Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 27

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 27

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

27. அக்கக்கா கிளி செத்துப்போச்சு விளையாட்டு

சிறுமிகள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. இவ்விளையாட்டில் முதலில் அனைத்துச் சிறுமிகளும் தரையில் வட்டமாக அமர்ந்து உட்புறமாகக் கால்களை நீட்டிக் கொள்கின்றனர். பிறகு முதலில் ஒருவர் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார்

முதலாவது நபர் : அக்கக்கா சிணுக்குரி தாங்களே(ன்)
இரண்டாவது நபர் : இப்பத்தான் தல உருவிட்டு இருக்கே(ன்)
முதல் நபர் : அக்கக்கா கொஞ்சம் சிணுக்குரி தாங்களே(ன்)
இரண்டாவது நபர் : நேத்து என் பூனை உன் வீட்டுக்கு கங்கு அல்லது தீ எடுக்க வந்துச்சே அப்ப நீயும் உன் புருசனும் மூல வீட்டுக்குள்ள உட்கார்ந்து கறி எடுத்து சமைச்சு தின்னுட்டு இருந்தீங்களே என் பூனைக்கு கொஞ்சம் அல்லது ஒரு துண்டு எலும்பு குடுத்தீங்களா? இந்தாடி சக்களத்தி

என்று கூறியவாறு குடுக்கின்றார். இங்கு ஒருவருக்கு மற்றவரால் எந்தப்பொருளும் குடுக்கப்படுவதில்லை. ஒரு பொருளைக் கொடுப்பதுபோன்றும் அப்பொருளைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது போன்றும் பாவனை செய்யப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொருவராக சிணுக்குரி கேட்டு அனைவருக்கும் ஒருவர் மற்றவருடன் மேற்கூறப்பட்ட உரையாடலோடு சிணுக்குரியை பரிமாறிக்கொள்கின்றனர். வட்டமாக அமர்ந்திருக்கும் அனைவரும் கூறியபிறகு முதலில் விளையாட்டை ஆரம்பித்தவர் தனக்கருகிலிருப்பவரிடம் தன் இரு கைவிரல்களையும் உட்புறமாகக் கோர்த்துக் கொண்டு பின் வருவது போல் கூறுகிறார்.

முதலாவது நபர் : அக்கக்கா கிளி செத்துப்போச்சு
இரண்டாவது நபர் : எப்ப?
முதலாவது நபர் : இப்ப
இரண்டவாது நபர் : எப்படி?
முதலாவது நபர் : இப்படி

என்று கூறிவிட்டு முன்புறம் நீட்டி வைத்திருந்த தன்னிருகால்களின் ஒரு காளை எடுத்து விளையாட்டு வட்டத்திற்கு வெளிப்புறமாக நீட்டிக்கொள்கிறார்.
விளையாடுகின்ற அனைவரும் முதலில் ஒரு காலை நீட்டிய பிறகு மீண்டும் அக்கக்கா கிளி செத்துப்போச்சு என்கிற உரையாடல் தொடர்ந்து தங்கள் இரண்டாவது காலையும் நீட்டிக்கொள்கின்றனர். அடுத்ததாக மீண்டும் அதே உரையாடலுடன் ஒருவர் மடியில் ஒருவராகக் காலை நீட்டியபடி படுத்துக்கொள்கின்றனர். இறுதியாக அனைவரும் தங்கள் கைகளைத் தட்டிக்கொண்டு அக்கக்கா கிளி செத்துப்போச்சு என்று பாடுகின்றனர். அத்துடன் விளையாட்டு முடிவடைகிறது.
சேகரித்த இடம்: வண்ணாம்பாறைப்பட்டி

 

[பகுதி 28 க்குச் செல்க]

 

You may also like

Leave a Comment