Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 20

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 20

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

19. லீப்பி விளையாட்டு

இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது (வயது வரம்பு இல்லை). முத்துச் செதுக்குதல் விளையாட்டே இந்த லீப்பி விளையாட்டு. ஆனால் இவ்விளையாட்டு பெண்கள் பூப்படைவதற்கு முன்னால் அவர்களால் மட்டும் விளையாடப்படுவதாகத் தகவலாளி கூறுகிறார் (பழனியம்மாள் – 29.9.93). அதிகபட்சமாக நான்கு நபர்களுக்குமேல் விளையாடுவதில்லை. இவ்விளையாட்டில் விளையாட்டுக்கருவிகளாக புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு வட்டம் வரைந்து கொள்கின்றனர். அதன் நடுவில் புளியங்கொட்டைகளை வைத்துச் சிறிய வட்டமான தட்டையான கல்லினால் குறிப்பிட்ட தூரத்திலிருந்து கொண்டு தரையோடு சேர்த்துக்கொட்டைகளை நோக்கி வீசுகின்றனர். இதற்கு பயனபடுத்தப்படும் கல் அடிகல்லு (லீப்பி) என்றழைக்கப்படுகிறது. புளியங்கொட்டைகள் வட்டத்திற்குள்ளும், வட்டத்திற்கு வெளியேயும் சிதறுகின்றன. வட்டத்திற்கு வெளியே சிதறும் புளியங்கொட்டைகள் அவற்றைச் சிதறவைத்தவருக்குச் சொந்தமாகின்றன. இத்துடன் ஓருவருடைய ஆட்டம் முடிவடைகின்றது. அடுத்து மற்றவர் ஆடுகிறார். இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து இறுதியில் அவரவரிடம் இருக்கும் புளியங்கொட்டைகள் எண்ணிப்பார்க்கப்படுகின்றன. அதிகமான புளியங்கொட்டைகள் இருக்கும் நபரே வென்றவராகிறார்.

சேகரித்த இடம் – செக்காணூரணி- 16.9.93

பிற

1. இது ஆண்களால் காசு வைத்து விளையாடப்படுகின்றது.

2. இதே விளையாட்டில் மற்றொரு வகை ஊதுமுத்து ஆகும். அதாவது நடுவில் கிடக்கும் புளியங்கொட்டைகளை மற்றொரு கல்லினால் சிதறடிப்பதற்குப் பதிலாக வாயினால் ஊதியே சிதறடிப்பத கும். அவ்வாறு ஊதுகின்றபோது ஒருமுறை அல்லது மூன்றுமுறை மட்டுமே ஊதவேண்டும்.

3. சில இடங்களில் உள்வட்டத்திற்கு வெளியே சிதறும் முத்துக்களையும் எடுத்துக்கொள்கின்றனர்.

4. அவரவர் எடுத்துக்கொள்ளும் முத்துக்கள் அவரவர்க்கே சொந்தமாகின்றன. மறுநாள் விளையாடுவதற்கு அதை எடுத்து வரலாம். ஆனால் சில இடங்களில், விளையாடி முடித்ததும் பொதுவானதாகவே வைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

5. இம்முத்துக்கள் விளையாட்டு நபர்களின் சேகரிப்பாகும். வீடு மற்றும் வீதியில் கிடக்கின்றவை சேகரிக்கப்படுகின்றன.

[பகுதி 21 க்குச் செல்க]

You may also like

Leave a Comment