Home inscription பனைஓலைப்பாடி கல்வெட்டுகள்

பனைஓலைப்பாடி கல்வெட்டுகள்

by Balamurugan Sambanthan
0 comment

 பனைஓலைப்பாடி கல்வெட்டுகள்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் திரு. ச.பாலமுருகன், முனைவர். சுதாகர் ஆகியோர் அண்மையில் செங்கம் வட்டம் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள புனரமைப்பில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளையும் நிலத்தில் உள்ள பலகைக்கல்வெட்டையும் ஆய்வு செய்தனர். இதில் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கோயிலில் கிடைத்த கல்வெட்டுகள் புனரமைப்பின் போது இடம்மாற்றி கட்டியதாலும், கற்களைபிரித்து வைத்ததாலும் கல்வெட்டுகளின் தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை. இக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்ட செய்தியும் தானத்தாரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதே ஊரில் கிழக்குப்பகுதியில் கிடைத்த பலகைக்கல்வெட்டின் இரண்டு புறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள தகவலானது,
விஜயநகர மன்னன் வேங்கடபதி தேவமகாராயரின் சக சகாப்தம் 1512 (பொ.ஆ. 1590) இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து சிறுவளூர் பற்று செய்யாற்றின் வடகரையில் உள்ள இரட்டை ஏந்தல் என்ற விஜயராயபுரத்தை நரசப்ப நாயக்கர் மகன் நரசப்ப ஆண்டியப்ப சித்தியார் என்பவர் இம்முடி வரிசையாக வந்த வசுவநாத நாயக்கர் வீரப்பநாயக்கர் தர்மமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மன்றாடிகளில் பேருக்கு நல்லார் மெய்போகராயர் அருணகிரி அண்ணாமலை ஆகிய மூவரும் இரட்டை ஏந்தலை அணிஅண்ணாமலையப்பர் அபிஷேகத்திற்கு தாமிரபட்டயமாக தாரைவார்த்து கொடுத்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டின் இடைப்பகுதியில் சூரியன், சந்திரன், திருவண்ணாமலையும், தானம் அளித்தவரின் உருவமும் பொரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயிலுக்கு தானம் அளிக்கும் கல்வெட்டுகள் தொடர்ந்து இப்பகுதியில் கிடைத்துவருது குறிப்பிடத்தக்கதாகும். இக்கல்வெட்டு ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர் அப்பர், முத்து, செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

1. ஸ்வஸ்திஸ்ரீ மன் ம
2. ன் மகா மண்டலேசு
3. ரன் ஸ்ரீ வீரபிரதா
4. பன் வேங்கட
5. பதி தேவமகாராய
6. ர் பிறுதிவிராச்சிய
7. ம் பண்ணி யருளா
8. நின்ற சகாத்தம்
9. 1512
10. மேல் செல்லா
11. நின்ற விகுறு
12. தி சங்சரத்து கு
13. ம்ப நாயத்து ப
14. றுவ பச்சத்து
15. தெசமியும்
16. சோமவாரமு
17. ம் பெத்த மூல
18. நக்ஷத்திற
19. து நாள் செய
20. ங்கொண்ட் சோ
21. ழ மண்டத்து சி
22. றுவளூர் பற்று
23. சேயாத்துக்கு வட
24. கரை யிரட்டை
25. ஏந்தலான வி
26. சையராயபுர
27. த்தை நரசப்புனா
28. யகர் புத்திர நரசப்ப
29. ர் ஆண்டியப்பா
30. சித்தியர் இம்மூ
31. வரிசையிலும்
32. விசுவநாத நாத நா
33. யக்கர் வீரப்பநா
34. யக்கரய்ய
35. ன் த
36. ன்மம் 37. திருவண்ணா
38. மலை திருவிள
39. க்கு மன்றாடிகளி
40. ல் பேருக்கு நல்
41. லார் மெய்போ(க)
42. ராயர் அருணகி(ரி)
43. அண்ணாமலை
44. யிம்மூவரும் யி(ர)
45. ட்டை ஏந்தலை தா
46. ம்பற சாசநம் உள்
47. பட ஊர் கிறய(மா)
48. க கொண்டு
49. அணியணாமலை
50. யப்பர் ……….
51. அபுஷேக கட்டளை
52. க்கு சந்தர ஆதித்
53. தவரையும் ..
54. நடக்கத்க்கதாக
55. சண்டேசுரற்கு
56. தாரை வாத்து
57. குடுத்தோம் யி(ந்)
58. த தற்ம புண்ணி
59. யத்தை அகிதம்
60. பண்ணிநவன்
61. கெங்கைக்கரை
62. யிலே கராம்பசு
63. வை கொன்ற
64. தோஷத்திலே
65. போக கடவன்

You may also like

Leave a Comment