Home HistoryEtayapuram 18 – எட்டயபுரத்திற்கு பயணம்

18 – எட்டயபுரத்திற்கு பயணம்

by Dr.K.Subashini
0 comment

17-08-2010

 

எட்டயபுரத்திற்கு பயணம்

 
இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தொடரை மீண்டும் தொடர்கின்றேன்.
 
இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை இதுவரை வாசித்திராதவர்கள்
இங்கே சென்று வலது பக்கத்திலுள்ள பகுதிகள் 1லிருந்து 17வரை வாசிக்கலாம். 
 
எனது பயணத்தின் முதல் நாளில் திருநெல்வேலி, கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சீவலப்பேறி ஆகிய இடங்களெல்லாம் சென்று இறுதியில் மீண்டும் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். மறுநாள் நான் எட்டயபுரம் சென்று அங்கேயே தங்கியிருந்து  சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்பது எனது திட்டம்.
 
சீதாம்மா எனக்கு தந்திருந்த குறிப்புக்களில்  நான் எட்டயபுரத்தில் பார்த்து வர வேண்டிய இடங்கள் என குறிப்பிட்டு எனக்கு பட்டியலிட்டிருந்த இடங்கள் இவை.  
  1. பாரதி நினைவு மண்டபம்
  2. பஸ் ஸ்டாண்டுக்கு முன் இருக்கும் சிதிலமடைந்த கட்டடம்
  3. முத்துசாமிதீட்சதர் சமாதி
  4. ராஜா உயர்நிலைப் பள்ளி
  5. பாரதமாதா டாக்கீஸ்
  6. சிவானந்தர் இல்லம்
  7. பாரதியார் பிறந்த வீடு
  8. பெருமாள் கோயில்
  9. சிவன் கோயில் (எட்டிஸ்வரர் கோயில்)
  10. அரண்மனை
  11. சோம சுந்திர பாரதியாரின் வீடு
  12. உமறுப்புலவர் சமாதி
  13. கீரைமஸ்தான் சாகிபு சமாதி
  14. ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையம்
இவற்றை பட்டியலிட்டதோடு எந்த வரிசையில் அவற்றை பார்த்து வர வேண்டும், எதற்குப் பின் எது என்று எனக்கு சில குறிப்புக்களையும் வழங்கியிருந்தார் சீதாம்மா.  அந்தக் குறிப்புக்களையும் பிரிண்ட் செய்து ஏற்கனவே தயாராக வைத்திருந்தேன்.  அதோடு எனக்கு எட்டயபுரத்தில் குரிப்பிட்ட இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று எனக்கு விளக்கங்கள் அளிக்கும் வகையில் மதுரை பல்கலைக்கழக சரித்திர ஆசிரியர்  முனைவர். கருணாகர பாண்டியன் அவர்களிடமும் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி விளக்கியதோடு எனக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார் சீத்தாம்மா.  நான் சென்னைக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே முனைவர். கருணாகர பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு நான் வந்துள்ளதையும் அவரை எட்டயபுரத்தில் சந்திக்க விருப்பதையும் கூறி உறுதி படுத்திக் கொண்டேன்.
 
15ம் நாள் காலை நான் எட்டயபுரம் செல்லவேண்டும். முதல் நாள் இரவே நாங்கள் திருநெல்வேலி திரும்பிய பின்னர் மறுநாள் பயணத்தை திட்டமிட்டோம்.
 
வாகன ஓட்டுனர் ரிஷான் காலை 7.30 மணிக்கு வந்தால், ஒன்றரை மணி நேரத்தில் எட்டயபுரத்தை அடைந்து விடலாம் என திட்டமிட்டோம். திரு.விஸ்வநாதனுக்கு வேலை இருந்ததால் அவர் இல்லாமல் என்னை எட்டயபுரம் வரை அழைத்துச் செல்ல துணையாக திருமதி.பகவதியும் திருமதி.கீதாவும் வருவதாகக் கூறினர். அப்படியே செய்வதாக முடிவானது. காலை 7 மணிக்கெல்லாம் கீதாவும் பகவதியும் வந்து விட்டார்கள். கீதா கொண்டு வந்திருந்த காலை உணவையும் சேர்த்து ஜெயந்தி செய்திருந்த இட்லியோடு காலையிலேயே விருந்து ஆரம்பித்து விட்டது.
 
