Home HistoryEtayapuram 12 – பாஞ்சாலங்குறிச்சி

12 – பாஞ்சாலங்குறிச்சி

by Dr.K.Subashini
0 comment

May 30

கிராமத்தில் காளை மாடுகள்
 
அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். ஆக புறப்பட்டு சற்று தூரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சூழலில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றே தோன்றியது. ஒரு பெரிய மரம். அதன் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு  எங்களுக்காக ஜெயந்தி கொடுத்து அனுப்பியிருந்த உணவை சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.
 
இட்லி அதற்கு மிளகாய்பொடியை நல்லெண்ணை விட்டு  தயாராக வைத்திருந்தார். கீதாவும் காய்கறி கலந்த ஒருவகை உப்புமா (அவர் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர்)  அதற்கு ஏற்ற ஒரு துவையல் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். நாங்கள் நால்வரும் எங்கள் வாகன ஓட்டுனர் ரிஷான் அனைவருமாக சேர்ந்து சாப்பிட்டோம். அப்போதைய அவசர நிலைக்கு அது அமிர்தம். எப்போதுமே நாமாக சமைத்து சாப்பிடுவதை விட பிறர் தயார் செய்து கொடுத்து சாப்பிடும் போது அதன் சுவையே  தனிதான்.
 
சில மத்திய வயது பெண்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் உணவு பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். வயலில் வேலை செய்பவர்களாத் தான் இருக்கக் கூடும். வயலில் உழைத்து விட்டு இல்லம் திரும்பிக் கொண்டிருந்த இந்தப் பெண்கள் பல கதைகளைப் பேசிக்கொண்டு எங்களைக் கடந்து செல்லும் போது எங்களைப் பார்த்து புன்னகை செய்து விட்டுச் சென்றனர்.  பள்ளியிலிருந்து இல்லம் திரும்பும் மாணவியர் சிலரையும் பார்த்தோம்.  சைக்கிளை ஓட்டிக் கொண்டு பள்ளிச் சீருடையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

 
அங்கிருந்து புறப்பட்டு வாகனத்திற்கு வரும் போது இரண்டு மாடுகள் பூட்டிய ஒரு வண்டி எங்கள் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. ஒன்று கருப்பு நிற காளை மாடு.  மற்றொன்று வெள்ளை நிற மாடு. ஒருவர் இந்த மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வர மற்றொருவர் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார்.

 

பக்கத்தில் ஒருவர் இவர்களோடு பேசிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். என்ன செய்கின்றார்கள் என்று புரியாததால் அவரிடம் கேட்டு தகவல் விசாரித்தோம்.  

 
அந்தக் கருப்பு நிற மாடு அனுபவம் இல்லாத காளை மாடாம். வெள்ளை நிற காளை வண்டியோட்டத்திற்குப் பழக்கப்பட்ட காளையாம். ஆக பழக்கமில்லாத இந்த சிறிய காளையை இந்தத் திறமையான காளையுடன் இணைத்து பயிற்சி கொடுப்பதற்காகத்தான் இந்த முயற்சி என்று சந்தோஷமாக எங்களுக்கு விளக்கினார்கள்.  மனிதர்களும் இப்படித்தானே தொழிலை கற்றுக் கொள்கின்றோம். அனுபவம் மிக்க மூத்த அதிகாரிகளுடனும் பெரியவர்களுடன் கலந்து  பழகும் போது இளையவர்களும் பல தொழில் ரகசியங்களையும் அவர்களது அனுபவங்களையும் எளிதாகக் கற்றுக் கொள்கின்றோம்.  

 


 
 

அந்தக் கருப்பு நிற காளையைப் பார்த்தால் அதற்கு இந்த வேலையில் இஷ்டம் இல்லை என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு இருந்தது.  பயிற்சி பெற்ற அந்த வெள்ளை நிறக் காளை சற்று உறுதியாக வண்டியை நிமிர்த்தி தாங்கி வந்து கொண்டிருந்தது. நாள் செல்ல செல்ல இந்த சிறிய காளையும் பழகிக் கொள்ளும். 

 

 

 
அங்கிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் ஒட்டப்பிடாரத்தை அடைந்தோம்.  ஒட்டப்பிடாரத்தில் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையாகக் குறிப்பிடப்படும் வ.உ.சிதம்பரம்பரனார் அவர்களது நினைவு இல்லம். 
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment