16 – காஞ்சிபுரம்

 

ஓலைச் சுவடி தேடிய படலம்  ——  ௧௬ (16)

 

 

அங்கும் இங்கும் சுற்றி எப்படியோ நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வந்து மூன்று நாள் ஓடிவிட்டது.  ஒரு நாடி ஜோதிடர் வீட்டின் அருகில் இருந்த மரத்தடியில் நிழலில் காத்திருந்தோம் .

நேராக எங்கள் பட்டியலில் இருந்த
sri sivashanmugam
naadi jothidar GST Road
achirubakkam
என்ற முகவரிக்கு  சென்றோம். அங்கே நாங்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும்.  அங்கே போனதும் அவரது துணைவியார் ஜோதிடர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்  என்றார். எங்களுக்குத்தான்  நேரம் காலம் எல்லாம் கிடையாது, அவராவது சரியாகச் சாப்பிட்டு  வரட்டும் என எண்ணி ” நாங்கள் ஜோதிடம் பார்க்க வரவில்லை, ஜோதிடரைப் பொறுமையாகச் சாப்பிட்டு வரச்சொல்லுங்கள்” என்று கூறி விட்டு அங்கிருந்த மரத்தடியில் காத்திருந்தோம். அப்போதுதான் பசி மயக்கத் தில் எங்கள் எண்ணங்கள்  எங்கெங்கோ போய்க்கொண்டிருந்தது.
 
அதிக நேரம் எங்களைச் சிந்திக்க வைக்காமல் ஜோதிடரும் வந்து விட்டார். நாங்களும் எங்கள் பயண நோக்கம் குறித்து அவருக்குத் தக்கபடி எடுத்துரைத்தோம்.  ஆளுக்குத் தக்க முறையில் தானே ஒவ்வொரு வரிடமும் பேச வேண்டும்! ஒரே உரை எப்போதும் பலனளிக்காது. எங்களுக்கும் இது பற்றித் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதற்குச் சமயத்தில் மிகுந்த சலிப்பு ஏற்படும்.

ஜோதிடரும் அப்போது என்னமோ மன நிறைவாய் இருந்தார். எங்களின் தேடுதலில் இதுவரை  இந்த மூன்று மாவட்டங்களில் இருபது நாடி ஜோதிடர்களை  நாடிச் சென்றிருப்போம்  ஆனால் அத்தனை  பேரும் எங்களை எப்படியாவது விரைவில் கிளப்பத்தான் குறியாக இருப்பார்களே தவிர ஒருவராவது சற்றும் பிடி கொடுத்துப் பேசியதில்லை.

எங்களுக்கும் நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளில் உண்மையிலேயே ஜோதிட சம்பந்தமான விஷயங்கள் இருக்கிறதா? அல்லது ஒரு சிலர் கூறுவது போல் ராமாயணம், மகாபாரதம்  எழுதி வைத்துக்கொண்டு சுயமாகப் பாடம் படிக்கிறார்களா ? என்பதை எப்படியாவது ஒரு நாடி ஜோதிடர் வாய் மொழியாகவே கேட்டு ஆராய்ந்து பார்க்கவேண்டு மென்ற ஆவல் இருந்ததுண்டு. .
.
ஜோதிடர் சிவஷண்முகம் பண்புள்ளவராகயும், நாணயமானவராகவும் தெரிந்தார் . ”ஏன் மரத்தடியில் நின்று பேசவேண்டும் ? வாருங்கள், எனது அலுவலகத்தில் அமர்ந்து பேசலாம்” என்று அருகில் இருந்த பர்ணசாலை போல் தோற்றமளித்த,  ஓர் எளிய ஓலைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

 

அங்கிருந்த 90 வயது   முதியவரைத் தம் தந்தை மற்றும் குரு என எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

எங்களை அமரச்செய்து எங்கள் கையில் பல கட்டுக்கள் ஓலைச் சுவடிகளைத் தந்தார். அவற்றைப் புரட்டிப் பார்த்த முனைவர் அவை அத்தனையும்  ஜோதிடம் பற்றிய சுவடிகளே  என்றார்; பிறகு எங்களை உள்ளே அழைத்து  சென்ற ஜோதிடர் ஒரு பெட்டி நிறைய  ஓலைச் சுவடிகளைக் காண்பித்தார். அவையனைத்தும் ஜோதிடச் சுவடிகளே.

"இவற்றை வைத்துத்தான் நான் வருபவர்களுக்கு ஜோதிடம் உரைக்கிறேன் .அத்தனையும் ரிஷிகள் எழுதி வைத்ததுதான். என் சொந்தச் சரக்கு ஒன்றும் இல்லை " என்றார் ஜோதிடர் .
"பல நாடி ஜோதிடர்கள் கூறுவது போல் எங்களுக்கு எங்கும் கிளை கிடையாது; எனது தந்தை தந்ததை  வைத்து நான் கூறுகிறேன். எனது தந்தைக்கு அவரது தந்தை அளித்தார். இவ்வாறிந்த ஓலைச் சுவடிகள் எங்களிடம் பரம்பரையாக இருந்து வருவன " ஒருவாறு ஜோதிடச் சுவடிகளை வைத்து அதை வைத்து ஜோதிடம் கூறும் ஒரு ஜோதிடரை சந்தித்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.

 

"ஐயா நீங்கள் கூறும் பலன்கள் உங்களிடம் வருபவர்களுக்கு திருப்பதி அளிக்கிறதா ?"
"என்னை நாடி வருபவர்களுக்குச் சுவடிகள் கிடைத்து விட்டால் பலன் களும் சரியாக  இருக்கிறது. சுவடிகள் இல்லாதவர்களுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. வேறு எங்காவது சென்று பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிடுவோம் "

” இப்போது எத்தனை பேருக்குப் பார்க்க முடியும் ? எத்தனை சுவடிகள் உள்ளன ? ”

"இப்போது ஐம்பது  கட்டுக்கள்தான் உள்ளன; ஆனால் இந்த  ஐம்பதில் பலருக்கும் பலன்கள் கிடைக்கக் கூடும் .எத்தனை என்று எண்ணிக் கூற முடியாது .ஆனால் எங்கள் தாத்தாவிடம் 300 மேல் சுவடிக்  கட்டுக்கள் இருந்தனவாம்;  என்னிடம் பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து வருகின்றனர் .இஸ்ரோவில்  இருந்து கூடச் சில விஞ்ஞானிகள் வருவதுண்டு” எனச் சில பெயர்களைக் குறிப்பிட்டார். அந்தப் பெயர்களை நாங்களும் கேள்விப் பட்டிருந்ததால் வியப்படைந்தோம்.

மேலும் இத்தகைய வாய்ப்பைத்தானே  எதிர்ப்பார்த்திருந்தோம்.

"பார்த்தீர்களா ஐயா !  ,நீங்கள் அடிக்கடிச் சுவடிகளை எடுத்துக்  கையாண்டால் இவை கொஞ்சம் கொஞ்சமாக   முனை முறிந்து இடையில் உடைந்து அழிந்து கொண்டேதான் போகும்? எனவே வருங் கால  சந்ததிக்குப் பயன்பட இவற்றை நீங்கள்  பாதுகாக்க வேண்டாமா ? எனவே இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாத்தால், சுவடிகளை அடிக்கடி தொட்டுக் கையாளவேண்டிய அவசியம் இல்லை” என மின்னாக்கத்தின் அருமை பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறியதும், ஜோதிடரும் ”எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நீங்கள் மின் னாக்கம் செய்து எனக்கு ஒரு C.D கொடுங்கள். அதே சமயம் இதன் ரகசியமும் பாதுகாக்கப்படவேண்டும்” என்றார். நாங்களும் நல்ல ஒரு நாடி ஜோதிடரைப் பார்த்த சந்தோஷத்துடன், விரைவில் மீண்டும்
வருவதாகக் கூறி விடை பெற்றோம். 

 

பிறகு காஞ்சிபுரத்தில் சில மதிப்பு வாய்ந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி,  சுப்பையா ஸ்தபதி முதலியோர் வீடுகளுக்குச் சென்றோம்; அவர்களும் எங்களுடன் பரிவாக எங்கள் தேடல் பற்றிக் கேட்டறிந்தார்கள். அவர்களிடமும் சில சுவடிக் கட்டுக்கள் ஆகமம், சில்ப சாஸ்திரம் பற்றி  இருப்பதாகத் தெரிவித்தனர். அவற்றைப் பிறகு ஒரு முறை தேதி நிச்சயித்து வந்து மின்னாக்கம் செய்து கொள்ளுங்கள் என்று சம்மதம் அளித்தனர். மகிழ்வுடன் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றுத்  திருக்கழுகுன்றத்தில் இருந்த சில முகவரிகளைப் பார்க்கச் சென்றோம்.

அங்கே எங்களுக்கு ஓர் அரிய மனிதரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்குமெனத் தெரியாது . vedachalam tamil pandit என்று ஒரு முகவரி இருந்தது. அங்கு சென்றபோது வேங்கடாசலமென்ற ஒரு கம்பீரமான முதியவ ரைச் சந்தித்தோம் . அவரிடமும் எங்களின் தேடுதல் பற்றிக் கோவையாகக் கூறியதும் ,அவர் கூறியது எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி யது. அவரின் சிறு வயதில் அவர் திரு மிகு உ வே சா அவர்களுடன் சுவடி தேடுதலுக்குச் சென்றதுண்டு என கூறி அந்த அனுபவங்களைக் கூற ஆரம்பித்தார்; எங்களுக்குத் தமிழ்த் தாத்தாவை நேரில் பார்த்த ஒருவரைப் பார்த்ததே மிக்க மகிழ்ச்சி அளித்தது.

 

 

பிறகு அவர் எழுதிய திருக்கழுக்குன்ற ஸ்தலவரலாறு புத்தகத்தை அனைவருக்கும அன்பளிப்பாக அளித்தார்; எங்கள் தேடுதல் வெற்றி யடைய வாழ்த்தினார். அவரிடம் இருந்த பழைய புத்தகச் சேகரிப்பையும் காட்டி இவற்றில் தேவையானதை மின்னாக்கம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்தார் .

 

 

அடுத்த நாளும் நாங்களொரு ஓலைச்சுவடிக் குவியலைக் கண்டோம். அதை  அடுத்துப் பார்க்கலாம் .
 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *