Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 24

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 24

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

23. பல்லாங்குழி விளையாட்டு
இது பெண்களுக்கேயுரிய விளையாட்டாகும். ஆனால் இன்று சிறுவர்களாலும் விளையாடப்படுகிறது. பல்லாங்குழிக் கருவி மரத்தினாலும், வெங்கலம், வெள்ளி போன்ற உலோகத்தினாலும் செய்யப்பட்டது. இதில் விளையாட்டுக்கருவிகளாக சோவி, புளியமுத்து, சிகப்புமுத்து, சிறிய கற்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலிருந்:து மூன்றுநபர்வரை இப்பல்லாங்குழி விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். இது பலவகைப்படுகின்றது.

1. காசிப்பாண்டி :

இது பல்லாங்குழி விளையாட்டில் ஒரு வகை. பலகையிலுள்ள குழிகளில் நடுவிலுள்ள குழியே காசிக்குழி எனப்படுகிறது.

1,2 – பல்லாங்குழிப் பலகைகள்

• காசிக்குழிகள்
ஒரு வரிசைக்கு ஏழு குழிகளாக இரண்டு வரிசைகளில் பதினான்கு குழிகள் பல்லாங்குழிப் பலகையில் இருக்கின்றன. இக்குழிகளில் நடுவிலுள்ள காசிக்குழியில் மட்டும் அளவில் பெரிய சோவி ஒன்றை மட்டும் போட்டுவிட்டு மற்ற பனிரெண்டு குழிகளிலும் குழிக்கு பனிரெண்டு முத்துக்களாக போட்டுக்கொள்கின்றனர். ஒரே வரிசைக்குரிய ஆறு குழிகள் ஒருவருக்குச் சொந்தமானதாகவும் எதிர்வரிசை ஆறுகுழிகள் எதிராளிக்குச் சொந்தமானதாகவும் பிரித்துக்கொள்கின்றனர்.
விளையாடுபவர் தனக்குள்ள ஒரு வரிசைக் குழிகளில் ஒரு குழியிலுள்ள முத்துக்களை எடுத்து அவற்றை தனக்கு இடமிருந்து வலமாக ஒரு குழிக்கு ஒரு முத்தாக போட்டுக்கொண்டே வருகிறார். வரும்போது கடைசிமுத்து எந்தக்குழியுடன் முடிவடைகிறதோ அந்தக்குழிக்கு அடுத்த குழிமுத்துக்களை எடுத்து ஆடுகிறார். இவ்வாறு விளையாடிக்கொண்டே வரும்போது முத்தில்லாத குழி வந்ததும் ஆட்டத்தை முடித்துக்கொண்டு அதைக் கை விரலால் தடவிவிட்டு அதற்கடுத்த குழியில் உள்ள முத்துக்களையம், அக்குழிக்கு நேர் எதிரிலுள்ள (எதிர் வரிசை) குழியின் முத்துக்களையும் எடுத்துக்கொள்கிறார். எடுத்து எதிரேயிருப்பவர் முதலில் ஆடியவரைப் போன்றே ஆடத்தொடங்குகிறார்.

விளையாடுகின்றபொழுது ஒரு குழியில் (காசிக்குழி தவிர) ஆறு முத்துக்கள் மட்டும் இருந்தால் அதனை “பசு” என்று கூறி அக்குழிக்குச் சொந்தமானவர் எடுத்துக்;கொள்கிறார். மேலும் காசிக்குழிக்கு முதலிலுள்ள குழியில் முத்துக்கள் இல்லாமல் காலியாக இருந்தால் அதனைத்தடவி காசிக்குழியைக் கையினால் தட்டி ‘காசி தட்டிட்டேன்’ என்கிறார். காசி தட்டிய பின்னர் விளையாடும்போது அக்குழியில் முத்துக்கள் போடுகின்றார். காசிக் குழியில் சேருகின்ற முத்துக்கள் அவருக்குச் சொந்தமாகின்றன. ஒருவர் இரண்டு வரிசைகளிலும் உள்ள காசிக்குழியைத் தட்டலாம். ஒருவரே இரண்டு குழிகளையும் தட்டலாம். ஒரே காசிக்குழியை இரண்டு நபர்களும் தட்டலாம். அப்பொழுது விளையாட்டு முடிந்ததும் அதிலுள்ள முத்துக்களை இருவரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு காசிக்குழியை ஒரு ஆட்டத்தில் இருவருமே தட்டவில்லையென்றால் அம்முத்துக்களை குழியைவிட்டுத் தனியே எடுத்துவிட்டு அடுத்தமுறை ஆட்டத்தில் அக்காசிக்குழியைத் தட்டுக்கிறவர் அனைத்து முத்துக்களையும் எடுத்துக்கொள்கிறார்.

இவ்விளையாட்டில் ஒருவரைத் தோற்கடிப்பது மிக எளிது. ஒருவர் இரண்டு காசிக்குழிகளையும் தட்டிவிட்டால் மற்றவர் எளிதாகத் தோற்றுவிடுகிறார். மற்றவருக்குப் ‘பசு’ என்பது மட்டுமே முத்தாகக் கிடைக்கின்றது. அவரால் ஒரு குழிக்குத் தேவையான பனிரெண்டு முத்துக்களைக் கூடச் சேர்க்க முடிவதில்லை. அதனால் தோற்பது எளிதாகின்றது.

தோற்றவர் கையில் இருக்கின்ற முத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அடுத்துவரும் ஆட்டங்கள் தொடருகின்றன. இந்த ஆட்டங்களில் எல்லாம் ‘பசு’ என்பது கிடையாது.

தோற்றவரிடம் எட்டு முத்துக்கள் மட்டும் இருக்கின்றபோது வென்றவர் தன் குழிகளில் குழிக்கு எட்டு முத்துக்களாகப் போட விளையாட்டு தொடருகிறது. இது எட்டு முத்து ஆட்டம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே பத்து, ஒன்பது, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, முத்து ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. இவ்வாறு விளையாடுகின்றபொழுது முதலில் தோற்றவர் திறமையாக விளையாடி மீண்டும் அதிக முத்துக்களைச் சேர்த்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

2. கட்டு(ம்)ப்பாண்டி
1

1,2,3 – பல்லாங்குழிக் கருவிகள்

இவ்வாட்டம் இரண்டு நபர் மட்டுமே விளையாடக்கூடிய ஆட்டமாகும். பல்லாங்குழியில் ஒரு குழிக்கு ஆறு முத்துக்களாக எல்லாக் குழிகளுக்கும் முத்துக்களைப் போடுகின்றனர். பல்லாங்குழிப் பலகையில் நான்கு மூலைக்குழிகள் கட்டுமிடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு கட்டுவது என்பது முத்துக்களைச் சேகரிப்பதற்குத் தயாராக்கப்படும், குழி என்ற பொருளைப் பெறுகின்றது.

விளையாடுகின்ற இருவரும் முதலில் ஆடத்துவங்குகின்றபொழுது பல்லாங்குழியின் மூலையிலுள்ள குழிகளை மட்டுமே பிரித்து ஆடுகின்றனர். நான்கு மூலைக்குழிகளும் பிரிக்கப்பட்ட பின்னரே மற்ற குழிகளைப் பிரித்து ஆடுகின்றனர். குழிக்கு ஒரு முத்தாகப் போட்டுக்கொண்டே வரும்போது கடைசிமுத்து முடிவடையும் குழியினையே மீண்டும் பிரித்து விளையாடுகின்றனர். இவ்வாறு ஆடிவரும்போது கடைசிமுத்து முத்தில்லாத குழியில் போடப்படுமானாலோ கட்டும்குழியில் இடப்படுமானாலோ அத்துடன் ஒருவருடைய ஆட்டம் முடிவடைகிறது. பின் மற்றவர் ஆடத்துவங்குகிறார். நான்கு மூலைக்குழிகளிலும் மூன்று முத்துக்கள் சேர்ந்தபிறகு முத்துக்களைப் போடுவதில்லை. அந்தக்குழிகள் கட்டுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஆடுபவர் முத்துக்களை குழிகளில் இட்டுக்கொண்டே வரும்பொழுது கடைசி முத்து நான்கு மூலைக் குழிகளில் ஒரு மூலைக்குழியில் முடிவடைந்தால் அதனை அவர் கட்டியதாகக் கூறுகிறார். அதற்கு அடையாளமாக அக்குழியின் மேல் ஓரத்தில் நான்காவது முத்தை வைத்துவிடுகின்றனர். (சிலர் குழியினுள்ளே போட்டுவிடுகின்றனர்) பிறகு அக்குழியைக் கட்டியவரே அதில் முத்துக்களை இடுகிறார். அப்போதிருந்து அக்குழியில் சேரும் முத்துக்கள் கட்டியவருக்கே சொந்தமாகின்றன. ஒருவர் நான்கு குழிகளில் எத்தனை குழிகளையும் கட்டலாம். (சில இடங்களில் விளையாட்டு துவங்குவதற்கு முன்பே ஒருவருக்கு இரண்டு குழிகள்தான் என்று முடிவுசெய்யப்படுகின்றது.) ஒருவரே நான்கு குழிகளையும் கட்டிவிட்டால் அவரே வென்றவராகிறார். ஒரு ஆட்டம் அத்துடன் முடிவடைகின்றது.சேகரித்த இடம் – கோ. புதூர்

1. விளையாடுகின்ற பொழுது ஒரு ஆட்டம் முடிவடைந்ததும் ஒருவருக்கு தக்கம் ஏற்படுமாயின் (தக்கம் என்பது குழியில் இடுவதற்கு முத்துக்கள் இல்லாத நிலை). மற்ற பல்லாங்குழி வகைகளைப் போல மூலைக் குழிகளில் தக்கம் போடுவதில்லை. நடுவிலுள்ள குழிகளிலேயே போடப்படுகின்றன. மூலைக்குழிகள் கட்டும் குழிகளாக இருப்பதே காரணமாகும்.

2. விளையாடும்போது ஒருவருக்கு மூலைக் குழியில் போடுவதற்கு மட்டுமே முத்துக்கள் இருக்குமானால் அவரே விளையாட்டில் தோற்றவராகக் கருதப்படுகிறார்.

3. இவ்விளையாட்டில் அதிகமாக முத்துச் சேர்ப்பதற்கு முத்துக்கள் நிறைந்த குழியைப் பிரித்து ஆடுவதே சிறந்ததாகும். மேலும் ஒருவர் தான் முத்துக்களை இடமிருந்து வலமாக போட்டுக்கொண்டு வரும்போது தனக்கு மிக அருகிலிருக்கும் இரண்டு குழிகளைக் கட்டுவது சிறந்ததாகிறது. அதாவது விளையாடுபவர்கள் தங்களுக்கு வலப்பக்கமாக அருகில் இருக்கும் இரண்டு எதிரெதிர் குழிகளையே கட்டுவதற்கு விரும்புகின்றனர்.

4. இவ்விளையாட்டில் ஒரு ஆட்டம் முடிவதற்கே மிகுந்த நேரமாகிறது. தோற்பதும் மிகக் கடினம். ஆகையால் விளையாட்டு முடியவும் நேரமாகின்றது.

5. இவ்விளையாட்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் ‘தாலிகட்டி விளையாடும் விளையாட்டு” என்று பெயர். மூன்று முத்துக்கள் சேர்ந்திருப்பதை ‘சமைஞ்சிருக்கு’ என்று கூறுகின்றனர். இதில் நான்காவது முத்தை வைத்துக் கட்டுகிறபோது ‘தாலிகட்டி விட்டேன்’ என்கிறார். இங்கு கட்டாயமாக ஒருவர் இரண்டு குழிகளை மட்டுமே கட்டவேண்டும். (நடுக்கல்லூர் – திருநெல்வேலி)

3. பசுப்பாண்டி :-

காசிப்பாண்டியின் விளையாடும் முறை இங்கும் பின்பற்றப்படுகிறது. ஆனால் பசுவின் எண்ணிக்கை நான்கு ஆகும். விளையாடும் போது குழியில் நான்கு சோவிகள் சேர்ந்துவிட்டால் ‘பசு’ என்று விளையாடுபவர் எடுத்துக்கொள்கிறார்.
இவ்விளையாட்டில் ஐந்து சோவிகளுக்கும் குறைவாக இருந்து தக்கம் போட நேர்ந்தால் ‘பிள்ளைக்குழி’ வைக்கும் பழக்கம் காணப்படுகிறது. பிள்ளைக்குழியில் சேரும் கற்களை அக்குழிக்கு சொந்தமானவர் எடுத்துக்கொள்கிறார்.
தோற்றவருக்கு ஒரு குழிக்குக் கூட தேவையான கற்கள் கிடைக்காத நிலையில் ஒவ்வொரு குழிக்கும் ஒரு கல் மட்டும் போட்டு எப்பொழுதும் போல் விளையாடுவர். இதற்கு கஞ்சி காய்ச்சுதல், கூழ் காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி காய்ச்சும் போது தோற்றவர் வெற்றியடைய வாய்ப்புண்டு. கஞ்சி காய்ச்சுவதற்குக் கூட கல் இல்லாத நிலை தோற்றதாகக் கருதப்படுகிறது.
சேகரித்த இடம் : கொடிக்குளம்., புதூர்

[பகுதி 25 க்குச் செல்க]

You may also like

Leave a Comment