திட்டமிட்டபடியே காலை 7:30 மணிக்கு ரிஷான் வந்தவுடன் நாங்கள் புறப்பட்டோம். திருநெல்வேலியிலிருந்து எட்டயபுரம் செல்ல முதல் நாள் நாங்கள் சென்ற சாலையிலேயே பயணிக்க வேண்டியிருந்தது.
சாலையின் இரு புறங்களிலும் பசுமையை ரசித்துக் கொண்டே கதைகள் பேசிக் கொண்டு சுவாரசியமாக அமைந்தது எங்கள் பயணம். வழியில் கோவில்பட்டி இரயில் நிலையத்தையும் கடந்து ஆனால் கோவில்பட்டிக்குள் செல்லாமல் எங்கள் பயணம் தொடர்ந்தது.
 
நினைத்ததற்கும் மாறாக தாமதம் ஏற்பட்டது. தூரம் அதிகமில்லையென்றாலும் சாலையின் நிலை வாகனத்தை சற்று மெதுவாக ஓட்டும்படி செய்து விட்டதில் தாமதம். காலை 9 மணிக்கு வந்துவிடுவதாக திருமதி.சாவித்ரிக்கு தெரிவித்திருந்தேன். ஆனால் 9:30 மணிக்குத்தான் எட்டயபுரத்தை அடைந்தோம்.  சாலைகளில் அவ்வளவாக ஆள் நடமாட்டமில்லை. நான்  செல்ல வேண்டிய இடம் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்திற்கு அடுத்த இரண்டாவது வீடு என்பதால் அடையாளம் கேட்டு செல்வதில் ஒரு சிரமமும் ஏற்படவில்லை.
 
 
 
 
9:30 மணி வாக்கில் திருமதி.சாவித்ரியின் இல்லத்தை வந்தடைந்தோம். தூரத்தில் பார்த்த உடனேயே எனக்கு ஊகிக்க முடிந்தது. வாசலில் திரு.கருணாகர பாண்டியனும் திருமதி.சாவித்ரியும் நின்று கொண்டு எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
 
வாகனத்தை நிறுத்தி இறங்கி என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அன்புடன் அனைவரும் வரவேற்று உபசரித்தனர். என்னை சரியான இடத்தில் கொண்டு வந்து சேர்த்த திருப்தியில் பகவதியும் கீதாவும் வாகன ஓட்டுனர் ரிஷானும் திரும்ப ஆயத்தமானார்கள். மறுநாள் என்னை அழைத்துச் செல்ல மதியம் வருமாறு ரிஷானிடம் கூறிவிட்டு திருமதி.சாவித்ரியோடு அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்தேன். இது ஆசிரியர் துரைராஜ் அவர்களின் இல்லம்.  
 
 
 
 
 
திரு.துரைராஜ் அவர்களின் நற்பணிகள் பற்றி சீதாம்மா அவர்கள் எண்ணங்கள் ஊர்வலம் தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அக்குறிப்புக்களை வாசித்த ஞாபகம் அவரது இல்லத்திற்குள் செல்லும் போது தோன்றி மனதில் மகிழ்ச்சியை உருவாக்கியது. சிறந்த நல் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் சில மணி நேரங்களையோ நாட்களையோ செல்விடுவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கின்றதல்லவா. அததகைய உணர்வுகளை அனுபவப்பூர்வமாக இத்தகைய நிகழ்வுகளின் போது உணர முடிகின்றது.
 
தொடரும்..
 
அன்புடன்
சுபா
 
 

 

You may also like

Leave a Comment