Home Palm Leaf 19 – நாமக்கல்

19 – நாமக்கல்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம்  —-  ௧௯ (19) 

 
நாமக்கல் நகரமே ஒரு கல்லைச் சுற்றித்தான் இருக்கிறது;  நாமகிரி என்று அழைக்கப்படும் 65 அடி உயரமுள்ள பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது.  ஊரே அந்தக் கல்லைச்  சுற்றித்தான் உருவாகி யிருக்கிறது. வழக்கமாக ஆற்றைச் சுற்றிலும் ஊர் உரு வாகும்; இங்கே கல்லைச் சுற்றி ஊர்.  அதிசயம்தான் !

 

http://en.wikipedia.org/wiki/Namakkal – நாமகிரி என்ற பெயரிலிருந்துதான் நாமக்கல் என்ற பெயர் உரு வானது. இந்தப் பாறையின் மீது நாயக்கர் காலத்தைய  கோட்டை ஒன்று இருக்கிறது; ஆனால் இந்தக்கல் பல்லவர்கள் காலத்திலேயே பலரை ஈர்த்துள்ளது என்பது  பல்லவர் காலக்  குடவரைக் கோயில்கள் இங்கே இருப்பதை வைத்து அறிய முடிகிறது; அந்தக் கல்லில் நாமம் பல்லவர் காலத்திற்கு முன்பே (7 நூற்றாண்டு) இருந்திருக்கலாம்; அதனால் தானே நாமகிரி என்று பெயர்.

 

ஒருபுறம் அரங்கநாதப் பெருமாள் குடவரைக்கோயில் உள்ளது;  மறு புறம் நரசிம்மப் பெருமாள் குடவரைக்கோயில் உள்ளது. உள்ளே சென்றாலோ   மிக அற்புதமான புடைப்புச் சிற்பக் கவிதைகளை,  பார்க்கப் பார்க்கச் சலிக்காத சிற்ப எழிலைத திகட்டத் திகட்டக் காணலாம். கருவறைக்குள் சுவாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடாதீர்கள்; அங்கே பல அற்புதச் சிற்பங்கள் இருக்கின்றன.

 

கணிதமேதை ராமானுஜம் அவர்கள் விடுவித்த கணிதப் புதிர்களுக்கான விடைகளை இந்த நாமகிரித் தாயார்தான் அருளுவதாகக் கூறுவார்.


சென்னையில் எங்களை அறியாமலேயே ராமானுஜம் அவர்களின் காட்சியகத்திற்குச் சென்று நாமகிரித் தாயார் அருளைப் பற்றி அறிந்த நாங்கள் இப்போது அவரையே  நேரில் காண அவரூருக்கே மெல்ல மெல்ல வந்துவிட்டோம் .


நரசிம்மரை தரிசித்து வணங்கியபடி மிகப்பெரிய ஆஞ்ஜநேயர்  தெரு வின் மறுகோடியில் பணிவுடன் நின்றவாறு பக்தர்களுக்கு அருளை வாரி  வழங்கியபடி இருக்கிறார்.

 

நாங்கள் வழக்கம் போல  முன்பே முடிவு செய்தபடி தஞ்சையில் கூடி னோம் . எங்கள் நாமக்கல் தேடுதல் 10/3/2010 இல் ஆரம்பம் ஆனது .

 

 

நாமக்கல் மாவட்டம் 15  ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டது. நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எருமைப்பட்டி,  மோகனூர், கொல்லி மலை, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வேனாந்தூர், பரமத்தி, கபிலர் மலை, திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், எல்லச்சிப் பாளையம், பள்ளிப் பாளையம் ஆகிய 15  ஒன்றியங்கள்  அடங்கியது; இதில் ஐந்து நகராட் சிகள் இருக்கின்றன .

 

 

எங்கள் முகவரிப் பட்டியலில் 478  முகவரிகள் இருந்தன. இவற்றையும் ஐந்து நாளில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம். நீங்கள் கவனித்திருக் கலாம், நாங்கள் ஆரம்பித்தபோது சென்னையில் சுமார் 73    முகவரிகள் தான்; அடுத்துத் திருவள்ளூரில்  126   முகவரிகள் ;  காஞ்சிபுரம்   மாவட் டத்திலோ  133    முகவரிகள்;  இப்போது நாமக்கல்லில் 478 முகவரிகள். இனி வரப்போகும் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான முக வரிகள். இவ்வாறு மனத்தின் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி அது எவ்வளவு பெரிய எண்ணிக்கையையும் கண்டு மருளாத வாறு அமைத்துக் கொண்டோம் . முதலில் ஆயிரம் முகவரிகள் ஐந்து நாளில் முடிக்க வேண்டும் என்றால் எங்கள் மனம்  சோர்ந்து போய்த் துவண்டு போயிருக்கும்; அப்போது மனமே  தோல்வியைத் தானே விரும்ப ஆரம்பித்துவிடும்.

