Home Palm Leaf 10 – திருவள்ளூர்

10 – திருவள்ளூர்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச் சுவடிகளைத   தேடிய  படலம் – 10

 


சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் .


இங்ஙனம் சுவடி படிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால்  அக்ஷராப்பியாசத்தை "மையாடல் விழா" என்று சொல்லுவார்கள் .. 
                          
                                                                                                                           உவேசா அவர்களின் "நல்லுரைக் கோவை" தொகுதி  

               
                 
காலை  8.00 மணி. அது தமிழ் நாட்டு மக்கள்  ’டீ’ அருந்தியபடி  ஆங்காங்கே அமர்ந்து அரசியலை அலசும் நேரம்.  நானோ தேடியலைந்து காலை உணவை எப்படியோ முடித்துக்கொண்டு திருவள்ளூர் கோயில் வாசலில் எங்கள் ஓலைச் சுவடி வாகனத்தின் வருகைக்காகக் காத்திருந்தேன். எதிரில் தெரிந்த திருவள்ளூர் வீரராகவ சுவாமியின் நெடிய அழகிய கோபுரத்தைப் பார்த்தபடி நின்றேன். இன்று காலை வழக்கத்துக்கு  முன்னமே தயாராகிக் காலை ஆறு மணிக்கே கோயிலுக்குச்  சென்றுவிட்டேன். ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளுக்கும் வீரராகவப் பெருமாளையும்  அருகில் உறையும்  வசுமதி என்ற கனகவல்லியும் கண்டு  "இன்றாவது எங்கள் ஓலை பெறும் கணக்கைத் துவக்கி வைத்திட" மனமுருகி வேண்டினேன்.

மன அமைதியுடனும், உணவுண்ட திருப்தியுடனும் காத்திருந்த போது சிறிது நேரத்தில் எங்கள் ஊர்தியும் வந்துவிட்டது. பழவேற்காட்டில் திரு ஹரிதாஸ் வீட்டில் பேசும்போதே அவர் எங்கே வேலை செய்கிறார்  என்று கேட்டு முகவரி வாங்கி இருந்தோம். அவர் திருப்பாலைவனம் என்ற ஊரில் தலைமை  ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்பதையும் அறிந்தோம். முன்பே ஒரு முறை அந்த திருப்பாலைவனம் ஊர்  வழியாக சென்றிருக்கிறோம். அங்கே இருக்கும் அழகிய கோயிலும் எங்களைக் கவர்ந்தது.

 

அருகில் சென்று  பார்க்க இயலவில்லையே என்ற வருத்தம் மனத்திலிருந்தது. இப்போது மீண்டும் திருப்பாலை வனம்  செல்லும் வாய்ப்பு கிடைத்ததும்  மனத்தில் மகிழ்ச்சி கூடியது; ஆனால் அங்கும் கோயிலைப்பார்க்க நேரம் ஒதுக்க  இயலவில்லை. ஆனாலும் பலா மரம் அங்கு ஸ்தல விருக்ஷமாகவும், யோகாம்பாள் உடனுறை  திருப்பாலீஸ்வரர் அங்கே அருள் பாலிப்பதாலும் அந்தப் பெயர் வந்ததாக அறிந்தேன்.  இதை அறிந்த உடன்தான் ஏன் பாலை வனம் எனப் பெயர் வந்தது தமிழ் நாட்டில்,  அருகில்  ஏதாவது பாலை வனம் இருந்திருக்குமா  என்ற என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருந்த  அறியும் வேட்கை சற்றுத் தணிந்தது.

சரியாகப் பள்ளிக்கூடம்  ஆரம்பித்ததும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டோம். ஹரிதாஸ் அவர்களுடன் அவரது பணிக்கு இடையூறு இல்லாமல் சற்று நேரம் தனியே பேச  விரும்புவதாகக் கூறினோம்.  அவரும் அங்கே காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் சென்று சற்று நேரம் காத்திருக்குமாறு  கூறினார். நாங்களும் சென்று வகுப்பறையில் சமர்த்துப் பிள்ளைகளாக அமர்ந்திருந்தோம்.

எங்களை அதிகநேரம் காக்க வைக்காமல் ஹரிதாஸ் அவர்களும் வந்துவிட்டார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம் .

"ஆமாம் நேற்று வீட்டுக்கு வந்து போனதாக வீட்டில் கூறினார்கள் "என்றபடி "அதுதான் நேற்றே போனில் கூறினேனே, வீட்டில் இருக்கும் ஓலைச்சுவடி எங்கள் நிலம்  பற்றிய ஆவணம். அது உங்களுக்குத் தேவை இராதே " என்றார். நாங்கள் "ஐயா நாங்கள் இங்கே தேடி வந்தது அதுபற்றிப் பேச இல்லை " "வேறு எனன வேண்டும் உங்களுக்கு ?" என்றார் அவர் முகத்தில் லேசான உஷார் நிலை, ஒரு விறைப்பு தன்மை வந்தது.  "அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஐயா, உங்கள் ஊரைச்சேர்ந்த கணேசனும் நீங்களும்  உங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் தந்ததாகக் கூறினார், அது  பற்றி உங்களிடம் பேசிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தோம். உங்கள் வீட்டில் இருக்கும் சுவடிகள் எங்களுக்கு வேண்டாம்"  என்றோம்.

ஒருவாறு சற்று இறுக்கம் நீங்கியவராக ஹரிதாஸ்  "அப்படியா  ! ஆமாம் நாங்கள் எங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகள் அனைத்தையும் நான்கு வருடம் முன்பு இதுபற்றிக் கணக்கெடுக்க வந்த பொன்னேரி நூலகர் வசம் தந்துவிட்டோம்."

"அப்புறம் பிறகு அவரைப் பார்த்தீர்களா "

"இல்லையே பிறகு பார்க்கவில்லை "

”அந்த ஓலைச் சுவடி யார் மூலமாவது உங்களிடம் திரும்பி வந்ததா?”

"இல்லையே ! இதுவரை யாரும் வநது ஓலைச் சுவடியைத் தர வில்லையே "

”ஐயா, நீங்கள் அந்த ஓலைச் சுவடிகளை நூலகரிடம் தந்ததற்கு ஏதாவது ரசீது வாங்கினீர்களா ?”

"இல்லையே, அது அவ்வளவு முக்கியமா ? ஏதோ வீட்டில் இருந்தது, வந்து கேட்டார்கள், கொடுத்துவிட்டேன் " என்றார்.

அவரைப் பொருத்தவரை அதன் முக்கியத்துவம் அவ்வளவே !

"ஒன்றும் இல்லை சார்! நேற்று  பழவேற்காட்டில் இருந்து நேராக போன்னேரிதான்  போனோம் .ஆனால் அங்கே விசாரித்தபோது நூலகத்தில் அந்த ஓலைச் சுவடிகளை உங்களிடம் திருப்பித்தந்து விட்டதாகக் கூறுகிறார்கள் "

"என்ன இது புதுத் தொந்தரவு ! என்னிடம் எதுவும் திரும்ப வர வில்லையே "

”இல்லை ஐயா,  நீங்கள் ஏதாவது ஞாபக மறதியாக எங்காவது வாங்கி வைத்திருக்கபோகிறீர்கள் என்றுதான் பள்ளிக்கூடத்திற்கே தேடி வந்தோம் "

 

"இல்லை இல்லை ! என்னிடம் யாரும் திரும்பக் கொடுக்கவில்லை. சரி நீங்கள் ஒருவாரம் கழித்து  வாருங்கள்; நான் பொன்னேரி போனால் விசாரிக்கிறேன் "என்று சாவதானமாகக் கூறினார்.

"ஐயா, நாங்கள் இந்த மாவட்டம் வந்து நான்கு நாள் ஆகப்போகிறது.

நாளையுடன் இங்கு எங்கள் பணி முடிவடைகிறது.  நாங்கள் பொன்னேரி நூலகர் கைபேசி எண் வைத்திருக்கிறோம். உங்கள் முன்னேயே அழைக்கிறோம்; அவர் எனன சொல்கிறார்  பாருங்கள் " என்றபடி பொன்னேரி நூலகர் கைபேசி எண்ணிற்கு அழைத்தோம். அவர் நேற்று நாங்கள் வந்தபோது இல்லாமல் போனதற்கு அவசரக் காரியங்கள் திடீர் என வந்துவிட்டது எனக் கூறினார். நாங்கள் மீண்டும் பழவேற்காட்டில் பெற்ற ஓலைகளைப் பற்றிக் கேட்டோம். அவர் அதை அப்போதே வாங்கிய ஆசிரியரிடமே தந்துவிட்டதாகக் கூறினார்.

நாங்கள் பணிவாக "சார், நாங்கள் இப்போது ஓலைச் சுவடிகளைக் கொடுத்த அந்த ஆசிரியரின்  பக்கத்தில்தான் இருக்கிறோம்; தயவு செய்து சற்று நேரம் அவரிடம் பேசுங்கள் "  என்று கூறியபடி திரு ஹரிதாஸ் வசம் கைபேசியைத் தந்தோம். வேறு ஒன்றும் கூறவோ செய்யவோ முடியாமல் இருவரும் சற்றுத் திகைத்துப் போயினர். அவர்களிடையே நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றது. நாங்கள் அவர்களைத் தனியே பேசவிட்டுச் சற்று தூரத்தில் போய் நின்றோம். ஒருவாறு இருவரின் பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தது.

 

திரு ஹரிதாஸ் எங்களை அழைத்தார். நூலகர் உங்களுடன் பேசவேண்டுமாம் என்று கைபேசியைத் தந்தார். நூலகர் "சார், இன்று மாலை ஐந்து மணிக்கு நூலகம் வாருங்கள்; அதற்குள் நான் தேடி எடுத்துவைக்கிறேன் " என்று கூறினார். எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

 

பிறகு நாங்களும் இதைக் கிளறவில்லை. யார் பக்கம் தவறு என்று கண்டுபிடிப்பதில் என்ன ஆதாயம்? எங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டது.  பின்னர் மகிழ்ச்சியுடன் திருப்பாலநாதர் பற்றி யெல்லாம் பேசி விட்டு ஹரிதாஸ் வாங்கிக் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம் .
பிறகு வேறு பல இடங்களுக்குச் சென்றுவிட்டு சரியாக ஐந்து மணிக்கு பொன்னேரி நூலகத்தில் நுழைந்தோம்.; அங்கு நூலகரும் காத்திருந்தார்; உடனே எங்களை அமரச்சொல்லிவிட்டு அங்கிருந்த அலமாரியில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்தார் . நாங்களும் நன்றி கூறிப் பெற்றுக்கொண்டோம்;  வேறு ஒன்றும் அதிகம் பேசவில்லை; நேற்று ஏன் இல்லை என்றார், இப்போது எப்படி வந்தது என்றெல்லாம்  கேட்கவில்லை .அது தெரிந்து என்ன செய்யப் போகிறோம்?  ஓலைதான் கைக்கு வநது விட்டதே !

எங்களுக்கு உடலெங்கும் சிலிர்ப்பு  9  நாட்கள் சுற்றி முதல் ஓலைச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுவிட்டோம்.  மனத்திற்குள் இறை வனுக்கு நன்றி கூறினோம்.

விரைவில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டோம். எப்போதுமே ஓலைச் சுவடிகள் பெற்றால் உடனே அந்த இடத்தைக் காலி செய்து விட வேண்டும். ஏனெனில் கொடுத்தவரே மனம் மாறிவிடலாம் .அல்லது வேறு யாராவது சுக்கிராசாரியார் மாதிரிக் கொடுக்கும் தானத்தைக் கெடுக்கலாம்; எதற்கு வம்பு என்று உடனே இடத்தை காலி செய்து விடுவோம்.

இன்னும் சில சுவடிகளைப் பற்றிய துப்பு அன்றே கிடைத்ததைப் பற்றி அடுத்துப் பார்க்கப் போகிறோம்.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

You may also like

Leave a Comment