்ந்து பொடியெழத் தானடப்பாள்
திக்காரஞ் செய்து திருக்குடன் தானடப்பாள்
முக்காலு மானையிட்டு மூஞ்சி சுளித்துநிற்பாள்
மேட்டிமை யாய்வளர்ந்த மேலான மாமியார்க்குக்
காட்டினால் கைமேல் கனிவுக் கடுத்தபலன்
கொழுனன் றனைமதியாள் கோவித்தாற் கைகொடிப்பாள்
அழகுகள் காட்டிநிற்பாள் ஆதாளி தாணிடுவாள்
ஈங்கிவள் பேய்க்கூத்து மிப்படி தானிருக்கப்
பாங்கிலாச் சுற்றம் பரிந்தங்கே வந்தார்கள்
முகமறியாச் சுற்ற முனைந்தங்கே வந்தார்கள்
நகைமுகங் கொண்டவர்கள் நாடியே வந்தார்கள்
ஒப்பாரி சொல்லியே யோரொருவர் வந்தார்கள்
தப்பாத் தலைதடவும் தாட்டிக மக்கள்வந்தாள்
தலைதடவிக் காசடிக்கும் தப்பிலிகள் வந்தார்கள்
குட்டிக் கலகங்செய்யுங் கோளர்கள் வந்தார்கள்
நெட்டை யொடிக்கவல்ல நீசர்கள் வந்தார்கள்
அவதானி யம்மையிடம் அண்டியவ ரேதுரைப்பார்
“புவனத்தில் உன்போல் பொறுத்தவர் இல்லையம்மா
தாயாதிக் காய்ச்சல் தகிக்காமல் விட்டதுன்னை
நீயா கையாலே நிலைத்தாயிப் பூமியிலே
உன்றன் புதல்வன் ஒருகோடி பொன்னனுக்கும்
ஒன்றுங் குறைவின்றி யுன்சொற்படி நடப்பான்
மாமா லங்காட்டி வரிசை யுடன்பசப்பி
ஏமாற்றிக் காசவர்கள் எத்திப் பறித்திடுவார்
வாய்த்தா னுனக்குமகன் வம்சம் தழைப்பதற்கு
வாய்த்தான் மகனுன் வயிறுசெய் பாக்கியத்தால்
சிந்தைப்படி நடக்குஞ் செல்வப் புதல்வனம்மா!
இந்தப் புவிதனிலே யீடுனக் காருமில்லை
நீபார்த்துச் செய்வதற்கு நின்மக னொன்றுரையான்
நீபார்த்துக் கண்ணிரங்கி நேருங் குறைதீர்ப்பாய்
பெண்ணுக்குக் கல்யாணம் பிள்ளைக் குபநயனம்
கண்ணுக்குக் கண்ணுனக்குக் காதற் புதல்வனுண்டு
போகும் வழிதனக்குப் புண்ணியத்தை நீதேடு
ஆகிற தர்மமன்றோ வான துணையுனக்கு
இப்படி யாகஅவர் ஏத்திப் பசப்பலுமே

துப்பிலாக் காந்தாரி சொல்லில் மகிழ்வாளாம்
தன்னைப் புகழத் தனங்கள் கொடுப்பாளாம்
இன்னந் துதிப்பவர்க்கும் ஏற்றநலஞ் செய்வாளாம்
கொண்டவர் மீண்டுமீண்டு கூசாமற் றாம்வருவார்
மிண்ட ரவர்க்கம்மை மீட்டுங் கொடுத்துநிற்பாள்.

அவதானி யீதறிந்தே யன்னையரைத் தானழைத்துத்
துவளாமல் மீண்டுவரும் துட்டருக் கிட்டழித்தால்
வண்மை கலைவருமோ வாகினிக ளாவோமோ
பெண்மைக் குணத்தாலே பேய்ச்செலவு பண்ணலாமோ?
என்றுரைக் கக்கேட்டே யிருகண் சிவந்தவளும்
நன்றுரைத்தாய் நீயுமிது நான்செய்யு நல்லறத்தால்
உன்குடியும் சீராம் உனக்கோர் குறையுமில்லை
என்வழிக்கு நல்ல வினிய துணையாகும்
போகும் வழிக்கும் பொருந்துந் துணையாகும்
சாகும் வழிக்குத் தலையாந் துணையாகும்.

தாயுரை யைக்கேட்டுத் தனிமகனுந் தான்சிரித்துப்
பேய்மனதைத் தான்திருப்பப் பின்னு முரைத்திடுவார்
(அம்ம!)-கைப்பாடு பட்டால் கடவுள் துணையிருப்பார்
மெய்ப்பா டுடையார்க்கு மேன்மையுண்டு மாநிலத்தில்
நாம்பட்ட பாட்டால் நலப்பட்டோ ம் பூமிதனில்
சோம்பித் தினங்கழித்தால் சோறுண்டோ தின்பதற்கும்
கஷ்டார்ச் சிதங்களைநீ கண்டபடி தானிறைத்தால்
நிஷ்டூர மன்றோ நிலைக்குங் குடித்தனத்தில்
சோம்பர்க் குதவிசெய்தால் துட்டர்க ளாய்த்திரிவார்
சாம்பலில் நெய்சொரிந்தால் தக்க பலன்றருமோ!
துட்டர்க் குபகாரந் துன்பத்தை மேல்விளைக்கும்
சிட்டர்க் குபகாரஞ் செய்தக்கா லேற்றமுண்டு
குடிகேடர் கொள்ளக் கொடுப்பாரோ நன்மதிகள்
நெடிய பகழ்வருமோ நெஞ்சிற் குறுதியுண்டோ ?
போகும் வழிதனக்கும் புண்ணியம் வாராது
ஆகாத பேரை யழைப்ப ததர்மமென்றார்.

அன்பாக நீதி யறிய வுரைத்தாலும்
தன்மனம் போனபடி தானடப்பாள் காந்தாரி

பெற்று வளர்த்துப் பெரும்பாடு பட்டதனால்
மற்றொன் றுஞ்சொல்லாமல் மாதா வழிப்படியே
போகட்டு மென்றே பொறுத்தா ரவதானி
ஈகைக்கு மாறாக வேது முரையாராம்.

பலாமுருடு மப்போ பணிந்து நடவாளாம்
குலவுந் தன்மகளுக்குக் கொட்டத் துணிவாளாம்
மாமியா ரோடுமவள் மல்லுக்கு நிற்பாளாம்
ஆமுன் படைகளைப்போல் அல்லவோ வென்படைகள்
உன்சுற்றம் வாராக்கால் என்சுற்றம் நாடார்கள்
என்சுற்றம் வந்தால் எறிச்சலென வுனக்கும்
ஆற்றிலே போகிறநீர் அப்பகுடி யையகுடி
ஊற்றை வாயன்றேட்டம் ஊரார தாகுமென்றாள்.
அருமைக்கோ ழுன்னுரை யாங்கொன்று கேளாளாம்
பெருமை சிறுமையெனப் பின்னொன்றும் பாராளாம்
இரும்பு நெஞ்சாகி யெடுப்பெடுத்து நிற்பாளாம்
துரும்பெடுத்துப் போடமாமி சொன்னாலுங் கேளாளாம்.

அழும்பு செய்நாளில் அவளுமொரு சூலானாள்
பழுதில்லாத் திங்கள் படிப்படியாய்த் தானிறையத்
தாயு மதுவேளை தாயத்தார் தம்மைநீயும்
போயே யழையென்று புத்திரனைப் பார்த்துரைத்தாள்.

அம்மா அவரால் அவதிகள் மேல்விளையும்
சும்மா விருவென்று சூக்ஷுமந் தானுரைத்தார்.

பிள்ளை புகலப் பிணங்கியே காந்தாரி
துள்ளி வெகுண்டு துடுக்கு டனேதுரைப்பாள்
ஆமவர் வாராமல் ஆகாத பேய்மகனே
சீமந்தஞ் செய்தால் சிரிப்பா ரிருப்பவர்கள்
குற்ற மதுபார்த்தால் சுற்றம் பெறுவதுண்டோ
சுற்றங்கள் வாராமல் உற்ற சுபங்களுண்டோ
கட்டி பருப்புடனே சட்டி நெருப்புடனே
விட்டவர் கூடல் விகித முலகினிலே
தறிதலை யாகித் தடுத்தொன்றுஞ் சொல்லாதே
பொறுமையா யாங்கவரைப் போயழை நீயுமென்றாள்.

அம்மை சொற்றட்டா அவதானி தான்பயந்து
விம்மி யயர்ந்து மெல்லவே தானடந்தார்
சிற்றப் பன்மாரைத் தெரிந்துடன் தான்பணிந்து
மற்றெம் மனைக்கே வரவேண்டு மென்றுழைத்தார்
வெட்டுணி யப்போது வீரமுடன் றானுரைப்பார்
மட்டிப் பயலேயிங்கு வரவு முகமேது
எடுத்து வளர்த்துனைநான் ஈரைப்பே னாக்கிவிட்டேன்
அடுத்துக் கெடுக்குமுன்றன் அப்பன் குணம்புரிந்தாய்.

அப்போ தவதானி யடுத்தொரு வார்த்தைசொல்வார்
அப்ப னிறந்தார் அறியாச் சிறுவயதில்
துப்பான வுங்கள் சுகுண மவர்க்கின்றாகில்
செப்ப மேயுங்கள் உரையென்று தான்சிரித்துத்
தருணமிது நீங்கள் தள்ளிக் கழியாமல்
கருணையுடன் வந்து காப்பாற்ற வேண்டுமென்றார்.

எங்கெங்கே யென்றே யிருந்தவ ரப்போது
துங்கமாஞ் சீமந்தந் துன்னும்பொழுது தழைத்தால்
வந்திடு வோமென்று மறித்தவர் சொன்னார்கள்
அந்த வுரைகேட்டே யவதானி வீடடைந்தார்.

தலையிலே கற்புரட்டுந் தாயத்தார் தம்மையம்மை
நிலையி லழைக்கவென்று நேர்ந்தசொற் றப்பாமல்
போன தாலன்றோ பொறுக்கா வுரைபொறுக்கல்
ஆனே னென்றெண்ணி யவதானி நெஞ்சழிந்தார்.

காசத்தா லந்தக்கரியனொரு குண்டுணியும்
ஈசற் குரைப்பகர விவ்வுலகம் விட்டொழிந்தார்.

அவதானி தன்னை யழைக்காமல் வெட்டுணியும்
புவியோர் பழிக்கப் பொருந்தாக் கருமஞ்செய்தார்
தமையன் மகனிருக்கத் தானெகரு மஞ்செய்தார்
சமயம் தவறத் தனக்குள் வருத்தமுற்றார்.
சம்பாதனை களப்போ தப்பியந்த வெட்டுணியும்
கும்பலா யந்தக் குணமறியாக் காந்தாரி
வீட்டி லிருந்து வினைகள் பலபுரிந்து

தாட்டிக மாகநாளைத் தள்ளுவோ மென்றிருந்தார்
அப்போ தவதானிக் கானசீ மந்தம்வரத்
தப்பாமல் காந்தாரி தானழைக்க வந்தார்கள்.

வெட்டுணி கைப்பாடாய் வேண்டுஞ் செலவுசெய்து
சட்டமாய்ச் சீமந்தந் தாமே நடத்திவைத்தார்
கடன்வாங்கிக் காந்தாரி கைக்குப் பணங்கொடுத்தாள்
திடமா யவருஞ் செலவிட்டுத் தான்மகிழ்ந்தார்.

கம்பீர மாகக் கலியாணந் தாம்நடத்தி
வம்பர்கள் வீட்டின் வளங்கண்டு தாமிருந்தார்.

மதனியுன் நல்லதங்கை மானாவதி யவள்தன்
புதல்வன் புதல்வியுன்றன் புத்திரர்தா மல்லவோ?
ஏக குடும்பமன்றோ வெல்லொரு நாம்பளம்மா
ஓகை யுடனே யொருசமு சாரமாக
இருப்போம் சிலநாள் இருவர்நா முள்ளமட்டும்
கருப்பென்ன நானும் கரத்திற் றரும்வரவை
ஒன்றாகப் போட்டே யொருகுடும்ப மாயிருந்தால்
நன்றா யிருக்குமிது நாட்டுக்கு மென்றுரைத்தார்.

கப்ப லிற்பாதி களிப்பாக்குப் போட்டகதை
யொப்பந்த மாக வுரைத்தாரே வெட்டுணியும்
ஆமென் றவளு மனுமதிதான் கொடுத்தாள்.
தாமென்றுஞ் சொல்வார் தவித்தார் அவதானி.

வந்து நுழைந்தாரே வம்பர்கள் வன்பிணிபோல்
சந்து கொடுத்தாளே சங்கையிலாக் காந்தாரி.

குடும்பங் கலைக்கவல்ல கோளனழி கண்டனுடன்
விடுபட்டி யாய்த்திரியும் வீரப் பிடாரியுமாய்
கங்கணங் கட்டிக் கலகம் விளைக்கலுற்றார்
வங்கை போல்வந்தவர்நல் வாழ்வு குலைக்கலுற்றார்
மாமி மருமகட்குள் மாளாத போர்விளைத்தார்
மாமி மருமகளும் மல்லுக்கு நிற்கவைத்தார்
கெக்கலி கொட்டியவர் கேலியது பண்ணிவிட்டார்
கைகொட்டி முக்காலும் கண்காட்சி கொண்டிருந்தார்.

வீரப் பிடாரியவள் மெத்த வெடுப்பெடுத்து
காரம் முதிரவிட்டுக் கண்சாடை யாயிருந்தாள்
அழிகண்ட னோடி யவதானி யண்டவைந்து
பழிவரும் சும்மாப் பரியாமல் நீயிருந்தால்
பெண்டை யடக்கறியாப் பேதை யுலகிலுண்டோ
தொண்டை கிழித்துச் சுண்ணந் திணிக்காயோ
படித்துநீ யென்னாச்சுப் பாவியுனைப் பயந்தே
யெடுத்து வளர்த்தவளும் இம்சைப் படலாமோ
என்றிங்கு சொல்லி யெழுந்தவர் தாயிடம்போய்
நன்றி யறியாதான் நன்மகனோ வுன்மகன்றான்
பெண்டாட்டி யாலே பிடுங்குண்ணப் பார்த்திருப்பான்
திண்டாட்டங் கண்டுஞ் சிரித்து மகிழ்ந்திருப்பான்
நலந்தெரியா னென்றுறுதி நங்கைக்குச் சொல்லியுடன்
பலாமுருடின் பக்கலிற்போய்ப்பண்ணலுற்றார்வன்கலகம்

ஐயோ குழந்தாய் அரும்பாவம் பண்ணினையெ
வெய்ய கொடும்பாவி மாமியார் வீம்பதனால்
கொண்ட வன்கூடக் கொடுமைகண்டு பார்த்திருப்பான்
மிண்டை யினகையில் வெகுவா யுறுப்படைந்தாய்
கருப்பவதி நீயாச்சே காசுடமை மேலேயுண்டோ
சிரிப்பாரே பார்த்தவர்கள் சீசீயி தென்னகொள்ளை
வாய்க்கு வளமா மடிநிறைந்த பக்ஷணங்கள்
ஆக்கிக் கொடுப்பாரார் ஆருமற்ற பாவியோநீ
நாங்கள் பரிந்தாலோ நன்றிகெட்ட காந்தாரி
நீங்களென் வீட்டில் நெருப்பென்றுதான் கொதிப்பாள்
வெட்டுணி கண்டாலே வெட்டிப் புதைத்திடுவார்
மட்டில்லாத் துக்கம் மனதினி லாறவில்லை.

அப்பேச்சைக் கேட்டே யடங்காப் பலாமுருடும்
தப்பினா ளெங்கேயந்தச் சண்டாளி காந்தாரி
உற்ற வுபகாரம் ஒன்றெனக்கு நீரிழைப்பீர்
பெற்ற வென்தாய்க்குப் பெரிய மனதுபண்ணி
வரும்படி நீரும் வரியென்று போகவிட்டால்
உருகி யவளும்வந்தே உற்றதுணை யாயிருப்பாள்.

என்றவள் கூற விதம்புரியு நல்லவர்போல்
நன்றென்று கூறியுடன் நற்கடிதம் போகவிட்டார்

இப்படி யாக விருபுறமுந் தூண்டிவிட்டுத்

தப்பிலி மாக்கள் சதியிழைத்து விட்டார்கள்
காந்தாரி யப்போது காதல்மகன் கிட்டணுகி
பூந்தவொரு சிறக்கி போராட்டம் கொள்கிறாளே
கொள்ளிவாய் நாறிமனங் கூசாமல் பேசுகிறாள்
உள்ளார் நகைக்க வுரங்கொண்டு பேசுகிறாள்
படுதுயரங் கண்டுமடா பாராதிருக் கிறையே
கெடுமதியாள் நெஞ்சைக் கிழியாதிருக் கிறையே
தாய்சொல்லைக் கேட்டு தனிமகனு நள்ளிரவில்
பேய்மனைவி தன்னைப் பிரியமுடன் றானயந்து
அம்மை பெரியள் அவளைப் படுத்தலாமோ
செம்மை நடக்கையன்றோ சிற்றடிநீ கொள்ளவேண்டும்
அடக்க முடைமை யரிவையர்க்கு நல்லழகு
உடனொத்திருத்தலடி உத்தமிகள் சுத்தகுணம்
துட்டருரை கேட்டுக் கெட்டழிந்து போகாதே
மட்டி லடங்கி மதிக்க வுடம்பெடுநீ
கண்ணை யிமைகாக்கும் கற்றவரைச் சொற்காக்கும்
மண்ணைமாழகாக்கும் மன்னவரைக் கோல்காக்கும்
கொண்டானைக் கொண்ட குலக்கொடி தான் காக்கும்
பெண்டீரைத் தங்கள் பிறங்குங் குணகாக்கும்
மனைமாட்சி யின்றேல் எனைமாட்சித் தாயினுமில்
நினையாமல் தீங்குதனை நீசெய்யே லென்றுரைத்தார்.

இவ்வுரை கேட்டே யெழுந்த பலாமுருடும்
அவ்வென்று வாயில் அடித்தவளே துரைப்பாள்
வாதனைப் பட்டு வருந்துமென் முன்புவந்து
நீதி கொழித்தாய் நினைவழிந்த நிர்மூடா
கிழவோரி கேளுரையைக் கேட்டென்னை மாட்டவந்தாய்
பழிகாரிக்காகப் பரிந்து துசமெடுத்தாய்
ஆண்பிள்ளை போல வடக்கியெனை யாளவந்தாய்
ஆண்பிள்ளை நீயோ அயலறியுமுன் சமர்த்தை
ஆள வறியாத அண்ணைநீ பெண்படைத்தாய்
நாளு முறுப்புணவோ நானுனக்குப் பெண்டானேன்
உன்போ லிருப்பார் உரிமையைப் பார்க்கலையோ
தன்னொத்த பேரின் சவரணையைப் பார்க்கலையோ
பிச்சை வரும்படிக ளுள்ளவரும் பெண்டிருக்கு
மெச்சு நகைகள் விதவிதமாய்ப் போட்டிடுவார்
கட்டுந் துணியொழிக் கண்டதுண்டோ வுன்னிடத்தில்
பொட்டை யதிகாரம் போதுமடக்குசும்மா
நீகெட்ட கேட்டுக்குக் கென்வாய்கட்ட வந்தையோதான்
ஆகட்டும் போவென் றதரம் பிதுக்கிநின்றாள்

அவதானி யப்போ தகநொந்து தத்தளித்து
இவளெங்கு வாய்த்தா ளெனக்கென் றுளம்வருந்தி
ஆகிலும் பார்ப்போநா மானமட்டு மெனறுசொல்லி
தோகை நீயென்றுந் துடுக்காச் சொல்லாதே
கையில் பணஞ்சேரக் காந்துநகை வாராதோ
மெய்யில் நகைபூண்டால் மேலாங் குணவருமோ
கல்வி யுரைப்பேன் கலைபல வோதிவைப்பேன்
நல்லி யெனப்பெயர்நீ நாட்டி லெடுக்கவேண்டும்
பெரியரைச் சொல்லாதே பேரைக் கெடுக்காதே
அருமைத் துரைச்சியென்றே யாங்கவளைத் தூக்கிவைத்தார்

இப்படி யாகவவர் எத்தனைநாள் சொன்னாலும்
செப்பும் வசனமெல்லாம் திண்செவியிற் கொள்ளாளாம்
கழுதைக் குபதேசம் காதிலே சொன்னாலும்
பழுதில் குரலதற்குப் பாங்காய்ப் படியுமோதான்
அடித்துப் பயின்றாலும் அங்கொன்றுஞ் சத்தையில்லை
படித்துப் படித்துரைத்தும் பத்தாசொல் லேறவில்லை
முன்கோபத் தாயாரால் மூர்க்க முதிர்ந்திடுமாம்
தன்கா டயற்காடு தானறியாள் தாயவளும்
இரும்பு செஞ்சாகி மனமேலாப் பலாமுருடு
துரும்பெடுத் துப்போடச் சொன்னாலுங் கேளாளாம்

வீரப் பிடாரி விரும்பும் புருஷரோடு
சாருஞ் சுவர்புரத்தில் தப்பாமல் காத்திருந்து
அணையு மனைவிக் கவதானி தானுரைக்கும்
குணமா மொழியுமவள் கூறும் எதிர்வசையும்
கேட்டு விடிந்தவுடன் கெக்கலி கொட்டியவர்
பாட்டுகள் பாடி பரிகாசந் தாம்புரிவார்

மறைவா யெழுதிவிட்ட வன்கடிதங் கண்டவுடன்
நறுங்கும் பிணியால் நமையும் புருஷனையும்
ஊரா ரகத்தில் உலைந்திட விட்டுவிட்டுப்
பாராமற் பெற்ற பயனுடன் தான்கிளம்பி
ஆகா வழியு மருளம் பலத்தைவிட்டு
வாகாகச் சென்னை வளனகர் தானணுகித்
தன்குங் கொண்ட தறிதலைப் பெண்குணத்தைப்

பின்னுங் கெடுக்கப் பெற்றவ ளுற்றடைந்தாள்
கண்டதைக் கேட்டதைநாம் கர்ப்ப வதிகளுக்கும்
உண்டென் றுதவல் உடம்பை வருத்துமென்று
காந்தாரி சொல்லக் கணிக்காமல் கர்ப்பிணிகள்
நேர்ந்து விரும்புவதை நீட்டிக் கொடுக்கவேண்டும்
கண்டதைக் கேட்டதைநாம் கர்ப்ப வதிகளுக்கும்
உண்டென் றுதவாக்கால் ஊறு விளையுமென்றே
ஆகா வழியுரைத்தே வம்மகள் கேட்டுவரும்
ஆகாத பண்டமெலாம் ஆதரவாய்த் தான்கொடுக்க
வாங்கிப் புசிப்பாளாம் கொள்ளிவாய் வன்மகளும்
தூங்கி யிருப்பாளாம் துன்னிரவு நற்பகலும்
உலவித் திரியவென்றால் ஒப்பாமற் தான்படுப்பாள்
வலிய மதியு஡ரத்தால் வாயால் வதறிடுவாள்
உடம்புதித்துப் போயுமவள் உற்றமொழி கேளாளாம்
திடன்றப்பிப் போயிமவள் செம்மை பொருந்தாளாம்
பாடுகள் கோடியுண்டு பட்டாள் பழிகாரி
கேடான வீம்பதனால் கெட்டாளே துர்க்குணியும்
வயிற்றில் மதித்தவொரு மைந்தனைப் பெற்றதனால்
சயித்திய தோஷங்களால் தாளா வருத்தமுற்றுக்
கண்டங்கள் தம்மோடு கஸ்தி மிகப் பட்டாலும்
முண்டை மகள்தனக்கு மூர்க்கந் தெளியாதாம்