 

 

இப்போதோ நாங்கள் சுவடிகளின் இருப்பிடம் கண்டறியும் வித்தையில் ஒருவாறு தேர்ச்சிபெற்று விட்டோம். உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. உள்ளுணர்வு என்பது நம் உள்ளேயே  புதைந்தி ருக்கும் ஆதி அறிவையும் பயன்படுத்திக் கொள்வதுதானே.

தற்போது பெறும் அறிவையும், இதுவரை பெற்ற அறிவையும் சேர்த்து முடிவுகள் எடுத்தால் விரும்பியது கைப்படல் சுலபமாகிறது. வகுப்பு ஏற ஏறத் தானே கற்றுக் கொள்ளும் பாடத்திட்டமும் கனம்   ஏறுகிறது! வயது ஏற ஏறத்தானே  சந்திக்கும் பிரச்சனைகளும் பெரிதாகிறது!  கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மனமும் இப்போது எத்தனை பெரிய பட்டியலையும் ஏற்றுச் சமாளிக்கும் திறன் பெற்று விட்டது.  எண்ணிக்கைகள் எங்கள் மனத்தை வெருட்டுவதில்லை.
எனவே இப்போதும் நாங்கள் துடிப்புடனும் ஓலைகளைக் காணும் ஆவலுடனும் உறுதியுடனும் நாமக்கல்லில் கூடினோம்.

நாங்கள் அடையப்போகும் வெற்றியைக் குறித்து எங்களுக்குத் துளிக் கூட ஐயம் இல்லை; இதில் எங்கள் முயற்சியுடன் நல்லவர்களின் ஆசியும், கடவுளின் அருளும்  எங்களுடனேயே பயணம் செய்வதை உணர்ந்திருந்தோம்.

மழைக்கான யாகத்தில் கலந்து கொள்ளக் குடையுடன் வந்த சிறுவ னைப் போல் நாங்களும்  கையோடு  ஒலையைச் சுற்றுவதற்குப் பழைய செய்தித் தாள்களுடனும், பழைய அட்டைப் பெட்டிகளுடனும் எமது பயணத்தைத் தொடங்கினோம் .
 
தஞ்சையில் இருந்து வழக்கம் போல் விடியற்காலையில் தொடங்கியது எங்கள் பயணம்.  நாமக்கல் மாவட்டத்தைத் தொட்டவுடனேயே எங்கள் பணியை ஆரம்பித்து விட்டோம். வழியில் இருக்கும் ஊர்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இரவு ஏழு மணிக்கு நாமக்கல் அடைவதாகத்
திட்டம். அப்போதுதானே ஒரு நாள் விடுதி வாடகை மிச்சப்படுத்தலாம். வரும் வழியையும் பார்த்தமாதிரி இருக்கும்; ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. இரவு ஏழு மணிக்கு மேல் எங்கள் விருப்பத்திற்கு ஏற்ற நல்ல விடுதியைக் கண்டுபிடித்து அங்கே அடங்குவதற்குள் அங்கும் இங்கும் ஏறி இறங்கி ஒருவாறு களைத்துப் போய் விடுவோம். எப்போது சென்று "அடைவோம்"  என்ற  தவிப்பு ஏற்பட்டு விடும். அதெல்லாம் பார்க்க முடியுமா? அன்றைய  துன்பம் அன்றோடு போனது. வரும்  நாள் புதியநாள்! இனிய நாள்  !

நாமக்கல் செல்லும் வழியிலேயே வரகூர் என்ற பகுதியில் பல முகவரிகள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்துப் பார்க்க ஆரம்பித்தோம். அந்தப் பகுதியிலே மாணிக்க வேலூர் என்ற ஒரு கிராமம் இருந்தது. அதில் பெரிய கருப்பன் என்ற ஒரு முகவரி இருந்தது .அவரது வீட்டைத் தேடிப்பிடித்துச் சென்றபோது அவர் இறந்து ஆறு மாதம் ஆகிறது என்றார்கள்.  நூறு வயது வரை வாழ்ந்தாராம். மிகப் பெரிய வைத்தியர், மாந்திரீகர் என்றார்கள். நூறு வயது வரை வாழ்ந்தவர் இன்னும் ஒரு ஆறு மாதம் இருந்திருக்கக் கூடாதா  என்ற ஏக்கம் எங்களுக்குத் தோன்றியது . இருந்தும் எனன செய்வது?  என்னதான் ஆண்டாண்டு  புலம்பினாலும் மாண்டோர் வரப்போகிறாரா? ஆனால் நிறைய வைத்திய, மாந்திரீகச் சுவடிகள் வைத்து அவர் பயன்படுத்தியதாக பக்கத்தில் வசித்தவர்கள் கூறினார்கள். இனி அடுத்து என்ன செய்வது? அவர்களின் வாரிசுகள் பற்றி ஆராய ஆரம்பித்தோம். அவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். அவரது இரு மகன்களும் அருகில்தான் எங்கோ வசிப்பதாகக் கூறினார்கள். அவர்கள் பெயர்களைக் கேட்டோம். பார்த்தால் அவர்கள் பெயர்களும் எங்கள் முகவரிப் பட்டியலில் இருந்தன; எனவே அங்கேயும்  ஓலைச் சுவடிகள் நிச்சயமாக இருக்கும் என்ற  நம்பிக்கை எங்களிடம் துளிர்த்தது.

சின்னப் பூசாரி என்று அழைக்கப்படும் அவரது மகனின் வீட்டுக்குச் சென்றோம்.  அங்கோ  பெண்கள் மட்டுமே இருந்தனர்; இல்லத் தலைவர் வெளியே சென்றிருந்தார்.  அவர்களுடைய ஒரே மகளுக்கு அடுத்த இரண்டு நாளில் திருமணமாம்; எனவே திருமண வேலைகளுக்காக அவர் வெளியே சென்றிருப்பதாகத் தெரிவித்தனர்.  பேசியவாறே அங்கி ருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து விட்டோம். சிறிய குடிசை வீடுதான்; வெளியில் மரத்து நிழலில் இருந்த கயிற்றுக்கட்டில் எங்களுக்குப் பரம சுகம் அளித்தது.  பெண்ணுக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர்களிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினோம்.  பேச்சு நீண்டால்தானே ஏதாவது துப்புக் கிடைக்கும்.  அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருக்கும் விஷயம் மெதுவாக வெளியில் வந்தது.  சின்னப் பூசாரியின் நிஜப் பெயர் கணேசனாம். கணேசனின் கைபேசி எண்ணைக் கேட்டோம். அவர்கள் கொடுக்கத் தயங்கினர்.  ஓலைச் சுவடியைக் காட்டச் சொன்னோம்; அதையும் எங்கே இருக்கிறது தெரியாது என்று கூறிவிட்டனர்.

 

நேரமோ ஒடிக் கொண்டிருந்தது . கிராமத்துப் பெண்கள் மிகவும் உஷார் ! ஆண்கள்தான் வெகுளி ! நாங்களும் விடுவதாக இல்லை.  " அம்மா, நாங்கள் தஞ்சா வூரில் இருந்து வந்து விட்டோம்; உங்களைப் பார்க்கத்தான் இங்கு வந்தோம். நீங்கள் கைபேசி எண் தந்தால் நாங்கள் பேசிவிட்டு அடுத்த இடம் செல்வோம். இல்லையேல் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. நாங்கள் மீண்டும் வர இயலாது " என்று கூறிக்  கட்டிலிலே சற்றுச் சாய்த்து விட்டோம்; "மணியும் ஆகிவிட்டது, இங்கு சாப்பாட்டுக் கடையும் இல்லை;  நீங்கள் ஏதாவது உணவு ஏற்பாடு செய்தால் நல்லது "   "என்னடா இது இந்த ஜன்மங்கள் அசைவதாக இல்லையே, சாப்பாடு வேறு கேட்கிறார்களே ! " எனப் பெண்கள் கூடிப்பேசி ஒருவாறு கணேசனின் கைபேசி என்ணைத் தந்து விட்டனர். நாங்கள் அவர்களின் எதிரிலேயே பேசினோம்.

 

அவரிடம் கூறி ஓலையை எங்களுக்கு காட்டச் சொல்லுங்கள் என்றோம்; ஆனால் அவர் மசியவில்லை. ’திருமணம் இரண்டு நாளில் முடிந்து விடும்; நீங்கள் பிறகு வாருங்கள்’ என்று கூறிவிட்டார் . நாங்கள் இதுவரை  பார்த்த ஆயிரக்கணக்கான முகவரிகளிலும் எங்குமே எங்களிடம் மிக அன்பாகவே பேசினார்கள். எங்கள் அணுகுமுறையும் மிக நட்புடன் அன்புடன்தான்  இருக்கும்.  யாரையும் நாங்கள் வற்புறுத்துவதில்லை; அதே சமயம் சென்ற பணியைச் சிறப்புடன் முடிக்க அனைத்து விதத்திலும் முயற்சி மேற்கொள்வோம். நாங்கள் உணவு கேட்டதையும் அவர்கள் பெருமை யாகவே நினைத்தார்கள். எங்களுக்கும் அவர்கள் அவ்வாறு நினைப் பார்கள் என்பதும் தெரியும்; அதனாலேயே அப்படிக் கேட்டோம்.

பிறகு  அலைந்து திரிந்து இன்னும் சில முகவரிகளைப் பார்த்தோம்.  சிலவற்றில் சுவடிகளும் கிடைத்தன; ஆனால் அவை எல்லாம் தனிப் பட்ட மனிதர்களின்  ஜாதகக்  குறிப்புகள்.  குடும்பத்தாரின் ஜாதகங்கள் அடங்கிய தொகுப்பு. அவற்றைத் தேவை இல்லை எனத் திருப்பித் தந்து விட்டோம்.  சிலவற்றைப் பார்த்ததுமே தெரிந்து விட்டது. அந்தப் பகுதி யின் பழக்க வழக்கம். அங்கே சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை ஜாதகங்களை ஜோதிடர்கள் ஓலைச்  சுவடியில் எழுதிக் கொடுத்துள்ள னர். பெரும்பாலான கவுண்டர் இன மக்களிடம் இந்தகைய ஜாதகச் சுவடிகள் இருக்கின்றன. இதைக் கணக்கெடுத்த NSS  மாணவர்களும் மிக சிரத்தையாக இத்தகைய முகவரிகள் அனைத்தையும் பட்டியலில் சேர்த்து விட்டனர்; ஆனால் அது எங்களை வீணாக அலைய வைத்து விட்டது.

பிறகு நாங்கள் முகவரிப் பட்டியலை  வைத்து விரிவாக ஆராய்ந்த போது அன்னை சத்தியா நகர் என்ற இடத்திலே சுமார் 50    முகவரிகள் ஓலைச்சுவடி வைத்திருப்பதாக இருந்தது.  எங்களுக்கோ ஆச்சரியம் ! எப்படி ஓலைச்சுவடி வைத்திருப்பவர்கள் ஐம்பது பேர் ஒரே  இடத்தில் வசிக்கின்றனர் ! தெரிந்தே அவர்கள் ஒன்று சேர்ந்து வசிக்கின்றனரா ? அல்லது அந்த அன்னை சத்தியா நகர்  என்பது ஏதாவது சக்தி வாய்ந்த இடமா?  சரித்திர சம்பந்தமான இடமா?  ஒரே இடத்தில் ஐம்பது பேரிடம் ஓலைச் சுவடி இருப்பது  என்பது மிக ஆச்சரியமான செய்தியாக இருந்தது. உடனே அங்கே போகத் தீர்மானித்தோம்; ஆனால் இடம் கண்டுபிடிப்பதுதான் சற்று சிரமமாக இருந்தது. நிறையப் பேருக்கு அன்னை சத்தியா நகர் என்றதும் தெரியவில்லை. வேறு ஏதாவது பழைய பெயர் அதற்கு இருக்குமா என்றும் தோண்ட ஆரம்பித்தோம். பிறகு ஒரு வழியாக அன்னை சத்தியா நகருக்குச் சென்று அந்த ஐம்பது முகவரிகளையும் தேடி அலைய ஆரம்பித்தோம். முகவரியைக் கண்டுபிடித்ததும் எங்களுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை; விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தோம்.
ஆனால் நீங்கள்  எங்கள் சிரிப்புக்கு  என்ன காரணம்?  ஏன் ஐம்பது ஓலைச் சுவடி வைத்திருப்பபவர்கள் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள் என்பதை அறிய அடுத்த பகுதிவரை காத்திருக்கத்தான் வேண்டும். 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment