Home Palm Leaf 14 – ஸ்ரீபெரும்புதூர்

14 – ஸ்ரீபெரும்புதூர்

by Dr.K.Subashini
0 comment

 

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  ! —  ௧௪  (14 )

 


இப்போது  ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர்  முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண.  பின்  அதுவே புதூர் என மாறி ,  ஸ்ரீமத்  ராமானுஜர் அவதரித்ததினால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. அத்தகைய  புண்ணிய பூமியான ஸ்ரீபெரும் புதூரில் இரு இடங்களில் சுவடிகளைப் பெற்று பின் அதன் அருகில் இருக்கும் சில இடங்களையும் பார்த்துவிட்டு


Dr Dharmalingam and Dr  Gunaseelan Thennam pettai Sriperumbudur
என்று இருந்த முகவரிக்கு சென்றோம். நாங்கள் என்னவோ சாதார ணமாக நினைத்துச்  சென்றோம் ஆனால் அங்கு இருந்ததோ ஒரு  மிகப் பிரம்மாண்டமான சித்தவைத்தியக்  கல்லூரியும், அதனைச் சார்ந்த மருத்துவமனையும்  ஆகும். தம் தந்தை வேலு மயிலு ஆசான் என்பவரின் பெயராலும், தமது பெயராலும் தர்மலிங்கம் எனும் மருத்துவர் பல நிறுவனங்களை அங்கே  சிறப்பாக நடத்தி வருகிறார் .

 


அதனுள்ளே சென்று நீண்ட நேரம் காத்திருந்தோம்; ஆனால் வேலையில்  மும்முரமாக இருந்ததால்  மருத்துவரைக் காண முடிய வில்லை. அவர்களிடமும் சுமார் 150 கட்டுகள் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. அவற்றை மின்னாக்கம் செய்வதை அவர்களே செய்வ தாக கூறியதால் அவரைப் பார்ப்பதால் பயனினில்லை என அங்கிருந்து கிளம்பினோம். ஆனாலும் அங்கிருக்கும் சுவடிகளை மருத்துவ உலகம் ஆராய்ந்தால் அரிய பல தகவல்கள் புதிதாகவும் கிடைக்கக் கூடும். .

 

பிறகு உத்திரமேரூர் சென்றோம். தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரி யத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளில் காணப்படும்  குடவோலை முறையில் ஆன வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை  மேற்கோளாகக் காட்டுவார்கள். .
அத்தகைய பழமையும், புகழும் வாய்ந்த ஊர் உத்திரமேரூர்.


உத்திரமேரூரில் இருந்த முகவரிகளில் கைலாச ஈஸ்வரர் கோயில் என்ற முகவரியில் ஒரு ஓலைச் சுவடிக் கட்டு இருந்ததாக எங்கள் பட்டியலில் இருந்தது; ஆனால் அங்கே யாரையும் பார்க்க இயல வில்லை. அந்தக் கோயிலைத் தான்  REACH நிறுவனம் புனரமைத்து வருகிறது.
கந்தசாமி குருக்கள் என்பவர் சுப்ரமணியசாமி தெரு என்னும் இடத்தில் இருப்பதாக எங்கள் பட்டியலில்  இருந்தது. நாங்களும் வழக்கம் போல் விசாரித்தபடி சென்றோம். அங்கே போனால் அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது. அங்கே ராஜப்பா குருக்கள் என்பவரை சந்தித்தோம். அவர்களிடம்  முன்னர்   சில சுவடிக்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றைப் புதுச்சேரி  பிரெஞ்சு நிறுவனத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னே தந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் சகோதரர்  சம்பந்த குருக்கள் அங்கே பணி புரிவதாகவும் தெரிவித்தார். எங்கேயோ ஒரு நல்ல இடத்தில் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தால் அதுவே
சுவடிக்கும்  நல்லது, நாட்டிற்கும் நல்லது என்று நினைத்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.


அடுத்து உத்திரமேரூரில் ‘ தண்டரை வைத்தியர் ‘ சி கார்த்திகேயன் ,
எண் 30, என்று இருந்தது;  தெருப் பெயர் இல்லை; ஆனால் அதிக அலைச்சல் இல்லாமல் அந்த  முகவரியைக் கண்டுபிடித்தோம்.


அங்கே கார்த்திகேயன்   என்பவரை சந்தித்தோம். சிறிய   வீடுதான், ஆனால் பெரிய உள்ளம். எங்களுக்கு  ஓலைச்சுவடிகள்  தந்ததால் மட்டும்  இப்படிக்   கூறவில்லை.  நாங்கள் உள்ளே சென்றதும் அவர்கள் எங்களை உபசரித்த பண்பு, அமரச்சொன்ன விதம், நாங்கள் கூறுவதைப் பரிவுடன் கேட்டது, ஓலைச்சுவடிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது, அவற்றைக் காட்டியது, நாங்கள் அவற்றை நன்றாகப் பாதுகாப்போம் என்று கூறி அந்த ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது இது  பற்றிக் குடும்பத்தினருடன் பேசியபின் முடிவு சொல்வதாகக் கூறியது இவை அனைத்திலும் திரு கார்த்திகேயனின் பண்பும், பாரம்பரிய முதிர்ச்சியும் தெளிவாகத் தெரிந்தன.

 


நாங்களும் அவர்களிடம் வழக்கம்போல் அவரிடம் இருந்த  சுமார் ஆயிரம் மருத்துவச் சுவடிகளையும் தஞ்சைப் பல்கலைக்குக் கொடையாகக் கேட்டோம்.


