Home HistoryEtayapuram 10 – பாஞ்சாலங்குறிச்சி

10 – பாஞ்சாலங்குறிச்சி

by Dr.K.Subashini
0 comment

May 26

 

பாஞ்சாலங்குறிச்சி: வீரக்கம்மாள்
 
எங்களுக்கு முன் வந்து நின்ற அந்த மனிதர் கட்டபொம்மனின் வாரிசு என்று எங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். அவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது இது ஒரு ஏமாற்றுத்தனமா என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்குமா?  எனக்கு தெரிந்த  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்படி அவருக்கு குழந்தைகள் இல்லை. அப்படித்தான் என்னுடன் வந்திருந்த மற்றவர்களுக்கும் சிந்தனை ஓடியிருக்க வேண்டும்.
 
 
 
ஆக சந்தேகம் தோன்ற அவரைப் பார்த்ததில் அவருக்கு எங்களின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்திருக்கு வேண்டும். எங்களைப் போன்று இங்கு வரும் சுற்றுப் பயணிகள் பலரை அவர் இங்கு சந்தித்திருப்பார் அல்லவா? ஆக அன்பாக எங்களிடம் தன்னைப் பற்றி அறிமுகம் கூறிவிட்டு "அப்புறம் பேசலாம். முதலில் எங்கள் குலதெய்வம் வீரசக்கம்மாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வாருங்கள். பின்னர் விளக்குகின்றேன்" என்று கூறி எங்களை கோட்டையின் வாசல் பகுதிக்கு அழைத்து வந்தார்.
 
 
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கம்மாளின் கோயில் சிறியதாக எளிமையான தோற்றத்தில் தான் உள்ளது. உள்ளே கோயிலுக்குள் சென்று சுவாமியை ப்ரார்த்தனை செய்தோம். கோயில் பூசாரி/குருக்கள் எங்களுக்கு தீபாராதனை காட்டி ப்ரசாதம் வழங்கினார்.  வீரபாண்டிய கட்டபொம்மன் நின்று வழிபட்ட வீரசக்கம்மாள் கோயில். மனதிற்கு மேலும் பிரமிப்பாகவே இருந்தது. பூசை முடித்து வரும் வரை எங்களோடு பக்கத்திலேயே இருந்து எங்களுக்கு மேலும் ஒரு அதிகாரியை அறிமுகம் செய்து வைத்தார் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசி என கூறிக்கொண்டவர்.   
 
இந்த அதிகாரியும்  இந்த நினைவு மண்டபத்திலேயே வேலை செய்பவர். அவர் எங்களை வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை இருந்த இடமான தற்போது சிதலமடைந்து கிடக்கும் பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார். கோட்டையின் இப்பகுதியை பூட்டியே வைத்திருக்கின்றனர். சில நேரங்களில் நல்ல புதிய  அனுவங்களை இறையருள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றே தோன்றியது. இந்த அதிகாரி எங்களை மிகவும் அன்போடு அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று பூட்டியிருந்த கதவையும் திறந்து எங்களுக்கு நாங்கள் கேட்கும் முன்னரே வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையைப் பற்றிய விளக்கமும் கொடுக்க ஆரம்பித்தார். 
 
ஒலிப்பதிவு : {play}http://www.tamilheritage.org/kidangku/panchalangkurichi/excavation.mp3{/play}
 
 
 
 
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்மாசனம் இருந்த இடம், அமைச்சர்கள் அறிஞர் பெருமக்கள் கூடி விவாதிக்கும் அரசவை போன்ற இடங்களைக் காட்டினார். பக்கத்தில் சற்று தள்ளி அந்தப்புரம் இருந்த இடத்தையும் நீச்சல்குளம் இருந்த இடத்தையும் பார்வையிட்டோம். 
 
 
பின்னர் சற்று நடந்து செல்லும் வழியில்  ஒரு குறிப்பிட்ட பகுதியைக் காட்டி எப்போதும் இப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் .. காலணியைக் கழற்றி விட்டு நடந்து பாருங்கள் என்று சொல்லி சோதிக்கச் சொன்னார். இந்த இடம் முன்னர் நடன கலைஞர்கள் நடனமாடும் ஒரு மேடையாக இருந்திருக்கின்றது.   இப்பகுதியை நவதானியங்களைக் கொட்டி அதற்கு மேல பிரத்தியேகமாக தயார் செய்து கட்டியிருக்கின்றார்கள்.
 
 
 
இதனைப் பார்த்து மேலே நடக்கையில் ஒரு பாதையைக் காட்டி இங்குதான் சுரங்கப்பாதை உள்ளது. 2 கிமீ தூரம் இந்த சுரங்கப் பாதை உள்ளது என்று குறிப்பிட்டார். இப்பகுதியை இப்போது பாதுகாப்புக் கருதி பூட்டியே வைத்திருக்கின்றனர்.
 
 
 
இப்பகுதியில் மேலும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட உடைந்த சிலைகள், மஞ்சள் அறைக்க பயன்படுத்திய அம்மி, உரல், என பலவற்றையும் சிறப்பாக காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
 
 
 
 
அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட மேலும் சில பொருட்கள் இப்போது கண்யாகுமரி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவலையும் தெரிவித்தார்.
 
 
 
இவற்றையும் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு எக்களுக்கு விளக்கமளித்த அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளிவே வந்தோம்.  
 
 
எங்களை தனியே அழைத்து வந்து கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்கு முன் அமரவைத்து தன்னை பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார் வீமராஜா.
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment