28. எட்டயபுர அரச வம்சம் – 2

28. எட்டயபுர அரச வம்சம் – 2
 
 
எட்டயபுர மன்னர்களைப் பற்றிய பட்டியலின் தொடர்ச்சியை, அவர்களைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க செய்திகளை இந்தப் பகுதியில் மேலும் தொடர்கிறேன்.

21வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்
இவர் 20வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 11 ஆண்டுகள்.

22வது பட்டம்
பெயர்: ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யன்
இவர் 21வது பட்டமாகிய ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மூத்த மகன்.
ஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்

23வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன். இந்த மன்னருக்கு இடவங்கைக் கெச்சிலப்பநாயக்கரவர் என்ற இன்னொரு பெயரும் வழங்கபப்ட்டுள்ளது.
இவர் 22வது பட்டமாகிய ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்

ஆட்சி செய்த காலம்: 23 ஆண்டுகள்


"ரூக்குமிஞ்சி கிராமத்தின் மேட்டில் கோலவார்பட்டியாருடனேபுல்வாய் வேட்டைச் சண்டையில் இடது கையினாலே ஆளையும் பரியையும் ஒரே வெட்டில் அற வெட்டினார்கள். அதனால் அவர்களுக்கு இடவங்கைக் கெச்சிலப்பநாயக்கரவர்கலென்ற பட்டப் பெயருண்டாயிற்று" (வம்சமணிதீபிகை, பக்கம் 34)

24வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யன்
இவர் 23வது பட்டமாகிய இடவங்கை ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 21 ஆண்டுகள்.

25வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யன்.
இவர் 24வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 32 ஆண்டுகள்

 

இவரது காலத்திலும் எட்டயபுரம் அதன் ஆட்சி எல்லைப் பரப்பளவில் மேலும் விரிவடைந்திருக்கின்றது.

26வது பட்டம்
பெயர்: ஜெகவீரராமகெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்.
இவர் 25வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 14 ஆண்டுகள்

 

இவர் காலத்தில் வாலன்பட்டி, மார்த்தாண்டன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களும் எட்டயபுர ஆட்சிக்குள் இணைக்கப்பட்டன.

27வது பட்டம்
பெயர்: ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன்.
இவர் 26வது பட்டமாகிய ஜெகவீரராமகெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.

ஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்.

இவரது காலத்தில் எட்டயபுரத்தில் வெங்கடாசலபதி ஆலயம் ஒன்று கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன் அவர்களுக்கு கண் கொடுத்த எட்டப்ப நாயக்கர் என்ற ஒரு பட்டப் பெயரும் வழக்கில் இருந்திருக்கின்றது.  ஒரு கண் பார்வையிழந்திருந்த ஒரு பிராமணருக்கு கனவில் இறைவன் தோன்றி எட்டயபுர அரசனைச் சென்று கண்டு வேண்டினால் கண் பார்வை கிடைக்கும் என்று சொல்ல அவரைக் காணச் சென்றிருக்கின்றார் அந்த ஒரு கண் பார்வையிழந்திருந்த மனிதர். அரசரும் அவரது வேண்டுதலைக் கேட்டு, தமது குலதெய்வத்தை வணங்கி தியானம் செய்து இனி பார்ப்பீர்கள் என்று வரம் கொடுக்க அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்த ஒரு கண் தெரிய ஆரம்பித்திருக்கின்றது. அதனால்  இந்த அரசருக்கு கண் கொடுத்த எட்டப்ப நாயக்கர் என்ற பட்டமும் விளங்கி வந்திருக்கின்றது. (வம்சமணி தீபிகை, பக்கம் 38)

 

28வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன்.
இவர் 27வது பட்டமாகிய கண்கொடுத்த ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 14 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1725லிருந்து 1739வரை.

29வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன்
இவர் 28வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 30 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1739லிருந்து 1769வரை.

30வது பட்டம்
பெயர்:ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன்.
29வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன் அவர்களுக்கு மகன் இல்லாததால் கசவன்குன்று என்ற இடத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன் எட்டயபுரத்திற்கு வந்து இங்கு ஆட்சி செய்தார்.
ஆட்சி செய்த காலம்: 12 ஆண்டுகள், அதாவது ஆங்கில வருடம் 1769லிருந்து 1783வரை.

31வது பட்டம்
பெயர்: முத்து ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்.

30வது பட்டமாகிய ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யனவர்களுக்கு மகன் இல்லாமையால் மூன்றாம் தாயார் வழியில் பிரிந்த குருமலைக் குமாரமுத்து நாயக்கரவர்களுடைய சேஷ்டகுமாரர்களாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் இராச்சியம் ஆண்டு வந்தார்கள். (வம்சமணி தீபிகை பக்கம் 43)
 

இந்த மன்னர் காலத்தில் தான் வீரபாண்டிய கட்ட்பொம்மன் சம்பந்தப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி போர் நடைபெறுகின்றது.
ஆட்சி செய்த காலம்: 33 ஆண்டுகள், அதாவது 1783 முதல் 1816 வரை.

32வது பட்டம்
பெயர்: ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யன்.
இவர் 31வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 23 ஆண்டுகள், அதாவது 1816 முதல் 1839 வரை.

இந்த அரசரின் ஆட்சி காலத்தில் மாவேலியோடை வணிதங்குமார எட்டயபுரத்தில் சுப்ரமண்ய சுவாமி கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பராமரிப்புக்காக உத்தண்டபுரம் கிராமத்தையும் குமாரரெட்டியபுரங்கிராமத்தையும் உத்தரமாணியமாக விட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். (வம்சமணி தீபிகை பக்கம் 110)

இவர் தனது ஆட்சி காலத்திலே ரூபாய் 30,000 செலவு செய்து களுகு மலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலின் மேல் சண்முகவிலாச மண்டபமும் குமார தெப்பம் மைய மண்டபத்தையும் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். அதோடு கழுகுமலைசாமி கழுகாசலமூர்த்திக்கு ரூபாய் 20,000 செலவு செய்து கர்நாடகத் தந்தப் பல்லக்கும் ஆபரணங்களும் அளித்திருக்கின்றார்கள்.

இந்த மன்னரின் ஆலயத்தொண்டுகள் அதற்காக அவர் வழங்கிய சில கிராமங்களின் பெயர்கள் ஆகிய செய்திகளை  விளக்கமாக வம்சமணி தீபிகையின் 39வது அதிகரணத்தில் காணலாம்.
 
ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யனுக்கு நான்கு மகன்கள். அவர்களில் அனைவருமே அடுத்தடுத்து ராஜ்ய ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர்.
1.ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்
2.வெங்கடேசுவர எட்டுநாயக்கர்
3.முத்துசாமி பாண்டியன்
4.இராமசுவாமி பாண்டியன்
 
 
33வது பட்டம்
பெயர்: ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்.
இவர் 32வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பநாயக்கர் அய்யனின் மூத்த மகன்.
ஆட்சி செய்த காலம்: 13 ஆண்டுகள், அதாவது 1839 முதல் 1852 வரை.
 
33வது பட்டம் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் காலத்தில் எட்டயபுரம் அரண்மனை கட்டிடத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அரண்மனை கோட்டையைச் சுற்றியும் நடுவிற்பட்டியிலும் சாலை உருவாக்கப்பட்டிருக்கின்றது; சாலைகளில் மரங்கள் வைத்து சாலை விரிவாக்கப் பட்டிருக்கின்றது; நடுவிற்பட்டி குளத்திற்கும் புதுப்பட்டி குளத்துக்கும் கற்பணி செய்யப்பட்டுள்ளது; எட்டீஸ்வரன் சிவன் கோயில், பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருநாள் ஏற்படுத்தப்பட்டு ஆலய பணிகளின் செலவுகளுக்காக குருமலைவணிதங்கருசற்குளம், சிவந்திப்பட்டி. ஜெகவீரபுரம் ஆகிய கிராமங்கள் உத்திரமானியமாக விடப்பட்டிருக்கின்றன.

 

கழுகுமலை கழுகுமலை சுப்ரமணிய சுவாமி ஆலய பராமரிப்புக்காக கழுகுமலைக்கிராமம், இராமநாதபுரங்கிராமம் என மொத்தம் 15 கிராமங்கள் உத்தரமானியமாக விடப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் ஆறுமுகநயினார் சுவாமிக்கு கற்பகிரகங்கட்டி ரூபாய் 70,000க்கு நவரத்தின கிரீடமும் தங்கத் தாமரையுப் பூமாலையும் மற்றும் ஆபரணங்களும் வழங்கியிருக்கின்றார்கள்.
கங்கைகொண்டான் கிராமத்தில் சித்திரா நதியில் பாலம் கட்டியிருக்கின்றார் இந்த மன்னர். அதே போல கயத்தாறுக்குப் பக்கத்திலுள்ள உப்பார் ஓடையிலும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் கட்டியிருக்கின்றார்.

இவர் வேப்பிலைப் பட்டிக்கிராமத்தில் அன்னதானச் சத்திரங்கட்டி அங்கே அன்னதானம் முறையாக நடந்து வரவேண்டும் என்பதற்காக எட்டூர் வட்டம், நடுவிற்பட்டிக் கிராமம் ஆகியற்றை உத்திரமானியமாக விட்டிருக்கின்றார்.

34வது பட்டம்
பெயர். ஜெகவீர வெங்கடேசுவர எட்டப்ப நாயக்க அய்யன்
33வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனுக்கு புத்திரர்கள் இல்லாமையால் இவரது சகோதரர் வெங்கடேசுவர எட்டுநாயக்கர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

35வது பட்டம்
பெயர்: முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர் அய்யன்
33வது பட்டத்து மன்னர் போல 34வது மன்னருக்கும் புத்திரர்கள் இல்லாமையால் இவர்கள் சகோதரர் முத்துசாமி பாண்டியன் மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்று முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர்  அய்யன் என அழைக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி செய்த காலம்: 10 ஆண்டுகள், அதாவது 1868 வரை.

இந்த மன்னருக்கு இரண்டு மகன்கள்.
1)ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்
2)வெங்கடேச எட்டு நாயக்கர்

36வது பட்டம்
பெயர்:  ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன்
இவர் தனது 12ம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றார். தந்தையார் மன்னர் முத்துசுவாமி ஜெகவீரராம எட்டப்பநாயக்கர்  அய்யன் மறைவின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். 12 வயது குழந்தையாக இருப்பதால் மன்னரின் சகோதரரான  இராமசுவரம் நாயக்கர் அவர்கள் (இராமசுவாமி பாண்டியன் – 33வது பட்டம் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் 4ம் மகன்) மேலாளராக இருந்து  இராஜ்யம் பரிபாலனம் செய்திருக்கின்றார். அவருக்கு வயது 21 பூர்த்தி அடைந்ததும் 1878ம் வருடம் ஆகஸ்டு 10ம் தேதி இராஜ்ஜியத்தை முழுமையாக ஏற்று ஆட்சி செய்து வந்துள்ளார்.

 

இவரைப் பற்றிய தகவல்களுடன் வம்சமணி தீபிகை குறிப்பு முடிகின்றது. இந்த மன்னரின் காலத்தில் தான் வம்சமணி தீபிகை நூலினை கவிகேசரி.சாமிதீஷிதர் எழுதியிருக்கின்றார். இந்த மன்னரின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு தகவல்கள் இந்த நூலின் இறுதிப் பகுதியில் நிறைந்துள்ளன.
 
ஆக 36வது பட்டத்திற்கும் தற்போது பட்டமேற்றுள்ள அரசர் திரு.துரை பாண்டியன் அவர்களுக்கும் இடையில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களுடைய பெயர்களையும் அது தொடர்புடைய தகவல்களையும் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
 
தொடரும்..
 
அன்புடன்
சுபா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *