Home Palm Leaf 22 – நாமக்கல்

22 – நாமக்கல்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் –  ௨௨ (22)
 

”இ"யை முதலெழுத்தாகக் கொண்ட அந்தப் பேராசிரியையின் இல்லம்  சென்றோம்; அவர்தான் NMM  திட்டத்திற்கு அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தாராம்.  அவரிடம் "இந்த மாவட்டத்தில் நீங்கள் எங்காவது அதிகமான சுவடிகளைக் கண்டீர்களா? நீங்கள் பார்த்த சுவடிகளில் மதிப்பு வாய்ந்த சுவடிகள் என எதைக் கருதுகிறீர்கள்? “ எனக் கேட்டோம் .

 

 

அவர் “திருச்செங்கோடு பகுதியில் ஒரு பட்டா சாரியாரிடம் மதிப்பு வாய்ந்த ஓலைகள் நிறைய உள்ளன; ஆனால் அவர் அவற்றைக்  காட்டமாட்டார், மிகுந்த முரண்டு பிடிப்பார்; என்னை அவர்கள் வீட்டில் உள்ளே கூட விடவில்லை; நான் பலமுறை சென்றேன். அவர்கள் சேலை அணிவது போல் மடிசார் வைத்துச் சேலைக் கட்டிச் செல்வேன்; பிறகு பல நாள் கழித்தே உள்ளே விட்டனர்.  ஓலைகளைப் பார்க்கத்தான் முடிந்தது . மிகவும் கெஞ்சி அவரிடம் ஒரு கட்டு மட்டும் படித்துப் பார்க்க வாங்கினேன்; ஆனால் நான்கு நாட்கள் சென்றபின் அதையும் அவர்கள் வந்து வாங்கிச் சென்று விட்டனர். நான்கு  ஆண்டுகளுக்கு முன் இந்த ஓலைச் சுவடிக் குவிய லைப் பற்றி நான் ஒரு செய்திகூட தினகரனில் வெளிவரச் செய்தேன்” என அந்த செய்தித் துணுக்கைக் காண்பித்தார்.

 

அடுத்து குருசாமி பாளையத்தில் ஒரு நாவிதர் வசம் மிக அரிய வைத்தியச் சுவடிகள் இருப்பதாகக் கூறினார். அவர் பார்த்தவரையில் இது இரண்டுமே மதிப்பு வாய்ந்ததாகத் தெரிவதாகக் கூறினார் . நாங்கள் வேங்கட நரசிம்ம பட்டாசாரியாரிடம் வாங்கிய குவியலைப்  பார்த்து மிகவும் வியந்தார். “ எப்படியாவது திருச்செங்கோடு சென்று அங்கேயும் சுவடிகள் வாங்கிவிட்டால் நீங்கள்  அதிஷ்டசாலிதான்”  என்றார்.

நாங்கள் எப்படியாவது வாங்கிவிடுவோம் என அவருக்கு உறுதி கூறினோம்; மனத்திற்குள்  இறைவனை வேண்டினோம். வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் ஓலைகளைப் பராமரித்த விதம் பார்த்து எங்களுக்கு மிகுந்த விசனம் உண்டானது. எனவே திருச்செங்கோடு பட்டாசாரியாரிடமும் வாங்கி  அவற்றை முறையாகப் பதப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினோம் .

பிறகு  நேரே திருச்செங்கோடு சென்றோம். கொடிமாடச் செங்குன்றூர் எனத்  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. சிவனும் சக்தியும் இணைந்து இருக்கும் கோலத்தில் இவ்வுலகின் இயக்கத்தின் இயல்பைக் காட்டும்படி மூர்த்தி இருக்கும் தலம். சக்தி இல்லாமல் சிவன் ஏது? சிவனில்லாமல் சக்தி ஏது? தமிழ் நாட்டில் இதே மாதிரி அர்த்த நாரீஸ்வரர் இருக்குமிடம் திருநெல்வேலிக்கு  மாவட்டத்தில் இருக்கும் வாசுதேவ நல்லூர் ஆகும் . திருச்செங்கோடு நகரில் மலைக் காவலர் கோயில் வீதியில் நாககிரி பண்டிதர் என்று ஒரு முகவரி இருந்தது. அதுதான் தமிழ்ப் பேராசிரியை சொன்ன இடம். மிகுந்த எதிர்பார்ப் புடனும், நம்பிக்கையுடனும் அங்கே சென்றோம். அங்கே போய் ’சார் சார்’ என்று அழைத்தபடி உள்ளே செல்லும் போது , வைதிகத் தோற்றத் துடன் ஒரு இளையவர் வந்தார். அவர் தன்னை தங்கராஜ் பண்டிதர் என அறிமுகப் படுத்திக்கொண்டார்.  அவரது தந்தைதான் நாமகிரி பண்டிதர்.  அவரிடம் நாங்கள் வந்த நோக்கம், எங்களின் பயண நோக்கம் இவற்றைப் பற்றி எப்போதும் போல் எடுத்துரைத்தோம்.

 

அவர் அதை அவ்வளவு சிரத்தை இல்லாமல் அரையும் குறையுமாகக் கேட்டுவிட்டு ,
“ இப்போது எங்களிடம் எந்தச் சுவடியும் இல்லையே !”  என்றார்.

”ஐயா தங்கள் தந்தையாரைச் சற்றுக் கூப்பிடுங்கள்; சிறிது நேரம் அவரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகிறோம்”

 

"அப்பா இப்போது தூங்குகிறார்; அவரைப் பார்க்க முடியாது. அதுதான் நான் கூறுகிறேனே ?"

 

"இல்லை ஐயா இவ்வளவு தூரம் வநது விட்டோம், அவரை சந்தித்து அவரது ஆசி வாங்கிப் போனால் எங்களுக்குத் திருப்தியாக இருக்கும் "

"இப்போ தூங்குகிறாரே,  அவரை எப்படித்  தொந்தரவு செய்வது? "

 

ஆனால் அவர் மாடிப்படியில் நின்றபடி எங்கள் பேச்சைக் கவனிப்பதை நாங்கள் பார்த்து  விட்டோம். அதே நேரம் உள்ளே கூடத்தில் ஓர் அலமாரியில் சுவடிகள் அடுக்கி வைத்திருப்பதும் எங்களுக்குக் கண்ணில் பட்டுவிட்டது.

எங்களை அவரது அப்பாவைப் பார்க்க உள்ளே கூப்பிட்டால் ஓலைச் சுவடி எங்கள் கண்ணில் பட்டுவிடும்; எனவேதான் எங்களைப் பேசி அப்படியே அனுப்பத் தங்கராஜ் பண்டிதர் முயற்சி செய்தார். நாங்கள் தான் எதையும் எதிர்பார்த்துத்தானே  வந்திருக்கிறோம்?  எனவே பேச்சை திசை திருப்பினோம்.

"ஐயா, தங்கள் தந்தையில் பெயர் ஏன் நாககிரி என்றுள்ளது? நாமகிரிதான் நாககிரியா ?"  என்று கேட்டுவிட்டு ஏதோ பத்திரிகை நிருபர் போல் அவர் பேசியதைக் குறிப்பெடுக்க  ஆரம்பித்தோம். அவர் நாககிரி வேறு; நாம கிரி வேறு என்று விளக்கிவிட்டு நாககிரிதான் அவர்களின் குலதெய்வம் என்றார் . 

 

"ஐயா அந்த நாககிரியின் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா ?" என்று கேட்டு உள்ளே போக வழி பிறக்குமா என்று பார்த்தோம். அவர் மசிய வில்லை; ”நான் தருகிறேன்” என்று சிறிய புகைப்படம் ஒன்றைக் கொண்டுவந்து காட்டினார் .

“ கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா குடிக்க, அலைந்து அலைந்து மிக்க தாகமாக இருக்கிறது ” எனப் பேச்சை நீட்டினோம் .

பிறகு " ஓலைச் சுவடிகள் உங்களிடம் இருப்பதாக எங்கள் பட்டியலில் இருக்கிறதே, அவை  இப்போது எங்கே ?" என்றோம் .

 

"அவற்றை நான்கு ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்க வந்தவர்கள் வாங்கிப்போய்  விட்டனர்”

 

"ஐயா ! உங்களிடம் ஓலைச் சுவடி ஒரு கட்டுப் பெற்று அதை நீங்கள் ஒருவாரம் கழித்து திருப்பி வாங்கிவந்த தமிழ்ப் பேராசிரியையைப் பார்த்து விட்டுத்தான் வருகிறோம்.  அவர் எல்லாம் சொல்லிவிட்டார்; .

உங்களிடம் எவ்வளவு சுவடிகள் அப்போது இருந்தன என்பதை அவர் கூறிவிட்டார் “ என்று கூறியதும் அவர் முகம் சற்று இருண்டது .

அதே சமயம் நானும் அவரை இரண்டு மூன்று புகைப்படம் எடுத்து விட்டேன்.

"ஏன் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள் ? "என்றார்; அவரது முகத்தில் சிறிது பயம் வநது விட்டது. நாங்கள் மிகப் பணிவுடன் ”இல்லை ஐயா, உங்களிடம் இருக்கும் சுவடிகளைப் பற்றிய அத்தனை செய்தியும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தினகரன் செய்தித்தாளில் வந்து விட்டது; உங்களைப் பார்த்துப் பேசி ஒரு கட்டு வாங்கிச் சென்று திருப்பித்தந்த தமிழ்ப் பேராசிரியையும் எங்களிடம் எல்லாம் கூறி விட்டார்; இப்போது நீங்கள் உங்களிடம் ஓலைச் சுவடி எதுவும் இல்லை என்கிறீர்கள்; அவ்வளவுமே என்னவாயிற்று என்று கூற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது;  மேலும் உங்கள் தந்தையையும் பார்க்க முடியவில்லை ; எனவே எங்கள் அனுபவங்கள் அனைத்தையும் மீண்டும் மேலிடத்துக்கு ஒரு செய்தியாகத் தர வேண்டும் . நாங்கள் வந்து போனதைப் பற்றி ஓர் அறிக்கை தயாரிப்பதற்கு உங்கள் புகைப்படம் பயன்படும்"  என்றோம்.
இவற்றை மிகப் பணிவுடன்தான் தெரிவித்தோம்; மேலும் ” இவை தஞ்சை கொண்டு போகப்பட்டால்  சீரிய முறையில் பாதுகாக்கப்படும்; அதனால் இன்னும் சில  காலம் உங்கள்  சுவடியின் ஆயுள் கூடும். அவை உங்கள் பெயரிலேயே தலைமுறை தலைமுறையாகப் பாது காக்கப்படும்” என்றும் விளக்கம்  அளித்தோம். அவரும் சிந்திக்க ஆரம் பித்தார். பிறகு ”நான் உங்களுக்கு இன்று மாலையே போன் செய்கி றேன். எங்கள்  குடும்பத்தில் அனைவரையும் கலக்கவேண்டும். நான் இப்போது கோயில் பணிக்குப் போகவேண்டும்; எனவே காலையில் நீங்கள் வாருங்கள் ” என்றார். எங்களுக்கும் ஐம்பது சதவிகித நம்பிக்கை வந்தது. அவரிடம் இன்னும் சுமுகமாகப் பல கதைகள் பேசிவிட்டுக் கிளம்பினோம்.

 

எதிர்பார்த்தபடியே அவரிடம் இருந்து மாலை போன் வந்தது. “ நாளை காலை மீண்டும்  வீட்டுக்கு வாருங்கள்; நாங்கள் ஓலைச் சுவடிகளை நன்கொடையாகத் தரத் தீர்மானித்து விட்டோம் ” என்றார். எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் கூறியபடி மறுநாள் காலை, முதல் வேலையாகத் திருச்செங்கோடு சென்றோம். அவர் தயாராக ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் சுமார் நாற்பது கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அவரது தந்தையாரும் அப்போது இருந்தார். குடும் பத்தினர் அனைவரிடமும் நயமாகப் பேசி, அவர்களின் அன்புடனும் ஆசியுடனும் அத்தனை சுவடிகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றோம்.

 

அவர்களின் முனோர்கள் ! மிகபெரிய மகான் ! ஓலைகளை சேர்த்தவர் !

 

இதில் அரிய பல நூல்கள் இருந்ததாக நாங்கள் சந்தித்த தமிழ்ப் பேராசிரியை கூறியிருந்தார். அவருக்கும் போன் செய்து செய்தியைத் தெரி வித்தோம்.

 

அடுத்து குருசாமிப் பாளையம் நாவிதர் வசம் இருக்கும் ஓலைச் சுவடிகளையும் பார்க்க ஆவல் கொண்டோம். அங்கே புறப்பட்டோம். அங்கு என்ன நடந்தது என்பதை அடுத்ததில் பார்ப்போம்.

 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment