Home Historymalaysia ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்

ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்

by Dr.K.Subashini
0 comment

 

ஸ்ரீ  ருத்ர காளியம்மன் ஆலயம்
கிருஷ்ணன், சிங்கை.

 

 

எத்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லை
   என்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னை
பத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதி
   பண்பும் பரிவும் பணிவும் அருள்வாய் உருத்திரகா ளியே
கொத்தடிமை கொள்வாய் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!
         கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!
எத்தோ நின் அன்பை நான் என்றறிவேன், அத்தனை மணந்தவளே!
          எத்தனையும் பேதமில்லா ஏற்றம் நிறைந்த என் கண்மணியே! 

 

ஆதி சக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத் தனியாக பிரிக்க முடியாது என்றாலும், உலக இயக்கத்திற்குக் காரணமாக சிவத்திற்கு அசைவு ,துடிப்பு, சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது அந்த ஆதிசத்தி. அதனால் சிவம் மறுநிலை எய்தி  படைத்தல், காத்தல், அழித்தல் எனும்  முத்தொழிலில் செய்ய முயல்கிறது. அதற்கேற்ப  அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியைப் படைத்துக் கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுது எல்லா இயக்கங்களும் நடைபெறும்.

சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும், நாமமற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும், தெளிவற்றதற்கு தெளிவான நிலையும் உண்டாகின்றன.அதனால், அருட்பிழம்பாகிய ஆதிசக்தி அந்தப் பராசக்தியின் உருவிலிருந்து, பிராஹ்மி, வராகி, மகேஸ்வரி,கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி, துர்க்காதேவி, ருத்திரகாளி என அட்ட சக்திகளைத் துணையாகப் படைத்தாள். இந்த சக்திகள்தான் இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா அற்புதச் செயல்களைச் செய்கின்றன.
சத்வ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இரஜோ குணத்தில் வீர உருவத்தில் துர்க்கையாகவும், தமோ குணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகின் அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறைகளிலும் பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில் உறைகிறாள்.அப்படிச் சிங்காரச் சிங்கையில் அமைந்திருக்கும் ருத்திர காளியம்மனை அடுத்ததாகக் காண்போம்.

சிங்கப்பூர்த் துறைமுக ஆணைய நிறுவனத்தின் அடுக்குமாடிப் பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளைப் பகுதியில் ஒரு மூலையில் எளியதோர் அமைப்பில் குடிகொண்டு இருந்த ருத்ர காளியம்மன் பிற்காலத்தில் பொலிவு பொங்கும், கலையம்சம் மிக்க அழகிய பெரிய ஆலயத்தில் குடிபுகுந்தாள். அடியார்களின் ஒரு கனவு நனவானது.

இப்போது சிங்கப்பூர்த் துறைமுக ஆணைய நிறுவனத்தின் அடுக்கு மாடிப் பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளையில் முற்காலத்தில் அமைந்திருந்த கோயிலின்  மொத்தப் பரப்பளவு 460 ச.அடி. இந்த வளாகத்தினுள் பலகை வீடு ஒன்று இருந்தது. அதுதான் கோயில் குருக்களின் இருப்பிடம். கோயிலுக்குத் தென் கிழக்கில் சுமார் 100 அடி தூரத்தில் முனீஸ்வரர் சன்னிதி அமைந்திருந்து. 

 

கோயிலிலும் சரி, சன்னிதியிலும் சரி கலை வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. பசீர்பாசாங் சாலையிலிருந்து 300 அடி தூரத்தில் இருந்த ஒற்றையடிப் பாதை மட்டுமே கோயிலை அடைவதற்கான ஒரே வழி. சுற்றுப்புற அமைப்புச் சற்று நூதனமான ஒன்றாக இருந்தது. கிழக்கே சுமார் 300 அடி துரத்தில் ஒரு பள்ளி வாசல், தென்கிழக்கே 150 அடி தொலைவில் ஒரு பெந்தெகோஸ்த் தேவாலயம், பின்னால் 30 அடிக்கு அப்பால் ஒரு சீனக் கோயில், வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் ஒரு மெதடீஸ் தேவாலயம். அனைத்தும்  அலெக்சான்ரா செங்கல் சூளை வட்டாரத்தினுள் அமைந்திருந்தன.  இந்த ஆன்மிகத் தலங்கள் அனைத்தும் பல்லாண்டு காலம் உண்மையான சகிப்புத் தன்மையுடன் இயங்கி வந்துள்ளன.

ருத்ர காளியம்மன் ஆலய வரலாறு பற்றிய தகவல்படி இக்கோயில் 1913-ஆண்டில் பலகைக் கட்டிடமாக, சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த  திரு.லட்சுமணன்  நாடார் என்பவர்தான் இவ்வாலயம் தோன்றக் காரணமாக இருந்தார்.1923-ல் அலெக்சான்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமான போர்னியோ கம்பெனியின் ஆதரவில் ஆலயம் செங்கற் கட்டிடமாக மாறியது. இக்கோயில் பெரும்பாலும் சூளையின் இந்திய ஊழியர்களுக்கும், பக்கத்து வட்டாரங்களின் வாழ்ந்து வந்த  இந்துக்களுக்கும் வாடிக்கையான வழிபாட்டு இல்லமாக இருந்து வந்தது. அக்காலத்தில் பாசீர் பாஞ்சாங், அலெக்சன்ரா, தெலுக் பிளாங்கா வட்டாரங்களில் வேறு இந்துக் கோயில் அமைந்திருக்கவில்லை. கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த ஆலயம் நான்கு மைல் தூரத்தில் இப்போது அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயமே.

கோயில் அலுவல்களை திரு.லட்சுமணன் நாடாரே கவனித்து வந்தார். அதற்கு பின் 1960,1963,1967,1969 ஆண்டுகளில் பல்வேறு நிர்வாகங்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.  செங்கல் சூளை இந்து ஊழியர்கள், பக்கத்து வட்டார இந்துப் பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டுதான் கோயில் இயங்கி வந்தது. முதலில் போர்னியோ கம்பெனியாரும், பின்னர் அலெக்சான்ரா சூளை நிர்வாகத்தினரும், 1967ன் முற்பகுதி வரை தொடர்ந்து கோயிலுக்கு மாதம் 10 வெள்ளி நன்கொடை அளித்து வந்தனர். செங்கல் சூளையில் இந்து ஊழியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய போது, பாசீர் பாஞ்சாங் மின் நிலைய இந்து ஊழியர்கள் நல்லாதரவு நல்கினர். இருப்பினும் 1967 ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஆலய நிர்வாகத்திற்குப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.

1968 ஆம் ஆண்டு 11-ஆம் நாள் ருத்ர காளியம்மனின் சுதை சிலைக்குப் பதிலாக புதிய கருங்கல் சிலை நிறுவப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1969 அக்டோபர் 23-ஆம் நாள் புதிய கருங்கல் சிலையாக விநாயகர், சுப்ரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஈராண்டுகளுக்குப் பின் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள், அலெக்சாண்ரா செங்கல் சூளை நிர்வாகத்தினர், தங்கள் நிலத்தைச் சிங்கப்பூர்த் துறைமுக ஆணை நிறுவனத்திடம் விற்றுவிட முடிவு  செய்தனர். 1972 ஜூன் 30 ஆம் நாளுக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று அறிவிப்பு கொடுத்தனர். இழப்பீடாக  260,000 சிங்கப்பூர் வெள்ளி கொடுக்கப்பட்டது.

1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ர காளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளிம்மன் ஆலயம் எழுப்புவதற்குக் கொள்கை அளவில் தீர்மானம் செய்யப்பட்டுக் கல்வி,கலாசார,சமுதாய, பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாமல்லபுரக் கட்டிடக்கலை சிற்பக் கல்லூரி முதல்வர் திரு.வி.கணபதி ஸ்தபதியாரின் அரிய ஒத்துழைப்போடு புராதனக் கலை அம்சத்துடன் நவீனத்தையும் இணைத்து  ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் எழுந்தது.

65 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்துக்கான திட்டம் 2002ம் ஆண்டு மே மாதம் அனுமதிக்கப்பட்டு, 2003ல்  முடிவடைந்தது. 1-9-2003 ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழிபடச் சிறந்த வசதிகளும் உகந்த சூழ்நிலையும் அமையப்பெற்றுக் கலை நயமிகுந்த ஆலயமாகத் தற்போது  மிளிர்கிறது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவதான மறைத்தல் என்பது  ’திரோதானம்’ என்று பெயர் பெறுகிறது. இந்தத் திரோதான சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி ஆகியவை தோன்றுகின்றன. சீவான்மாவை ஆணவம்,கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் எப்போதும் சூழ்ந்துள்ளன. சீவனின் மும்மலங்களையும் நீக்கி, சித்தமலம் அறுவித்து சிவமாக்கி உய்விப்பது சிவத்தின் செயலாகும்.

இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும் உமையன்னையாகப் பாவித்து சைவர்கள் வழிபடுவர். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவோர் உலகில் எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள் என்பதால் ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிவனுடன் சக்தியும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தட்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா ஆகிய கலைமிகுந்த சிற்பங்களும் இவ்வாலயத் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலய விமான கோபுரங்களில் சிவபெருமான், மஹா விஷ்ணு, பிரம்மா ஆகிய சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்புறத்தில் கயிலை நாயகர்  சிவபெருமான்,சக்தி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் வீற்றிருக்கும் எழில் மிகு சிற்பம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ருத்ர காளியம்மன் சன்னிதி வாயுபாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான திருக் காளத்தியை (வாயுத் தலம்) நமக்கு நினைவுறுத்துகிறது.

 

ஆலய முகவரி

SRI RUDRA KALAIAMMAN TEMPLE,
100, Depot Road,
Singapore. 109670
Tel. 62737470/ Fax.62735843

 

You may also like

Leave a Comment