Home History சிற்பங்கள் – 2

சிற்பங்கள் – 2

by Dr.K.Subashini
0 comment

படங்கள்:முனைவர்.க.சுபாஷிணி

 

கார்த்திகை தீபம்

திருமதி.கீதா சாம்பசிவம்

 

ஈசனின் அடியையும் முடியையும் தேடி மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் சென்ற கதை நமக்கெல்லாம் தெரியும்.  ஜோதி ஸ்வரூபமாக நின்ற ஈசனின் அடியைத்தேடி வராஹமாக விஷ்ணுவும், அன்னமாக பிரம்மாவும் சென்றும் இருவராலும் காணமுடியாமல் போனது.  ஆனால் பிரம்மாவோ ஈசனின் முடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பொய்ச் சாட்சி சொல்ல வைத்துத் தான் முடியைக் கண்டதாகக் கூறவே அவர் ஈசனால் சபிக்கப்பட்டதும், பின்னர் சாப விமோசனம் பெற்றதும் தனிக்கதை.  அந்த ஜோதி ஸ்வரூபத்திலேயே பக்தர்களுக்கும் காட்சி அளிக்க வேண்டி தேவாதி தேவர்கள் பிரார்த்திக்கவே ஈசன் அங்கேயே தாம் ஜோதி ஸ்வரூபமான ஒரு மலையாகத் தோன்றினார்.  அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள்.

இதைத் தவிரவும் உமை அன்னையானவள் ஈசனின் கண்களை விளையாட்டாய்ப் பொத்தி விளையாடியது பிரபஞ்சத்திற்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கண்டு அதனால் தன்னைப் பாவம் சூழ்ந்ததாக அன்னை ஈசனை அதற்கான பரிகாரம் வேண்ட ஈசனும் அன்னையை பூவுலகம் போய்த்தவம் செய்யச் சொல்ல, அன்னையும் பூவுலகம் வந்து மணலால் லிங்கம் பிடித்து அனைத்துத் தடைகளையும் கடந்து ஏகாக்கிர சிந்தையோடு தவம் இருந்து ஈசனை மணந்தாள்.  எனினும் கைலையில் இருந்த பிருங்கி முனிவர் தன்னை வணங்காமல் ஈசனை மட்டும் வணங்குவது அன்னைக்கு உறுத்தவே தானும் ஈசனோடு உடலின் ஒரு பாகமாக இருந்தால் பிருங்கி முனிவர் தன்னையும் வணங்குவார் என ஈசனிடம் கேட்க, திருவண்ணாமலைக்குச் செல்லுமாறும் அங்கே தவம் இருந்தால் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் ஈசன் கூற, ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..

திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:

கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப்பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.

கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,

“தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!”

என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.

சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, “கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!” என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள்.

 

1.

1.

2.கொடிமரம்

3.கொடிமரத்தில் பதிக்கப்பட்டுள்ள ஏகபாதர் சிற்பம்

4.

5.

6.புல்லாங்குழல் ஊதும் கண்ணன்

7.

8.

9.

10.

11. ஆலயக் கல்வெட்டு

12.

13.

14.

15.

6.

17.

18.

19.

20. ஒரு தாய்க்கு குழந்thai பிறக்கும் காட்சியை சித்தரிக்கும் சிற்பம்

21.

22. ஆலயக் கல்வெட்டு

23. வாசல் பகுடியின் மேற்பகுதி

24. மேலுள்ள சுவரில் வடிக்கப்பட்ட சிற்பம்

25. மேலுள்ள சுவரில் வடிக்கப்பட்ட சிற்பம்

You may also like

Leave a Comment