Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 4

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 4

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

3. திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு

சிறுமிகளால் மட்டும் விளையாடப்படும் விளையாட்டு இது (8-14 வயது). 10 முதல் 14 பேர் வரை விளையாடும் விளையாட்டு. முதலில் உத்திபிரித்தல் முறையின் மூலம் விளையாடுகின்றவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர்.

முதலில் ஒரு அணியினர் தரையில் ஒருவர் பக்கத்தில் ஒருவராக காலை நீட்டி அமர்ந்து கொள்கின்றனர். அடுத்து இவர்களுக்குப் பின்னால் அடுத்த அணியினர் இவர்களை நோக்கியவாறு கால்களை நீட்டி அமர்ந்து கொள்கின்றனர்.
ஒரு அணியைச் சேர்ந்த தலைவி தன்னிடமுள்ள திரியினைத் (திரியாகச் சிறிய கல், சிறிய கிழிந்த துணி, சிறிதாகச் சுருட்டப்பட தாள்) தன்னுடைய கைகளுக்குள் மறைத்து, கையைப் பாவடைக்குள் மறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நபரிடமும் அவர்களுடைய மடிக்குள் கையைக் கொண்டு சென்று

திரிதிரியம்மா திரிதிரி
தில்லாடத்தா (ன்) பொம்மதிரி
காசுகண்டே (ன்) கடையில
வெச்சுக்கம்மா வெச்சுக்க
மூடிக்கம்மா மூடிக்க
அமுக்கிக்கம்மா அமுக்கிக்க

என்று பாடிக்கொண்டே திரியினை ஒருவருடைய மடியில் மறைத்து வைத்து விடுகிறார். மறைத்து விட்டேன் என்று கூறிய பிறகு எதிரணியின் தலைவி அத்திரி இருக்கிற நபரின் பெயரைக் கூறுகிறார். அவர் கூறுவது சரியாக இருந்தால் எதிரணியினர் விளையாடுகின்றனர். தவறாக இருந்தால் முதலில் ஆடிய அணியினரே மீண்டும் விளையாடுகின்றனர்.

எதிரணித் தலைவி திரி இருக்கும் நபரைச் சரியாகக் கூறாவிட்டால் அந்தத் திரி இருக்கின்ற நபர் அத்திரியை தன் அணித்தலைவியிடம் கொடுத்துவிட்டு தானிருக்குமிடத்தை விட்டு எழுந்து நின்று தன்னிரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே சமயத்தில் இரு கால்களாலும் முன்னால் தாண்டிக் குதித்து குதித்த இடத்திலேயே கால்களை நீட்டி அமர்ந்து கொள்கிறார். அடுத்த முறை திரி வைக்கின்றபொழுது அணித்தலைவி முன்னால் அமர்ந்திருக்கும் இந்த நபரிடமும் சென்று திரியை வைக்கின்றார். இப்படியே விளையாட்டு தொடர்கிறது. இறுதியில் விளையாட்டு எல்லையை முதலில் சென்றடையும் ஒருவரைச் சார்ந்த அணியினரே வெற்றி பெற்றவர்களாகிறார்கள்.
விளையாட்டின் ஆரம்பத்திலேயே தாங்கள் விளையாடும் இடத்திலிருந்து சிறிது தொலைவிலிருக்கும் ஓரிடத்தை தங்களுடைய விளையாட்டு எல்லையாக நிர்ணயித்துக் கொள்கின்றனர்.
சேகரித்த இடம் : வலையபட்டி-14.9.96

பிற

1. இவ்விளையாட்டில் தண்டனையாகத் தோற்ற அணியினரில் ஒருநபர் விளையாட்டு ஆரம்பமாகும்போது இருந்த இடத்திலேயே இருந்தால் அவருக்கு மற்றவர்களால் சடங்கு வைக்கப்படுகிறது. ஆய்வாளரால் இதனைப் பார்க்க முடியவில்லை. தோல்வியடைந்த சிறுமி எழுந்து ஓடிவிட்டதால் சடங்கு வைக்கப்படவில்லை.

2. ஒரு அணியின் ஒருநபர் மட்டுமே வெற்றி எல்லையைத் தொடுவது போதுமானது என்பதால் முதலில் விளையாட்டு ஆரம்பித்த இடத்திலிருந்து முன்னால் தாண்டும் நபருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. முதலில் ஒருவர் மட்டுமன்றி ஒரு அணியில் அடுத்தடுத்து இருவர் தாண்டிக் குதித்து அமர்ந்து விட்டால் அந்த அணியினரே வெற்றி பெற்று விடுகின்றனர். ஏனெனில் மேலும் மேலும் முன்னேறி விரைவில் எல்லையைத் தொடவேண்டும் என்பதற்காக அவர்களிருவரில் ஒருவரிடமே அடிக்கடி திரி மறைக்கப்படுகிறது. இருவராக இருப்பதால் எதிரணித் தலைவியால் திரியிருக்கும் நபரைக் குறிப்பிட்டுச் சரியாகக் கூறமுடியாது.

3. விளையாட்டுப்பாடலின் கடைசி மூன்று வரிகள் விளையாட்டு நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. நான்காவது வரியுடனே பெரும்பாலும் பாடல் முடிகின்றது. விளையாட்டு நபர்கள் எண்ணிக்கைக் கூடும் போது ஐந்து, ஆறாவது வரிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

4. இவ்விளையாட்டு ‘மோதிரம் வைத்து விளையாடுதல்’ என்கிற மற்றொரு பெயருடன் விளையாடப்படுகிறது. விளையாட்டில் பயன்படுத்தப்படும் ‘கல்’ (கல் மட்டும் பயன்படுத்தப்படும்) மோதிரம் என்றழைக்கப்படுகிறது. விளையாட்டில் பாடல்கள் பாடப்படுவதில்லை. (தேன்கல்பட்டி)

5. இவ்விளையாட்டு ஊமச்சிகுளம் என்கிற ஊரில் ‘கல்லுகொடுத்தான் களவாணி’ என்கிற பெயரில் விளையாடப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் கல்லை மறைக்கும்போது ‘கல்லு கொடுத்தான் களவாணி என்கிற ஒருவரியை மட்டும் பாடலாகத் திருப்பித் திருப்பி பாடிக் கொண்டே கல்லை மறைக்கின்றனர். திரி என்கிற பெயர் பயன்படுத்தப்படவில்லை. தண்டனையும் கிடையாது.

[பகுதி 5 க்குச் செல்க]

You may also like

Leave a Comment