Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 23

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 23

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

22. சொட்டாங்கல் விளையாட்டு

இவ்விளையாட்டு பெண்களும், சிறுமிகளும் மட்டும் விளையாடும் விளையாட்டு. இரண்டு முதல் ஐந்துபேர் வரை விளையாடுகின்றனர். அதிகமாக, பூப்படைந்து வீட்டிலிருக்கும் பெண்களால் விளையாடப்பட்டு வந்தது. இன்று சிறுமிகள் அதிகமாக விளையாடுகின்றனர். வீடுகட்டுவதற்கு பயன்படும் கூழாங்கற்கள் விளையாட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து கல், ஏழுகல், பலகல் என்று கற்களின் எண்ணிக்கையைக் கொண்டு இவ்விளையாட்டு வகைப்படுத்தப்படுகிறது. விளையாடும்போது பாடல்களைப் பாடுகின்றனர்.

ஏழுகல்

ஏழுகற்களை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு இது. இதில் பதினொரு பிரிவு ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. பதினொரு பிரிவு ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு முழு ஆட்டமாகும். ஓவ்வொன்றிற்கும் பாடல்கள் பாடப்படுகின்றன. ஒருகை மட்டுமன்றி இருகைகளையும் பயன்படுத்தி ஆடப்படுகின்றது. ஒரு ஆட்டத்திற்Nகு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன.

1. ஒண்ணான் – ஏழுகற்களையும் தரையில் பரத்தி வீசிப்போட்டு ஒரு கல்லைமட்டும் மேலே தூக்கிப்போட்டு தரையில் கிடக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒருகல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழே வருவதற்குள் கீழிருந்து ஒரு கல்லை எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிக்கிறார். அப்போது பாடப்படும் பாடல்

அ. ஓரீ உலகெல்லாம்
உலகெல்லாம் சூரியன்
சூரியன் தங்கச்சி
சுந்தரவள்ளிக்கு
மாயக்களச்சிக்கு நாள கலியாணம்
ஆ. ஓரீஉலகல்லோ
ஒத்தத் துலுக்கல்லோ
தூது துலக்கல்லோ
துலுக்கண்ணன் பெண்டாட்டி
காது குத்துற கட்டரசி

2. இரண்டான் :- தரையில் கற்களை வீசிப்போட்டு இரண்டிரண்டு கற்களாக மூன்றுமுறை எடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழேவருமுன் கீழே கிடக்கும் கற்களையும், மேலிருந்து வரும் கல்லையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும். அப்போது பாடும் பாடல்

அ. ஈரீரெண்டு எருக்கலந்தண்டு
தண்டுக்குதண்டு தாமரைப்பூசெண்டு (அல்லது)
ஆ. ஈரீஇரிச்சுக்கோ எம்பேரச் சொல்லிக்கோ
தாழையடியெல்லம் தண்ணிப்பந்தல் போட்டுக்கோ (அல்லது)
இ. ஈரீஇரிச்செங்கு இட்டார் மணிச்சங்கு
தட்டாத பிள்ளைக்கு தாலிமணிச் சங்கு

3. மூனான் :- தரையில் கற்களைப் போட்டு மூன்றுமூன்று கற்களாக இரண்டுமுறை எடுக்கவேண்டும். அப்போது பாடப்படும் பாடல்

அ. முக்கட்டு தக்கட்டு முருங்கப் பதினெட்டு
எண்ணிப் பார்த்தா இருவத்தெட்டு (அல்லது)
ஆ. மூவாடி ஆனந்தம். பாம்பாட்டி சக்கரம் (அல்லது)
இ. மூவாடி ஆத்திலே ராமேஸ்வரத்திலே
சீதை வனத்திலே சின்னத்தங்கை வாழுகிறாள்

4. நாலான் :- தரையில் கற்களைப் போட்டு இரண்டு கற்களாகவும் நான்கு கற்களாகவும் இரண்டு தடவைகளில் பிடிக்கிறார்கள். அப்போது பாடப்படும் பாடல்:

அ.. நாலவச்சு ரெண்டெடு நாராயணன் பேரெடு
பேரச் சொல்லி பிச்சையெடு (அல்லது)
ஆ. நான் கோத்த ராசாக்கோ ஏறித்தடம் பாக்கோ

5. ஐந்தான் : தரையில் கற்களைப் போட்டு ஐந்து கற்களாகவும், ஒரு கல்லாகவும் இரண்டு தடவைகளில் பிடிக்கிறார். அப்பொழுது பாடும் பாடல்

அ. ஐவக்கண்ணி காக்கா
அரைக்க மஞ்ச கேக்கா
குளிக்க மஞ்ச குடுக்கா (அல்லது)
ஆ. அஞ்சலங்குஞ்சலம் பாப்பாத்தி
மஞ்சளரைக்கிற மகராசி (அல்லது)
இ. அஞ்சலங் குஞ்சலம், தம்பி சிதம்பரம்
தங்கச்சி மாப்பிள வெங்கலம் (அல்லது)
ஈ. ஐவாலம்மன் கைதட்டோ
ஆத்துக்குள்ள தீப்பிடிக்க
தீப்பிடிச்ச கல்லு தெறிச்சுவிழ

6. ஆறான்:- மூணானுக்கு விளையாடுவதுபோல் விளையாடுகிறார். அப்போது பாடும் பாடல்

அ. ஆக்குறுகூறு அள்ளிப்போட்டா வேக்கூரு
ஆ. ஆக்கூராத்தா வேலாயி
ஆம்பள பெத்தா சொக்காயி
இ. ஆறே அரட்டவரே
கோபம் பட்டவரே
கோட்டப்பெட்டி வித்தவரே

7. ஏழான் :- ஆறுகற்களையும் தரையில் போட்டு மூன்று கற்களாகவும், இரண்டு கற்களாகவும், ஒரு கல்லாகவும் எடுத்துப் பிடிக்கிறார். அப்போது பாடப்படும் பாடல்

அ. ஏழண்ணே தூங்கிவா
நாகம் படர்ந்துவா
மேகம் சுருண்டுவா
ஆ. ஏழங்க பொங்கல சானகி
என்ன பொங்கல சானகி
மாட்டுப் பொங்கல சானகி
இ. ஏழும் புகழே இது நல்ல புகழே
கல்யாண வீட்டில் கண்டெடுத்த புகழே

8. எட்டான் :- நாலானைப் போல் விளையாடுகின்றனர். அப்போது பாடும் பாடல்

அ. எட்டு வீடம்மா புட்டுடு
புட்டப் பிருத்திடு
ஆ. எட்டே இடக்கட்டு ராசன் தலைக்கட்டு

9. ஒன்பதான் :- ஐந்தானைப் போல் விளையாடுகின்றனர். அப்போது பாடும் பாடல்

அ. ஒம்பதுஞ் சம்பா சந்தனக்கும்பா சமச்சு வச்சாதிம்பா
ஆ. ஒம்போதாத்தா சாவாளோ
சங்குச் சத்தம் கேளாதோ
சாமம் போல வேவாளோ
இ. ஓம்பதுஞ்சம்பா சாதியில வெம்பா
ஈ. ஓன்பது ஒருகல் ஒசை படிக்கல்

10. பத்தான் :- ஏழானைப் போல் விளையாடுகின்றனர். அப்போது பாடும் பாடல்

அ. பத்துக்குச் சித்திரை பதிகொள்ளும் கொப்பரை
ஓயாக்கணக்கற ஒண்ணு ரெண்டா சில்லறை
ஆ. பத்துக்குச் சித்ரா பாண்டப்பா
பயிறு விக்குது வேண்டப்பா
வேணுமின்னா வாங்கிக்கோ
வேண்டாயின்னா தூரப்போ
இ. பத்தே. பதிபதி பயித்தே நெரிநெரி
கொக்கோ கொழிகொழி
சொக்கலிங்க நாதருக்கு சோத்த வடிவடி
ஈ. பத்தேபதிபதி பயித்தே நெரிநெரி
ஓக்கொக் கொழிகொழி ஒருபட்டுடுத்திவா
நித்தங் கொழிகொழி நீலப்பட்டுடுத்திவா

11. பாவடை: இது விளையாட்டின் முடிவினைத் தெரிவிப்பதாகும். முதலில் ஒண்ணானுக்கு விளையாடுவதுபோல் விளையாடுகின்றனர். அப்போது ஒருகல்லின்மேல் மற்றொரு கல்லோ, கையோ படாமல் பார்த்துக்கொள்கிறார். பிறகு அனைத்துக் கற்களையும் சிறிது உயரத்தில் தூக்கிப் போட்டு புறங்கையில் வாங்கி மீண்டும் உயரே தூக்கிப் போட்டு உள்ளங்கையில் பிடிக்கிறார். கையில் வாங்கும்போது மீண்டும் பிடிக்கும்போதும் கற்கள் கீழே விழாமல் பார்த்துக்கொள்கிறார். அப்போது பாடும் பாடல்

அ. பாவாட தூவாட
பறந்தாடு வெள்ளாடு
வெள்ளாட்டைக் கண்டேன்
விரும்பி நடந்தேன்
பசுமாட்டைக் கண்டேன்
பதறி நடந்தேன்
ஆ. பாவாட அக்கக்கோ
பட்டல்லோ விக்குது
எந்தஎந்தத் தெருவிலே
கோலமாடத் தெருவிலே
கொண்டு வந்து விக்குது
வாங்கப் பணமிருக்கு
வச்சுடுத்த பிள்ளையில்ல
இ. பாவாமல்லி காட்டுக்குள்ள
பாலரசன் கூட்டுக்குள்ள
நெல்லி நெறஞ்சரசு
நெல்லிக்கா காச்சரசு
காயக் கனிஞ்சரசு
கட்டழகன் விட்டரசு

பாவடை என்கிற இந்த ஆட்டம் முடிந்ததும் இதனை முடித்தவர் ஒரு கட்டை என்று எண்ணிக்கையைக் குறித்துக் கொள்கிறார். முன்பெல்லாம் கட்டை என்பதைக் கணக்கிடத் தரையில் வரிசையாகக் கோடுகளைப் (111111) போட்டு எண்ணிக்கொள்கின்றனர். ஒருமுறை விளையாடி முடித்தால் ஒரு கட்டைதான் எடுக்கமுடிந்தது. ஆனால் இன்று கையில் பிடிக்கின்ற கற்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக்கொள்கின்றனர். அதிக எண்ணிக்கையில் ‘கட்டை’ எடுத்தவரே வென்றவராகிறார்.
ஸ்ரீவைகுண்டம் – திருநெல்வேலி

ஐந்துகல்

ஐந்து கற்களை மட்டும் வைத்துக்கொண்டு விளையாடுவது இது. இதில் ஐந்து ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. ஐந்தாவது ஆட்டம்தான் மிகப்பெரியது. இதனுள் எட்டு ஆட்டவகைகள் காணப்படுகின்றன. இந்த எட்டு ஆட்டங்களும் தொடச்சியானவை. விளையாடுகின்றபோது கற்களைப் பிடிக்காமல் கீழே விட்டாலோ, தரையில் கிடக்கும் கற்களை எடுக்கின்ற போது மற்ற கற்களின் மீது கையோ, மற்றொரு கல்லோ பட்டாலோ ஆட்டம் ஒருவருடைய கையிலிருந்து மற்றொருவர் கைக்குச் சென்றுவிடுகின்றது. அடுத்தவர் முதலிலிருந்து விளையாடுகிறார். அவரும் தவறு செய்துவிட்டால் முதலில் விளையாடியவர் 5 ஆட்டங்களில் எந்த ஆட்டத்தில் தவறு செய்தாரோ அதிலிருந்து மீண்டும் தொடருகிறார். இது அனைவருக்கும் பொதுவான விதியாகும்.

ஒண்ணான்: 5 கற்களையும் தரையில் போட்டு ஒவ்வொன்றாக எடுப்பதாகும். ஒருகல்லை உயரே தூக்கிப்போட்டு மற்ற நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுப்பது.

இரண்டான் : மேற்கூறியது போன்றே ஆனால்; மூன்று கல்லைச் சேர்த்து ஒருமுறையும், ஒரு கல்லைத் தனியாகவும் எடுப்பது.

நாலையான் : ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு மற்ற நான்கு கற்களையும் கும்மலாகத் தரையில் வைத்து அதற்குள் மேலிருந்து கீழே வரும் கல்லைப் பிடித்து மீண்டும் அதனை மேலே தூக்கிப்போட்டு கீழே கிடக்கும் நான்கு கற்களையும் எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிப்பது.

அஞ்சான் : இதில் கொத்தாலங்கு, கோழிச்செண்டு, வச்செடுப்பு, வாரிக்கொண்ட போன்ற சொற்கள் விளையாடும்போது கூறப்படுகின்றன.

1. 5 கற்களையும் கையினுள் பிடித்துக்கொண்டு ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழே வருவதற்குள் தரையின் ஆள்காட்டி விரலால் மட்டும் தடவி அக்கல்லைப் பிடித்தல். அப்போது கொத்தாலங்கு என்று கூறுவது.
2. மேற்கூறியது போலவே மீண்டும் செய்து கோழிச்செண்டு என்று கூறுவது
3. வச்செடுப்பு என்று கூறிக்கொண்டே நான்கு கற்களையும் தரையில் வைத்து ஒருகல்லை உயரே போட்டு
4. வாரிக்கொண்டே என்று கூறி நான்கு கற்களையும் வாரி எடுத்தல்
5. ஐந்தில் ஒரு கல்லை மட்டும் உயரே போட்டு புறங்கையில் வாங்கி மீண்டும் உயரே போட்டு அகங்கையில் பிடிப்பது இவ்வாறு ஐந்து முறை செய்யப்படுகிறது. அப்போது ஒவ்வொருமுறைக்கும் சாம்-சரம்-செடி-கொடி-படி என்று கூறப்படுகிறது.
6. மேற்கூறியது போன்றே ஆனால் மீண்டும் அகங்கையில் பிடிக்கும்போது நேராகப் பிடிக்காமல் கையை வளைத்துப் (பாம்புபோல்) பிடிப்பது. மூன்று முறை செய்யப்படுகிறது. அப்போது ஒவ்வொரு முறையும் சீச்சி சிமிக்கி – என்று மூன்று முறை கூறப்படுகிறது.
7. கற்களை எல்லாம் சிறிது உயரத்தில் போட்டு அவற்றைப் புறங்கையில் வாங்கி (புறங்கையில் 2 கற்கள் மட்டும் நிற்கக்கூடாது). எதிரேயிருப்பவரிடம் கையை நீட்டி காட்டுகல்லு – எந்தக் கல்லு என்று கேட்டு அவர் ஒரு கல்லைக் குறிப்பிட்டதும் அக்கல்லை மட்டும் உயரே தூக்கிப் போட்டு (மற்றவற்றை கீழே விட்டுவிடலாம்) கையில் வளைத்துப் பிடித்து மற்றவரிடம்; தந்துவிட்டு மற்ற நான்கு கற்களையும்
8. அடிப்பான் – தரையில் போட்டு இரண்டிரண்டு கற்களாக ஒரு கல்லின்மேல் மற்றொரு கல்லை சுண்டுவதன் மூலமாக அடிக்க வேண்டும். தரையில் கிடக்கும் நான்கில் அடிக்கப்படவேண்டிய இரண்டு கற்களுக்கிடையே இரண்டு விரற்சடை அளவு இடைவெளி தேவை. குறைந்தால் மீண்டும் எடுத்துதரையில் போடவேண்டும்.
இதுவரை விளையாடி முடித்தால் முடித்தவருக்கு ஒரு கேம். மீண்டும் இவரே தொடர்ந்து விளையாடலாம். விளையாட்டு ஆரம்பமாகும்போதே ஐந்து அல்லது பத்து எண்ணிக்கையை வெற்றி எல்லையாக நிர்ணயித்துக் கொண்டு அவ்வெற்றி எல்லையை முதலில் அடைபவரே வென்றவராகக் கருதப்படுகிறார்.

தண்டனை :-
விளையாட்டில் தோற்றவர்களுக்கு கால் கரண்டையிலுள்ள எலும்பில் ஒரு கல்லை வைத்து மற்றொரு கல்லால் வெற்றிபெற்ற எண்ணிக்கை அளவு ஓங்கிக் கொட்டவேண்டும்.
சேகரித்த இடம் – சின்ன உடைப்பு

 

[பகுதி 24 க்குச் செல்க]

You may also like

Leave a Comment