Home HistoryEtayapuram 17 – நெல்லை

17 – நெல்லை

by Dr.K.Subashini
0 comment

June 9, 2010

 

நெல்லையப்பர் தரிசனம்
 
அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு உணவருந்தி விட்டு இல்லம் திரும்பலாம் என்பது எங்கள் திட்டம்.  அன்று நாள் முழுவதும் நாங்கள் சென்று வந்த கிராமப்புற பகுதிகளை விட  இங்கு சாலையில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே காட்சியளித்தது.

 

திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை.

 

 

 

தூரத்திலிருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தைப் பார்த்த உடன் அங்கு செல்லாமல் அன்று இல்லம் திரும்ப எனக்கு மனம் வரவில்லை. நண்பர்களிடம் தெரிவித்த போது, சரி சீக்கிரமாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி வாகனத்தை ரிஷானைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் ஆலயத்திற்குள் விரைந்தோம். அரைமணி நேரத்தில் பார்க்கக் கூடிய ஒரு ஆலயம் அல்ல அது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2002ம் ஆண்டு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள சிற்பங்கள், தெப்பக்குளம், கோயில் யானை ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்து நல்ல இறை தரிசனமும் பெற்று வந்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது.

 

 

அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்ததுமே அலுவலகத்துக்கு விரைந்து புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ஆலய தலபுராணம் அல்லது குறிப்பு புத்தகம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். அன்று ஆலய வரலாற்றை விளக்கும் நூல் முடிந்து விட்டதாகவும் புதிய பிரதிகள் இன்னமும் வரவில்லை என்றும்  அலுவலகத்தில் இருந்த அதிகாரி கூறினார். எப்போதும் போல் ஏமாற்றம் தான்!

 

மிகப்பெரிய ஆலயம். கற்களில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த மாலை வேளையில் கூட மிக அழகாகக் காட்சியளித்தன. எத்தனை விதமான வடிவங்கள்! நடந்து செல்லச் செல்ல வெவ்வேறு சன்னிதிகள்; அங்கு நடைபெறும் வழிபாடுகள்; அனைத்தையும் பார்த்துக் கொண்டு சுவாமி தரிசனமும் செய்து விட்டு சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன்.

 

இந்த ஆலயத்தில் ஒரு பகுதியில் கற்தூண் ஒன்று இருக்கின்றது. அதில் ஏழு சிறு தூண்கள் சேர்த்து இதே போல நான்கு சிறு தூண்களை இணைத்து ஒரு பெறும் தூண் ஒன்றினை வடிவமைத்திருக்கின்றனர் சிற்பிகள். இந்த தூணிலுள்ள ஏழு சிறு தூண்களையும் தட்டினால் வெவ்வேறு ஒலிகள் கேட்குமாம். இதனை நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்தக் குறுகிய நேரத்தில் இந்தச் சோதனையைச் செய்யவும் நாங்கள் தவறவில்லை.

 

 

 

இந்த ஆலயத்திலும் கூட கல்வெட்டுக்களும் சுவற்களில் பதித்த பழய தமிழ் எழுத்துக்களும் இன்னமும் உள்ளன. ஆலயத்தின் பல பகுதிகளில் இவ்வகையான எழுத்துக்களைக் கவனித்தேன். 

 

 

இந்த எழுத்துக்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அச்சு வடிவில் நூலாக பதிப்பித்தால் அதில் அடங்கியுள்ள செய்திகள் தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அப்படிப்பட்ட நூல் வெளி வந்துள்ளதா என்று எனக்குத் பயனாக அமையும்)

 

 

ஒரு சிறிய தேர் ஒன்று சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த போது அந்தச் சுவரில் கூட சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

 

 

ஆலயங்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி கலைக்கூடங்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை நான் தமிழகத்தில் இதுவரை பார்த்த பழம் கோயில்கள் அனைத்திலும் பார்த்திருக்கிறேன்.  இந்த கலைக்கூடங்களைப் பாதுகாப்பதுடன், சிலைகளின் பொருளை விளக்கும் கையேடுகள், சிறிய விளக்க அட்டைகளை ஏற்படுத்தி வைப்பது அந்தச் சிலைகளை பொருளறிந்து பார்க்க உதவும்.

 

 

இந்தச் சிற்பக் கலைக் கூடத்தில் அரசனுக்கும் ஞானியருக்கும் மட்டும் சிலை இல்லாது, சாதரண மனிதர்களின் வடிவங்களும் கூட செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாட்டிய மங்கை, வீரன், குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணின் சிலை என பல் வேறு வடிவங்களை இந்த ஆலயத்தில் காணமுடிந்தது.

 

 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தச் சிலைகளையும் விடுவதில்லை. சில கற்சிலைகளில் விபூதி கொட்டி வழிந்தி கொண்டிருந்தது. ஒரு சிலைக்கு மாலை போட்டு பொட்டு வைத்து அதனை வழிபடு பொருளாக ஆக்கிவிட்டனர். தூணில் இருக்கும் ஒரு சிலைக்கு பட்டு கட்டி அதன் வடிவம் கூட என்ன என்று தெரியாத வகையில் அதன் முகம் மட்டும் ஒரளவு தெரிய வைத்து அதனை பூஜைக்குறிய பொருளாக்கி வைத்திருக்கின்றனர். இன்னொரு பெரிய கற்சிலையில் உள்ள வடிவத்தின் கையில் ஒரு மின்சார விளக்கு  கட்டி தொங்கிக் கொண்டிருந்தது.  மற்றொரு பக்கத்தில் இரண்டு சிலைகளில் கழுத்துகளில் ஒரு பேனரின் நூல் கோர்த்து பேனர் கட்டியிருந்தார்கள்.

 

 

இதையெல்லாம் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் கலைச்சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆலய வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வம் இல்லாதவ்ர்களாக இருபத்தைதெளிவாகக் காண முடிகின்றது.  ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். ஆனால் அவர்களின் முக்கிய எண்ணம் வழிபாடு, சடங்குகள், பூஜைகள் ஆகியவற்றோடு நின்று விடுகின்றது. இதற்கு மாறாக இந்த ஆலயத்திற்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்று சற்று தங்கள் கண்களை திறந்து பார்த்தால் அவர்களுக்கு அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் தெரியாமல் போகாது. இந்த கலைப் பொக்கிஷங்கள் நமது வரலாற்றுப் பெறுமைகள் என்று மக்கள் உணர்ந்தால் ஆலயத்தில் இறை தரிசனத்தையும் நிறைவாக முடித்து ஆலயத்தின் முழு வடிவத்தைத் தூய்மையாகவும் சிறப்பாகவும் பேணுவதிலும் நிச்சயமாக ஆர்வம் தோன்றும். இந்த விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் ஏற்படுத்த வேண்டியது நமக்குள்ள கடமைகளில் ஒன்று.

 

சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வரும் போது ஆலயத்தின் தெப்பக்குளத்தை அடைந்தோம். மாலை நேரமாகி இருட்டத் தொடங்கி விட்டதால் தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு வெளிச்சத்தில் இந்த தெப்பக்குளத்தை ஓரளவு பார்த்து ரசிக்க முடிந்தது.

 

 

குறுகிய நேரத்தில் மிக அவசரமாக நெல்லையப்பர் ஆலயத்தைப் பார்த்து சுவாமி வழிபாடும் திருப்தியாக முடித்தோம்.

 

 

கொள்ளை பசி அனைவருக்குமே. திருநெல்வேலிக்காரர்களான இந்த மூவருக்குமே இந்த இடம் மிகப் பரிச்சயம் என்பதால் அதிக நேரம் எடுக்காமல்  சற்று பக்கத்தில்  இருந்த ஒரு அழகான உணவு விடுதியில் சாப்பிடலாம் என்று கூறி விட்டார்கள்.  தூய்மையான ஒரு உணவகம். நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது.  நாங்கள் விரும்பிய உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்களைப் பேசி பகிர்ந்து கொண்டோம்.  உணவின் ருசி அபாரம்.

 

 

அன்றைய பயணம் இந்த விருந்தோடு முடிந்தது. மறுநாள் டிசம்பர் 15ம் திகதி செவ்வாய்கிழமை காலை நான் எட்டயபுரம் செல்வதாகத் திட்டம். எட்டயபுரத்தை நோக்கிய என் பயணத்திட்டத்தின் மிக முக்கிய நாள் அது. 

 

எட்டயபுரத்தை நோக்கிய என் பயணக் குறிப்பு மீண்டும் தொடரும்..!

அன்புடன்
சுபா
 

You may also like

Leave a Comment