Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 33

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 33

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

33. பூசணிக்காய் விளையாட்டு

இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. (8-13 வயது) விளையாடுகின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். இவ்வரிசையில் முதலில் அமர்ந்திருப்பவர் பாட்டி என்றழைக்கப்படுகிறார். தனியாக நிற்கும் இருவரில் ஒருவர் ராசாவாகவும் மற்றவர் சேவகனாகவும் கூறப்படுகின்றனர். ஒருவர் நாயாகவும் உட்கார்ந்திருப்பவர்களினருகில் இருக்கிறார்.

விளையாடுவதற்கு முன்னாலேயே பாட்டி, ராசா, நாய், சேவகனாக யார் இருப்பது என்றேல்லாம் முடிவெடுத்து விடுகின்றனர். உட்கார்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முன்னால் அமர்ந்திருப்பவரின் இருபக்கமும் கால்களை நீட்டித் தன்னிரு கைகளையும் அவரின் வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர். பிறகு தான் விளையாட்டு ஆரம்பமாகிறது. பாட்டி ராசா வேலைக்காரன் ஆகிய மூவருக்கிடையில் தான் உரையாடல் நடைபெறுகிறது.

ராசா சேவகனிடம் – வராத விருந்தெல்லாம் வந்திருக்கு
வரகஞ்சோறு ஆக்கியிருக்கு
ராசா மகனுக்குக் கல்யாணம்
ஒரு பூசணிக் கொட்ட வாங்கியா என்று கேட்கிறார்.
சேவகன் பாட்டியிடம் வராத விருந்தெல்லாம் வந்து கெடக்குதாம்
வரகஞ்சோறு ஆக்கியிருக்குதாம்
ராசா மகனுக்குக் கல்யாணமாம்
ஒரு பூசணிக் கொட்ட வாங்கியாரச் சொன்னாக

என்று கேட்க

பாட்டி – ஐயா இப்பதா குழிக்கே ரெடி பண்றோம்
சேவகன் ராசாவிடம் – இப்பதான் குழிக்கே ரெடி பண்றாங்களாம்
ராசா – குழிமண்ணைக் கொஞ்சம் அள்ளிட்டு வா
சேவகன் – குழிமண்ண அள்ளிட்டு வரச் சொன்னாங்க
பாட்டி – இப்பதா பக்குவம் பண்ணி குப்பை அள்ளி வச்சிருக்கோம்
ராசா – அந்தக் குப்iயில் இம்புட்டு தோண்டிட்டு வா.

(ஒவ்வொரு முறையும் பாட்;டியிடமிருந்து சேவகனுக்கும் சேவகனிடம் இருந்து ராசாவுக்கும் ராசாவிடமிருந்து சேவகனுக்கும் சேவகனிடம் இருந்து ராசாவுக்கும் உரையாடல் மாறிமாறி நடக்கின்றது) ஆதலால் பாட்டிக்கும் சேவகனுக்குமிடையே நடக்கும் உரையாடல் மட்டும் இங்கு தரப்படுகிறது.

பாட்டி – இப்பதா ஒங்கய்யா வெத வாங்கப் போயிருக்காங்க
சேவகன் – அந்த வெதயில இம்புட்டு புடுங்கிட்டு வரச்சொன்னாங்க
பாட்டி – இப்பதா வெத பருத்திருக்கு
சேவகன் – பருத்த வெதயப் புடுங்கிட்டு வரச்சொன்னாங்க
பாட்டி – இப்பதா வெத முட்டியிருக்கு
சேவகன் – முட்டிக்கிட்டுரக்கத புடுங்கிட்டு வரச்சொன்னாங்க
பாட்டி – இப்பதா ஒரு எலை விட்டிருக்கு
சேவகன் – அந்த ஒரு எலையைப் புடுங்கிட்டு வரச்சொன்னாங்க
பாட்டி – இப்பதா ரெண்டு எல விட்டிருக்கு
சேவகன் – அந்த எலையைப் புடுங்;கிட்டு வரச் சொன்னாங்க
பாட்டி – இப்பதா பூப்பூத்திருக்கு
சேவகன் – அந்தப் பூவைப் புடுங்கிட்டு வரச்சொன்னாரு
பாட்டி – இப்பதா காய்க்கு கொடி அடிச்சிருக்கு
சேவகன் – அந்தக் கொடியக் கொஞ்சம் அறுத்துட்டு வரச்சொன்னாங்க
பாட்டி – இப்பதா சின்ன காய்காச்சிருக்கு
சேவகன் – அந்தக் காயப் புடுங்கிட்டு வரச் சொன்னாக
பாட்டி – இத்தத் தண்டி (கையை பெரிய காயிருப்பதுபோல் காண்பித்து
காய் காச்சிருக்கு
சேவகன் – அந்தக் காயப் புடுங்கிட்டு வரச்சொன்னாக.
பாட்டி – சரியப்பா சுத்தி முள்ளடச்சு தண்ணியப் பாச்சிட்டு ஒரு காயப்புடுங்கிட்டுப்போ

என்று கூறி சேவகன் உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையில் நடந்தும் தாண்டியும் வருகிறார். இது முள்ளடைப்பதாகும். அப்போது உட்கார்ந்திருப்பவர்கள் அவரைக் கிள்ளுகின்றனர். பிறகு தண்ணீர் பாய்ச்சுவது போல் பாவனை செய்து கொண்டு கடைசியில் அமர்ந்திருக்கும் ஒருவரை இழுக்கிறார். அப்போது நாயாக இருப்பவர் அவரைக் கடிக்கிறார். உடனே அவர் பாட்டியிடம் வந்து நாய் கடிச்சுப்புடிச்சு என்று கூற பாட்டியும் அதற்கு மருந்தாக பீமரத்துப்பட்டையும் பெரியவரு விட்டையும் அரச்சுப்போடு சவுரியமாப் போயிரும் என்கிறார். சேவகரும் அதைச் செய்துவிட்டு கடைசியில் அமர்ந்திருப்பவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு செல்கிறார். பிறகு சிறிதுநேரம் கழித்து பாட்டியிடம் வந்து

ஆத்தங்கரையில வச்சுட்டு முஞ்சி கழுவினே(ன்)
அயிர வந்து தூக்கிட்டுப் போயிருச்சு
என்று கூறி மீண்டும் ஒரு பூசணிக்காய் வாங்கிச் செல்கிறார். பிறகு
– கொளத்தங் கரையில வச்சுட்டு பல்லு வெளக்கினென்
– கொரவ வந்து தூக்கிட்டுப் போயிருச்சு – என்றும்
– கெணத்து மேட்டுல வச்சுட்டு குளிக்கிறப்ப
– கெண்ட வந்து தூக்கிட்டுப் போயிருச்சு

என்று கூறி ஒவ்வொரு பூசணிக்காயாக எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு முறையும் முள்ளடைத்துத் தண்ணீர் பாய்ச்சுவதும் நாய் கடிப்பதும் மருந்து போடுவதும் போன்றவை நடக்கின்றன. இறுதியாகப் பாட்டியும் பாட்டிக்கடுத்து அமர்ந்திருப்பவரும் மட்டும் மீதமிருக்க சேவகன் வந்து கேட்கும் போது பாட்டி மறுக்கிறார். இறுதியில் இதுவும் மிக வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படுகின்றது. பாட்டியைத் தூக்கிச் செல்வதிpல்லை. இத்துடன் விளையாட்டு முடிவடைகின்றது. சேகரித்த இடம்: வண்ணாம்பாறைப்பட்டி

பிற
1. சில இடங்களில் முள்ளடைத்துத் தண்ணீர் பாய்ச்சுதலுடன்தான் விளையாட்டு ஆரம்பமாகின்றது (கச்சைகட்டி)

2. உட்கார்ந்திருப்பவரின் தலையில் முதலில் தேய்த்துவிட்டுப் பிறகு விளைந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக ஒவ்வொருவர் தலையிலும் ஒரு சுண்டு சுண்டிப் பார்க்கப்படுகிறது.

3. களஆய்வுசெய்த எல்லா இடங்களிலும் விதை விதைத்தல், முளைவிடுதல், முண்டுவிடுதல், சிறிய இலை, பெரிய இலை வருதல், காய் சிறியதிலிருந்து பெரிதாகுதல் என்று விதை விதைப்பதில் இருந்து காய்காய்ப்பது வரை அனைத்துச் செய்திகளும் கூறப்படுகின்றன (வடபழஞ்சி…….)

4. சில இடங்களில் பாட்டியிடம் பூசணிக்காய் இரண்டாம் முறை, மூன்றாம் முறை வாங்கும்போதும் வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவை
ராசா மகளுக்குக் கல்யாணம்
ராசா மகளுக்குப் பிள்ள பெறந்திருக்கு
ராசா மகளோட பிள்ளைக்குக் காதுகுத்து
ராசா மகனுக்குக் கல்யாணம் – போன்றவை ஆகும்

5. சின்ன உடைப்பு என்கிற இடத்தில் பூசணிக்காய் -களாக அமாந்திருப்பவர்கள் ஒருவர்பின் ஒருவராக அமராமல் வரிசையாக அமர்கின்றனர். சம்மணமிட்டு அமர்வது போல் அமர்ந்து இரண்டு கைகளையும் கால்களுக்கு உள்பக்கமாக விட்டு வெளியிலெடுத்துக் கால்கட்டை விரலை இறுகப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர்.

6. மதுரை பழங்கானத்தம் டி.வி.எஸ் நகர் பகுதியில் முதலில் ஒருவர்பின் ஒருவராக முன்னாலிருப்பவரின் வயிறை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்து இறுதியில் பூசணிக்காயைப் பிடுங்கி எடுத்துப்போகும்போது மேற்கூறியபடி (எண் 5-ல்) அமர்ந்திருக்கின்றனர். அதாவது உண்மையிலேயே பூசணிக்காயைத் தூக்கிச் செல்வது போல் பாவனை செய்யப்படுகிறது.

7. இவ்விளையாட்டில் பூசணிக்காயைப் பிடுங்குவது எளிதல்ல. பூசணிக்காயை பூசணிச் கொடியில் இருந்து பறிப்பது எவ்வளவு க~;டமோ அதுபோலத்தான் இதுவும். பூசணிக்காயுடன் பூசணிக்கொடியும் சேர்ந்து வருவதுபோல இங்கும் கடைசியாக அமர்ந்திருப்பவரைத் தூக்க அவருடன் அமர்ந்திருக்கும் அனைவரும் சேர்ந்து பூசணிக்கொடி காயுடன் தொங்குவதுபோல வருகின்றனர்.

ஊமச்சிகுளம் என்கிற இடத்தில் பாட்டியும் பாட்டியை அடுத்திருக்கிற நபரையும் தவிர மற்ற அனைவரும் சண்டைபோடாமல் தொட்டவுடன் தாங்களாகவே எழுந்து சென்றுவிடுகின்றனர். பாட்டி தனக்கடுத்திருக்கும் நபரை விடுவதற்கு மறுக்கிறார். மந்திரி ராசாவிடம் சென்று இதனைக் கூற ராசாவும் மேலும் சிலரை அனுப்பி – டேய் எல்லாரும் போய் பிடுங்கிட்டு வாங்கடா என்று கூற அனைவருமாக வந்து இருவரையும் கட்டாயமாகப் பிரித்து கூட்டிச் செல்கின்றனர்.

 

You may also like

Leave a Comment