Home Historymalaysia வீரமா காளியம்மன் ஆலயம்

வீரமா காளியம்மன் ஆலயம்

by Dr.K.Subashini
0 comment

 

வீரமா காளியம்மன் ஆலயம்

கிருஷ்ணன், சிங்கை.

 

சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!                           
காராரு மேனிக் கருங்குயிலே!
ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே!
மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே!
சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே!
வீரமாகாளி அம்மையே!

நினது தாமரைத் திருவடி என் சென்னியதே!

 

 

திருவருளம்மை காளியே கால சொரூபிணி. அவளுக்கு அன்னியமாகக் காலம் இல்லை. அவளே காலத்தின்
அதிபதியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாற்றங்களை விளைவித்து வருகிறாள்.உலகனைத்துமாகி  திக் அம்பரியாக எங்கும் நிறைந்திருப்பவளும் அவளே. மக்கள் செய்யும் வினை அனைத்துக்கும் சக்தியாய் இருப்பவளும் திருவருளம்மையே. காளி அம்மையின் இரஜோ குணத்தின் சின்னமாக மண்ணுலகில் எழுந்தருளி இங்கு நிகழும் தமோ குணத்தின் பால் நடக்கும் போராட்டத்தை வென்று சத்வம் என்னும் நடுநிலையின்பால் நம்மைச் செலுத்தி பிறகு முக்குணம் கடந்த பரம்பொருளில் நம்மைக் கொண்டு சேர்க்கின்றாள். பூலோகத்துக்கு எழுந்தருளுகின்ற அன்னை காளியின் மெய்யியல் இதுவே. நிறைபொருளாக எல்லாமாய்  நீக்கமற எங்கும் நிற்கும் ஸ்ரீ வீரமாகாளி காளியம்மன் சிராங்கூன் சாலையில் அமைந்த முதல் ஆலயமாகும். அன்னை இங்கு ஒரு நூற்றாண்டைக் கடந்து அருள் பாலித்து வருகிறாள்.

 

வரலாறு நாம் பிறப்பிலிருந்து ஆரம்பிப்பதில்லை; இனத்தின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. வரலாறு என்பது இறந்தகால நிகழ்ச்சியின் தொகுப்பு. போரிட்ட களங்களும், அதற்கான காரணங்களும் நாட்டின் வரலாறு ஆகும். வரலாறு நம்மோடு தொடர்புடைய விஷயம். அந்த தொடர்பு நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது;நாளையும் இருக்கும். சரித்திரம் என்றும் சாசுவதமானது. வரலாறு அதன் சிறப்போடு முடிவதில்லை; இனத்தின் சிறப்போடுதான் முடிகிறது.

 

நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும்; நாமும் நன்றாக இருக்க வேண்டும்; நோய் நொடியின்றி வாழவேண்டும்; அன்னை நமக்குக் காவல் தெய்வமாக இருந்து காக்க வேண்டும் என்ற இறைப்பற்றுடன் இந்தியாவிலிருந்து வந்த நமது முன்னோர்கள் இங்கு ஆலயம் அமைத்தார்கள்.

 

 

”ஆலயம் தொழுவது சாலவும் நன்று”என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய தமிழ் மக்கள் அவன் அருளாலே அவன் தாள் வணங்கினார்கள். தாங்கள் குடியேறிய நாடெங்கும் பல்வேறு வகைப்பட்ட கோயில் அமைத்தார்கள். இந்தோனேசியா, மலாயா, தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ், கம்பூச்சியா, பர்மா ஆகிய நாடுகளில் பரவலாக அமைக்கப்பெற்றிருக்கும் பழம்பெரும்  இந்துக் கோயில்களே இதற்குச் சான்றாகும்.

 

நதிக்கரை ஓரத்தில் நாகரிகம் தோன்றும் என்பது சரித்திர காலத்திலிருந்து உணரப்பட்ட உண்மை. நதிகளின் கரைகளே நாகரிகத்தின் தொட்டில்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நதிகளின் முகத்துவாரங்களில் பெரும் பட்டினங்கள் அமைந்திருந்ததையும், அவற்றின் வாணிபச் செழிப்பையும் நம் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சமவெளியில் பரந்து விரிந்து பாங்காக ஓடும் மகாநதிகள் அனைத்துமே மனத்தைப் பரவசப்படுத்துகின்றன. அகண்ட நதிக்கரைகளில் தங்கள் வாழ்வை அமைதியாகக் கழிக்கும் மாமுனிவர்கள், துறவிகள், சன்யாசிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் ஆகியோர்களை இன்றும் நாம் இந்தியாவில் காணலாம்.

 

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்பன ஏழு புண்ணிய நதிகள். இந்நதியின் துறைகளை நாடி அகமும் புறமும் புனிதமடைய நீராடுவது என்பது நமது பண்டைய மரபாகும். திருவாரூரில் பிறக்க முக்தி; நர்மதைக் கரைகளில் நோன்பு நோற்க முக்தி; காசியில் இறக்க முக்தி; திருவண்ணாமலைத் தலத்தை ஒருமுறை நினைக்க முக்தி என்ற தொடர் நமக்கு புதிதல்லவே!

 

சிங்கப்பூரில் இயற்கை எழிலுடன் ஓடும் ஆறு ரோச்சோர் ஆறு. ரோச்சோர் ஆற்றுக்குச் சமீபத்தில், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஆலயம் ஸ்ரீ வீரமாகாளி காளியம்மன் ஆலயம்.

 

 

ஸ்ரீ வீரமாகாளி காளியம்மன் ஆலயம் இந்தியக் கைதிகளால் 1835 ம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில் சிறு ஆலயமாகத் தோற்றுவிக்கப்பட்டது என்பது வாய்மொழி வரலாறு.  1825 லிருந்து 1873 வரை பிரிடிஷார் ஆட்சியில் சிங்கப்பூர் இந்தியக் கைதிகளுக்கான ஒரு தண்டனை நிலையமாக இருந்தது. விடுதலை பெற்ற பிறகு  சிங்கப்பூரிலேயே  தங்கிவிட்ட முன்னாள்  கைதிகளாகிய இவர்களாலேயே  ஆலயம் கட்டப்பட்டது. இப்பொழுது ’குட்டி இந்தியா’ என்று சொல்லப்படும் சிராங்கூன் வட்டாரப் பகுதி 1835ம் ஆண்டில் ’புது கம்பம்’ (New Kampong) என்றும், பப்லோ வில்லேஜ் (Buffalo Village)  என்றும், ’சுண்ணாம்புக் கம்பம்’ (Kampong Kapor)  என்ற  பெயர்களோடு இருந்தது.  இப்பகுதியில் சுண்ணாம்புப் படிவம் அதிகம் காணப்பட்டதால்  ’சுண்ணாம்புக் கம்பம்’ என்ற காரணப்பெயரும் இருந்தது.

 

மேலும் இப்பகுதியில் மிகுதியாக வளர்க்கப்பட்ட எருமை மாடுகள் பாலுக்கும், வண்டி இழுக்கவும் பயன்பட்டன. ஆகவே Buffalo Village என்றாகியது. ’எருமைப் பட்டி’என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

 

பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் சிராங்கூன் வட்டாரப் பகுதியில் அதிகமான இந்தியர்  பரவலாக வாழ்ந்து வந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சுமார் 13,000 இந்தியர்கள் சிராங்கூன் சாலையை ஒட்டி வாழ்ந்து வந்தாக மில்லாரட் (J.P.Milaret) என்பவர் தமது வரலாற்றுக் குறிப்பில் பதிந்துள்ளார். 

 

ஆகவே இப்பகுதி வாழ் இந்தியர்களுக்கு ஒரு வழிபாட்டு ஸ்தலம் தேவைப்பட்டிருக்கிறது.ஆகையால் தங்களுக்கு ஒரு காவல் தெய்வமாக வீரமும், ஆக்கோரசமும் கொண்ட  தெய்வம் வேண்டுமென்று எண்ணி 1908 ம் ஆண்டு களிமண்ணாலான வீரமாகாளியம்மனையும்,பெரியாச்சியையும் சிறிய அளவில்  ஸ்தாபனம் செய்து வழிப்பட்டனர். ஒன்பது ஆண்டுகள் கழித்து 1917 ம் ஆண்டு விநாயகர், முருகன் சிலையும் 1936ல் இரதமும் ஏற்பட்டன.

 

1953-ல் ஆலயத்தையொட்டி ஒரு மணி மண்டபமும் கட்டப்பட்டது.

 

இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீச்சுக்குப் பதுங்கும் இடமாகவும் இவ்வாலயம் பயன்பட்டது  .  குண்டு வீச்சில் ஆலயம் எந்தச் சேதமும் அடையவில்லை என்பது அம்மனின் அருளுக்கு ஒரு சாட்சி.

 

பழைய வீரமா காளியம்மன்            

 

இந்த ஆலயம் அமைந்த இடம் திரு.லார்ட் நோரீஸ் (Lord. Norriss) என்பவருக்குச் சொந்தமான இடமாகும். ஆலயத்திற்குச் சொந்த நிலம் வேண்டும் என்ற நோக்கில்  திரு.நோரீஸை அணுகினார்கள் ஆலயத்தார்.

அந்த இடத்தை   திரு லோட் நோரீஸ் தர இணங்கி அன்றைய நிலவரப்படி 250 வெள்ளி விலை கூறினார். பக்தர்களால் அந்த அளவுக்குப் பொருள்  கொடுக்க இயலவில்லை. மாற்று யோசனையாக திரு. நோரீஸ் தான் இருந்த பகுதியைச் சுற்றி சுத்தம் செய்து, சாலை அமைத்துத் தந்தால் ஆலய இடத்தினை இலவசமாகத் தருவதாகக் கூறினார்.

 

அந்தக் காலத்தில் இந்தியத் தொழிலாளர்கள் பலர் உடல் உழைப்புத் தொழிலாளராக இருந்தனர். காலை ஆறு மணிக்கு வேலை தொடங்கி நண்பகல் 12 வரையிலும், பி்றகு மாலை 3 மணி முதல் 5/6 வரையிலும் பணி செய்வார்கள். இடைப்பட்ட நேரத்தில் இந்திய தொழிலாளர்கள்  திரு.நோரீஸ்  இருந்த மனையைச் சுற்றிலும் சுத்தம் செய்து சாலை வசதியும் ஏற்படுத்தி வந்தனர்.

 

 

இச்சமயத்தில்  திரு.நோரீஸ்  எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். ஆனாலும், சொன்ன சொல் மாறாது தனது உயிலில் இடத்தை வேறு யாருக்கும்  கொடுக்கக் கூடாது என்றும், ஆலயத்தாருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்றும் குறித்திருந்தார்.

 

$250 சிங்கப்பூர் வெள்ளி் கொடுத்து நிலத்தைப் பதிவு செய்ய பக்தர்களால் இயலவில்லை. திரு.நோரீஸின் சந்ததியினர் இனாமாகக் கொடுக்க இயலாது என்று கூற, ஆலயத்தார் ஒரு வெள்ளியிலான பூட்டை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அவர்களும் அதனையே 250 வெள்ளிக்குச் சமமாக எண்ணி இப்போதிருக்கும் ஆலய நிலத்தை எழுதிக் கொடுத்தனர்.