ஆங்கவள் தந்தையரா மாகா வழிபதியை
வீங்கு வியாதியது விண்ணுலக மேற்றிவிட
கொள்ளிடுமகனுங் கொண்டவளு மில்லாமல்
தள்ளிப் பிணமதனைத் தாயத்தார் சுட்டெரித்துச்
சாவோலை தாமனுப்பத் தர்ப்பைச் சமுக்காரமுதல்
மேவுஞ் சடங்கனைத்து மேன்மகனை கொண்டுபண்ண
அவதானி யப்போ தங்கான வுதவிசெய்தார்
எவரால மாங்கவருக் கேற்ற சுகங்களில்லை
ஆகா வழிமகட்கு மாகாத போதனைகள்
வாகா யுரைக்க மதித்தவள் தான்நடந்தாள்
குண்டுணி செத்துமவர் கோட்டு முறையறிந்த
சண்டிப்பிடாரி யென்பாள் சாகசம் பண்ணிவந்தாள்
அழிகண்டன் கையினிலே யாவதெல்லாம் பார்த்துவந்தாள்
கிழவியாங் காந்தாரி கேட்பார்சொற் கேட்டுவந்தாள்

இப்படியாக விருக்கு மந்த நாளையிலே
ஒப்பிலாச் சுற்ற முடனிருத்த லேதமென்று
சென்னை நகர்துறந்து செல்லூ ரெனும்பதிக்கே
அன்னை மனைவியுடனாய்ந்தவ தானிசென்று
போயொரு சீவனத்தில் பொற்புடன் வீற்றிருந்தார்,
தாயாத்தா ரங்கே தவித்து வயிறுலர்ந்தார்
வெட்டுணி நன்மகனாம் வீரப் பிடாரிதம்பி
நட்டணை யாக நலமறிந்து தானுரைப்பான்
ஆங்கவ் விளைஞனுந்தன் அப்பன் முகநோக்கி
வீங்கி யிருக்க விதியென்ன தந்தயரே
அண்ண னவதானி யண்டையிற் போயிருந்து
நண்ணியவன் மதிக்க நாமடங்கி வாழ்ந்திருப்போம்
என்ன விணங்கி யெழுதினார் வெட்டுணியும்
சின்னத் தனமாய்த் தெறிக்க விடலாமோ
அண்டின பேரை யகல விடலாமோ
மிண்டுகள் செய்வதில்லை வேற்றுமை பண்ணாதே
அண்ணன் மகனன்றோ அவதானி நீயெனக்கு
எண்ணி யுறவினரை யேங்க விடலாமோ
ஆதியில் உங்களைநான் ஆதரிக்க வில்லையோதான்
ஏதோ நடுவிலுற்ற வீனம்பா ராட்டலாமோ
சொந்த மதனிக்கிது சொல்லென் றவரெழுத
மைந்த னவ்வோலை தனைமாதா வற்஢யும்படி
தந்து படித்துதைக்கத் தாயு மனமிரங்கி
முந்த அவரை முறையேயழை நீயென்றாள்
தாய்மனங் கோணாத் தனைய ரவதானி
மாய மிழைப்பவரின் வம்புக்குத் தான்விலக,

“நீயாய்த் தலையெடுத்தாய் நின்சொத்திற் பங்குவாரோம
தாயத்தா ரெங்களைநீ தாங்குவதுந் தண்ணளியால்
தான்றோன்றி மைந்தன் தலையெடுக்கச் செய்வையானால்
தான் றருவான் நியித்ததி யிலுதவுதனம்.”
இவ்வண்ணம் மாக வெழுதிக் கொடுத்தபின்பும்
அவ்வண்ணம் பிள்ளையையும் ஆங்கெழுதித் தான்கொடுக்கச்
சம்மதிக்கச் செய்தே சலமுள்ள வெட்டுணியைத்
தம்மடையிற் சேர்த்துத் தரித்தா ரவதானி
தகுதியுடன் படித்துத் தான்றோன்றி மேலவனாய்

மகிமையுள்ள ஜீவனத்தில் மாட்சிமை யோடிருக்க
வெட்டுணி சம்சாரம் வேறாய்ப் பிரிந்துவிட்டார்
கட்டந் தெளிந்து களிப்புடன் தாமிருந்தார்.

அவதானி தன்மனைவி யானதொரு சூலடைந்தாள்
அவமாகப் போகாமல் ஆண்பிள்ளை பெற்றெடுத்தாள்
பெற்றெடுத்த பிள்ளைதனை வைத்து வளர்க்கறியாள்
யுற்றமுலைப் பாலேற்றி யோமுடிந்து போகவிட்டாள்!
மீண்டுங் கருப்பவதி யானாளே வீணியவள்
தாண்டு காலிட்டுத் தரியாமல் தானிழந்தாள்.
எல்லாப் படியாலும் ஏற்ற மதியுரைத்து
மல்லாடிப் பார்த்தும் மசியா மனைவியவள்
புருஷனைப் பேசப் பொறுக்காதோர் நாளவரும்
பருஷமாய் வீசப் படபடத்து மூர்க்கமுடன்
ஒன்றுக்குப் பத்தா யுரைத்துப் பகடிசெய்தாள்
கன்று மனத்தார் கணவனும் போயறைந்தார்
வாகில்லாப் பெண்டாட்டி வாய்த்ததற்குத் தான்புழுங்கி
ஏகாந்த மாக யிருந்தவர் எண்ணமிட்டார்
நன்றி யறிந்து நலமறிந்து நான்மகிழ
ஒன்றுங் குணத்தா லொத்துவரும் பெண்டொருத்தி
அம்புவியிற் கிட்டியெனக் காட்பட்டா ளாமாகில்
நம்பு முயிரேனும் நானவளுக் காக்கிடுவேன்
கொள்ளிவாய் நீலியிந்தக் கூளியைக் கைவிடுவேன்
துள்ளியுயிர் வருந்தச் சொல்லாமற் சுடுமிவளை
விட்டுத் துறப்பதிலே கெட்டதொன்றும் நானறியேன்
கட்டுக் கடங்காத காளியால் மூளியானேன்
அம்மை யொருபுறத்தில் ஆவி பதைக்கவைப்பாள்
இம்மைச் சுகமறியேன் ஏதம் பலவடைந்தேன்
நெறிதவறி மேய வென்றால் நெஞ்சமிணங்காது
அறிவின் பயனிதென வாங்கவர் தான்மறுகி,
எக்குடி யானாலும் எச்சாதி யானாலும்
தக்க குணத்தோர் தருணியைக் கூடினக்கால்
மனதிற் கிசைந்தவொரு மாதெனக்கு வாய்த்தாக்கால்
எனது மனங்களிக்கு மேற்றவள் கிட்டினக்கால்
கைம்பெண்ணே யானாலம் கண்டு மணந்திடுவேன்
வம்பர்கள் தூறை வரவுசெல வில்வையேன்.

இந்த விதமாக வெண்ணமிட் டேங்கியவர்
சிந்தை கலங்கித் திடன்கெட்டுத் தானினைப்பார்
சித்திர வொண்கதையில் சித்திரித்துச் சொல்லுவணம்
புத்தி யழிந்தவொரு பேயன் பகருவிதம்
பசும்பாலர் அம்புலியைப் பற்றி நினைப்பதுபோல்
நிசமில்லாக் கற்பனையென் னெஞ்சில் நினைத்தேனே
குதிரைக்குக் கொம்புமுண்டோ கோக்குத் துதிக்கையுண்டோ
பதடனெனை விரும்பும் பண்பான பாரியுண்டோ
அரபிக் கதையில்வரும் அம்பட்டன் போலலொருநான்
கருதி யமைக்கலுற்றேன் சந்தர்ப்ப மானகரம்
ஆகாசக் கோட்டைகட்டி யைந்தறிவு நான்றுறந்தேன்
சாகாசக் கொள்ளிதீமை தலையோடும் போகாது.

என்னப் புலம்பியவ ரேக்கமுற்றுத் தாமிருந்தார்
பின்னுமப் பெண்பேயும் பிள்ளைபெற்றுத் தான்படுத்தாள்
பொன்னின் பதுமையெனப் பொலிந்ததே யக்குழவி
மின்னலைப் போல விளங்கினா னப்புதல்வன்
தாதிவைத்துப் புத்திரனைத் தாம்வளர்த்தார் தந்தையரம்
போதவுயி ரவன்பால் பொருந்தவைத்தார் மேலவரும்
அப்புதல்வ னப்போ தருமையாய் தான்வளர்ந்தான்
மெய்ப்புதல்வ னப்போ வினோதமாய்த் தான்வளர்ந்தான்
பிஞ்சிற் பழுத்த பெருங்குணங்கள் தாமுளவாம்
நெஞ்சிற் கருணை நிலையுண்டா மாண்மகற்குப்
பிச்சைக்கு வந்தாற் பெருநாழி கொண்டிடுமாம்
கொச்சை மனிதருடன் கூடா தொழிந்திடுமாம்
பொன்னான மேனி புழுதிபடக் கூசிடுமாம்
கண்ணா லழுமவரைக் காணவுந் தானழுமாம்
களித்தாரைக் கண்டக்கால் தானுங் களித்திடுமாம்
சுளித்தாரைக் கண்டக்கால் துள்ளி விலகிடுமாம்
யாழி னிசைபாட வானந்தங் கொண்டிடுமாம்
சூழுஞ் சனமகிழ சொல்மழலை பேசிடுமாம்
வந்தவர்க்குப் பன்னீர் வகையுடனே தான்றெளிக்கும்
சந்தன நல்கிநல்ல தாம்பூலந் தான்வழங்கும்
சீராக நீராடும் தேகங் கமகமென
நேரான செஞ்சாந்து நித்தியந் தான்புனையும்.
அப்படிப் பட்ட அழகு மகன்றனக்கும்
ஒப்பாதாம் பால்கொடுக்க வுண்மையாய்ப் பெற்றவட்குக்
கொள்ளிவாய் நீலி குழந்கைக்கப் பாலுதவாள்

பிள்ளைகள் பெற்றுமவள் பிள்ளைக் கனிவறியாள்
தானிட்ட முட்டைகளைச் சர்ப்பங் குடிப்பதுபோல்
மானித்துப் பேற்றவிளம் மக்களைப் போற்றாளாம்
சீராட்டிப் பாட்டி சிறுவனைத் தான்வளர்த்தாள்
போராட்டத் தாய்முகத்தில் புத்திரனைக் காட்டாமல்,
இந்தச் சுகமு மிட்டவீசன் பொறுக்கவில்லை
அந்தச் சிசுவை யவமிருந்து வந்தடைத்து
ஆண்டிரண் டாமுன் அரியவுயிர் பறிக்க
மாண்டவ ரானார்கள் வாஞ்சையுடன் வளர்த்தார்.

நாட்டு ளோர்கூட நடுங்கி மனந்திகைத்தார்
பாட்டியார் சாம்பி பயித்தியம் தானடைந்தாள்
அவதானி நொந்தேதம் மைந்தறிவும் போயழிந்தார்
தவியாத தாயுந் தவித்துப் பதைத்தழுதாள்
தாயத்தார் மேலுக்குத் தாம்வந் துபசரித்தார்
மேயவருள் ஈரமற்ற வெங்கண்ண ரேதுரைத்தார்
பெற்றிடு மக்களுக்குத் தந்துகள் கூடவரக்
குற்றங்கள் செய்தாய்நீ கூடுமுன் ஜன்மமதில்
தத்தொன்று கொண்டிடப்பின் பெற்றவைதக்குமென்றார்
மெத்த வகமெலிந்த வேளையி லிந்தவிதம்
சொல்ல வவதானி சுள்ளென் றுடன்வெகுண்டு
நில்லாமல் வீடுவிட்டு நீங்குமெனப் போயொழிந்தார்.

குழந்தை யிழந்த கொடுந்துயர் தன்னாலே
அழன்ற வுளந்தனக்கோ ராறுதல் தேடவெண்ணிச்
சிந்தை தெளியவெகு தேசங்கள் தான்றிரிந்து
பந்த முடனே பலபட்டினம் பார்த்துவந்து
சீராருங் காவிரிசூழ் தென்னாதி யூரதனில்
பேராற் பெரிய பெருங்கலைக் கூடம்வைத்துப்
பத்துத் திசையும் பரிவாகக் கொண்டாட
வித்தைகள் சொல்லி விரியும் புகழ்நிறுத்தித்
தத்துவ மாய்வதனில் தன்விசனந் தான்மறந்து
பித்துணிப் பெண்டாட்டி போனவழி போகவிட்டு
ஈசற்கு நாளொழித்தே யெல்லோர்க்கு நல்லவராய்
ஆசையகத் தடக்கி யவதானி தானிருந்தார்.
ஆதியூர் தன்னி லழகுள்ள வீடிரண்டு

தீதறக் கட்டித் திறமாக வாழ்ந்திருந்தார்.

ஒன்றிற் சமுசார வோதக்கடல் இருக்க
ஒன்றிற் கலையாய்ந்தே யுத்தமர் வீற்றிருந்தார்.

ஏதோ விருக்கையிலே யின்னமுந் தன்மனையாள்
காதலுறக் கலந்து கர்ப்பமுந் தான்றரித்தாள்.
பத்தான திங்களும்நோய்ப் பாலகனைப் பெற்றெடுத்தாள்
தத்துகள் வாராமற் றற்பரன் காத்தளித்தான்.

ஆண்டு நிறைந்தே யறுதிங்க ளாகையிலே
கீண்டு நகத்தாலே கிள்ளினாள் கொள்ளியன்னை
பீரிட் டிரத்தமெழப் பிள்ளைதன் கன்னமதில்
விரிட் டழுதுதந்தை மெய்ம்மடியிற் போய்விழுந்தான்.

ஆவி பதைக்க அவதானி தானெடுத்துப்
பாவி யுனக்குப் படுகேடு மென்னவென்று
சுவட்டி லறையச் சுடுகொள்ளி முண்டைமகள்
அவக்கென்று வாயிலடித் தாங்காரப் பட்டவளும்
பிள்ளையும் வேண்டேனான் கொள்ளியும்பின் வேண்டேன்
உள்ள மகனை யுருக்கமுடன் நீவளர்ப்பாய்
நாட்டாரைப் போலேயு நான்கண்ட தென்னவுண்டு
வீட்டில் விஷமாகி விட்டாயே நீ போவி
படுபாவி யுன்னானான் பட்டது கோடியுண்டே
கொடும்பாவி யுன்னாயி கொன்றெனைக் கூலவைத்தாள்.

பாவையுரை கேட்டுப் பாக்கிய மென்றவரும்
ஆவின் பாலிட்டே யருமை மகவளர்த்தார்.
புண்ணான நெஞ்சாறப் பூமகனைக் கண்டதினால்
கண்ணாள னென்றெயக் கான்முளைக்குப் பேருமிட்டார்
அப்பா லகன்றாலும் அம்மைமுகம் பாரானாம்
துப்பான தந்தைதனைச் சொப்பனத் திலுந்துறவான்
அரியவழி போனாலும் அப்பனுடன் போவானாம்
பெரியமலை காடெனிலும் பின்னே தொடர்வானாம்.

அக்குழந்தை யிவ்வா றருமையுடன் வளரத்

தக்க மகிழ்ச்சியுடன் தந்தையும் தானிருந்தார்.
தாயாதி வீட்டில் தலைவர்கள் போயொழிந்தார்
மாயாத வெட்டுணியும் மற்றையவர் நன்மனையாள்
அழிகண்ட னோடு மடைய மடிந்தார்கள்
இழவுரிமை யாங்கவர்க்கு மேற்றபடி தானடத்தித்
தான்றோன்றி மைந்தனுக்குத் தக்கமதி யுரைத்தே
ஈன்றாள் மனப்படிக்கே யெல்லா வுரிமைசெய்தும்
அவரவர்க் கேற்ற வரியவுப சாரம்பண்ணி
அவதானி தானிருந்தார் ஆனகலையாய்ந்து
வேதப் பொருளுணர்ந்த வேதாந்தி யாங்கொருவர்
போத பொருளுணர்ந்த வேதாந்தி யாங்கொருவர்
போத மனுட்டானம் பொய்யா வசனமுள்ள
நிசயோக சித்தியென நேர்ந்த பெயருடையார்
கசியு மருளுடையார் காலவியல் கண்டறிவார்
அவதானி தன்மனதிற் காறுதல் சொல்லவல்லார்
புவியின் சுகந்துறந்து போம்வழியில் நோக்கமுள்ளார்
உயிருக் குயிராக வுற்றவ தானியர்க்குத்
தயிரியஞ் சொல்லித தளர்வை யொழித்திடுவார்
தளர்வை யகற்ற வல்லதண்டுணைவ ரின்னொருவர்
இளமை யடக்கமுளார் ஏற்கு மதியுடையார்
வீணெண்ணங் கொள்ளாதார் மேலைக் கருத்துடையார்
காணு மெவரிடத்தும் கண்ணோட்டந் தானுடையார்
சுமதி யெனும்பெயரார் தோழ ரவதானியர்க்குச்
சமயத் துயிருதவும் தன்மையுள்ள மெய்த்துணைவர்
ஈங்கிவ் விருவ ரிணக்கத்தால் உள்வருத்தம்
தாங்கி யவதானி தைரியங் கொண்டிருந்தார்
ஆசுகவி பாடி யவதானஞ் செய்தவரும்
பேசு புகழ்மேவிப் புலவருந் தானிந்தார்
கொள்ளிவாய் நீலியின்னங் கூடியே சூலடைந்து
மெள்ளவே வீண்றோளோர் விரமுள்ள வாண்மகனை
மூன்று பிராயமந்த முத்துமகன் வளர்ந்தான்
தோன்றும் வலிமையுள்ள சுந்தரன் தான்வளர்ந்தான்
தோகையு மக்காலம் துன்னிக் கருத்தரித்தாள்
ஆகா வழியான அம்மையிடம் போகவென்றே
ஏழைக் குறும்பனெனு மேற்றவுடன் பிறந்தான்
வாழுங் கொல்லூர்க்கு வரிசையாய்ப் போகவென்று,

தன்னற் கணவனுரை தட்டிக் கழித்துவிட்டு
முன்னிணைப் பிள்ளையோடு மூளியுந் தான்முடுகிப்

போனாளே போனாளே புத்திகெட்ட பெண்ணீலி
தானாகப் போனாள் தலைமதங் கொண்டவளும்
போன விடத்தினிலே பொன்மகனைத் தான்வளர்க்க
ஆனபே ரில்லாமல் ஆங்கவன் மாண்டுபட்டான்
மகன்பட்ட செய்தியந்த மானவனுந் தான்கேட்டு
மிகவு மனந்தளர்ந்து மெய்ம்மறந்து மேலழுவார்
உண்டான பாவமெல்லாம் ஓருருவ மாய்த்திரண்டு
பெண்டாக வந்தாளே பெண்ணீலி யென்றனுக்கு
நகைக்க வுடம்பெடுத்து நன்மையற்ற மாபாவி
பகைத்து மனம்பதைக்கப் பண்ணினா ளென்னசெய்வேன்
பத்தா வுயிரறுக்கும் பாதகி யென்றழுவார்
நித்தங் கொடுமைபுரி நீலியே யென்றழுவார்
மனங்கொதிக்க வைத்தாளே மாபாவி யென்றழுவார்
இனமென்ன செய்வாளோ வேழையே னென்றழுவார்
ஈரமற்ற பாவி விரக்கமற்ற சண்டாளி
தாரமென வந்த சதிகாரி யென்றழுவார்
ஏதேது செய்தாய் இரும்பொத்த வன்மனத்தாய்
தீதின்ன மென்னவென்ன தேடுவா யென்றழுவார்
நானும் வருந்தி நவின்றதெல்லாங் கேளாமல்
ஊன மனதின்படி யொட்டாரங் காட்டிவிட்டாய்
காலிலே நின்றுமொரு கண்மணியைக் கொண்டுசென்றாய்
பாலனைத் தின்றாய் பழிகாரி யென்னசெய்வேன்
என்னப்பா கண்மணியே யெங்கு நடந்துவிட்டாய்
பன்னி யழைக்கப் பரிந்தெதிர் வாராயோ
முத்தண்ணா முன்புவந்தோர் முத்தந்தா வென்னரசே
பத்தியாய்ப் பாட்டியிதோ பாலடிசி லூட்டிவாளே
கல்லோடா வுள்ளங் கசந்தோமோ நாங்களப்பா
இல்லையோ தெய்வமுந்தா னெங்களுக் கென்னசெய்வோம்
மண்ணுக் கிரையாய் மணிமகனைத் தான்கொடுத்தாள்
கண்ணிலே காட்டாமல் கால்மாண்டு போகவைத்தாள்
இன்ன பரிசாக விவரழுது வாடுகையில்
தன்னை மதித்திருக்குந் தையல்நிலை பகர்வாம்
சூலும் வளர்ந்துபின் பச்சூர்ப்பணகை யீன்றெடுத்தாள்
ஏலங் குழலாளை யேற்றமுள பெண்ணமுதை
கைக்குழந்தை யந்தக் கலியாணி தன்னோடு
தக்க குணம்படைத்த தாயின் மனையகன்று

மறித்துங் கணவனிடம் வந்தாளே வாய்நீளி
கறுத்து மனங்கொதித்துக் காந்தாரி மாமியுடன்
வாலாய மாகவவள் வன்போர் விளைக்கலுற்றாள்
காலங்கள் கண்ட அந்தக் காந்தாரி தானிளையாள்
பொறுமையிலாக் காந்தாரி போரி லிளைக்காளாம்
கறுவுடைய வாய்நீளி கல்ல லிடுவாளாம்
பேயாட்டம் பேய்க்கூச்சல் பேயழுகை வீட்டினிலே
வாயாடிப் பட்டிமக்கள் வாழ்வு குலைந்தார்கள்.
அருமையாய்த் தான்வளர்த்த வன்னைக்குத் தான்பரியின்
பெருமை குலைக்கவந்த பெண்ணீலி வைவாளாம்
பெண்ணீலி முண்டைவழி போகாதே யென்றுரைத்தால்
கண்கண்ணீ ராயழுது காந்துவாள் காந்தாரி.
இருவரையும் வேறா யிருத்தினாலூர் நகைக்கும்
இருவருறை வீடோ வெரியுஞ் சுடுகாடு
வீட்டி லிருப்பதிலை வெம்பு மனத்தவரும்
தாட்டிக யோகியுடன் சற்காலந்தான் கழிப்பார்
வேளைக்குச் சோறின்றி மெய்வருந்தித் தான்படுவார்
நாளுக்கு நாள்மெலிந்து நைந்தா ரவதானி
படும்பாடு போதாமற் பாவலர் தாயுமப்போ
கொடும்பாவி யென்னுமொரு கூடப் பிறந்தவளை
முளையி லறுத்துலகில் விடுபட்டி யானவளை
விளையுங் கலகமென்றால் விட்டேனோ வென்பவளை
பல்லுக் கருகிப் பதறாமல் வைபவளை
இல்லாதும் பொல்லாதும் இட்டுப் பிணைப்பவளை
உறவு போலுற்றுக் குளவிபோல் கொட்டுவாளை
கறுவி நடுத்தெருவில் கைமண் ணிறைப்பவளை
ஒண்டின வீட்டுக் கிரண்டு நினைப்பவளை
மிண்டுகள் செய்துபின்பு வீண்பழி போடுவாளை
சிறுதனந் தேடத் திறமிக்க கொண்டவளை
அறுதாலி யாரை யழைத்துத் தன்வீட்டிருத்தி
நன்மகன் பேரதனை நாளுங் கெடுப்பதற்குத்
துன்மை பலவிழைக்குந் துற்குறியைக் கூட்டிவைத்தாள்
அழிந்து விழுவாளும் ஆகாத தீங்கிழைத்துக்
குழந்தை கழுத்தில் குலவுமணி முதலாய்
வீட்டில் திருடி வெளியிலே விற்றிடுவாள்
கேட்டால் விளக்கணைத்துக் கிட்டிச் சபித்திடுவாள்.

You may also like

Leave a Comment