Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 18

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 18

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

17. பாட்டி விளையாட்டு

சிறுமிகள் மட்டும் விளையாடுகின்ற விளையாட்டானாலும் இன்று இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டாக இருக்கிறது. இருபாலரும் சேர்ந்து விளையாடினாலும் பாட்டியாக இருப்பவர் சிறுமியே ஆவார். பாட்டியாக ஒருவர் ஒரு உயரமான இடத்தில் அல்லது ஒரு கல்லில் அமர்ந்து கொள்கிறார். மற்றவர்கள் எல்லாரும் அவரின் எதிரில் நின்றுகொள்கின்றனர். இரண்டு பேருக்குமிடையில் உரையாடல் நடைபெறுகின்றது. இவையனைத்தும் விளையாடுபவர்களால் செய்கைகளாகச் செய்து காட்டப் பெறுகின்றன. அவ்வுரையாடல் கீழே தரப்படுகிறது.

மற்றவர்கள் – பாட்டி பாட்டி ஒண்ணுக்கு
பாட்டி – போகக்கூடாது (இவ்வாறு 1,2,3 என்று பத்துதடவை கேட்கப்படுகின்றது)
மற்றவர்கள் – பாட்டி பாட்டி பத்துக்கு
பாட்டி – போய்த்தொலைங்க
எல்லாரும் சிறிது தூரத்தில் சென்று சாப்பிடுவதுபோல் பாவனை செய்கின்றனர். அப்போது
பாட்டி – பிள்ளைகளா வாங்க
மற்றவர்கள் – வரமாட்டோம்
பாட்டி – தங்கமணிகளா வாங்க
மற்றவர்கள் – வரமாட்டோம்
பாட்டி – தங்கவீடு கட்டித் தாறேன் வாங்க
அனைவரும் பாட்டியின் முன் வந்து நிற்கின்றனர். பிறகு
பாட்டி – எங்க போனீங்க?
மற்றவர்கள் – மாமா வீட்டுக்கு
பாட்டி – எதுக்கு?
மற்றவர்கள் – லட்டு, பூந்தி, மிக்சர் எல்லாம் திங்க
பாட்டி – எனக்கு
மற்றவர்கள் – பிசுக்கு
பிறகு பாட்டி எதையோ தேடுவதுபோல் தேடிக்கொண்டிருக்க.
மற்றவர்கள் – பாட்டி என்ன தேடறீங்க?
பாட்டி – ஊசி
மற்றவர்கள் – ஊசி எதுக்கு?
பாட்டி – பை தைக்க
மற்றவர்கள் – பை எதுக்கு?
பாட்டி – காசுபோட
மற்றவர்கள் – காசு எதுக்கு?
பாட்டி – கத்தி வாங்க
மற்றவர்கள் – கத்தி எதுக்கு?
பாட்டி – உங்களை வெட்ட

என்று கூறிக் கொண்டே பாட்டியாக இருப்பவர் மற்றவர்களை விரட்டிக்கொண்டே வர அவர்கள் ஓடுகின்றனர். பாட்டி ஓருவரைத் தொட்டுவிட அவர் பாட்டியாக இருக்கிறார். விளையாட்டு தொடர்கிறது.

இவ்விளையாட்டில் பாட்டியிடம் மற்றவர்கள் பிசுக்கு என்று கூறியவுடன் பாட்டி அவர்களை விரட்ட பாட்டியிடம் அகப்பட்டவர் அடுத்தமுறை பாட்டியாகிறார். அத்துடன் விளையாட்டு முடிகிறது.

பாட்டி விளையாட்டு – 2

விளையாடுகின்ற முறை எல்லாம் மேலுள்ளதைப் போன்றுதான். ஆனால் உரையாடல் மட்டும் வேறுபடுகின்றது.

மற்றவர்கள் – பாட்டி பாட்டி எங்க போற?
பாட்டி – எம் பேரனுக்கு கஞ்சி கொண்டு போறேன்
மற்றவர்கள் – நானும் வாறேன்
பாட்டி – அங்க முள்ளு கெடக்கே
மற்றவர்கள் – ஒரு செருப்பு தர்றயா
பாட்டி – அந்தச் செருப்பெடுத்து உனைய

என்று கூறிக்கொண்டே மற்றவர்களை விரட்டி வர அவர்கள் ஓடுகின்றனர். ஓடும்போது பாட்டியிடம் அகப்பட்டவர் அடுத்த முறை பாட்டியாகிறார். விளையாட்டு தொடர்கிறது (வலையபட்டி).

 

[பகுதி 19 க்குச் செல்க]

You may also like

Leave a Comment