பெருகி வரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஆலய விரிவாக்கம் அவசியம் என்று உணரப்பட்டது.1965 ம் ஆலய மேலாண்மைக் குழு புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணியது. அதே சமயம் சிங்கப்பூர் நகர் விரைவாக மாற்றம் கண்டு வந்தது.மறு சீரமைப்பு, சிராங்கூன் சாலை விரிவாக்கம், மக்கள் நடைப்பாதை அமைத்தல் போன்ற காரணங்களால் பழைய ஆலயத்தின் முன் பகுதி நிலத்தை அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. மீதமிருந்த  நிலம் புது ஆலயம் ஒன்று கட்டுவதற்குப் போதியதாக இல்லை.எனவே போதிய இடம் பெறுவதற்கு  ஆலயத்தைச் சுற்றி இருந்த  கடைகள், வீட்டு மனை ஆகிய சொத்துக்களை வாங்கப் பெரு முயற்சி மேற்கொண்டனர்.

 

ஆலயப் புத்துருவாக்கப் பணிகளுக்கு 22 இலட்சம் வெள்ளி ஆகியது. இந்து ஆகமங்களுக்கு ஏற்ப ஆலயம் அமைந்தது. புதிய ஆலயத்தின் குடமுழுக்கு விழா 1987 ஆண்டு பிப்ரவரி 8 ம் நாள் நடைபெற்றது.

 

வெள்ளியிலான கொடிமரம்

 

எல்லா நவீன வசதிகளும் கொண்ட  இந்த ஆலயத்தில் விநாயகர்,முருகன், மற்றும் வீரமாகாளியம்மன் ஆகிய சன்னிதானங்களின் கதவுகளுக்கு வெள்ளிக் கவசம் போடப்பட்டுள்ளது. அவற்றுக்கு முன்னர்  வெள்ளி யானைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உச்சிவேளை பூஜையில் பக்தர்களுக்கு ஏற்படும் புழுக்கத்தைத் தணிப்பதற்காகக் காற்றோட்டத்தை வழங்க மின் காற்றாடிகள், ஆலயம் செல்லும் முன் கால்களை சுத்தம் செய்வதற்குத்  தண்ணீர்க் குழாய்கள் என்று பல்வேறு வசதிகளுடன் ஆலயம் தூய்மையாக உள்ளது. மூலஸ்தானத்தில் வீரமாகாளியம்மன் வீற்றிருக்கிறாள். மற்றும் சித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர், விஸ்வநாதர், விசாலாட்சி, கருப்பண்ண சுவாமி, லட்சுமி, துர்கை, பெரியாச்சி அம்மன், சுந்தரராமர் கோயில், நடராஜர் சன்னிதி என்று நம்மை மெய்மறக்க செய்யும் கடவுளரின் பல சன்னிதிகள் இங்கு அருள் பாலிக்கின்றன.நித்திய பூஜைகளுடன் முக்கிய சமய விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

 

 

 

இந்த அம்மனுக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூச விழாவிற்குக் காவடிகள் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்படும்.  இடை வழியில் கம்பீரமாக வீற்றிருப்பவள் வீரமாகாளி காளியம்மன். எல்லாக் காவடிகளும் இங்கு நின்று அம்பாளை வணங்கி, அவள் உத்தரவு பெற்றே இனிது புறப்படும்.

 

’அருளது சக்தியாகும் அரன் தனக்கு’ என்று சிவஞான சித்தியார் பேசும். சிவபரம் பொருளின் திருவருளே அம்பிகையாகத் திருமேனி தாங்கி, நமது திருக்கோயில்கள் தோறும் விளங்கி அருள் பாலிக்கிறது். பல்வேறு ரூப பேதங்களால் பரந்து விரிந்துள்ளது அருட்சக்தி. காலனைக் கடந்து பேரருட் சக்தியாக அருள் வழங்குகிறாள் ஸ்ரீ வீரமாகாளி காளியம்மன்.

 

"பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளி தரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே”                                                                        
                                      –    அபிராமி அந்தாதி

 

ஆலய முகவரி:

Sri Veerama kaliamman Temple,
141, Serangoon Road,
Singapore. 218 042
Tel. 62954538/ Fax.62989361

 

 

You may also like

Leave a Comment