Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 22

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 22

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

21. உப்புவைத்தல் விளையாட்டு

இவ்விளையாட்டு சிறுவன்களால் மட்டும் விளையாடப்படுகின்றது. விளையாடுகின்றவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துகொள்கின்றனர். அணிக்கு ஐவராக பத்துப்பேருக்கு மேல் விளையாடுவதில்லை.

இரண்டு அணியினரும் வௌ;வேறு திசைக்குச் சென்று மணலைக் கையிலெடுத்து மற்றொரு அணியினர் கண்டுபிடிக்காதபடி ஒளித்து வைக்கின்றனர். மணலைச் சிறுசிறு குவியல்களாக ஒளித்து வைக்கின்றனர். இவ்வாறு ஒளித்து வைக்கின்ற இடத்தை விளையாட்டின் ஆரம்பத்திலேயே முடிவெடுத்து விடுகின்றனர். நான்கு அல்லது ஐந்து தெருக்கள் மட்டும், கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் என்று இடத்தைத் தீர்மானித்துக்கொள்கின்றனர்.

மணல் குவியல்களை ஒளித்து வைக்கும் எண்ணிக்கைக்கு அளவில்லை. இரண்டு அணியினரும் ஒளித்து வைத்து முடித்துவிட்டதாக அறிவிக்கின்றனர். அறிவித்த பிறகு ஒரு அணியினர் ஒளித்து வைத்த மணற்குவியலை மற்ற அணியினர் கண்டுபிடிக்கின்றனர். கண்டுபிடிக்கும் அணி உறுப்பினர்கள் தனித்தனியாக அல்லது மொத்தமாகச் சேர்ந்து கண்டுபிடிக்கின்றனர். கண்டுபிடித்ததற்கு அடையாளமாக அவற்றை அழித்து விடுகின்றனர். அழித்த மணற்குவியல்களை எண்ணிக் கொள்கின்றனர். மணற்குவியலைக் கண்டுபிடிப்பதற்கும் அதிக நேரம் தரப்படுவதில்லை. ஐந்து நிமிடங்கள் அல்லது பத்துநிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நேரத்திற்குள் கண்டுபிடிக்கின்றனர். இல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒத்துக்கொள்ளுகின்றனர். அதிகமான எண்ணிக்கையில் மணற்குவியல்களைக் கண்டுபிடித்த அணியினரே வென்றவர்களாகிறார்கள்.

தண்டனை தோல்வியடைந்தவர்கள் வெற்றிபெற்றவர்களை உப்பு மூட்டை தூக்குகின்றனர். தோல்வியடைந்தவர்கள் கண்டுபிடிக்காத மணற்குவியல்களின் எண்ணிக்கை எத்தனையோ அத்தனை முறை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத் தூக்கிச் செல்லும் முறை காணப்படுகின்றது.
சேகரித்த இடம் – தேன்கல்பட்டி

பிற

மணற்குவியலை ஊரின் எல்லா இடத்திலும் ஒளித்து வைக்கின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்று அதிகமாக இல்லை. அவ்வாறு ஒளித்து வைத்தால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இன்று ஒளித்துவைப்பதற்கு எல்லை நிர்ணயிக்கப்படுகிறது.

 

[பகுதி 23 க்குச் செல்க]

You may also like

Leave a Comment