" இந்தச் சுவடிகள் அத்தனையும் பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறது; எங்கள் தாத்தா, அவரின் தாத்தா அனைவரும் மூலிகை மருத்துவர்களே,  தண்டரை வைத்தியர்கள் என்று இந்தப் பகுதியில் எங்கள் பரம்பரை மிகப் புகழ் பெற்றது" என்றார் அவர்.

 

"எத்தகைய மருத்துவங்களில் உங்கள் பரம்பரையினர் பெயர்  பெற்ற வர்கள்?  ” இது நாங்கள்.

 

 

"தோல் மருத்துவத்திலும் , வாதம் குணப்படுத்துவதிலும் எங்கள் மருந்துகள் மிகப்பெயர் பெற்றவை."

 

"நீங்களும் இப்போது அதே மருந்துகளை செய்துவருகிறீர்களா ?"


"இப்போதெல்லாம் அத்தனை மருந்துகளும் செய்ய வேண்டிய வேலை இல்லை. சில மருந்துகள் மட்டும் செய்து சிறிய அளவில் வீட்டில் இருந்து வைத்தியம் செய்து வருகிறேன் "

 

 


"அத்தனை ஓலைச் சுவடிகளும் உங்கள் பயன்பாட்டில் உள்ளனவா ?"


" இல்லை ! இவற்றைப் பார்த்துக் குறிப்புகள்  முன்பே எழுதி வைத்துள் ளேன்; எனவே குறிப்பைப் பார்த்துச் சில மருந்துகள் மட்டுமே செய்கி றேன். அதுவும் பெரும்பாலும் அனுபவத்தில் வந்து விட்டது "


நாங்கள்  மீண்டும் எங்கள் வேண்டுதலை ஆரம்பித்தோம்;


அவர்களது பூர்விகமாக அறிவையும், அவர்களின் பரம்பரையில் வந்த முன்னோர்களின் அனுபவ பூர்வமான  பட்டறிவையும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் பாதுகாக்கும் வசதிகள் இருப்பதையும், அவற்றை மின்னாக்கம் செய்து கணினியில் பயன்பாட்டில் கொண்டு வரும்  சாத்தியக்கூறுகள் பற்றியும்,  அவர்களின் மருத்துவ அறிவின் மூலமான இந்த ஓலைச் சுவடிகளைக் காக்கும் அவசியம் பற்றியும் மேலும் கூறியதும், " சரி, நான் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அனுமதியையும் , முக்கியமாக எனது அம்மாவின் அனுமதியைப் பெறவேண்டும். பெரியவர்கள் அனுமதி இல்லாமல் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது " என்று கூறி எங்களைச் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். இதனிடையே அவரது மனைவி எங்களுக்கு மோர் கொடுத்து உபசரித்தார். “சாப்பாடு  தயாரிக்கட்டுமா?  இருந்து  சாப்பிட்டுப் போக முடியுமா?” என  அன்புடன் கேட்டார்.

நாங்கள் அவரின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறி, நாங்கள் இன்னும் போக வேண்டிய ஊர்கள் நிறைய இருப்பதால் அதிக நேரம் காத்திருக்க இயலாதாகையால் எங்களுக்கு  இப்போது உணவு வேண்டாம் என்று பணிவுடன் கூறினோம்.  இதனிடையே தண்டரை வைத்தியர் தம் தாயுடன் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு  வந்தார். அவரது அம்மா எங்களிடம் , " தம்பி எல்லாம் கூறினான், நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாப்பது குறித்து எனக்கு மறுப்பு இல்லை; நல்லபடியாக  மக்களுக்குப் பயன்பட்டால் போதும்"  என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட  ஆரம்பித்தது.


பிறகு அவர்கள் ஓலைகளைப் பரப்பி வைத்து, அவர்களது பரம்பரையின் மருத்துவச் சிறப்புகளையும், மக்கள் அவர்கள் மருந்துகளின் மேல் நீண்ட காலம் வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றி மலரும் நினைவுகளில் முழ்கினார்கள். அவர்களின் முன்னோரின் புகைப்படங்களைக் காட்டி  அவர்களின் அனுபவ அறிவைப் பற்றிக் கூறினார்கள்.  பிறகு தற்போது மக்கள் பாரம்பரிய மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்து இப்படி ஆங்கில மருந்தின் மோஹம் பிடித்து அலைகிறார்களே எனக் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள்.  சுவடிகளைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்து ஒருவாறு விடை பெற்றோம்; ஆனாலும்  நீண்ட நேரம் அவர்களின் தொழிலின் மூலதனமான ஓலைகளை, அவர்களின் பரம்பரையின் வைத்திய அறிவின் சான்றான ஓலைகளை அப்படியே எங்களிடம் கொடுத்ததையும், அவர்களின் தியாக உள்ளத்தையும், சீலத்தையும்  குறித்து மனத்தில் வியந்தவாறே அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம் .


காஞ்சியில் அடுக்கடுக்காக ஓலைச் சுவடிகளைக் காணப்போவதை அறியாமல் காஞ்சியை நோக்கி விரைந்தது எங்கள் ஓலைச் சுவடி ஊர்தி. இன்னும் அதிக விபரம் அடுத்ததில் பார்க்கலாம் .

 

 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

எந்தவிதப் பிரதி பலனும் எதிர்பாராமல் ,தங்களிடம் இருந்த அரிய பொக்கிஷங்களை
இனாமாக, எந்தப் பொருள் உதவியோ,  விலையோ, விளம்பரமோ இல்லாமல் தந்தனர். இத்தகைய உதாரண மனிதர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இந்த தேடுதல் பயணம் முழுவதுமே கிடைத்து வந்துள்ளது.

You may also like

Leave a Comment